இம்மட்டும் காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

 அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துகிறேன். நீர் எனக்கு இம்மட்டும் பாராட்டிய கிருபைக்காக ஸ்தோத்திரம். அநேக விதமான பாடுகள் வந்த போதும் அதையெல்லாம் தாண்டிவர எனக்கு உதவி செய்தீரே, உமக்கு ஸ்தோத்திரம். என் வாழ்வில் போராட்டமாய் நடைபெற்றவைகளை நினைக்கும்போது, உமது வல்ல செயலை நினைக்கிறேன். கர்த்தாவே, ஒவ்வொரு காரியத்திலும் என்னைக் கண்மணிப்போல் காத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். எனது உள்ளத்தின் விருப்பத்தை எல்லாம் அறிந்தவராகிய நீர் ஒவ்வொன்றாக நடைபெறச்செய்து கொண்டிருப்பதனால் ஸ்தோத்திரம். நான் ஓய்வுப் பெற்றபோது எனக்கு வரவேண்டிய பணத்தை பொறாமை நிறைந்த மக்கள் தடை செய்தனர். ஆனாலும் நீர் ஒன்றும் குறைவு படாதபடி எல்லாவற்றையும் இந்த ஆண்டிலேயே கிடைக்கச் செய்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவே நான் பெலவீனம் அடைந்து சோர்வடைந்து, வியாதிப்பட்டபொழுது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து என் சோர்வை நீக்கினபடியால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, என் காலில், தலையில் தோன்றின வேதனையை பெலவீனத்தை என்னை விட்டு நீக்கிப்போட்டீரே அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே என் குடும்பத்தில் என் பெண்/ஆண்  பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வாசல் திறந்தீரே அதற்காக ஸ்தோத்திரம். நான் உதவியற்ற நிலையில் கலங்கினபோது எனக்கு உதவி செய்ய ஏற்ற மக்களை அருள் செய்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, நீர் எனக்கு கொடுத்த படிப்பிற்காக ஸ்தோத்திரம். என் வேலைக்காக ஸ்தோத்திரம். அன்பின் தேவனே,  நீர் எனக்கு பாராட்டின கிருபை தயவுக்காக ஸ்தோத்திரம். இந்த ஆண்டை துவக்கினபோது என்ன ஆகுமோ என்ற எண்ணம் உள்ளத்தில் பயத்தை உண்டாக்கியது. ஆனால் கர்த்தாவே இந்த ஆண்டில் எனக்கு வந்த எல்லா நெருக்கத்தையும், பிரச்சனையையும் மேற்கொள்ள உதவி செய் ததற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, வரும் ஆண்டிலும் நான் ஆசீர்வாதமாக மாதானமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறேன் பிதாவே ஆமென்.