புதிய ஆண்டின் ஆசீர்வாதத்திற்கான ஜெபம்

            அன்பின் தேவனே, கிருபையாய் இம்மட்டும் எங்களைக் காத்து சுகமாக இந்த ஆண்டிலே பிரவேசிக்கச் செய்திரே, அதற்க்காக உமக்கு ஸ்தோத்திரம். சென்ற ஆண்டிலே பலவிதமான நன்மையான காரியங்களும் கசப்பான காரியங்களும் கேடான காரியங்களும் தோன்றின. ஆனாலும் நீர் என்னைக் கைவிடாது சுகமாய்க் காத்து வந்தபடியினால் ஸ்தோத்திரம். சென்ற ஆண்டுகளில் நான் என்னென்ன காரியங்களை இழந்து போனேனோ அவைகளை இந்த ஆண்டிலே திரும்ப நலமாய்ப் பெற்று வாழ உதவிச் செய்யும். கடந்த ஆண்டிலே என் குடும்பத்தில் ஏற்பட்ட எல்லா போராட்டங்களும் நீங்கின சாட்சியின் ஆண்டாக இந்த ஆண்டை மாற்றும். நீர் ஜெயம் தருகிற தேவன். என் ஆயுசில் இத்தனை ஆண்டுகளும் இல்லாத வெற்றியை இந்த ஆண்டிலே பெற்றுக் கொள்ள எனக்கு உதவிச் செய்யும். சென்ற ஆண்டில் என் எண்ணங்களையும், சிந்தைகளையும் சிதறடித்த சத்துருவின் செயல்மீது எனக்கு வெற்றி தாரும். இந்த ஆண்டு எனக்குள் /எங்கள் குடும்பத்திற்குள் சமாதானத்தையும் சந்தோஷத்தையம்  அன்பின் ஐக்கியத்தையும் தாரும். என்னுடைய பெற்றோர்கள் இறந்தபின் நாங்கள்  சகோதர சகோதரிகளாய் இணைந்து உம்மைத் துதிக்க முடியவில்லை. இழந்து போன இந்த அன்பின் ஐக்கியத்தை இந்த ஆண்டிலே தாரும். நான் இன்னும் பெலத்தின் மேல் பெலனடையவும்  பரிசுத்தம் அடையவும் எனக்கு உதவிச் செய்யும். இந்த ஆண்டில் எந்தவிதமான சோதனை, எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, என் குடும்பத்தாருக்கோ வராதபடி காத்து நடத்தும். இந்த ஆண்டிலே நான் உமக்கு மிகவும் பிரியமான காரியங்களைச் செய்ய உதவிச் செய்யும். கர்த்தாவே, இந்த ஆண்டிலே உம்முடைய வார்த்தையின்படியே செய்து உம்மோடுள்ள உறவிலே நான் நிலைத்திருக்க உதவிச்செய்யும். நான் யாவரோடும் இந்த ஆண்டிலே சமாதானமாய் இருக்க உதவிச்செய்யும். சென்ற ஆண்டிலே என் சரீரத்தைத் தாக்கின எல்லா பெலவீனங்களும் என்னை விட்டு நீங்கி நான் மிகுந்த சுகத்தோடு உம்மைத் துதிக்க உதவிச் செய்யும். கர்த்தாவே, இந்த ஆண்டில் புதிய புதிய இடங்களிலும் புதிய நாடுகளிலும் உம்முடைய நாமத்தை அறிவிக்க என்னைப்  பெலப்படுத்தி வழி நடத்தும். உமது பிரசன்னம் இந்த ஆண்டிலே என்னோடிருக்க கெஞ்சி ஜெபிக்கிறேன். இந்த ஆண்டிலே வீட்டைக் கட்டி என் பிள்ளைகளின் திருமண காரியங்களை செய்து முடிக்க, என் கடன் தொல்லைகள் தீர்ந்து மகிழ்ச்சியடைய உதவிச்செய்யும். இன்றே என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே பிதாவே.  ஆமென்