"இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்."
            "நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டுவருகிறீர்கள். 
            நீங்கள் புசித்தும் திருப்தியாக வில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை;
            நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; 
  கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்."
                                                                                       ஆகாய் 1:5,6

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக, உயர்வுக்காக, செழிப்பிற்காக, எல்லாவற்றிலேயும் பரிபூரணம் உண்டாவதற்காக நாம் பல முயற்சிகளைச் செய்கிறோம். விவசாயம், வியாபாரம், சிறு தொழில், தனியார், அரசாங்கப்பணி போன்ற காரியங்களில் நாம் உழைத்தும், திட்டமிட்டும் நம் வருவாயைப் பெருக்கி, செலவீனங்களைக் குறைக்க முயற்சிக்கிறோம்.

விவசாயி கொஞ்சமாக விதைத்து மிகுந்த மகசூலைப் பெற விரும்புகிறான். வியாபாரி தான் விற்றதில் மிகுந்த ஆதாயம் அடைய விரும்புகிறான். சிறு தொழில் தொழில் செய்வோர் மிகுதியாக உற்பத்தி செய்து செல்வத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். இவர்கள் திட்டமிடு வதிலும், பணியாற்றும் திறனில் வல்லமை உடையவர்களாய் இருந்த போதும் தோல்விகளும், நஷ்டங்களும் ஏற்பட்டு, முயற்சிகளும், பிரயாசங்களும் வீணாகிறது. கர்த்தராகிய தேவன் ஏன் இந்த தோல்விகள் நமக்கு, ஏன் நம்முடைய முயற்சிகள் வீணாக்கப் படுகிறது, இதற்குக் காரணம் என்ன என்பதை உன் வழிகளை ஆராய்ந்து பார் என்று சொல்லி, நமக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, உன் வழி எப்படிப்பட்டது ? சற்று ஆராய்ந்து பார். பாவமா? அல்லது உன்னை வழி தப்பிப் போகப்பண்ணுகிற தீய ஆவியின் வழியில் அழிவுக்கு நேரா நேராக உன் வாழ்வு சென்று கொண்டிருக்கிறதா? அல்லது 'நானே வழி' என்று சொன்ன இயேசுவின் வழியாய் நடந்து சமாதானத்தைப் பூரணமாய் அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயா?

பாவ வழி:

அதிகமாய் நீ உழைத்தும், உன் வாழ்வில் இழப்பு, நஷ்டம், கண்ணீர், துக்கம், தோல்வி நிறைந்து இருந்தால் உன் வழியில் ஒரு குறையுள்ளது. எனது வாழ்வில் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை அடியான் கையாண்டேன், பல வியாபாரங்கள் செய்தேன், அவைகள் ஒன்றும் எனக்கு உதவவில்லை. வேதம் இப்படியாக சொல்லுகிறது

"நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டு வருகிறீர்கள்..."

"உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்..." (ஆகாய் 1:6, 7)

ஏன் இந்த நஷ்டம் என்று இன்று கலங்குகிற சகோதரனே, உன்னை நீயே ஆராய்ந்து பார். பல ஆயிரக்கணக்கான பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்துள்ள உன் வியாபாரம், உன் தொழில், ஏன் நசுங்குகிறது. காலத்தையும், நேரத்தையும், இடத்தையும், சூழ்நிலை சந்தர்ப்பத்தையும் காரணம் கூறி உன்னையே ஏமாற்றிக் கொள்ளாதே. உனக்குள் உள்ள பாவமே உன் மேன்மையை, உன் வெற்றியை, உன் ஆதாயத்தைச் சூறையாடுகிறது.

எனக்கு அறிமுகமாக நண்பர் ஒருவர் உண்டு. இவர் பரந்த உள்ளம் உடையவர். எல்லாரையும் பிரியப்படுத்த விரும்புகிறவர். ஒரு நல்லதொரு கடையை அதிக முதலீடு செய்து நல்ல வியாபாரம் நிறைந்த இடத்தில் ஆரம்பித்தார். வியாபாரம் வெகு சீராய் நடந்தது. வியாபார பெருக்கினாலும், சந்தோஷத்தினாலும் தன் கடையின் வியாபார நேரம் முடிந்த பின் தன் நண்பர்களுடன் அவ்விடத்திலேயே குடிக்க ஆரம்பித்தார். சில நாள் சென்றது. லாபத்தில் ஓடிய கடை நஷ்டத்தில் ஓட ஆரம்பித்தது. சமாளிக்க முடியாது நண்பர்களைப் பங்குதாரராக சேர்த்தார். முடிவில் கடை இவருக்கு இல்லாது போனது. கடினமாய் உழைத்து, நேர்த்தியாய் எல்லாவற்றையும் திறம்பட செய்து, பாவப் பழக்கத்தினால் எல்லாவற்றையும் இழந்தார்.

அருமை நண்பா! கர்த்தர் உனக்குக் கிருபையாகக் கொடுத்த வியாபாரத்தில் இப்படியாக நீ குடித்து வெறித்துக் கொண்டு இருக்கிறாயா? உனக்கு ஏற்ற ஆதாயத்தைக் கொண்டு வரும் இடத்தில் நீ துன்மார்க்கமாய் ஜீவித்தால் உன் வாழ்வு வேதனை நிறைந்ததாய் மாறிவிடும். இன்று உன் பாவ வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வேதனைக்கு, நஷ்டத்துக்குத் தப்பிக்கொள்.

சிலர் மிகுதியாய் சம்பாதிப்பார்கள். 'கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்' என்று ஆகாய் 1:6ல் உள்ள வார்த்தையின்படி அதை அனுபவிக்க முடியாது இழந்து போகிறார்கள்.

எனக்குத் தெரிந்த டாக்டர் மனைவியுடன் வாழ்ந்த ஒரு நண்பர் நன்றாக சம்பாதித்தார். இவர்களின் வாழ்வில் ஒரு நல்ல வீடு கிடையாது. வாகனம் கிடையாது. இவர்கள் சம்பாத்தியம் வட்டிக்கும், வீணானவிதத்திலும் செலவழிந்தது. இவர்கள் வாழ்வில் கடன் தொல்லை வேதனைப்படுத்தியது. கர்த்தரின் வழியில் நடவாது தங்கள் மனம் போல உலக வாழ்வினை வாழ்ந்த இவர்களின் சம்பாத்தியம் ஓட்டைப் பையில் போட்ட பணத்தைப் போல் இவர்களுக்கு பிரயோசனம் இல்லாது போயிற்று. என்று கர்த்தரின் வழியில் நடக்க, வாழ ஆரம்பித்தார்களோ அன்று முதல் மீத்து வைக்கத்தக்கதாக கர்த்தர் உதவி செய்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே நீ அரும்பாடுபட்டு சம்பாதிக்கிற உனது செல்வம், வட்டி, வியாதி, உன் பிள்ளைகளின் பாவ வாழ்வு, கணவனின் குடிப்பழக்கம், சினிமா, வீணான ஆரம்பர செலவுகளினால் உன் கையின் பிரயாசம் வீணாகிறதா ? அதிகமாய் பிரயோசனமாய் இருக்கும் என்று நீ வாங்கின பொருள், நிலம், வீட்டை அனுபவிக்க முடியாது இருப்பதற்குக் காரணம் உன் பாவம். உன் வாழ்வில் நீ செய்த அக்கிரமங்கள் என்பதை மறவாதே. சற்று உன் பழைய வாழ்வின் பாவ செய்கைக்காக மனஸ்தாபப்படு. உன் பெற்றோர், மனைவி, கணவன், சகோதர, சகோதரிக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிய காரியம், அநியாயமாய் மற்றவர் இடத்தை, வீட்டை, பொருளை, வஞ்சனையாக அபகரித்த செய்கைக்காக மனஸ்தாபப்படு. நீ எவ்வளவு தான் சம்பாதித்தாலும் உன் பாவங்கள் நீ மீத்து வைக்க வேண்டிய சொத்தை, செல்வத்தை கரைத்தும், அழித்தும், மறைந்தும் போகச்செய்யும். இன்று நானே வழி என்று சொன்ன உண்மை தெய்வமாகிய இயேசுவின் வழி வாழ உன்னை அர்ப்பணிப்பாய் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் சம்பாத்தியத்தை ஆசீர்வதிப்பார்.

மாறுபாடான வழி:

"கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்." எண். 22:32

இன்று அநேகர் கர்த்தரின் வழியைவிட்டு விட்டு தங்கள் மனவிருப்பத்தின்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு வாழ்வோரின் வாழ்வில் கர்த்தரின் கை எதிராக செயல்படும். கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து, அவர் காட்டிய வழியைவிட்டு மாறுபாடான வழி நடக்கும் மக்களில் நிந்தைகள், தடைகள், அவமானங்கள் தோன்றும்.

பிலேயாம் என்ற தேவ மனிதன் கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து, தன் மனவிருப்பத்தின்படி கர்த்தரின் மக்களை சபிப்பதற்கு அழைப்பை ஏற்று அக்காரியத்தை ஆரம்பிக்க சென்ற சமயம், அவன் ஏறிவந்த கழுதைமுன் செல்ல மறுத்தது. அதனை அடித்தான். ஆனால் பிரயோசனம் இல்லை. கடைசியில் கர்த்தர் கழுதையின் வாயினைத் திறந்து அந்த தேவமனிதனின் மதிகேட்டைச் சுட்டிக்காட்டினார். கர்த்தரின் கரம் உனக்கு எதிராக உள்ளது என்பதை கர்த்தருடைய தூதனும் அறிவித்தான்.

இன்று சகோதரனே, கர்த்தருக்கு முன்பாக அருவருப்பான காரியங்களைச் செய்து கொண்டு வாழ்வாய் என்றால் உன் முயற்சிகள் தோல்வியாகும். உன் வேதனைகள் பெருகும்.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் தங்களின் வாலிப மகள் தன் உடையை எல்லாம் உரிந்து விட்டு வீதியிலே ஓடுகிறாள் என்று கண்ணீருடன் ஜெபிக்க வந்தார்கள். அவர்களுக்கு ஜெபித்த சமயம் கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஒரு சிறிய குப்பியில் சில எழுத்துக்கள் அடங்கிய ஒரு தகடு சுற்றப்பட்டு, குப்பியின் உள்ளாக வைக்கப்பட்டு ஒரு சந்து பகுதியில் புதைக்கப் பட்டுள்ளதைக் கண்டு, சந்தில் என்ன புதைத்துள்ளீர்கள் என்று கேட்டேன். எங்கள் வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் தகராறு, ஆகவே அவர்கள் எங்களுக்குக் கெடுதி செய்திட இருக்கிறார்கள். பாதுகாவலுக்காக இதைச் செய்துள்ளோம் என்று கூறினார்கள். பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தார். கர்த்தரின் பிள்ளைகளுக்கு எதிராக, மாறுபாடான காரியத்தைச் செய்த இக்குடும்பத்தாருக்கு விரோதமாக கர்த்தரின் கரம் இருந்தது. இவர்கள் கர்த்தரை விட்டு விட்டு எது பாதுகாவல் என்று நம்பினார்களோ, அத்தகடே இவர்களுக்கு விரோதமாய் அமைந்தது. 'சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்' என்ற கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து, மாறுபாடான காரியத்தைச் செய்தபடியால் வேதனை, அவமானம் ஏற்பட்டது.

அருமை சகோதரனே, சகோதரியே உன் விவசாயம், வியாபாரம், உன் முயற்சி, திருமணகாரியம், தொழில், வேலை போன்ற காரியத்தில் எதிர்ப்புகளும், எரிச்சலும், பொறாமையும் உள்ள மக்கள் மத்தியில் நீ இருந்தாலும் கலங்காதே. கர்த்தர் உன்னைக் கைவிட மாட்டார். உன் வாழ்வினை உயர்த்தி, உன் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் உன்னை அபிஷேகம் செய்து கனப்படுத்துவார். யோசேப்பை உயர்த்தி, ஆசீர்வதித்த கர்த்தர் உன்னையும் காத்து கனப்படுத்தி, உயர்த்துவார். கர்த்தரின் வழியை மட்டும் விட்டு விலகாதே. மாறுபாடான வாழ்வின் பாதையில் முள்ளுகளும். - போராட்டங்களும் தோன்றும்.

கீழ்ப்படியாத வழி:

"நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஒடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்." யோனா 1:2, 3

இன்று அநேகரின் வாழ்வில் கொந்தளிப்பும், சேதமும் ஏற்படுகிறது. காரணம் கர்த்தரின் வார்த்தைக்குச் செவி கொடுப்பதில்லை. கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாது நினிவேக்கு போகாமல் தர்ஷீசுக்குப் போனபடியால் யோனா என்ற மனிதன் பிரயாணம் செய்த கப்பல், கடல் கொந்தளிப்புக்குள் சிக்கியது. யோனா மட்டும் அல்ல அவனுடன் சேர்ந்த மக்களும் வேதனை அடைந்தனர்.

இன்றைக்கு நாம் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாது, காரியங்களைச் செய்யும்போது, நம் முயற்சிகளில் தோல்வியும், சேதமும் இருக்கும்.

ஒருமுறை ஒரு சகோதரி தனது மகளின் கல்லுாரி அட்மிஷனுக்காக ஜெபிக்க வந்தார்கள். அவர்களுக்கு ஒரு கல்லுாரியில் வேறு ஊரில் இடம் கிடைத்து இருந்ததால் என்ன செய்யலாம் என்று கேட்டனர். ஜெபித்து அக்கல்லுாரியில் சேர வேண்டாம் என்று கூறிய ஆலோசனைக்குக் கீழ்ப்படியாது அக்கல்லுரியில் கொண்டு சேர்த்தனர். சில தினங்கள் கழித்து தங்கள் ஊரிலேயே படிக்க இடம் கிடைத்ததால் வந்து சேர்ந்தனர். பண நஷ்டம், சில கொந்தளிப்பான காரியம் ஏற்பட்டது. சிறிய காரியம், ஆனாலும் நாம் முழுமையாக கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போது, நம் வாழ்வில் கொந்தளிப்பு, நஷ்டம் தோன்றாது. 

ஒருமுறை ஒரு சகோதரர் தான் அயல்நாடு சென்று வேலை செய்து தன் கடன்களை எல்லாம் அடைத்து விடலாம் என்று திட்டமிட்டார். ஆலோசனைக்காக ஜெபிக்க வந்தபோது, இப்போது தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற ஆசிரியர் வேலையையே செய்யுங்கள். கர்த்தரை முழு மனதுடன் தேடுங்கள். உங்கள் கடன் தொகையைத் துரிதமாய் அடைத்துவிடலாம் என்று கூறினேன். - அவருக்கு அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மனதில்லை. • வேலை கிடைக்கும், நிறைவான சம்பளம் கிடைக்கும், கடனை " அடைத்து விடலாம் என்ற எண்ணம் தான் அவருக்குள் இருந்தது. * அவர் அந்த நாட்டிற்குச் செல்ல வேண்டிய டிக்கெட், விசா எல்லாம் எடுத்தார். ஏற்கெனவே வீட்டின்மேல் கடன் வாங்கியிருந்தவர் மேலும் கொஞ்சம் பணத்தைக் கடனாக வாங்கினார். கடனை அதிகம் வாங்கி தான் நினைத்த ஊருக்குச் சென்றார். அங்கு குறுகிய தினங்களே வேலை செய்ய முடிந்தது. வீடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வீட்டின்மேல் கடன் கொடுத்தவர் அவர் கொடுத்த கடன் தொகைக்கு ஈடாக அந்த வீட்டைத் தனக்குச் சொந்தமாக எடுத்துக் கொண்டார். மனைவியை இழந்திருந்த அவர் தன் இரண்டு பெண் பிள்ளைகளோடு தங்குவதற்கு இடமில்லாது பாடுபட வேதனை அடைய ஆரம்பித்தார். இவருக்குள் ஏற்பட்ட கொரோனா நோயானது அவருடைய ஜீவனையும் பறித்துச் சென்றது. அந்தப் பிள்ளைகள் அனாதையாக, ஒன்றுமில்லாத நிலையிலே வேதனையுடன் வாழ வேண்டியதாய் மாறியது.

 இன்று அநேகர் தகப்பன், சகோதரன் உறவை விரும்பாது, தனக்குரிய பங்கைப் பிரித்துக் கொண்டு இளையகுமாரன் சென்றதைப் போல சென்று, தங்களைப் பாவ வாழ்க்கைக்கு இடம் கொடுத்து, எல்லாவற்றையும் இழந்து, தங்களின் ஆசை நிறைவேறாது, ஒருவருடைய உதவியும் இல்லாது, தனித்து தவிக்கிற வாழ்வை அடைவார்கள். புத்தி தெளியும்போது மாத்திரமே ஐக்கியத்தை விரும்பி மனம் மாறுவார்கள்.

கர்த்தரை விட்டுப் பிரிகிற வழி:

''...இளையமகன் எல்லாவற்றையும் தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே சேர்த்துக்கொண்டு, துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்." லூக்கா 15:13

கர்த்தராகிய இயேசுவை விட்டு விட்டு, நமது மன விருப்பத்தின்படி நாம் நடக்கும்போது இழப்பு, சேதாரம் ஏற்படுகிறது. நம் பரம தகப்பனாகிய கர்த்தராகிய இயேசுவை நாம் விட்டு விலகுவோம் என்றால், நம்மை உண்டாக்கியபோது கிருபையாய் " நமக்குக் கொடுத்திருக்கும் சுகம், பெலன், ஞானம் போன்ற நல் ஆசீர்வாதங்களை இழந்து, வேதனை அடைவோம். கர்த்தர் தரும் ஐசுவரியத்தில் வேதனையைக் கூட்டார். இன்று நன்றாய் சாப்பிட்டும் எனக்குச் சரீரத்தில் ரத்தம் இல்லை. ரத்த அழுத்தம் குறை என்று வேதனையடைகிற சகோதரியே, சகோதரனே கர்த்தருடன் வாழ உன்னை ஒப்புக்கொடு. கர்த்தர் உன் வேதனையை மாற்றுவார். இன்று நன்றாய் சாப்பிடுகிறேன், ஏன் எனக்கு இந்த வியாதி என்று ஏங்கும் தேவப் பிள்ளையே, உன் வழியை சற்று ஆராய்ந்து பார். ஆராய்ந்துப் பார்ப்பதுடன் கர்த்த கர்த்தருடன் இணைவதற்கு உன்னை ஒப்புக்கொடு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்து, உன்னை ஆசீர்வதிப்பார்.

மரண வழிகள்:

"மனுஷனுக்குச் செம்மையாத் தோன்றுகிற வழியுண்டு; அதன் முடிவோ மரண வழிகள்," நீதிமொழிகள் 16:25

இன்று அநேகர் தாங்கள் எண்ணுகிற, திட்டமிடுகிற காரியங்கள் வெற்றியைத் தரும் என்று எண்ணுகிறார்கள். தங்களின் எண்ணங்களைத் தீவிரமாய் அமல்படுத்தி, நினையாத அழிவை, மரணத்தை அடைகிறார்கள்.

ஒரு கால் பந்தாட்டக் குழுவினரைத் திருச்சியில் நடைபெற்ற டோர்னமெட்டில் விளையாட அழைப்பதற்கு இரவிலே துரிதப் படுத்தினர். அவர்களோடு வர இருந்தவர்கள் காலையில் போகலாம் என்று பலமுறை வலியுறுத்தினார்கள். இரவிலேயே போக வேண்டும் என ஒரு சகோதரர் மிகவும் வலியுறுத்தினார். இதுதான் சரியான நேரம் என்று கூறி மற்றவர்களையும் டாக்சியில் பயணம் செய்ய வைத்தார். அந்தக் குழுவோ முன்னதாகவே வருவதற்கு சரி என்று இருந்தனர். ஆனால் இரவிலே பயணம் சென்ற காரானது விபத்துக்குள்ளானது. இதுதான் நல்ல நேரம், அவர்களைச் சந்தித்து அழைத்து வரலாம் என்று அதிகமாக வலியுறுத்திய அந்த சகோதரர் அந்த விபத்தில் மரித்துப் போனார். அவருக்கு நலமாய்த் தோன்றின எண்ணம் அவருக்கு மரணத்தை வரவழைத்தது.

இன்று அநேகர் எல்லாம் நலமாய் இருக்கிறது என்று எண்ணி தங்கள் காரியங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியிலே உள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் விடுமுறை வருகிறது. ஒரு பீச்சில் தங்கள் விடுமுறை நாட்களைச் சந்தோஷமாய் செலவிடச் சென்றார்கள். சிலர் கடல் தண்ணீரின் ஓரத்திலும், சிலர் கரையிலும் நின்று சந்தோஷமாக நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் திடீரென்று உயரமாக எழும்பின அலையானது அங்கு விளையாடிய மாணவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. அவர்களில் 6 பேருடைய நாசியில் மணல் சென்றதால் மரித்துப்போனார்கள். உற்சாகமாய் விடுமுறை காலத்தைச் செலவிட எண்ணினவர்கள் நினையாத மரணத்தைச் சந்தித்தார்கள்.

இதைப் போல அநேகர் குடும்பமாக, கல்லூரி மாணவர்களாக சந்தோஷமாக நாட்களை, நேரங்களை செலவிடலாம் என்ற எண்ணம் கொண்டு திட்டமிட்டு தவறான இடங்களுக்குச் செல்வதால் அவர்களுடைய வாழ்க்கையிலே மரணத்தைச் சந்திக்கிறார்கள்.

இன்று வாழ்க்கையில் நஷ்டத்தினாலும், தோல்வியினாலும், குறைவுகளினாலும் கண்ணீர் சிந்துகிற சகோதரனே, சகோதரியே உன் வேதனைக்குக் காரணம் பாவமும், மாறுபாடான காரியங்களும், கீழ்ப்படியாதவைகளும், கர்த்தரை விட்டு விலகின காரியங்களே ஆகும்.

உன்னை மிகுதியாய் நேசிக்கும் கர்த்தராகிய இயேசு உன்னை நல்வழிப்படுத்த விரும்புகிறார். என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்...(சங்கீதம் 81:13) என்று சொன்ன கர்த்தர் நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவார். இதைப் போல ஆசீர்வாதமான காரியம் ஒன்றும் இல்லை. நீ அவ்வழியில் நடக்க உன்னை அர்ப்பணிப்பாய் என்று சொன்னால் எப்படி வாழ்வது, என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருக்கிற உனக்கு ஆலோசனை கூறி, நீ எப்படி செய்யவேண்டும் என்று உனக்குப் போதித்து, உன்னை வழி நடத்துவார். போதனை இல்லாத படியினால் தடுமாற்றமும், தவறான வழிகளை இதுதான் சரியான வழி என்று பின்பற்றுகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

ஒருவன் கர்த்தருக்குத் தன் வழியை ஒப்புவித்து நடக்கும் போது, கர்த்தர் அவனது காரியங்களை வாய்க்கச் செய்வார். என் காரியம் இன்று ஜெயமில்லாதிருக்கிறதே என்று கலங்குகிற சகோதரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உனக்கு ஜெயம் தருகிற தேவனாய் இருக்கிறார். வியாபாரமாக இருக்கலாம், தொழிலாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம். இதுவரை உனக்குத் தோல்வியை உண்டாக்கி, துக்கத்தைப் பெருகச் செய்திருக்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியில் இன்று நடக்க உன்னை ஒப்புக்கொடு. உன் காரியங்கள் ஜெயமாய் மாறிவிடும்.

உன் வழி கர்த்தருக்குப் பிரியமாய் இருந்தால், உன் சத்துருக்கள் உன்னுடன் சமாதானமாகி விடுவார்கள். உன் வாழ்விலே பெற்ற ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், எரிச்சலின் காரியங்கள் இவைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வல்லமையினாலே அழித்து, உன் வழியைப் பார்த்து, சுகம் ஈந்து, உன் சத்துருக்களும் உன்னோடே கூட சமாதானம் ஆகும்படியாய் வகைசெய்து, உன் காரியங்களை வாய்க்கச் செய்து, நீ சகல சந்தோஷத்தையும் சமாதானத்தையும் சுதந்தரித்து, ஆசீர்வாதமான உயர்வான வாழ்க்கை உனக்குத்தருவார்.

இந்த வாழ்வை தருவதற்காகத்தான் இயேசு இவ்வுலகில் தோன்றி, நற்கிரியைகளை நடப்பித்து, தன் ஜீவனை நமக்காக சிலுவையிலே கொடுத்தார். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள், கீழ்ப்படியாமையினால் ஏற்பட்ட மீறுதல்கள், மாறுபாடான செய்கையினால் ஏற்பட்ட அசுத்தங்கள், வேதனைகள் நீக்கப்பட்டு, என்றும் அவருடனே வாழக்கூடிய ஒரு மேலான பாக்கியத்தை அடைவோம்.

அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயம் தீர்ப்பேன் என்ற கர்த்தர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். 'நானே வழியும், சத்தியமும், ஜீவனும்' என்று சொன்ன கர்த்தர் என் வழி நடந்தால் நலமாயிருக்கும் என்று சொன்ன கர்த்தர் உன் துக்கத்தையும், துயரத்தையும் மாற்ற அவர் வழியாய் நடக்க அழைக்கிறார். இன்று அவரது சத்தத்திற்குச் செவிகொடுத்து, உன் வேதனைக்குக் காரணமான உன் வழியினை ஆராய்ந்து பார்த்து, அவரோடு இணைந்து வாழ உன்னை ஒப்புக்கொடு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்து, உன் கைகளின் பிரயாசங்களையும், உன் முயற்சிகளையும் வெற்றியாக்குவார். தானியேலின் காரியங்கள் வெற்றியானதுபோல உன் வாழ்க்கையும் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும், ஜெயத்தினாலும், பரிபூரணத்தினாலும் நிறைந்திருக்கும்.

நாம் இன்று முதல் நம் வழியை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம், நம்மைச் சுத்திகரித்துக் கொள்வோம். கர்த்தருக்குப் பிரியமான வழியிலே நம் வாழ்க்கை மாற அர்ப்பணிப்போம். அதிசயமாய் நடத்தப்படுவோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.