கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.
இன்று நம்முடைய நம்பிக்கை எதின்மேல் இருக்கிறது? இந்த உலகத்தின் மக்கள் தங்களது நம்பிக்கையை செல்வத்தின் மீதும், படிப்பின்மீதும், தங்கள் சொத்துக்களின் மீதும், தொழில், வியாபாரத்தின் மீதும், மற்றும் பலர் தங்கள் பிள்ளைகளின்மேலும் நம்பிக்கை வைக்கிறார்கள். இவை எல்லாம் நிலையற்றதும், மாறுகிறதும், வேதனை யையும், தோல்வியையும் கொண்டு வருகிறதாயும் இருக்கிறது. சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் நலமாய் இருக்க வேண்டுமென்று அதிக கரிசனையாக அவர்களின் படிப்பு காரியங்களுக்காகப் பணத்தையும் நேரத்தையும் செலவிடுவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் என் மகன்/என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்தால் முதிர்வயதில் பெற்றோராகிய எங்களைப் போஷிக்கவும், பராமரிக்கவும் செய்வார்கள் என்று முழு முயற்சியோடு பிள்ளைகளின் காரியங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் நம்பிக்கையானது பிள்ளைகள்மேல் இருக்கிறது. கர்த்தரைத் தேடுவதை விட்டுவிட்டு, கர்த்தருடைய பிள்ளைகளோடு ஐக்கியப்படுவதை விட்டுவிட்டு, பிள்ளைகளின் உயர்வுக்காக, மேன்மைக்காக மிகுதியாய் கவனம் செலுத்துவதைப் பார்க்கிறோம்.
ஒருமுறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்க வந்தார்கள். அவர்களுடைய மூன்று பிள்ளைகளின் காரியத்தைக் குறித்துச் சொன்னார்கள். ஆசிரியராய் இருந்து ஓய்வுபெற்ற அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் சிறுபிராயத்திலிருந்தே நன்றாகப் படிக்கிறவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெற்றோரிடமும் மிகவும் அன்பாக இருந்தார்கள். மூத்த மகளை நல்ல படிப்பைப் படிக்க வைக்கவேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் நடுவே நல்ல அன்பின் ஐக்கியம் இருந்தபடியால், மூத்தவள் படித்து முடித்தவுடன் தனக்குப்பின் உள்ள இரு சகோதரிகளுக்கும் அதிக உதவி செய்வாள் என்று எண்ணி அவளை மருத்துவக் கல்லுாரியில் சேர்த்தார்கள். அவளும் நன்றாகப் படித்தாள். மருத்துவக் கல்லுாரியில் சேர்த்த படியினால், மற்ற இரு பிள்ளைகளுடைய படிப்புக்கு வேண்டிய பணம் போதாதபடியால், மற்ற இரண்டு பிள்ளைகளையும் சாதாரண படிப்பு படிக்க வைத்தார்கள். மூத்தவள் படித்து முடித்தாள். அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. அவர்களது நம்பிக்கையும் எண்ணமும் அவள் வீட்டுக்கு வந்தவுடன் இங்கு ஏதாவது ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றினால், பணக்குறைவு இல்லாது எல்லாக் காரியங்களையும் எளிதாக செய்யலாம் என்று எண்ணி இருந்தார்கள். படிப்பு முடிந்து பயிற்சி காலமும் முடிந்தது என்று அந்த மகள் தெரிவித்திருந்தபடியால் மிகுந்த ஆர்வத்தோடு அவள் வருகைக்குப் பெற்றோர் காத்திருந்தார்கள். ஆனால் அந்த மகளோ தான் விரும்பின ஒரு மகனுடன் அந்த மகனுடைய ஊருக்கே சென்றுவிட்டாள். கல்லூரி பொறுப்பாளரிடம் போன் செய்து கேட்டபோது, அவளோடு படித்த ஒரு மருத்துவருடன் அவருடைய ஊருக்கே சென்று விட்டாள் என்ற செய்தியினால் ஏமாற்றமும், துயரமும், துக்கமும் அடைந்ததாக பெற்றோர் கூறினார்கள். அந்த மகளை நம்பி மற்ற இரு பிள்ளைகளையும் சாதாரணப் படிப்பு படிக்க வைத்து விட்டோமே என்று கலங்கினார்கள்.
இன்று நம்பிக்கையை யார் மீது வைத்திருக்கிறோம் ? இவ்விதமாக தவறான, நிலையற்ற காரியங்களில் நம்பிக்கை வைப்பதினால் நாம் எதிர்பாராத வேதனையான காரியங்களை, தோல்விகளை, துக்கங்களைச் சந்திக்கிறோம். என் வாழ்வில் பணம் இருந்தால்தான் ஆசீர்வாதம் என்ற எண்ணம் வந்தபடியால் பணத்தின்மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர் பணியின் நடுவில் சில சிறிய சிறிய தொழில் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தேன். Sports கடையும் ஆரம்பித்து அதன்மீதும் நம்பிக்கை வைத்தேன்...நீயோ கடன் வாங்குவதில்லை...' உபா.15:6ன் வார்த்தையை அறியாதபடி, உணராதபடி வாழ்ந்து விட்டேன். அச்சமயத்தில் ஏற்பட்ட வியாதியினால் மிகுந்த துக்கமும் துயரமும் அடைந்தேன். அந்த வியாதி எங்கு என் ஜீவனைப் பறித்து விடுமோ என்ற பயத்தில் நிறைந்திருந்தேன். ஆனால் ஆஸ்பத்திரியில் இருந்தபோதே என் அருகே இருந்து என் மனைவி வாசித்த 'எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது' என்ற சங். 91:9, 10ன் வாக்கியங்கள், நான் இந்த உலகில் வாழ்வதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த வசனத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொன்னேன். 'பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது' என்ற வார்த்தை என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. கர்த்தர்மேல் முழு நம்பிக்கை வைக்க என்னை நடத்தியது. அந்த இரவிலே இயேசு கிறிஸ்துவே, நாம் உம்மை நம்புகிறேன், எனக்கு நீர் ஜீவன் தந்தால், என் எஞ்சிய நாட்கள் உமக்கென்று வாழ்வேன், உழைப்பேன் என்று தீர்மானித்தேன். என் தகப்பனார் ஆசிரியராயும், போதகராயும் பணியாற்றினார்கள். நான் பட்டப்படிப்பை முடித்தபோது, வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்றார்கள். அதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் நினைவுக்கு வந்தபடியால், இனி நான் முழுநேர ஊழியராக பணிசெய்ய தீர்மானம் செய்தேன். அந்த இரவிலேயே கர்த்தர் எனக்குள் அற்புத சுகத்தைக் கொடுத்தார். அந்நாட்களில் நடந்ததுபோல இன்றும் அற்புதம் நடக்கிறதா என்று கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்த நான், இயேசு கிறிஸ்து நேன்றும் இன்றும் மாறாத ஜீவிக்கிற தேவன் என்று தம்பி வாழ ஆரம்பித்தேன். கர்த்தரை நம்புவதால் பலவிதங்களில் நம்மை ஆசீர்வதித்து காத்து நடத்துவார்.
/. கர்த்தரை நம்புவதால் வரும் ஆசீர்வாதங்கள்
1. கர்த்தரை நம்பும்போது விடுதலை உண்டாகும்
"எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.” சங்கீதம் 22:4
இன்று மனிதருடைய வாழ்க்கையிலே விடுதலையானது மிக அவசியமாய் இருக்கிறது. நமக்கு ஏற்படுகிற பிரச்சனைகளினாலே கலங்குகிறோம். என்ன செய்வது என்று அறியாது தடுமாறுகிறோம். யாரிடம் சென்று என் பிரச்சனையைச் சொல்லுவேன், யார் எனக்கு உதவி செய்வார் என்று ஏக்கத்தோடும், கேள்வியோடும் இருக்கிற மக்கள் அநேகர். சிறு வயதிலிருந்தே வேதத்திற்குப் புறம்பான காரியங்களைப் பலவித சூழ்நிலையின் நிமித்தமாய், குடும்ப வழக்கத்தினால், வசிக்கிற ஊரிலுள்ள கலாச்சாரத்தினால் அநேகர் செய்து வருகிறார்கள். அவைகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைவதற்கு, நாம் நம்முடைய நம்பிக்கையைக் கர்த்தர்மேல் முழுமையாக வைக்க வேண்டும்.
ஒருமுறை நெல்லைப்பகுதி ஊழியத்தின்போது, ஒரு விதவைத் தாயார் மிகுந்த கண்ணீரோடு என் மகன், நன்றாய்ப் படித்திருக்கிறான். கல்லுாரியிலே அவனுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பித் தேடிக் கொண்டிருக்கிறான். என் மகளோ திருமண வயதாகியும் திருமணம் செய்வதற்கு எந்தவிதமான வசதியும் இல்லை. எந்த மாப்பிள்ளை வீட்டாரும் கேட்டு வரவில்லை என்று கூறினார்கள். அவர்களுக்காக நான் ஜெபித்தபோது, உங்கள் வீட்டில் ஒரு மரித்தவர் படம் இருக்கிறது. அதற்கு மேலாக விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களிலே அந்தப் படத்திற்கு முன்பாக நின்று என்ன செய்வது என்று தெரியாது கலங்குகிறேன் என்று சொல்கிறீர்களே என்று கேட்டேன். அது என் மரித்துப்போன கணவரின் படம். எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாதபடியால், பிள்ளைகளைக் குறித்த கவலை பெருகும்போது, அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் சொன்னபடியே வேண்டுகிறேன் என்றார்கள். அவர்களுக்கு, செத்தவர்களின் படத்தை ஆல்பத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தை கழற்றிவிட்டு ஒரு நல்ல வேத வாக்கியம் போடுங்கள். பிள்ளைகளின் வாழ்க்கை நலமாய் மாறும் என்று கூறினேன். அவர்கள் உடனே என் வீட்டிற்கு வாருங்கள் ஐயா, நான் அந்தப் படத்தை எடுத்து விடுகிறேன் என்று கூறினபடியால், அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். அந்தப் படத்தைக் கழற்ற உதவியும் செய்தேன். அவர்களுடைய நம்பிக்கை முழுமையாக கர்த்தர்பேரில் மாறியது. நம்பினவர்களை விடுவிக்கிற தேவன், அந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சனையிலிருந்து விடுவித்தார். சில தினங்களிலேயே அவர்களது மகனுக்கு நாசரேத்தில் உள்ள கல்லுாரியில் வேலை கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அவர்களது பொருளாதார மற்றும் சகல பிரச்சனைகளிலிருந்தும் விடுதலைப் பெற்றார்கள். மகளுடைய திருமண காரியமும் சில நாட்களிலே கூடிவரச்செய்து, அவர்களின் மனப் போராட்டத்திலிருந்து கர்த்தர் விடுதலைக் கொடுத்தார். நம்பினவர்களை விடுவிக்கிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார்.
வேதத்தில் எரேமியா 39:18ல் 'உன்னை நிச்சயமாக விடுவிப்பேன்...' என்று வாக்குப்பண்ணின தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். நாம் உண்மையாய், முழுமையாய் அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கி, விடுவித்து நம்மை ஆசீர்வதிப்பார்.
2. கர்த்தரை நம்புகிறவர்களுக்கு கேடகமாயிருக்கிறார்
"...தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்." சங்கீதம் 18:30
சத்துரு நமக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிற போராட்டத்திலே நமக்குத் தேவையான ஒன்று கேடகமாகும். ஆதிகாலத்தில் உள்ள காலாட்படையினர் யுத்தத்திற்குச் செல்லும்போது, பாதரட்சைகளைத் தொடுத்தவர்களாய், இன்று சொல்லப்படுகிற ஹெல்மெட் போல தலைச்சீராவையும், அத்துடன் மார்க்கவசம், கேடகம், ஈட்டியும் கொண்டு செல்வது பழக்கத்தில் இருந்தது. இன்று இந்தக் கேடகம் என்பது விசுவாசத்தைக் குறிப்பதாகும். 'பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்.' என்று எபே. 6:16ம் வாக்கியத்தில் பார்க்கிறோம். சங். 115:9ல் 'இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.' எனப் பார்க்கிறோம். சத்துருவினுடைய தாக்குதலினால் பாதுகாக்கப்படுவதற்கு அருளப்படுகிற ஒரு பாதுகாவலின் ஆயுதமாக கேடகம் இருக்கிறது. கேடகமானது பலவிதங்களில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. பிரசங்கி 7:12ல் 'ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்...' எனப் பார்க்கிறோம்....உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமா யிருக்கிறார்.' நீதி. 2:7. அத்துடன் அவரை அண்டிக்கொள்ளுகிற வர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். இந்தக் கேடகமானது சத்துருவாகிய பிசாசின் சகல தந்திரங்களையும் மேற்கொள்வதற்கு பாதுகாவலாய் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. கோலியாத் உலகப்பிரகாரமான பெரிய வெண்கல கேடகத்தைப் பிடித்திருந்தாலும், அது அவனுக்குப் பிரயோஜனமாக இல்லை. தாவீது எறிந்த கல்லைத் தேவன், பாதுகாக்கப்படாத நெற்றியில் படச்செய்தபடியால் அவன் செத்து கீழே விழுந்தான். கர்த்தர் கொடுத்திருக்கிற உன்னதமான பாதுகாவலின் ஆயுதமாகிய கேடகமானது மேலானது, வல்லமையானது. இந்தக் கேடகமானது தேவனுடைய பிள்ளைகளுக்கு மகிமையையும், சத்துருவின் தந்திரங்களை மேற்கொண்டு ஜெயம் பெறவும் செய்கிறது. இன்று நாம் கர்த்தரை உண்மையாய் நம்புவோம், கேடமாகிய பாதுகாவலோடு என்றும் காக்கப்படுவோமாக.
3. கர்த்தரை நம்பியிருக்கிறவனைக் கிருபை சூழ்ந்து கொள்ளும்
“துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிற வனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்." சங்கீதம் 32:10
நாம் கர்த்தரை நம்பும்போது அவரின் கிருபை நம்மைச் சூழ்ந்து கொள்ளுகிற பாக்கியசாலிகளாய் மாறுகிறோம். இன்று அவருடைய கிருபையினால்தான் அநேக இக்கட்டுகளிலிருந்தும், வேதனைகளி லிருந்தும், பாடுகளிலிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் தப்பி இருக்கிறோம். புலம்பல் 3:22ல் 'நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே' என்று பார்க்கிறோம். கிருபை என்பது தகுதியற்ற நமக்கு, பாவியான நமக்கு அருளப்படுகிற அன்பின் செயல் தான். பல தவறான செய்கைகளைச் செய்து கொண்டிருந்தாலும், கர்த்தருடைய கிருபையாகிய செயலினால் நாம் அழிந்து போகாதபடி காக்கப்படுகிறோம். அநேகர் இந்தக் கிருபையை உணர்ந்து கொள்ளாதபடி அதிர்ஷ்டவசமாகத் தப்பிக்கொண்டேன் என்று சொல்லுவார்கள்.
ஒருமுறை ஒரு செல்வந்தர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் இன்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு இயேசுவைப் பற்றிக் கூறினேன். கர்த்தரின் கிருபையினாலே அவரது வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் புறமதஸ்தராய் இருந்தாலும், இங்கு நடத்தப்படும் கூட்டத்தினால், கர்த்தரின் கிருபை, உங்களுக்குள்ளாய் ஒரு பாதுகாவலின் வேலியாக இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவரோ அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருந்தார். திடீரென்று அவரது வீட்டில் கூட்டம் நடைபெறுவது நின்று போயிற்று. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் உண்டுபண்ணின எல்லாரையும் நேசிக்கிறார். அவருடைய அன்பினாலும், கிருபையினாலும் எச்சூழ்நிலையிலும் உங்களைக் காத்து நடத்துவார் என்று கூறினேன். ஒருநாளிலே அவருடைய மோட்டார் சைக்கிளில் பணி செய்கிற இடத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட வாகன விபத்தில் அவருடைய கை, கால், முகம் மற்றும் பல பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைந்து போயிற்று. எட்டு இடங்களில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் அதிக வேதனை அடைந்தார். மருத்துவர்கள் பிழைப்பாரா என்ற சந்தேகத்தோடு எந்தப் பகுதிக்குச் சிகிச்சைத் தருவது என்று யோசனை பண்ணி சிகிச்சை கொடுத்தார்கள். ஆனால் அவரின் சரீரத்தில் துரிதமாக சுகம் உண்டானது. அவர் கர்த்தருடைய கிருபையினாலே நிர்மூலமாகாதபடி காக்கப்பட்டதை உணர்ந்தார், அறிந்தார்.
இன்று அநேக நேரங்களிலே நம்முடைய வாழ்க்கையிலே ஏற்படுகிற தோல்வியினால், நஷ்டத்தினால் உள்ளத்தில் பலவித போராட்டங்கள் தோன்றி, நீ ஏன் வாழ்கிறாய் ? தற்கொலை செய்து கொள் என்றும், எதிராய் இருக்கிறவர்களை நீ அழித்துவிடு என்றும் பிசாசானவன் அவர்களது உள்ளங்களில் தூண்டுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறவர்களின் வாழ்க்கையிலும், பிள்ளைகளின் நிமித்தம் ஏற்படுகிற போராட்டங்களிலும் கர்த்தருடைய கிருபையானது தவறான தீர்மானத்திற்கு இடம் கொடாதபடி கர்த்தர் அவர்களைக் காத்து நடத்துகிறார். அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய கிருபை மிகவும் மேன்மையானது, அது மிகவும் நல்லது.
ஒருமுறை ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும் அவரது நண்பரும் ஆலயத்தின் பின்பகுதியில் கட்டப்பட்டு வந்த Parrish Hall எவ்வளவு துாரம் கட்டியிருக்கிறார்கள் என்று பார்க்கச் சென்றார்கள். அவ்வாறு அவர்கள் பார்த்து விட்டு சற்றுதூரம்தான் வெளியே வந்தார்கள். கட்டப்பட்டு வந்த அந்தக் கட்டிடத்தின் ஒரு பீம் ஆனது கீழே விழுந்து நொறுங்கியது. முன்பு அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. ஒரு நிமிடத்திற்கு முன்பு அது விழுந்திருக்குமென்றால், கீழே விழுந்த பீமானது இவர்கள்மேல் விழுந்து வேதனையோடு மரித்து போயிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். கர்த்தருடைய கிருபையானது அவர்கள் நிர்மூலமாகாதிருக்கச் செய்தது. 'தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.' என்று சங். 36:7ல் பார்க்கிறோம். புலம்பல் 3:23ல் இந்தக் கிருபை காலைதோறும் புதிதாயிருக்கிறது என்று பார்க்கிறோம். இந்தக் கிருபையானது என்றென்றைக்குமுள்ளது. இந்தக் கிருபையை நாம் உணர்ந்து, அவரைத் துதித்து ஸ்தோத்தரிக்கும்போது, மேலான ஆசீர்வாதமான இரட்சிப்பைப் பெறுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராக ஏற்று, அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போதும், அவர் பின் செல்லும்போதும், இந்தக் கிருபை நம் வாழ்வில் என்றும் தொடருகிறதாயும், சூழ்ந்து கொள்ளுகிறதாயும் இருக்கிறது.
இந்த உலக வாழ்க்கையிலே பாவங்களைச் செய்வதற்கு, தவறான வழி செல்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் ஏராளமாய் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் நாமோ அவைகளைத் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிற, நம்பிக்கையின் நிச்சயத்தைப் பெருகச் செய்கிற அந்த ஓட்டத்தை, நமக்கு நியமித்திருக்கிற பாதையில் பொறுமையோடு ஓடவேண்டும் என்று வேதம் நமக்குத் தெளிவாக சொல்லியிருக்கிறது. நாம் கர்த்தருக்குள் நீதிமான்களாக மாற்றப்படுவோமானால், காருண்யம் என்னும் கேடகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. இந்தக் காருண்யமானது நம் வாழ்வை மீண்டுமாய்க் கட்டக்கூடிய ஆற்றலும் வல்லமையும் உடையதாய் இருக்கிறது.
அருமையானே சகோதரனே, சகோதரியே, உன் இடிந்த வாழ்க்கையைக் கர்த்தரின் கிருபையினாலே மீண்டும் கட்டப்படுவதை, கர்த்தர்மேல் வைக்கிற நம்பிக்கையினாலே பெற்றுக்கொள்வாய். நம்பினவர்களைக் கைவிடாத தேவன், துாதர்களைக் கொண்டு நம்மைச் சூழ பாளையமிறங்கி விடுவிக்கிறவராய் இருக்கிறார். ஆகவே, நேற்றும், இன்றும், என்றும் மாறாத அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது, அவருடைய நாமத்தின் மீது, அவருடைய வார்த்தையின் மீது உள்ளத்தின் ஆழத்திலிருந்து முழு நம்பிக்கை வைப்போம். கிருபையினால் சூழப்பட்டு, காக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவோமாக.
4. கர்த்தரை நம்பும்போது எதிர்ப்பார்க்கிற நலமான காரியங்களைப் பெற்றுக்கொள்வோம்.
"என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.'' சங்கீதம் 62:5
இன்று நம் வாழ்வில் அதிக ஆவலோடு எதிர்நோக்குகிற காரியங்கள் மிகுதியாய் உண்டு. சிறு பிள்ளையாயிருக்கும்போது பல காரியங்களை உள்ளத்தில் வைத்து, அவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம், செயல்படுகிறோம். பெற்றோர், என் மகன்/மகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று விரும்பி வாஞ்சித்து, தங்களை ஒடுக்கி, வெறுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். இவைகளை நம்முடைய பெலத்தினாலே, ஞானத்தினாலே செய்கிறோம். நம்முடைய முயற்சி தோல்வியடையும்போது, துக்கமும், துயரமும் அடைகிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரியே, உன் வாழ்க்கையிலும் இவ்விதமான விருப்பங்கள், வாஞ்சைகள் உண்டல்லவா! ஆனால் இயேசு கிறிஸ்துவை நம்பும்போது, நாம் எதிர்ப்பார்த்த விரும்பின காரியங்கள் அவராலே வரும்.
என்னுடைய வாழ்க்கையிலே நான் வாலிபனாக இருந்த சமயத்தில் வீட்டினுடைய மேல்மாடியில் படுத்து உறங்குவேன். ஒவ்வொரு நாளும் காலையிலே விமானம் என் வீட்டின் மேல்பகுதி வழியாக சென்று விமானநிலையத்தில் இறங்கச் செல்லும். என் வீட்டிற்கும் விமான நிலையத்திற்கும் சுமார் 7 கி.மீ துாரம் தான். சில சமயங்களில் என் வீட்டிற்கு மேல் விமானம் பறந்து போகும்போதெல்லாம், இந்த விமானத்தை ஓட்டுகிற ஒட்டுனராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் என் வாழ்க்கையிலே ஒழுங்காக கவனமாக பெற்றோரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செய்யாதபடியால், அரசாங்கத் தேர்வுகளிலே தோல்வி அடைந்தேன். கடைசியிலே B.Sc., படிப்பை முடித்து, என் B.P.Ed., படிப்பையும் முடித்தேன். கர்த்தரின் கிருபையால் பரீட்சை எழுதி முடித்த அடுத்த தினமே திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் வேலை கிடைத்தது. என் பெற்றோர் கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையினால் இந்தக் காரியம் நடைபெற்றது. ஆனாலும் என் வாழ்க்கையிலே எங்கு விமானம் பறந்து சென்றாலும், அதையே நோக்கிப் பார்க்கிற பழக்கம் மாறாமல் இருந்தது. திருமணம் முடிந்தவுடன் என் பெற்றோர் எங்களைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்நாளிலே சென்னையிலே என் மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விமானங்களைக் காட்டினேன். இதையா போய்ப் பார்த்தாய் என்று என் சகோதரிகள் கேட்டார்கள். ஆனால் என்றைக்கு நான் கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொண்டேனோ, அன்று முதல் கர்த்தருக்காக வாழவும், உழைக்கவும் வேண்டும் என்று எடுத்த தீர்மானத்தினால் ஊழியத்தின் பாதையில் சென்ற போது, விமானத்திலே அநேக இடங்களுக்குப் பயணம் செய்ய கர்த்தர் நடத்தினார். நான் விரும்பின காரியங்களையும், நம்பின காரியங்களையும் கர்த்தராலே பெற்றுக்கொண்டேன்.
தாவீது ராஜா கர்த்தரையே நம்பி தன் இசை தாலந்துகளைக் கொண்டு கர்த்தரைத் துதித்துப் பாடி புகழ்ந்தான். கர்த்தர் அவனை வாலிப பிராயத்திலேயே என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று அவனை நடத்தினார். அவன் கோலியாத்தோடு யுத்தம் செய்யத்தக்கதாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. கர்த்தரை நம்பி அவன் கோலியாத்தை எளிதாய் ஒரு கவண் கல்லினாலே வெற்றி பெற்றான். இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக் கொடுப்பார். நான் உன்னை விட்டு உன் தலையை வாங்கி, பெலிஸ்தருடைய பாளையத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன். அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று அறிந்து கொள்வார்கள் என்று அவன் கூறிய வார்த்தையின்படியே அவன் காரியம் வெற்றியாய் முடிந்தது.
இன்று உங்கள் நம்பிக்கையைக் கர்த்தர் பேரில் நிறைவாய்ப் பெருகச் செய்யும் போது, நீங்கள் எதிர்ப்பார்த்த ஒவ்வொரு சிறிய பெரிய காரியங்களும் அவராலே உங்கள் வாழ்க்கையிலும் நடைபெறும். நாம் நம் நம்பிக்கையைக் கர்த்தர்பேரில் வைப்போம். நம் காரியங்கள் அவரால் நிறைவேறட்டும்.
5.கர்த்தரை நம்புகிறவன் என்றென்றைக்கும் அசைக்கப் படாதிருப்பான்.
"கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்." சங்கீதம் 125:1
இன்றைக்கு வாழ்க்கையில் எளிதாக துர்ச்செய்திகளைக் கேட்கும்போது, காற்றில் அசையும் நாணலைப் போல அசைகிறோம். நமது கையின் பிரயாசங்களில் எதிர்பார்த்த லாபம் வராமல் நஷ்டம் வருமானால், ஐயோ, நான் என்ன செய்வது என்று கலங்குகிறோம். இன்னும் சிலருடைய குடும்ப வாழ்க்கையிலே எதிர்ப்பார்க்கிற சமாதானம், சந்தோஷம், செழிப்பு இல்லாதபடியால், திருமண வாழ்வின் மகிழ்ச்சியை இழந்து துக்கப்படு கிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை என்ற தவறான எண்ணங்களும் தீர்மானங்களும் தோன்றுகிறது. இன்னும் சிலர் தாங்கள் நம்பி வேண்டுதல் செய்த காரியங்கள் நடைபெறவில்லை என்றால் ஏன் ஆலயம் செல்ல வேண்டும்? ஏன் ஜெபிக்க வேண்டும் ? ஏன் வேதத்தை தியானிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கடவுளே இல்லை என்கிற கொள்கை உடையவர்களாகி விடுகிறார்கள். தாங்கள் இந்தக் கொள்கைக்கு உட்பட்டதோடு அல்லாமல் கர்த்தரைத் தேடினால் என்ன பிரயோஜனம் என்று கர்த்தரைத் தேடுகிறவர்களையும் வேதனையோடு தடை செய்கிறவர்களாய் மாறுகிறார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உன் நம்பிக்கை வீண்போகாது என்று சொன்ன கர்த்தாதி கர்த்தர் வாக்கு மாறாதவராய் இருக்கிறார். வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சனைகளை முன் வைத்து கலங்குகிறபடியால் இவ்விதமான நிலைகள் ஏற்படுகிறது. எரேமியா 17:7ன் படி கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருப்பதோடு, கர்த்தரையே நம்பி வாழும் போது, அசைக்கப்படாத நல் வாழ்வை என்றென்றைக்கும் பெற்றுக் கொள்கிறோம். பிரச்சனைகளைப் பார்க்கும்போது நம் உள்ளம் சோர்ந்து காற்றில் அசைவாடுகிற ஒரு செத்தையைப்போல இருக்கிறோம். ஆகவே தான் தாவீது 'கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை' என்று சங்கீதம் 16:8ல் கூறியிருக்கிறார்.
அருமையான தேவ ஜனமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்யிைல் முன்னணியில் வைப்போம். நம் வாழ்வில் என்றென்றைக்கும் அசைக்கப்படாத நல் வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்.