"எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல.

                                              இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும்,

                                                                          அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்.'

                                                                                                                                                        மீகா 2:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு பகுதி ஊழியத்தின் முடிவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தன் வீட்டிற்கு ஜெபிக்க அழைத்தார்கள். அங்கு சென்றவுடன் அவர் சொன்ன ஜெபக்குறிப்புக்காக ஜெபிக்க ஆயத்தமானேன். தனது மகள் அரசாங்கத்தில் ஒரு இன்ஜினியராக பணியாற்றுகிறாள். இன்னும் திருமணம் நடைபெற வில்லை. வயது 30தை நெருங்கியிருக்கிறது என்றார்கள். அவர்களுக்காக ஜெபித்து விட்டு, உங்கள் மகளின் ஆல்பத்திலுள்ள முதல் பக்கத்திலுள்ள படத்தை எடுத்து விடுங்கள், துரிதமாக திருமணம் நடைபெற்று விடும் என்று கூறினேன். என்ன என்று கேட்டார்கள். ஒரு கட்டடம் முன்பாக நிற்கும் ஒரு படம் என்றேன். அவள் இவ்விதமாக எங்கும் சென்று போட்டோ எடுக்க வில்லை என்றார்கள். அப்படியா என்று கூறி ஒரு ஜெபத்தைச் செய்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். அவர்களின் மகள் ஆபிசிலிருந்து வீடு வந்தவுடன், நீ வடமாநிலம் சென்று எதையாவது பார்க்கப் போனாயா என்று கேட்டவுடன், அவர்களின் மகள் ஆம், கல்லூரிப் படிப்பின் போது ஒரு கட்டடத்தின் அமைப்பைப் பார்க்க சென்றோம் என்றாளாம். அங்கு போட்டோ எதுவும் எடுத்தீர்களா? என்றவுடன் ஆல்பத்தில் முதல் படமே அதில் நின்று எடுத்த படம் என்றாளாம். அது ஒரு கல்லறை என்று ஊழியர் கூறியதால், உடனே அதை எடுத்துவிடு என்றதும், அது என்ன என்று புரிந்து, தகப்பனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தபடியால், அதே மாதத்தில் அந்த மகளின் திருமணம் கூடி வந்து, திருமணமும் நடைபெற்றது.

அன்பு சகோதரனே, சகோதரியே, அறியாது, புரியாது என்ன என்று தெரியாது தவறான இடங்களைப் பார்க்கச் செல்லுகிறோம். அவைகளுக்கு முன்பாக பல கோணங்களில் புகைப்படமும் எடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளுகிறோம். இதினால் நாம் அறியாதபடி சில தீங்கின் ஆவிகள் பல தடைகளையும், பிரச்சனைகளையும் நம் வாழ்வில் பெருகச் செய்து நம்மைத் துக்கத்தினால் நிறைத்து விடுகிறது. இன்று நன்றாய் ஆராய்ந்து அறிந்து செயல்படுவோமாக. துக்கமும், துயரமும் அணுகாது கர்த்தர் நம்மைக் காத்து நடத்துவார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                 சகோ. C. எபனேசர் பால்