அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப வேளைக்காக நன்றி கூறுகிறேன். என் வாழ்வில் நான் ஏறெடுத்த ஜெபங்களைக் கேட்டு, பதில் தந்து, இம்மட்டும் ஆசீர்வதித்த தேவனே. இன்று எனக்கு இரங்கும். எனக்கிருக்கும் பயத்தின் போராட்டங்கள் நீங்க உதவி செய்யும். என்னைப் பயப்படுத்தும் தரிசனங்களும், சொப்பனங்களும் ஏன் எனக்கு வருகிறது என்று கேள்வியாக இருக்கிறது. இவைகள் எனக்குள் தோன்றும்போதெல்லாம் இயேசு கிறிஸ்துவே, என் சமாதானத்தை இழந்து போகிறேன். சில சமயங்களில் தீதான தரிசனங்கள் தோன்றி, திகிலைப் பெருகச் செய்து விடுகிறது. தேமானியனாகிய எலிப்பாஸ், மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்கு கையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது என்று சொன்னது போல எனக்குள் தோன்றுகிற சொப்பனங்களும், தரிசனங்களும் பயத்தைப் பெருகச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். அர்த்தம் புரியாத தீய உருவங்களும், நான் தனியாக எங்கோ விடப்பட்டு தத்தளிக்கிறதைப் போல சொப்பனமும் எனக்குள் தோன்றி என்னைப் பயப்படுத்துகிறது. என் வயிற்றில் குழந்தை உண்டாயிருப்பதை நீர் அறிவீர். அது பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் ஏற்படுவதுண்டு. இந்த வீடானது தீட்டுப்பட்டதோ, சாபம் நிறைந்ததோ என்று நான் அறியேன். அதினால் இவைகள் வருகிறதோ என்று ஐயப்படுகிறேன். இயேசு கிறிஸ்துவே. எனக்கு இரங்கும். என்னைக் குணமாக்கும். ஒவ்வொரு இரவும் கவலையும், கலக்கமும் தோன்றி, என் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறது. இராமுழுவதும் விழித்திருந்து அதிகாலையில்தான் தூங்குகிறேன். எனக்கு இரங்கி, இந்தப் போராட்டம் நீங்கி, நான் முன்போல பயமின்றி துாங்க, சுகமாய் எழுந்திருக்க எனக்கு உதவிசெய்யும். நீர் பேசும் சொப்பனங்களினாலும், தரிசனங்களினாலும் என்னை மகிழ்ச்சி யாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கெஞ்சி கேட்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.