" சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,

                                                                        சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்."

                                                                                                                                                              ஏசாயா 40:29

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். ஒரு மனிதன் பல காரணங்களினால் சோர்வடைகிறான்.

சோர்வானது மனிதனின் வாழ்க்கையை, அவனின் செயல்களைப் பாதிப்படையச் செய்கிறது. இதனால் அவனுடைய வாழ்வில், வேலையில், செய்கிற காரியங்களில் முழுமையாக எதையும் செய்ய இயலாதபடி போய் விடுகிறான். இந்தச் சோர்வு துக்கத்தைப் பெருகச் செய்கிறது. இன்னும் சிலரின் வாழ்க்கையிலே தோல்விகளைக் கொண்டு வருகிறது. இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே கசந்த நிலைகளை உருவாக்குகிறது. இந்தச் சோர்வினாலே தவறான, தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறான். அத்துடன் சமாதானம் இழந்து, சந்தோஷத்தை இழந்து, ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணங்கள் தோன்றி, வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றி விடுகிறது. சோர்வானது மனிதனுடைய சரீரத்தில், ஆவியில், ஆத்துமாவில் உண்டாகிறது.

1. சரீரத்தில் ஏற்படுகிற சோர்வுகள்

"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து..."ஏசாயா 40:29

இன்று சரீரத்தில் ஏற்படுகிற சோர்வுகள் பலவிதங்களில் மனிதனின் வாழ்வில் தோன்றுகிறது. சிலர் அதிகமாக வேலை செய்து களைத்து சோர்வடைகிறார்கள். இன்னும் சிலரில் சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் சோர்வு உண்டாகிறது. வேதத்திலே யோனா நினிவேக்கு அருகே ஒரு இடத்திலே ஒரு குடிசையைப் போட்டு, அந்த நகரத்திற்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான். யோனாவுக்குத் தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டார். அத்துடன் அது ஓங்கி வளரவும் பண்ணினார். அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளிலே கிழக்கு வெளுக்கும் நேரத்தில் வேறொரு பூச்சியைக் கட்டளையிட்டார். அது ஆமணக்குச் செடியை அரித்துப் போட்டது. செடியும் காய்ந்து போயிற்று. சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார். வெயில் யோனாவின் தலையில் பட ஆரம்பித்தது. அதினால் சோர்வடைந்த யோனா நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்று தனக்குள்ளே எண்ண ஆரம்பித்தான். இயற்கையின் மாற்றத்தினால் சோர்வு ஏற்படுகிறது.

 

சாரத்தில் ஏற்படுகிற சோர்வுகள் அவனது அனுதி பணிகளைச் செய்ய முடியாதவனாய் மாற்றுகிறது. தன் காலைக் கடன்களில் குறைவுபட்டு சோம்பேறியாக மாறி மெதுவாக செய்வார்கள். சாப்பிட உட்காரும்போது எதையோ யோசித்து யோசித்து மிக மெதுவாக சாப்பிடுவார்கள். சிலருடைய வாழ்க்கையிலே சாப்பிட ஆசைப்பட்டு எடுப்பதைக்கூட சாப்பிட முடியாது பாதியிலேயே கொட்டி விடுவார்கள். இந்தச் சரீர சோர்வு அவர்களின் எல்லாச் செய்கையையும் குறைவுடையதாய் மாற்றிவிடும். தெரிந்தும் தவறு செய்கிறவர்களாய் இருப்பார்கள்.

2.ஆவியிலே ஏற்படுகிற சோர்வுகள்

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும் என் முகத்துக்கு முன்பாக சோர்ந்து போகுமே.” ஏசாயா 57:16

ஆவியில் சோர்வு ஏற்படுவதால் மனநிலை பாதிக்கப்படுகிறது. இந்தச் சோர்வு மனநோயை உண்டாக்கி விடுகிறது. எப்பொழுதுமே பதற்றத்துடன் இருப்பார்கள். மற்றவர்களைத் துக்கப்படுத்தி, குறை பேசிக் கொண்டிருப்பார்கள். தாங்களாகவே சில காரியங்களை யூகித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். நிலைவரமான ஆவி இல்லாததினால் காலம், நேரம் அறியாது செயல்படுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் 3 வாலிபப் பெண்கள் இருந்தார்கள். படித்தவர்கள், ஆனால் குடும்பத்திலே பல கசப்பு காரியங்களினால் சோர்வடைந்து எந்த வேலையையும், எந்தக் காரியத்தையும் செய்யாது, பகல் நேரத்தை வீணாக செலவழித்து விடுவார்கள். இரவு ஆனவுடன் மிகுந்த உற்சாகத்தோடு குளித்து, அழகாக ஒடுத்தி, ஏதோ வேலைக்கோ, ஊருக்கோ செல்வதுபோல ஆயத்தமடைந்திருப்பார்கள். ஆவியின் சோர்வு அவர்களின் வாழ்க்கையில் மன அமைதியைக் கெடுத்து, மன துக்கத்தை அதிகரித்து, மனப் போராட்டங்களைப் பெருகச் செய்து விடுகிறது. இவர்கள் மன நோயாளிகள் போல எல்லா நேரங்களிலும் தூங்க முடியாது பாடுபடுவார்கள்.

3. ஆத்துமாவில் சோர்வு

"தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் பார்த்து தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்." ஆதியாகமம் 42:28

ஆத்துமாவிலே சோர்வடைகிறவர்கள் எப்போழுதுமே கலங்கியிருப்பார்கள். பயமும் பாவமும் ஆத்துமாவிலே சோர்வைப் பெருகச் காய்து விடுகிறது. ஆத்துமாவிலே ஏற்படும் சோர்வு, பழைய துக்க காரியங்களை நினைவுகூரச் செய்து வாழ்க்கையை அழுகையும் கண்ணீருமாக்கிவிடும். கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையை அற்றுப்போகச் செய்து விடும். கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து, கர்த்தரை முறுமுறுக்கிற, தூஷணங்களைப் பேச வைத்து விடுகிறது.

 

இன்று சோர்வு ஆவியிலே, ஆத்துமாவிலே, சரீரங்களிலே தோன்றுவதால் கசந்துபோன, கண்ணீர் நிறைந்த கவலை, துக்கம் நிறைந்த வாழ்வு நமக்குள் தோன்றி விடுகிறது.

1. சோர்வு ஏன் உண்டாகிறது?

1. பிசாசினால் சோர்வு உண்டாகிறது

"அது அவளை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்துபோகிறான்..." மாற்கு 9:18

பிசாசானவன் தேவனால் உருவாக்கப்பட்ட மனிதர்களைக் கெடுக்க வேண்டும், நாசப்படுத்த வேண்டும் என்று தந்திரமாய்ச் செயல்படுகிறான். சிலரின் ஆவிக்குரிய வாழ்க்கையிலே கர்த்தரோடு நெருங்கி ஜீவித்து, ஆவிக்குள் வளரமுடியாதபடி பலவிதமான தந்திர செயலினால் மனதைக் குருடாக்கிக் கொண்டிருக்கிறான். இதனால் பின்மாற்றமடைந்து, ஏனோ தானோ என்று வேதத்தை வாசித்து விட்டு, உலகப்பிரகாரமான காட்சிகளைப் பார்ப்பதிலும், கேட்பதிலும், தன் நேரத்தைச் செலவிடுகிறான். இன்னும் தாங்கள் வைத்திருக்கிற போனில் youtube-மூலம் தேவன் விரும்பாத காரியங்களை மிகுந்த ஆர்வம் கொண்டு, அதிலே தன் நேரத்தைச் செலவிடுகிறான். படிக்க மனதில்லை, வேலை செய்ய மனதில்லை, வேதத்தை நேசிக்க மனதில்லாது, தன் நேரத்தை வீணானவைகளுக்குச் செலவிடுகிறான். அருவருப்பான காரியங்களை மிகுந்த ஆவலோடு காண விரும்புகிறான். அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இவ்விதமான சோர்வு அவனது ஆவிக்குரிய வாழ்க்கையைக் கெடுத்து, கர்த்தரை விட்டுப் பிரிந்து போக வைக்கிறது.

இதைப்போல தீதான சூழ்நிலையை உருவாக்கி மிகுதியான போராட்டங்களைப் பெருகச்செய்து இழப்புகளையும், நஷ்டங்களையும்பெருகச்செய்து, வேதத்தை நேசிக்க, தியானிக்க முடியாது செய்து விடுகிறான், யோபுவினுடைய  வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்ந்து கொண்டிருந்த அவனுக்கு, பிள்ளைகளின் இழப்பும், நஷ்டமும், கஷ்ட நிலையை உருவாக்கினது. யோபு, தேவனுக்கு விரோதமாய் வீண் வார்த்தைகளைச் சொல்லுவான் என்று பிசாசானவன் எதிர்ப்பார்த்தான். ஆனால் யோபுவோ தன் உதடுகளினால் பாவம் செய்யாது, 'கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருக்கே ஸ்தோத்திரம்' என்று கூறி சாத்தானின் தந்திர தந்திரங்களை ஜெயித்தான். ஆகவே சாத்தான் தேவ அனுமதியோடு யோபுவினுடைய சரீரத்திலே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொடிய பருக்களை உருவாக்கி, அவனை மிகுதியாய் உபத்திரவப்படுத்தினான். சாத்தான் அவனைச் சிறைப்படுத்தி 10 நாட்கள் உபத்திரவப்படுத்துவான் என்ற வார்த்தையின்படி சரீரங்களிலே உபத்திரவங்களைப் பெருகச் செய்தான்.

இதைப்போல ஆவியிலே முறிவைக் கொண்டு வந்து கலங்கடிக்கிறான். அதனால் மனநிலை பாதிக்கப்படுவதால் ஆயுசுநாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளைச் சாப்பிடுகிறவனாய் இருக்கிறான். அத்துடன் சிலரில் அவர்களின் ஆத்துமாவைத் தாக்கி, அவர்களை ஆளுகை செய்து, வேதனைப் படுத்துகிறான். இவ்விதமாய் ஆவியிலே தாக்குதல் செய்யும்போது, இந்தப் போராட்டமான நிலை மாற சில மணிநேரம், சில தினங்கள் ஆகி விடுகிறது. ஆவி நீங்கிய பிறகு சரீரம் முழுவதும் வலியினால் நிறைந்திருப்பதால் பல மணிநேரம் துாங்குவதைப் பார்க்கலாம்.'

 

2. தீமைகள் சூழ்ந்து கொள்வதால் சோர்வு உண்டாகிறது

 "எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது." சங்கீதம் 40:12

 

இன்று நம்மைச் சுற்றி தீமையான காரியங்கள் அதிகமாக பெருகி வருகிறது. மனிதனுடைய அக்கிரமங்கள் நிறைவாகிக் கொண்டிருக்கிறபடியால், விவரிக்க முடியாத வேதனையான காரியங்கள் நிறைந்து கொண்டே இருக்கிறது. எனக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தார் சென்னையில் இடம் வாங்கப் போனார்கள். இதுதான் இடம் என்று காண்பித்தார்கள். அதைப் புதிவு செய்ய அலுவலகம் சென்று பதிவு செய்தார்கள். தெரிந்தவர்கள் தான் இதையெல்லாம் செய்தார்கள். பின்பு அந்த இடத்திற்குச் சென்றபோது, அவ்விதமான ஒரு இடமே அங்கு இல்லை என்றனர். பல இட்சம் ரூபாய்களை ஏமாந்து போனார்கள். மற்றவர்களின் தீமையான செயலினாலும், நம்முடைய பாவத்தினாலும் சோர்வு பெருகி, கவலைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் நஷ்டம் பெருகச்செய்து கலங்கடிக்கிறது. இன்றைக்கு நாம் நாம் செய்த அக்கிரமத்தினால் தீமைகள் வெகுவாய்ச் சூழ்ந்து கொள்வதோடு, பெரிதான சோர்வு நம்மிலும், நம் எல்லைகளிலும் பெருகி விடுகிறது.

ஒரு முறை ஒரு குடும்பத்தார் சோர்வடைந்த நிலையிலே ஜெபிக்க வந்தார்கள். என் கணவருக்கு நான் முதல் மனைவி, எனக்கு 3 பிள்ளைகள் உண்டு. என் கணவர் என்னைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைச் சேர்த்து வைத்துக் கொண்டார். என்னுடைய வீட்டிலிருந்து நானும் என் பிள்ளைகளும் வெளியேற வேண்டிய நிலை எந்தது. என் கணவர் இறந்த போது, சேர்த்துக் கொண்டவளுடைய பிள்ளையும் அவளும் எங்கள் வீட்டிலேயே இருந்து விட்டார்கள். என் கணவருக்கு வந்த எல்லாப் பணத்தையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். வழக்குத் தொடர்ந்தும், காலம் சென்று கொண்டே இருக்கிறது. மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னார்கள். இன்று இவ்வாறாக பாதிப்படைந்து பாடுகளோடு வாழ்கிற மக்கள் மிகுந்த சோர்வினால் எப்பொழுது முடிவு வரும் என்று காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

3. தாகத்தால் சோர்வு உண்டாகிறது

"அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்." ஆமோஸ் 8:13

 

இன்று மனிதனுடைய வாழ்க்கையிலே தாகம் தீராதபடியால் சோர்வடைகிறான். தாகம் என்று சொன்னவுடன் ஒவ்வொரு விதமான, வித்தியாசமான தாகங்கள் இருக்கிறது. ஆபிரகாம் அதிகாலையிலே ஆகாரையும் அவள் மகன் இஸ்மவேலையும் துருத்தியிலே தண்ணீர் நிரப்பிக் கொடுத்து அனுப்பினான். ஆகார் பெயர்செபா வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். தண்ணீர் தீர்ந்து போனபடியால், பிள்ளைத் தாகத்தால் அழ ஆரம்பித்தான். ஆகாரோ பிள்ளையைக் கீழே கிடத்திவிட்டு, சற்று தூரம் அமர்ந்து பிள்ளைச் சாகிறதைப் பார்க்க மாட்டேன் என்று அழுதாள். பிள்ளையின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட தேவன், ஆகாரின் கண்களைத் திறந்து நீர்த்துறவைக் கண்டு தாகம் தீர்க்கச் செய்தார். கர்த்தர் தாகத்தைத் தீர்த்து புது கிருபை அருளினார்.

இதைப் போல வேத வசனம் கிடையாத காலம் ஏற்படும். அக்காலத்தில் இந்த வசனமாகிய தாகம் தீர ஜனங்கள் அலைந்து திரிவார்கள். இந்த வசன தாகம் ஏற்ற விதமாய் தீர்க்கப்படவில்லை என்றால், உள்ளத்தில் சமாதானம், சுகம் இழந்து தவிப்பார்கள். இன்றைக்குப் பலவிதமான, வித்தியாசமான போதனைகளினாலே ஜனங்கள் போராட்டத்தோடும். ஒரு காரியத்தைச் செய்யலாமா, செய்யக்கூடாதா என்று அறியாத போராட்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

ஒருமுறை ஒரு பகுதி ஊழியத்தின்போது, கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்த சகோதரர், தன் வீட்டிற்கு வரவும், ஜெபிக்கவும் கேட்டுக் கொண்டார். கூட்டம் முடிந்து இரவு நேரம் அந்த வீட்டிற்குச் சென்ற போது, 14 அல்லது 15 வயது நிறைந்த பிள்ளையைத் தரையிலே கிடத்தி, ஒரு போர்வையினால் மூடியிருந்தார்கள். சரீரம் முழுவதும் புண்கள், ஆடை போட முடியாது. மருத்துவரை அணுகி என்னிடத்தில் இருந்த பணத்தைக் கொண்டு சிகிச்சைச் செய்தும், பிரயோஜனமற்ற நிலமை என்று கூறினார். அந்த மகளுக்காக ஜெபித்த போது, அம்மகளை வேதனைப்படுத்தின ஆவி, எனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தம் உண்டு. இந்த வீட்டின் பூக்கள் என் பூஜைக்கு வருகிறது என்று சொல்லக்கேட்டேன். ஜெபத்தை முடித்து விட்டு, அந்தச் சகோதரரிடம் நீங்கள் பூச்செடி வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். ஐயா, எனக்குப் பூச்செடியின் மீது அதிக ஆர்வம் உண்டு. எங்கள் வீட்டின் வேலிக்குப்பதிலாக பூச்செடியைத்தான் வைத்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அதன் பூவை என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது, நான் பறிக்கும் முன்னதாக சிலர் அந்தப் பூக்களைப் பறித்து அருகிலுள்ள ஆலயத்திலே பூஜைக்குப் போட்டு விடுகிறார்கள் என்றார். உங்களுக்கும் அந்த ஆலயத்துக்கும் தொடர்பில்லாதிருக்க வேண்டும். பூக்களைப் பறிக்கிறவர்களிடத்தில் விற்று விடுங்கள் அல்லது மற்றவர்கள் பறிக்காது பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் பூச்செடியை வெட்டிப் போட்டுவிடுங்கள் என்றேன். அவர் அந்தப் பூச்செடிகளை வெட்டிப் போட்டுவிட்டார். மூன்றாம் நாளிலே அந்த மகள் பூரண சுகமடைந்தாள். இது எப்படி என்று அநேகர் கேள்வியும் கேட்டார்கள். சிலர் தங்கள் பத்திரிக்கையிலும் எழுதினார்கள். ஏற்ற ஆலோசனை இல்லாதபடியினால் மகளில் இருந்த நோய் பல ஆயிரங்களைப் பறித்தது. சுகம் பெற வேண்டும் என்ற தாகம் தீரவில்லை. இதைப்போல இன்றும் பலர் பல காரியங்களினாலே சத்தியத்தை அறியாது, தங்கள் தாகம் தீர்க்கப்படாது கலங்குகிறார்கள்.

4. கர்த்தரின் வல்லமையினால் சத்துருக்களில் சோர்வு

 

"இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகலராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டது முதற்கொண்டு அவர்கள் இருதயம் கரைந்துஇஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். யோசுவா 5:1

யோசுவாவைக் கொண்டு கர்த்தர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தினார். யோசுவா யோர்தான் நதியை கர்த்தரின் வல்லமையினால் பிரித்தபடியால், இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந் தரையில் நடந்தார்கள். இந்த க் காரியத்தை எமோரியரின் ராஜாக்களும், கானானின் ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு சோர்ந்து போனார்கள். இன்று கர்த்தரின் வல்லமையான செயலைக் காண்கிற  கர்த்தருக்கு விரோதமாயிருக்கிறவர்கள் சோர்ந்து போவார்கள். இயேசு கிறிஸ்து மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின காரியத்தைக் கண்டயூதர்கள், இயேசுவை விசுவாசித்து அவருக்குப் பின்சென்றார்கள். இதைக் கண்ட, கேட்ட இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாய் இருந்த எல்லாரும் அவரைக் கொல்ல வகை எல்லாரும் தேடினார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் வழியாக மற்றதரின் வல்ல செயல்கள் நடைபெறும்போது, அதைக் காண்கிற மற்ற ஊழியர்கள், விசுவாசமில்லாதவர்கள் சோர்ந்து போவார்கள். இன்று நாம் யோசுவாவைப் போல கர்த்தரின் கிருபையைப் பெற்று ஆசீர்வதிக்கப் படுவோமாக.

II.சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும்

'கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.' ஏசாயா 40:31

நம்முடைய ஆபத்துக் காலத்தில் நாம் சோர்ந்து போகும்போது, பெலனை இழந்து விடுகிறோம். ஆனால் கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்கும்போது, புதுப்பெலன் அடைகிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே. கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கிற காரியம், ஆவிக்குள்ளான வாழ்க்கையிலே வளர்வதற்கு, சோர்வு நீங்குவதற்கு ஏற்றதாயிருக்கிறது. 'கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து கர்த்தருக்குக் காத்திரு.' என்று தாவீது சங்கீதம் 27:14ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இவ்வுலக வாழ்க்கையிலே எதையுமே சீக்கிரமாய் பெறவேண்டும் என்ற எண்ணம், வாஞ்சை பெருகிவிட்டது. இன்றைக்கு பாஸ்ட்புட் கடைகள் அதிகமாக பெருகுவதற்கு ஒரு காரணம் காத்திருக்க மனதில்லாத நிலமை. கிராஸ் ரோடில் உள்ள சிக்னலில் பச்சை விளக்கு வருமுன் காத்திருக்க மனதில்லாதவர்கள், துரிதமாய் அந்தக் கிராஸ் ரோடைக் கடப்பதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் தென்னை மரம் 7 ஆண்டுகள் கழித்து காய்க்கும் என்றால், 3 ஆண்டிலேயே காய்க்கும் மாங்களை வாங்கிப் பயிரிடுகிறோம். இதைப்போல எல்லாக் காரியங்களிலும் விரைவாக விரைவாக என்று நம் மனநிலை மாறிவிட்டது. ஜெபங்கள் கூட short & sweet என்று சொல்கிற நாட்களாய் இருக்கிறது. இன்று நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் காத்திருந்து மிகுந்த பொறுமையோடு ஜெபிக்கும்போது, நம் ஜெபங்களைக் கர்த்தர் கேட்கிறார். இந்த ஜெபத்தினால் பெலன் அடைவோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

2. கிறிஸ்து இயேசுவையே நினைக்க வேண்டும்

"அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்." எபிரெயர் 12:2,3

இன்று நமது உள்ளம் வீணானவைகளை, கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகளை நினைக்கிற படியால், பிசாசானவன் பலதடைகளை உண்டுபண்ணுகிறான். நமது வழியைத் தவறான திசைகளுக்குத் திருப்புகிறான். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாது, எதைச் செய்யக்கூடாதோ அந்தக் காரியத்தையே செய்கிறோம். நமது சிந்தைகள் தாறுமாறானவைகளைச் சிந்திப்பதால், பல நஷ்டங்களை, சேதங்களை, பாடுகளை அனுபவிக்கிறோம். இயேசு கிறிஸ்து நமக்காக எல்லாம் செய்து முடித்திருக்கிறார் என்ற எண்ணம் கொண்டு, நமது சிந்தைகளை அவர் பக்கமாய்த் திருப்பினால், கிறிஸ்து நமக்காக பாடுபட்ட வைகளைப் புரிந்து கொள்ள முடியும். சர்வ வல்லவராயிருந்தும் சர்வ அதிகாரமுடையவராயிருந்தும் ஏன் சிலுவையில் துன்பப்பட்டார்? ஏன் பரிகாசத்திற்கு ஆளானார் ? ஏன் அவருக்கு முள்முடி சூட்டினார்கள்? என்று சற்று சிந்திக்கும் போது, அவர் என்னில் வைத்த அன்பே என்று நம் உள்ளங்களில் உணர முடிகிறது. அவரது அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. வாலிபப் பருவத்திலே அவர் ஏன் எனக்காக இரத்தத்தைச் சிந்தினார் என்று அவர் சொல்லிய வார்த்தைகளை நினைவுகூரும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவரால் சுத்திகரிக்கப் பட்ட நல்ல வாழ்க்கையும் நமக்குள் உருவாகிவிடும். 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். என்று நீதி, 3:6ல பார்க்கிறோம். இன்று அநேக நேரங்களிலே நம் வாழ்க்கையின் பாதையில் தோல்விகள், போராட்டங்கள் பெருகுவதற்கு இயேசு கிறிஸ்துவை நினையாது, உலக மக்களை நினைப்பதாகும். எந்த மனிதன் கிறிஸ்து இயேசுவையும் அவரது பாடுகளையும் நினைக்கிறானோ அவன் இரட்சிக்கப்படுவான்.

3. விசுவாச ஆவியின் நிறைவினால் சோர்வு நீங்குகிறது "ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநான் புதிதாக்கப்படுகிறது. 2 கொரிந்தியர் 4:16

இன்று கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை என்றால் பழையவைகள் எல்லாம் நீங்கிப்போகும். எல்லாம் புதிதாக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும். பழைய வாழ்க்கையில் இருந்த பாவங்கள், பழக்கங்கள், பாரம்பறிய காரியங்கள் - இவைகளெல்லாம் நீங்கி, புதிதாக்கப்பட்ட கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத் தரித்தவர்களாய் ஜீவிக்க துவங்குகிறதாய் இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை என்றாலே ஞானஸ்நானம் பெற்றப்பின் உண்டாகும் வாழ்க்கை ஆகும். ஞானஸ்நானமானது தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிற ஒரு செயல், ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாய் இருக்கிறது. முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனைக் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்தில் புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவ சாயலாய் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுகிறதாய் இருக்கிறது. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஞானஸ்நானம் பெற்றவர் எத்தனை பேரோ அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்கள்.

இவ்விதமான மாற்றமும், ஆவியின் நிறைவும் நமக்குள் வரும்போது, உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப் படுகிறது. ஆகவே ஆவியின் நிறைவினால் சோர்வு நீங்கி சுகவாழ்வு மலரும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

 சகோ. C. எபனேசர் பால்