அல்லாமலும் உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற

                                                             எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும்

                                பூமியிலே ஒருமனப் பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால்

                                  அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

                                                                                                                                                மத்தேயு 18:19

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு சகோதரியும் அவர்களின் கணவரும் என்னுடன் தொலைபேசியின் மூலம் ஜெபிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் மிகுந்த துக்கத்துடன் நாங்கள் சேர்த்து வைத்த எங்கள் தங்க நகைகள் ஒன்று கூட இல்லை, யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்று கலங்கினார்கள். ஒன்றுக்கும் கவலைப்டாமல் நீங்கள் இருவரும் சேர்ந்து ஜெபியுங்கள், கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் என்று ஆலோசனைக் கூறி ஜெபித்தேன்.அவர்களும் இணைந்து ஜெபித்தார்கள். சில தினங்கள் கழித்து எனக்கு வீட்டைச் சுத்தம் செய்ய உதவி செய்யும் சகோதரியிடம் ஒருமுறை கேட்டுவிட்டு பின் போலீஸில் புகார் செய்யலாம் என்று தொலைபேசியின் மூலம் அந்தச் சகோதரியிடம் விசாரித்தபோது, அந்தச் சகோதரி ஒரு அட்டைப்பெட்டியில் நகைகள் இருக்கிறது என்று பதில் கூறினாள். உடனே அவள் சொன்ன அடையாளம் உள்ள பெட்டியைப் பார்த்தபோது, அவர்களின் எல்லா நகைகளும் அதில் இருந்ததாம். அட்டைப் பெட்டியில் நகையை வைத்து எடுத்துச் செல்லத்திட்டமிட்ட அந்தப் பெண்ணால் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஏன் என்றால் இருவரும் ஒருமனப்பட்டு ஜெபித்தபடியால் அந்தச் சகோதரியால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இருவர் ஒருமனதுடன் ஜெபிக்கும்போது, ஜெபத்தின் வல்லமையை அனுபவிக்க முடியும். சகோதரனே, சகோதரியே, குடும்பத்தில் எந்த காரியத்தினாலும் சமாதானம் இழந்து கலங்கியிருப்பீர்கள் என்றால் இன்றே ஜெபிக்க ஒருமனப்படுங்கள். கர்த்தர் உங்கள் எல்லையில் வல்ல பெரிய காரியங்களைச் செய்வதைக் காணமுடியும். பிள்ளைகள், பொருளாதாரம், வேலையில்லா நிலமை, திருமணம் முடியாது தவிக்கும் காரியங்களில் இன்று கர்த்தரின் சமுகத்தை நோக்கி ஒருமனதுடன் ஜெபியுங்கள். அதிசயங்களைக் காண்பீர்கள்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்..