வேலை ஸ்தலத்தில் சமாதானம் இழந்திருக்கிற மக்களுக்காக ஒரு ஜெபம்     

  அன்பின் இயேசு கிறிஸ்துவே இம்மட்டுமாய் என்னை நடத்தி நீர் செய்த எல்லா நன்மை களுக்காக நன்றி கூறுகிறேன். நினையாத விதத்தில், நேரத்தில் அற்புதமாக எனக்கு இந்த வேலையைத் தந்தீர், அதற்காய் ஸ்தோத்திரம். ஆனால் இன்று இந்த வேலையிலே  நான் சமாதானத்தை இழந்து, சந்தோஷத்தை இழந்து திருப்தியற்ற நிலையிலே ஏன் இந்த வேலைக்கு வரவேண்டும்? வேலை செய்வதினாலே  என்ன பிரயோஜனம் என்ற அளவிலே என் உள்ளத்தில் போராட்டம் பெருகியிருக்கிறது. அன்பின் இயேசுகிறிஸ்துவே , உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு சாட்சியாய் , உம்முடைய வல்லமையுள்ள வார்த்தைகளினாலே எல்லாப் போராட்டங்களும் நீங்கி விடுதலையோடு, சமாதானத்தோடு மிகுந்த சந்தோஷத்தோடு நான் என் பணிகளைச் செய்யத்தக்கதாக எனக்கு உதவிச் செய்யும். என்னோடு பணி செய்கிற மக்களோடு எனக்கொரு அன்பின் ஐக்கியமில்லை. கர்த்தாவே, சமாதானத்தை இழந்து போயிருக்கிறேன். அவர்களைக் காணும்போதும், அவர்கள் வார்த்தையைக் கேட்கும் போதும் என் உள்ளத்திலே ஒரு விதமான கசப்பும் , சஞ்சலமும், போராட்டமும் நிறைந்திருக்கிறது. ஏன் இந்த நிலைமை என்று உணரமுடியாதபடி நான் வேதனையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.  இயேசு  கிறிஸ்துவே எனக்கு இரங்கும். சிற்சில சமயங்களிலே  வேறு பகுதிக்கு என் வேலையை மாற்றிச் செல்லலாமா என்கிற எண்ணங்கூட எனக்குள் அடிக்கடி தோன்றுகிறது. அது கஷ்டமான காரியமானாலும் என் குடும்பம் பிரிந்து வேதனையோடு    வாழ வேண்டிய சூழ்நிலை வருவதினால் அதை நான்  எண்ணாதிருக்கிறேன், செய்யாதிருக்கிறேன்.  இந்த வேலை செய்வதினாலே  என் ஆவிக்குரிய வாழ்க்கையிலே நான் தடுமாறுகிற நிலையை அடைகிறேன் . இயேசு  கிறிஸ்துவே, எனக்கு இரங்கி, என் வேலைஸ்தலத்திலுள்ள எல்லாப் பிரச்சனையையும் தீர்த்து, சமாதானம், சந்தோஷம்  நிறைந்த  ஆசீர்வாதத்தோடு  இந்த வேலையை செய்யத் தக்கதாக இன்றுமுதல் எனக்கு உதவிச் செய்யும். என்னுடைய கம்பெனியையும்  ஆசீர்வதியும். வேலை ஸ்தலத்தில் உள்ள காரியங்களைப் பொறுப்பெடுத்து நடத்தும். நான் பயணம் செய்தாலும் எங்கு சென்றாலும் உம்முடைய நல்ல நாமம் உயர்த்தப்படத்தக்கதாக , நீர் இன்றைக்கு சமாதானத்தைத்  தாரும். அதைச் செய்வீரென்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். கிருபை நிறையட்டும், மகிழ்ந்துக் களிகூரச் செய்யும். இயேசு  கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.