சிந்தி செயல்படு

"அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்..."

பிரசங்கி 3:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,       

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

சில தினங்களுக்கு முன்பாக ஒரு விமானப் பயணத்தின் முடிவிலே என்னுடைய லக்கேஜ் -ஐ அது வருகிற பெல்ட்டில் எடுக்கச் சென்றேன். அவ்விதமாய் எடுக்கச் சென்ற நேரத்திலே ஒரு சகோதரி தனக்காய் ஜெபிக்க வேண்டும் என்று தொலைபேசியின் மூலமாய்க் கேட்ட படியினாலே நின்றுகொண்டு, என்னுடைய பை வருகிறதா என்று பார்த்துக் கொண்டே ஜெபத்தை ஏறெடுத்து முடித்தேன். ஜெபத்தைச் செய்து கொண்டிருக்கும்போதே என்னுடைய பையானது அந்த பெல்ட்டிலே வந்தது. அதை எங்களால் எடுக்க முடியவில்லை. மறுபடியுமாக ஒரு சுற்று சுற்றி வரும், அப்பொழுது அதை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி நினைத்தோம். ஆனால் பெரிய ஏமாற்றம். பையானது மீண்டுமாய் வரவில்லை. 45 நிமிடங்கள் நின்று பார்த்தோம். கடைசியில் எங்கள் பை இல்லாதபடியினாலே அந்த விமான சிப்பந்திகளிடம் சென்று எங்களுடைய பையானது வரவில்லை என்று புகார் செய்தோம். அப்பொழுது அவர்கள் அந்த பெல்ட்டைப் பார்த்து விட்டு, அந்த பெல்ட்டிலே ஒரு பை இருக்கிறதே, அது உங்களுடைய பையா பாருங்கள் என்று சொன்னார்கள். அது என்னுடைய பை அல்ல, என்னுடைய பையினுடைய அதே கம்பெனியால் செய்யப்பட்ட அதைப் போல உள்ள பை என்று கூறினேன். உடனே அந்தச் சகோதரி அந்தப் பையை எடுத்து, அது யாருடையது என்று அந்தப்பெயரை வைத்துக் கண்டுபிடித்து, தொலைபேசியின் மூலமாய் அவரோடு தொடர்பு கொண்டார்கள், சீக்கிரமாய் உங்களிடத்தில் இருக்கிற பையைக் கொண்டு வந்து கொடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர் வருவதற்கோ மறுபடியுமாய் 1 மணி நேரம் ஆகிவிட்டது. இவ்விதமாய் அந்த நேரம் முழுவதும் சென்றபடியினாலே நான் அந்த விமான நிலையத்திலிருந்து இரண்டு வீட்டாரைச்சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த திட்டத்தின் எல்லா காரியங்களும் அப்படியே நொறுங்கிப் போய்விட்டது. ஆகவே என் வாழ்க்கையில் நான் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத படி போய் விட்டதினால் மிகுந்த வருத்தத்தோடு சென்றுவிட்டேன். அடுத்த நாள் நிறைவான programme இருந்ததினால், இந்த வீட்டாரைச் சந்திப்பது அவசியமாயிருக்கிறதே என்று உள்ளத்தில் எண்ணங்கொண்டு அதிகாலையில் எழுந்து வரவேண்டிய நிர்பந்த நிலை வந்தது.

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் அநேக காரியங்களை ஏற்ற நேரத்திலேச் செய்வதற்கு திட்டமிடுகிறோம். ஆனால் பல நேரங்களிலே செய்து முடிக்கமுடியாதபடி தடைகள், தாமதங்கள், குறைகள் போராட்டங்கள் வருகிறதைப் பார்க்கிறோம். அருமையான தேவ ஜனமே, ஏற்ற காலத்தில் கர்த்தர் நியமித்த நேரத்திலே சகலமும் நேர்த்தியாய் நடைபெறும் என்று விசுவாசிக்கிற நாம் சோர்ந்து போகாதபடி அவரைத் துதிப்போம். அதிசயமாய்க் காரியங்களைக் காணமுடியும். சேதமின்றி சகலமும் சிறப்பாய் நடைபெறச் செய்கிற தேவன் நம்முடைய தேவன். நம்முடைய தேவன் இதைப் பூரணப்படுத்தி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிற படியினால் அவருடைய அன்பின் பிரசன்னத்திலே நிறைந்து, அவர் வழியிலே நடந்து, அவர் நடத்துதலினாலே மேன்மையும் மகிழ்ச்சியும் அடைவோம்.

              கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.                                                                                       

சகோ.C. எபனேசர் பால்