சிந்தி செயல்படு

  ".... காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?"   

                                                                                                                                                                                                  லூக்கா 15:9

கிறிஸ்துக்குக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். சில காலத்திற்கு முன்னே நடைபெற்றக் கூட்டம் முடிந்து என்னுடைய பாதரட்சையை போட வந்தேன். ஆனால் என்னுடைய ஒரு செருப்பு, மற்றொரு செருப்புக்குப் பதிலாக ஒரு shoe - வும் இருந்தது. என்ன! இதைக் கூட அறியாதபடி போட்டு சென்றார்களோ, என்ற ஒரு கேள்வியோடு வெறுங்காலாக அந்த இடத்திலிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன்.  இன்னொரு பகுதி ஊழியத்திற்கு புது செருப்பு வாங்கிச் சென்றிருந்தேன். கூட்டம் முடிந்து செருப்பைப் போட வந்தால் ஒரு செருப்பு காணவில்லை. என்னோடு வந்த என் இளைய மகன் அங்கும் இங்கும் தேடினான். கடைசியில் ஒரு செருப்பை நாய்கடித்து கொதறி பயன்படுத்த முடியாத நிலை ஆனது.

இதைப்  போலவே  இன்னொரு பகுதி ஊழியத்தின் போது ஒரு செருப்பைக் காணவில்லை. ஒரு வாலிப மகளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த மகளுக்குள் இருந்த பெண் ஆவி சொன்னது: நான் தான் செருப்பை எடுத்து வைத்துக்கொன்டேன் என்றது. நாயும் பேயும் செருப்பை எடுத்துக்கொண்டதே என்று சற்றுக் கோபத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தேன். அந்த மகளுக்கு வெகு நேரம் கழித்து விடுதலையானது. அந்தச் செருப்பும் அதே பகுதியிலே கிடைக்கக் கர்த்தர் கிருபை செய்தார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பாக ஒரு வீட்டின் மறு பிரதிஷ்டை ஸ்தோத்திரக் கூட்டத்தில் செய்தி கொடுக்கச்சென்றேன். செய்தி கொடுத்து முடிந்தவுடன், சற்று தூரம் பயணம் செய்து வேறு ஒரு கூட்டத்திலே செய்தி கொடுக்க வேண்டும். அந்த வீட்டார் கொடுத்த ஆகாரத்தை உண்டு மகிழ்ச்சியோடு 2  1/2 மணி நேரம் தொலைவில் இருந்த இடத்திற்கு பயணம் செய்தேன். அந்தக் கூட்டம் முடிந்து வீடு திரும்பினேன். என் காலில் அணிந்து இருந்த செருப்புகளில் ஒரு செருப்புக்கும் மற்றொரு செருப்புக்கும் வித்தியாசம் தெரிந்தது. ஆனாலும் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணி, அது சரியா என்று பார்க்கவில்லை. வித்தியாசமான கலரோடு சில தினங்கள் கூட்டத்திற்கு அணிந்து சென்றேன். ஒரு நாளிலே என் செருப்பு அழுக்கு அடைந்திருக்கிறது என்று எண்ணி துடைக்க எடுத்த போது, இரண்டும் வெவ்வேறு செருப்பு என அறிந்தேன். வீட்டில் வைத்துவிட்டு, மற்றொரு கூட்டத்திற்கு ஒரு புது செருப்பை வாங்கி அணிந்து சென்றேன். விலையுர்ந்த செருப்பை வாங்கித் தந்தார்கள், அதை இழந்து விட்டேனே என்று எண்ணினேன்.  அப்பொழுது தான் என் வாழ்வில் சிந்தையில் செய்த பாவங்களை எண்ணி மன்னிப்பு கேட்க ஆரம்பித்தேன்.

என் ஆலயத்திற்கு வருகிற ஒருவர் ஆலைய வாசலிலே தன் செருப்பைக் கழற்றி ஒரு பையிலே போட்டு எடுத்துச் செல்வார். மற்றொரு பையிலே வேதாகமம், பாமாலை கீர்த்தனை பாடல் புத்தகமும் வைத்து எடுத்துச் செல்வார். இவரோடு கூட செருப்பும் ஆராதனைக்குச் செல்கிறதே என்று சிந்தித்த காலம் உண்டு. ஒரு காலில் shoe - வும் மற்றொரு காலில் செருப்பையும் போட்டு சென்றவருக்கு வித்தியாசம் தெரியாது போட்டுச் சென்றவர் உணர்வில்லாதவர் என்று எண்ணின காரியத்திற்காக மனஸ்தாபப்பட்டேன்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தின் போது தங்கள் வீட்டில் மறு பிரதிஷ்டை ஸ்தோத்திரக் கூட்டம் நடத்திய சகோதரி பங்கு பெற்றார்கள்.  தற்செயலாய் என் மனைவி உங்கள் வீட்டில் யாராவது செருப்பு மாறிற்று என்று சொன்னார்களா என்று கேட்டார்கள். அதற்கு இல்லை என்று சொல்லி வீடு திரும்பிவிட்டார்கள். ஆனால் வீட்டில் சென்று விசாரித்தபோது, தன இனத்தாரின் செருப்பு மாறிவிட்டது என்று கூறினார்.  உடனே தொலைபேசியின் மூலம் என் மனைவிக்கு தெரிவித்தார்கள் . நானும் மகிழ்ச்சி அடைந்தேன். என் உள்ளத்தில் மனம் திரும்பும்போது பிரித் தெடுக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கைக்கு அடையாளமாக சொல்லப் பட்டிருக்கிற இந்த செருப்பை இழந்து விட்டேனே என்று கலங்கின எனக்கு கிடைத்து விட்டது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்தது . விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பெற்ற இரட்சிப்பை இழந்து போகாது திரும்ப பெற்றுக்கொண்டேன் என்ற மன அமைதி உண்டானது. நாமும் இந்த இரட்சிப்பை கவனமாய் காத்துக்கொள்ளும் போது கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்போம் .

                               கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                            சகோ.சி. எபினேசர் பால்.