கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் புத்தாண்டின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ஒரு முறை ஒரு சகோதரி தனக்காக தன் பிள்ளைகளுக்காக, அவர்களின் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஜெபிக்க வந்தார்கள். அவர்களின் கணவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் பணிசெய்து, ஓய்வுபெற்று பின் மரித்தும் போய் விட்டார்கள். அப்பகுதி ஊழியத்தில் உதவின அவர்களின் மரணத்தை விசாரித்தபோது, அவர்களின் வாலிப வயதில் பழகியிருந்த புகைப்பிடிக்கும் பழக்கம் தான் அவரின் lungs பகுதியைக் கெடுத்துவிட்டது என்று கூறியதுடன், கர்த்தர் அவர்களின் வாழ்வில் செய்த காரியத்தைக் கூறினார்கள்.

திருமணமான பின் புகைப்பிடுக்கும் கணவனின் பழக்கம் மாற வேண்டும் என்று விரும்பிய சகோதரி, இனி புகைப் பிடிக்காதீர்கள் என்று அன்பாக கூறினார்களாம். அந்நேரம் கணவர் இன்று ஆராதனையில் தேவ செய்தியில் போதகர் புகைப்பிடிப்பது நல்லதல்ல என்று போதித்தால், நான் இந்தப் பழக்கத்தை இன்றே விட்டு விடுவேன் என்று கூறினாராம். அன்று அவர்கள் பங்கு பெற்ற ஆராதனையின் செய்தி நேரத்தில், வந்திருந்த விசேஷ செய்தியாளர், புகைப்பிடிப்பது நல்லதல்ல என்று தெளிவாகக் கூறினதினால், அன்றே அந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவர்கள் விட்டு விட்டார்கள் என்று கூறினார்கள். அதினால் அவர்கள் ஜீவ காலம் கிருபையாய் நீடித்தது என்றார்கள்.

இதை வாசிக்கும் அருமையான தேவப்பிள்ளையே, கர்த்தர் நமக்குச் சொல்லும் காரியங்களை அறிந்து, உணர்ந்து நல்ல பழக்கமுடையவர்களாய் மாறும்போது, நமக்குள் சுகவாழ்வை மலரச் செய்வார். என்னால் இந்த தீய பழக்கத்தை விட முடியவில்லை என்று போராடும் தேவப்பிள்ளையே, கர்த்தரின் ஆவியானவர் நமக்கு உதவிச் செய்வார். அருமையான வாலிபனே, தம்பியே, போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருப்பாய் என்றால் இன்று அதைவிட உடனே தீர்மானம் செய்து விட்டுவிடு. இந்தக் காரியம் உனக்குத் தோல்வியைக் கொண்டுவரும், உன் கண்ணைக் கெடுத்துவிடும். உன் ஆவியில், மனதில் அதையே சிந்திக்கச் செய்து விடும். இதைப் போல் எந்த பழக்கமாக இருந்தாலும் இன்றே தீர்மானம் செய்வோம். குடிப்பழக்கம், வீணான காட்சிகளைப் பார்ப்பது போன்ற எல்லா தீய பழக்கத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவிசெய்து விட்டுவிட கிருபை புரிவார்.

      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                            சகோ. C. எபனேசர் பால்.