குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர் கர்த்தர் நல்லவர் என்று ஏற்று வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமது பாதம் தாழ்த்தி என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள் என்று சொன்னவரே, எனக்கு இரங்கும். என் வீட்டில் என் கணவர்/என் மனைவி/என் பிள்ளைகள்/என் தகப்பனார்/என் தாயார்/என் சகோதரர்/என் சகோதரி இன்றும் கர்த்தர் நல்லவர் என்று ருசியாதபடி தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எப்பொழுது இவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், எப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இவர்களை நிரப்பும் என்று காத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். என் எல்லைகளை சமாதானத்தினால் நிரப்பும் ஆற்றல் உடைய அன்பின் தேவனே, எனக்கு இரங்கும். அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு செய்யும் ஜெபத்தைக் கேட்கிறவரே, எனக்கு இரங்கி அவர்கள் வாழ்வில் அற்புதம் செய்வீராக. நீர் சொல்ல ஆகும் என்றவரே, எனக்கு இரங்கும். ராஜாக்களின் இருதயங்களை நீர்க்கால்களைப் போல திருப்பும் அன்பின் தேவனே, அற்புதம் செய்யும். இதினால் எனக்கும் அவர்களுக்கும் உண்டாகும் கசப்பு, வாக்குவாதம் இனி காணாதிருக்க உதவிசெய்யும். அவர்கள் அறியாதபடி செய்யும் தீட்டான காரியங்கள், தவறான காரியங்கள், என்னையோ என் எல்லையிலே வாழும் ஒருவரையும் பாதியாதபடி காத்தருளும். அவர்கள் தங்கள் காரியங்களில் பங்குபெற அழைப்பதால் சில சமயங்களில் என்ன செய்வது என்று தெரியாது தவிக்கிறேன். நான் என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை தீட்டுப்படாது காக்க விரும்புகிறேன். அன்று தானியேலும், அவன் நண்பர்களும் தீட்டுப்படாதபடி காத்துக் கொள்ள செய்த தீர்மானத்தின்படியே, நானும் என் வீட்டாரும் வாழ விரும்புகிறேன். இதினால் சில நேரத்தில் தர்க்கமும் வாக்குவாதமும் வந்துவிடுகிது. சிறிய காரியத்திலும் கசப்படைந்து பேசவே முடியாதபடி போய் விடுகிறது. என்னத்தை குறைவாகக் கண்டாய் என்று சொல்லும் போது, எப்படி அவர்களுக்கு புரியவைப்பது என்று குழம்புகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இவர்கள் முற்றும் கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும்படி செய்யும். நானும் என் வீட்டாருமோ, கர்த்தரையே சேவிப்போம் என்று சொல்லி உம்மைத் துதிக்க, போற்ற எங்களுக்கு அருள்புரியும். இதுவரை எங்கள் எல்லைகளில் உண்டான சமாதான குறைவு, அன்பு தாழ்ச்சியடைந்த நிலை முற்றும் மாற தயவாய் இரங்கும். ஒருவிசை ஜெபம் கேட்டு இரங்கும் இயேசுவே. உம்மை மாத்திரம் உயர்த்திக்கூற, சாட்சியாக வாழ எனக்கு உதவிசெய்யும். நீர் எனக்கு அப்படிச் செய்வீர் என்று ஸ்தோத்தரிக்கிறேன். என் ஜெபம் கேளும் அன்பின் இயேசுவே, ஆமென்.