"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது..."

சங்கீதம் 19:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

எனக்கு மிகவும் அருமையான ஒரு சகோதரர், எவ்வாறு ஒரு சகோதரி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள் என்ற சாட்சியைக் கூறினார்கள்.

இந்தச் சகோதரரும் இன்னும் சிலருமாக ஒரு இடத்தில் கூடி ஜெபித்து வந்தார்கள். இவ்வாறு ஜெபிக்க வரும்போழுது, அவர்கள் வேதத்தை வாசித்து, தியானிப்பது வழக்கம். அந்தக் கூட்டத்திற்கு ஜெபத்திற்கு வருகின்ற ஒரு சகோதரி ஒரு வித்தியாசமான ஒரு வேதபுத்தகத்தை கொண்டு வருவார்கள். நாம் சாதாரணமாக எப்பொழுதும் பயன்படுத்தும் வேதாகமத்தை பயன்படுத்தும்படி அந்தச் சகோதரிக்கு ஆலோசனைக் கூறப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஜெபத்திற்கு தான் எப்பொழுதும் பயன்படுத்துவதையே கொண்டுவருவார்கள். அதையே உபயோகித்தும் வந்தார்கள்.

குழந்தையில்லாமலிருந்த அந்த சகோதரி கர்பந்தரிக்கும்படி கர்த்தர் கிருபை செய்தார். பலர் அந்த சகோதரிக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தனர். இந்தச் சகோதரர், சகோதரியின் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் சுகபத்திரமாக குழந்தையைப் பெற்றெடுக்கும்படி ஜெபித்து வருவார்கள். பிரச்சனைகளோ, பயமோ, வரும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை கூறி தைரியப்படுத்துவார்கள். 'கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும் படிசெய்து, காடுகளை வெளியாக்கும்...' சங்கீதம் 29:9 ன் படி வசனத்தை சுட்டிக்காட்டி இந்த வசனத்தைச் சொல்லி ஜெபிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.  

கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்யும் என்ற வசனம் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கர்த்தர் தனக்கு நல்லதொரு குழந்தையைக் கொடுப்பார் என்ற விசுவாசம் பெருக ஆரம்பித்தது. தான் பயன்படுத்தும் வேதத்தை திறந்து, அந்த வசனத்தை தேடினார்கள். அந்த வசனம், அவர்கள் பயன்படுத்திய வேதத்தில் இல்லை. என் பெலவீனத்திலிருந்து, போராட்டத்திலிருந்து என்னைக் குணமாக்கக்கூடிய மருந்தாகிய இந்த வசனம் இந்த வேதத்தில் இல்லையே என்று சொல்லி, அந்த நாள் முதல் உண்மையான வேதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய வசனத்தில் விசுவாசம் வைத்த சகோதரியையும் குழந்தையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

அன்பான சகோதரனே, சகோதரியே, வேதத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது. அவைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது. சாத்தானை ஜெயிக்கக்கூடிய ஆவியின் பட்டயம். வேத வசனத்தை ஆர்வத்தோடு வாசிப்பது, தியானிப்பது மட்டுமல்ல அதன்படி நடப்பதற்கும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.