"காதை உண்டாக்கினவர் கேளாரோ?

                       கண்ணை உண்டாக்கினவர் காணாரோ?"

                                                                          சங்கீதம் 94:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு கூட்ட முடிவில் அநேகர் ஜெபிக்க குடும்பம் குடும்பமாக வந்தார்கள். ஒரு அருமையான குடும்பத்தார் ஜெபிக்க முன் வந்தனர். அந்த சகோதரனே என்னைப்பார்த்து மிகுந்த சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார்கள். என் ஆவிக்குள்ளாக ஜெபிக்க ஆரம்பித்தபோது, தன் வீட்டில் இரண்டு பிள்ளைகளையும் தவறான வார்த்தைகளைக்கொண்டு பேசுவதை கர்த்தர் உணர்த்திக் காண்பித்தார். அவரிடம் நானும் சிரித்தபடி பெயர் என்ன? என்று கேட்டேன். அழகான கிறிஸ்துவுக்குள்ளான பெயரைக் கூறினார். நீங்கள் பாஸ்டரா என்று அவரை மீண்டும் கேட்டேன். அவர்கள் இல்லை என்றார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயரை வைத்திருக்கிறீர்களே என்றேன். அவர் மிகுந்த கேள்வியுடன் என்னைப் பார்த்தார். 'நாயே' 'பேயே' என்று ஏன் உங்கள் பிள்ளைகளைக் கூப்பிடுகிறீர்கள் என்றேன். அசட்டு சிரிப்புடன் என்னைப் பார்த்தார். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். தயவு செய்து இனி அப்படி கூப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டு அவர் மனைவிக்கு ஆலோசனை கூறினேன். உங்கள் மனைவியை மருத்துவ சாலைக்கு கொண்டு சென்று M.R.I. scan செய்யுங்கள் என்றேன். அவர்கள் மிகுந்த ஆச்சரியமாக என்ன என்று கேட்டார்கள். எல்லாம் நன்கு தெரிந்துவிடும் என்றேன். அவர் ஆவலுடன் ஆச்சரியமாக என்னைப் பார்த்து நீங்கள் அடிக்கடி உங்கள் மனைவியைப்பார்த்து 'அறிவு இருக்கிறதா' மூளை இருக்கிறதா? என்று கோபத்துடன் சொல்லுகிறீர்களே என்றவுடன் அவருக்கு மிகுந்த வெட்கம் வந்துவிட்டது. இனி அப்படி கூறாதிருங்கள் என்று அன்பாக கூறினேன்.

நம் காதை உண்டாக்கின தேவன் நாம் பேசும் வார்த்தைகளை கேட்கிறார். 'என் நாவில் சொல் பிறவாதற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.' என்ற சங்கீதம் 139:4 ன் படி அவர் நம் வார்த்தைகளை அறிந்திருக்கிறார். '...கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள்: கர்த்தர் கவனித்து கேட்பார்...' என்ற மல்கியா 3:16 ன் வார்த்தையின்படி நாம் கவனமாய் பேசவேண்டும். நாம் பேசும் '...வீணாண வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும்...' என்ற மத்தேயு 12:36ன் வார்த்தையை உள்ளத்தில் வைத்து பேச வேண்டும்.

அவ்வாறு இனி கவனமாய் பேசுவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்