ஊழியத்தின் பாதையில் வரும் சத்துருவின் கிரியைகள், தடைகள், குறைகள் நீங்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உமக்குத் துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன். கர்த்தாவே, நீர் என்னை நேசித்து இந்த ஊழியத்தைச் செய்ய அழைத்தீர், அதற்காக ஸ்தோத்திரம். நான் நலமாய் பேசத் தெரியாதவனாய் இருந்தும் என்னை உம் ஞானத்தினால் நிறைந்து, வேத வாக்கியத்தை எப்படி சொல்லவும் போதிக்கவும் வேண்டும் என்று நடத்தி வருகிறீர். அதற்காக துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கிறேன். உழையான சேற்றில் இருந்த என்னைத் தூக்கி எடுத்தீர், எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாத என்னை உம் ஆவியினால் ஜெபிக்கக் கிருபை செய்தீர். கர்த்தாவே, நான் தகுதியற்றவன், ஆனாலும் உமது தயவினாலே என்னைத் தகுதிப்படுத்தி வருகிறீர். அதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, ஊழியத்தின் பாதையில் பிசாசு பலவித தடைகளைக் கொண்டு வருகிறான். சபைக்கு வந்து கொண்டிருந்த குடும்பங்கள் வரமுடியாதபடி பிரச்சனைகளை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிறான். சபை நடத்தும் இடத்திலும் போராட்டம் வருகிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றையும் மேற்கொள்ள, சபை வளர உதவி செய்யும். நாங்கள் கூடி ஜெபிக்கிற இடத்தில் வரும் போராட்டங்கள் நீங்கட்டும். கர்த்தாவே, பிரிவினையின் காரியங்கள் அனைத்தும் நீங்கி, என் ஜெபக்குழுவில், சபையில் ஒரு மனதை உண்டாக்கும். இன்னும் இந்த மாதங்களில் 'லாக் டவுன்' என்பதால் ஊழியம் ஒன்றும் சரியாக செய்ய முடியவில்லை. கர்த்தாவே, எல்லாத் தடைகளையும் நீக்கி விடும். தடைகளினால் சில சமயம் சோர்வு உண்டாகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். இந்த நாட்களில் ஏற்பட்ட பொருளாதாரக் குறைவினால் மிகுதியாகக் கஷ்டப்படுகிறேன். இந்த ஆண்டு பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க முடியாதபடி பணப்பிரச்சனை ஏற்பட்டு விட்டது. உம்மைத் தேடுகிற மக்களுக்கு ஒரு குறைவும் வராது என்றவரே, எனக்கு இரங்கும். நான் இன்று முதல் எந்தக் குறைவுமின்றி உண்மையும் உத்தமமுமாய் நீர் தந்த இந்த ஊழியத்தைச் செய்யவும், உமது தாலத்துகளும்  கிருபைகளும் என்னில் நிறைவாய்ப் பெருகவும் எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, உமக்காக செய்யும் இந்த ஊழியத்தை இனி நிறைவாய் ஆசீர்வதிப்பீர் என்று நம்பி உமக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன், ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.