குடும்பங்களின் ஒற்றுமைக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். எங்களை இணைத்து ஐக்கியப்படுத்தின தேவனே, தொடர்ந்து நானும் என் மனைவியும்/ கணவனும் ஐக்கியமாய் இருக்க எங்களுக்கு உதவிசெய்யும். பலவிதமான சூழ்நிலைகளில் எனக்கு என் மனைவி மீது/ கணவர் மீது கோபம் வந்தது. ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணமும் வந்தது. ஆனாலும் கிருபையாய் மேற்கொள்ள எனக்கு உதவி செய்தீர். என் மனைவி/ என் கணவர் குடும்பத்தார் சொல்லி மனதையே மாற்ற முயற்சிக்கிறார்கள். என்மீது உள்ள கோபம், வெறுப்பு, கசப்பினால் என்னை தனிமையாக்க முயற்சிக்கிறார்கள். கர்த்தாவே, எனக்கு இரங்கும். அவர்களின் தவறான ஆலோசனைக்கு என் கணவர்/ என் மனைவி செவிகொடாதிருக்க உதவிசெய்யும். நீர் எனக்குக் கொடுத்த என் மனைவி/ என் கணவருடன் எப்பொழுதும் ஒற்றுமையாக அன்பாக இருக்க உதவிசெய்யும். குற்றப்படுத்துகிற சொற்கள் என் குடும்பத்தில் கேட்கப்படாதபடிக்குக் காத்தருளும். என் கணவர் மீது வீண் சந்தேகம் உண்டாகாதபடி என் மனதை உம் ஆவியால் சீர்ப்படுத்தும். என் மனைவியைக் குறித்த தவறான எண்ணங்கள் ஒருபோதும் தோன்றாதிருக்க உதவிசெய்யும் இயேசு கிறிஸ்துவே. ஒருவருக்கொருவர் சகல காரியத்தையும் தெளிவாய் விளக்கவும், பேசவும் புரிந்து செயல்படவும் உதவிசெய்யும். மற்ற யாரும் எங்கள் குடும்ப காரியங்களில் பிரவேசியாதபடி காத்தருளும். நானும் என் மனைவியும்/ கணவனும் ஒருமித்து உமது சமுகத்தில் தாழ்த்தி ஜெபிக்க, துதிக்க உதவிசெய்யும். உண்மையான அன்புடன் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய அருள்புரியும். எப்போழுதும் உம் ஆவியில் நானும் என் வீட்டாரும் பெலப்பட உதவிசெய்யும். என் கணவருக்கு/ மனைவிக்குப் பிரியமில்லாத காரியத்தை பிடிவாதமாக நான் செய்யாதபடி என்னைக் காத்தருளும். இவர் இப்படித்தான் செய்வார்/ இவள் இப்படித்தான் செய்வாள் என்ற தவறான, தீதான எண்ணங்கள் எங்களுக்குள் வராதபடி காத்தருளும். இயேசுவே, உமது கிருபையால் கொடுத்த கர்ப்பத்தின் கனியை/ கனிகளை ஆசீர்வதியும். உம்முடைய திவ்விய பிரசன்னம் என் பிள்ளையை/ பிள்ளைகளில் எப்பொழுதும் நிரம்பி இருக்கட்டும். பிரிவினையின் எண்ணங்கள், குற்றப்படுத்தும் சொற்கள், செயல்கள் ஒருபோதும் என் மனைவியில்/ கணவரின் காணப்படாது காத்தருளும். நானும் என் மனைவியும்/ என் கணவரும் இன்னும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.