சத்துருவினால் வரும் பயம் நீங்கி சுகவாழ்வு வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துக்கிறேன். நீர் இம்மட்டும் என்னையும், என் குடும்பத்தாரையும் கண்மணிபோல் காத்து வந்திருக்கிறீர். அதற்காக ஸ்தோத்திரம். இப்பொழுதும் கர்த்தாவே, சத்துருவினால் உண்டான பயம் நீங்க எனக்கு உதவிசெய்யும். இந்தப் பயத்தை நீக்க பல முயற்சிகளைச் செய்தேன். என்னையறியாமலே துக்கத்துடன் அமர்ந்து என்ன செய்வேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். உம்மோடு கூடிய நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணம் வந்தாலும், என் பிரச்சனையை நினைத்து சோர்ந்து விடுகிறேன். இனி உன் வாழ்வு இவ்வளவுதான் என்ற தீய எண்ணங்களையும், தவறான சிந்தைகளையும் சத்துரு உள்ளத்தில் உருவாக்கி என்னைத் தவறான திசைக்குத் திருப்புகிறான். என் மனநிலை சரியில்லாததினால் பல தீய தீர்மானங்களைச் செய்ய என் உள்ளத்தில் யோசனைகள் உருவாகிறது. என் விசுவாசம் வளர ஒரு சிறிய காரியத்தையாவது எனக்குச் செய்யும். யார் எனக்கு உதவி செய்வார்கள் என்று கலங்கிக் கொண்டு இருக்கிறேன். இந்தக் காரியங்கள் என் இரவு நேர ஜெபத்தைக் கெடுத்து விடுகிறது. எப்படிப் படுத்தாலும் தூக்கமில்லாது எப்பொழுது விடியும் என்று உள்ளத்தில் பயத்தோடு என் படுக்கையில் புரண்டு படுத்துக் கிடக்கிறேன். சில சமயம் சலங்கைச் சத்தம் போலவும், பயத்தை ஏற்படுத்தும் சத்தமும் தோன்றி என் தூக்கத்தைக் கெடுத்து தூங்க முடியாது செய்து விடுகிறது. அதினால் என் வீட்டில் இரவு நேர விளக்கை அதிக பிரகாசமாகப் போட்டு வைத்திருக்கிறேன். இது போதாதபடி தெருவில் உள்ள நாய்கள் ஒட்டு மொத்தமாக நடுஇரவில் ஊளையிட ஆரம்பித்து விடுகிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியாதபடி தவிக்கிறேன். முடிவில்லாமல் என் நாட்கள் வேதனையுடன், பாடுகளுடன் தூங்கமுடியாமல் போராட்டம் நிறைந்ததாக மாறிவிட்டது. எனக்கு இரங்கும் இயேசுவே. நான் ஆவியிலே பூரணசுகமும், ஆத்துமாவிலே தைரியமும் அடைந்து ஆசீர்வதிக்கப்பட எனக்கு உதவி செய்யும். என்னால் என் குடும்பத்தாரிலும் கவலையும் சோர்வும் உண்டாகிவிட்டது. நான் பெலனடைந்து உமக்கு சாட்சியாக என்னை எழுந்திருக்கப் பண்ணும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே ஆமென்.