வேலை ஸ்தலத்தில் சமாதானம் இழந்திருப்பவர்களின் சமாதானத்துக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, நீர் கொடுத்த இந்த ஜெப நேரத்திற்காக மிகுதியாக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, பலமுறை என் வேலை, குடும்பம், பிள்ளைகள் குறைகளைக் குறித்து மிகுந்த வேதனையுடன் ஏறெடுத்த என் ஜெபத்திற்குப் பதில் தந்து வேதனையை நீக்கி ஆசீர்வதித்தீர். இப்பொழுதும் கர்த்தாவே, என் வேலை ஸ்தலத்தில் நான் சமாதானத்தை இழந்து இருக்கிறேன். காலையில் எழுந்து வேலைக்கு வரவே மனதில்லாதிருக்கிறேன். வேலைக்கு அவசியம் வரவேண்டும் என்ற நிர்பந்தத்தினால் இந்த வேலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்நாட்கள் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ என்று மிகுதியாய்க் கவலைப் படுகிறேன். இயேசு கிறிஸ்துவே, சில சமயங்களில் இந்த வேலையை 'ராஜினாமா 'செய்துவிட்டு வேறு எங்காவது வேலை தேடலாமா? என்ற எண்ணம் என்னைத் துக்கப்படுத்துகிறது. இந்த வேலை ஸ்தலத்தினால் என் வீட்டையும் இதற்கு அருகாமையில் கட்டினேன்/வாங்கினேன். இப்பொழுது வேலை மாறினால் வீடு பார்க்கவேண்டுமோ என்ற எண்ணம் எண்ணில் தோன்றி கவலைப்பட செய்கிறது. கர்த்தாவே எனக்கு இரங்கும். இந்த வேலை ஸ்தலத்துலேயே நான் சமாதானமும், சந்தோஷமடையச் செய்யும். நீர் ஒருவரே சகலத்தையும் செவ்வையாக்கமுடியும். என் விருப்பங்களை நிறைவேற்றின காரியங்களினால் உம்மைத் துதித்தேன். சாட்சி கூறினேன். இப்பொழுதும் என் வேலை ஸ்தலத்தில் சமாதானத்தை உண்டாக்கி என்னை ஆசீர்வதியும். என் சமாதானத்தைக் கெடுக்கும் காரியங்களை என் வேலை ஸ்தலத்திலிருந்து நீக்கி விடும். இந்த சமாதானக் குறைவினால் என் உள்ளம் உம்மோடு நெருங்க முடியாதபடி என் பிரச்சனையைச் சிந்திக்கச் செய்கிறது. என் எல்லாக் குறைகளையும், பிரச்சனைகளையும் இன்றே மாற்றும். கர்த்தாவே, நீரே அதைச் செய்ய வல்லவர் என்று உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். இதற்காக நான் பொருத்தனையுடன் ஜெபிக்க ஆரம்பித்துள்ளேன். நீர் என் வேலை ஸ்தலத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி, நான் இழந்த சமாதானத்தை எனக்குத் தாரும். இதற்காக நான் உம்மையே தேடுகிறேன். உம்  சமூகத்தில் என் உள்ளதை ஊற்றி வேண்டுகிறேன். சீக்கிரமாக பதில் தாரும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்