நம் பெலவீனங்களிலிருந்து சுகம் பெற்று நல்வாழ்வு வாழ ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உம்மை அதிகமாக ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, நீர் என் ஜெபத்தைக்கேட்டு அநேக காரியங்களை எனக்குச் செய்தபடியால் உம்மை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் பெலவீனங்களையெல்லாம் சுமந்து தீர்த்த இயேசுவே, என்னில் உள்ள இந்தப் பெலவீனம் நீங்க எனக்கு உதவிசெய்யும். கடந்த சில காலமாக ஒன்றன்பின் ஒன்றாக வேதனையான நோய்தோன்றி, என்னைக் கலங்கடிக்கிறது. எனக்கு இரங்கும் கர்த்தாவே. இவ்விதமாய் என் சரீரத்தில் உண்டாகிற பெலவீனத்தில் என் அனுதின வேலையைக் கூடசரியாக செய்யமுடியாது உள்ளத்தில் கலக்கம் உண்டாகிறது. சில சமயங்களில் இவ்வுலக மக்களுக்கு எந்தப்பாடுகளும் இல்லையே, நமக்குத்தான் என்ற தவறான எண்ணமும் தோன்றிவிடுகிறது. இயேசுகிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இன்று என்னைப்பாதித்துக்கொண்டு இருக்கும், என்வியாதி நீங்க எனக்கு உதவிசெய்யும். நான் முற்றும் குணமடைய எனக்கு உதவிசெய்யும். என் ஜெபத்தைத் தள்ளாமல் கேளும் கர்த்தாவே. வேதனை நீங்கி சுகமாயிரு என்று சொல்லி, பெரும்பாடுள்ள மகளில் அற்புதம் செய்த அன்பின்தேவனே, எனக்கு இரங்கும். சீறுகிறவர்களுக்கு அவனைக்காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன் என்று சொன்ன கர்த்தாவே, எனக்கு இரங்கும். எங்கள் நோய்களையெல்லாம் சிலுவையில் சுமந்து தீர்த்தவரே, எனக்கு இரங்கும். எனக்குள் உள்ள இந்த வேதனையான நோயை நீர் உம் வார்த்தையினாலும், வல்லமையினாலும், தழும்புகளினாலும் நீங்கச் செய்யமுடியும் என்று விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, இந்த நோயின் தன்மை என்னை மிகுதியாக சஞ்சலப்படுத்துகிறது. கர்த்தர் எப்பொழுது எனக்கு இரங்குவார் என்று காத்திருக்கிறேன். இயேசுகிறிஸ்துவே, என்பாவங்கள், என் மீறுதல்கள் நீர் என்னில் அற்புதம் செய்வதற்கு தடையாக இருக்குமானால் என்னை மன்னியும். என் வீட்டில் ஒருவருக்கும் இந்த வியாதி வராதபடி பாதுகாத்தருளும். கர்த்தாவே, நீர் எனக்குச் செய்யும் ஒவ்வொரு அற்புதத்தையும் நான் அநேகருக்குச் சாட்சியாக கூறிவந்தேன். தொடர்ந்து இன்னும் சொல்ல என் வியாதியை முற்றும் நீக்கிவிடும் இயேசுவே. நீர் அப்படி செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்திரிக்கிறேன். என் ஜெபம் கேளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.