ஜெபம்

பிள்ளைகளின் நல் வாழ்விற்காக கலங்கும் பெற்றோர்களுக்கு ஒரு ஜெபம்

 

                          அன்பின் தேவனே இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். நீர் என் ஜெபத்தைக் கேட்டு, அநேகக் காரியங்களை என் பிள்ளைகளின் வாழ்க்கையிலே இதுவரை செய்திருக்கிறீர். அதற்காக ஸ்தோத்திரம். இந்த நாட்களிலே கர்த்தாவே, என் பிள்ளைகளைக் குறித்து உம்மிடத்தில் நான் மன்றாடுகிற இந்த மன்றாட்டிற்கு துரிதமாய் பதில் தந்து, எனக்குள் சமாதானமும், என் கூடாரத்தில் மகிழ்ச்சியும் உண்டாக நீர் எனக்கு உதவிச் செய்ய வேண்டுமாய் கெஞ்சுகிறேன். ஜெபத்தைக் கேட்கிற தேவனே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் என்று சொல்லியிருக்கிறதே, உம்மிடத்தில் வந்திருக்கிற என்னை ஒருவிசை நினைந்து, உம்முடைய செவியை எனக்குச் சாய்த்து, என் ஜெபத்தைக் கேட்டு என் பிள்ளைகளின் மத்தியிலே நீர் அதிசயங்களை செய்ய வேண்டுமென்று கெஞ்சி நிற்கின்றேன். கர்த்தாவே, என் பிள்ளைகளுக்கு மெய்யான ஆசிர்வாதமும் பெருகும்படியாய் ,மெய்யான சந்தோசம் உண்டாகும்படியாய் உம்முடைய பாதத்திலே என்னைத் தாழ்த்தி நிற்கிறேன். அன்று உம்மிடத்தில் விசுவாசத்தோடு, தன் மகளின் கொடிய வேதனையாகிய  பிசாசு நீங்கும்படி மிகவும் மன்றாடி கானானிய  ஸ்திரீயின் ஜெபத்தைக் கேட்டு, விருப்பத்தின்படி நிறைவேற்றின தேவனே, உம்முடைய பாதத்திலே விசுவாசத்தோடு வந்திருக்கிற என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என் பிள்ளைகளிலே விரும்புகிற மேன்மையான காரியங்கள் நடைபெற உதவிச்செய்யும். உம்முடைய வாக்கு மாறா வார்த்தையின்படி கர்ப்பத்தின் கனிகள் கர்த்தரால் வந்தது, அவர்கள் எங்களுக்கு மேன்மையைத் தந்தது என்றுச் சொல்லத்தக்கதாக எங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படும்படியாக உம்முடைய பாதத்திலே நான் கெஞ்சி நிற்கிறேன். கர்த்தாவே, தகமுள்ளவன் மேல் தண்ணீரையும் வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன். உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்றுச் சொன்னவரே, உம்மிடத்தில் தாகத்தோடு வந்திருக்கிற என்னை நீர் நினைந்துதாகத்தைத் தீர்த்து, அற்புதமானக் காரியத்தை என் சந்ததியிலும், என் சந்தானத்திலும் நீர் இன்றைக்கே செய்வீராக. கர்த்தாவே, என் பிள்ளைகளின் படிப்பிற்காக உம்முடைய பாதத்திலே வருகிறேன். கர்த்தாவே, அவர்கள் ஞானம் நிறைந்த பிள்ளைகளாக, தேவனுக்குப் பயந்து நடக்கிற பிள்ளைகளாக அவர்கள் மாறட்டும். அவர்கள் எழுதிக் கொண்டு இருக்கிற எழுதின, எழுதப்போகிற எல்லாத் தேர்வுகளிலும் மிகுதியான, மேன்மையான மதிப்பெண்களைப் பெறவும், அவர்கள் உயர்ந்தக் கல்வியைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் நீர் வழிகளைத் திறக்க வேண்டுமாய் கெஞ்சி நிற்கிறேன். கர்த்தாவே, நீர் அப்படிச் செய்து, என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பீர் என்று நான் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.