விபத்துக்களினால் காயம் அடைந்து வேதனையுடன் வாழும் மக்களின் சுகத்திற்காக ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே இந்த ஜெப நேரத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், துதிக்கிறேன். இம்மட்டும் தயவாய் நீர் நடத்திவந்த படியால் உமக்கு மிகுந்த ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். என் ஜெபத்தைக் கேட்டு என்னில் சுகம் தந்த இயேசு கிறிஸ்துவே, இப்பொழுதே எனக்கு இரங்கும். நான் நினையாத நேரத்தில், எனக்கு ஏற்பட்ட  விபத்தினால் துக்கமும், துயரமும் அடைகிறேன். நான்  ஏன்  இந்த வேதனையான நிலையை அடையவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்திலே தோன்றிக் கொண்டே இருக்கிறது. இவ்வுலகத்தின் சகலவிதமான அசுத்தங்களையும், பாவங்களையும் செய்து கொண்டிருந்த மக்கள் பல பயணங்கள் செய்தாலும், பல வித  வழுக்குதல் வீட்டிலும், குளியலறையிலும், நடையிலும், நடைபெற்றாலும் விழாது, வேதனை அடையாது நலமாய் வாழ்கிறார்களே, எனக்கு ஏன் இந்த விபத்தும்,  வேதனையும் உண்டானது என்று என் மனதில் கேள்வியாக உண்டாகி, கசப்பைப் பெருகச் செய்து கொண்டிருக்கிறது. அன்பின் தேவனே,  நான்  அறியாமல்  செய்த பாவங்களை எல்லாம் மன்னியும். மற்றவர்களைப் பார்த்து எனக்குள்ளே தோன்றுகிற வீணான எண்ணங்கள் என்னைவிட்டு  விலகட்டும். கர்த்தாவே, எனக்குள்ளே இடைவிடாமல் ஜெபிக்கத்தக்கதான  ஜெப ஆவியைத் தாரும். கர்த்தாவே உம்முடைய அன்பின் பிரசன்னம் என்னோடு எப்போதும் தங்கியிருக்கட்டும். எல்லா நெருக்கத்திலும் பாடுகளிலும், சோதனைகளிலும் நான் உம்மையே உள்ளத்தில் முன் வைத்து நடக்கவும், துதி ஸ்தோத்திரங்களை செலுத்தவும், உதவி தாரும். தாவீது கர்த்தரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று  சொன்னதுபோல நானும் அசைவில்லாது அழிவில்லாதிருக்க எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே என்னைக் கண்ணின் மணிபோல் காத்து நடத்த வல்லவராய் இருக்கிறீர். இயேசு கிறிஸ்துவே தாவீது உம் சமூகத்தில் என் இளவயதின்  பாவங்களை  நினையாதிரும் என்று சொன்னனது போல நானும் உம்மிடத்தில் வேண்டுகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே, என் எஞ்சிய ஜீவ  காலம் முழுவதும் விபத்தின் காயங்கள் அகற்றப்பட்டு துரிதமாய் என் பணிகளை எல்லாம் முன்போல் செய்ய எனக்கு உதவிச் செய்யும். நீர் அப்படிச் செய்வீர் என்று நம்பி உமக்கு துதி ஸ்தோத்திரங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென்.