"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில்                                                                         அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”                                                                                                                                                                                                                                                                        யாக்கோபு 1:12

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மனிதனுடைய வாழ்வில் பலவிதமான சோதனைகள் தோன்றி அவனது சமாதானத்தை, சந்தோஷத்தைப் பறித்து விடுகிறது. சோதனைகள் பலவிதத்தில் நமக்கு வருகிறது. இந்த வேளையில் ஏன் சோதனை வருகிறது, அதை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வோம்.

சோதனைக்காரனாகிய பிசாசானவன் இன்று யாரை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித் திரிகிறான். யூத சிங்கமாகிய இயேசுவைப் போல தன் ரூபத்தை, தன் காரியங்களைச் சாதிக்க, தந்திரமான வழியில் வருகிறான்.

I.சோனை ஏன் வருகிறது?

1. நாம் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாத சமயம் சோதனைக்காரன் வருகிறான்.

ஏற்றத் துணையை உண்டாக்குவேன் என்ற கர்த்தர், முதலாவது சகல காட்டு மிருகங்களையும், சகல பறவைகளையும் உண்டாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார் என்று ஆதி. 2:18ல் பார்க்கிறோம். ஆனால் அவைகள் அவனுக்கு ஏற்றத் துணையாகக் காணப்படவில்லை என்று ஆதி. 2:20ல் பார்க்கிறோம். ஆகவே கர்த்தர் ஆதாமின் எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார். ஏற்றத் துணையாய் இருக்க வேண்டிய ஏவாள், ஒரு நாளில் தான் உண்டாக்கப்பட்ட தேவ திட்டத்தை அறியாது, புரியாது காணப்பட்டபோது, சோதனைக்காரன் தன் ரூபத்தை மாற்றி, சர்ப்பத்தின் மூலம் சோதனையை நடத்தினான். தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தான். சாவீர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக, பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாகிய அதிபதியுமாகிய பிசாசானவன் சாகவே மாட்டீர்கள்; இந்த கனி அந்தத் தன்மையுடையது என்றான். ஸ்திரீயானவள் சோதனையில் விழுந்தாள். முதல் பாவமாக கனியைப் பறித்துப் புசித்தாள். தான் மாத்திரம் அல்ல, தன் கணவனுக்கும் கொடுத்து கீழ்ப்படியாமை பாவத்திற்கு ஆளானார்கள். ஏற்றத் துணையாக ஆதாமுடன் இசைந்து இல்லாதபடியால் சோதனைக்காரன் தனது திட்டத்தைச் செயல்படுத்தினான்.

இன்று அருமை சகோதரனே, நாம் தேவனைத் துதிக்க, அவரின் மகிமைக்காக, நற்கிரியைகளைச் செய்ய சிருஷ்டிக்கப்பட்ட நாம், உண்டாக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றாது, தேவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைச் செய்ய, துர்க்கீர்த்தி கொண்டு வந்து, துர்க்கிரியைகளை, செய்கைகளை உடையவர்களாய் வாழ முற்பட்டால் நமது வாழ்வில் சோதனைக்காரன் வருவான்.

2. கடமை தவறும்போது சோதனை வருகிறது

''மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்து விட்டான்." 2 சாமுவேல் 11:1

யுத்த காலத்தில் தன் வீரரை உற்சாகப்படுத்தி ஜெயம் காண வேண்டிய ராஜாவாகிய தாவீது, தன் கடமையைச் செய்யத் தவறினான். யுத்த வீரர்கள் தங்கும் இடத்தில் இருப்பதற்குப் பதிலாக தன்னுடைய எல்லையில் தன் அதிகாரத்தினால், தன்னைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தினால் தங்கி விட்டான். தங்கிய தாவீது தனது வீட்டின் மாடியில், உப்பரிகையில் உலாவினபொழுது சோதனை ஏற்ப்பட்டது. இதன் விளைவாக துணிகரமான பாவங்களைச் செய்தான். அதன் காரணமாகச் சந்ததியில் சாபம் ஏற்பட்டது. பிள்ளையில் சேதம் உண்டானது.

ஒருமுறை ஒரு உயர் அதிகாரி ஞாயிறு வீடு சென்று திங்கள் அன்று பணித்தளம் திரும்ப, சில மணிநேரம் முன்னதாக அந்த நாளில் அலுவலகத்தை விட்டுச் சென்று விட்டார். அவரின் வீடு வேறு பகுதியில் இருந்தது. அவரின் உயர் அதிகாரி தற்செயலாய் அவர் இல்லாத நேரம் வந்து அவரின் காரியங்களை விசாரித்தார். வேலை ஸ்தலத்தில் ஏற்பட்ட விபரீதமான குற்றத்தைக் கண்டு, அதிகாரி இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டி, அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்தார்.

இன்று நமது கடமைகளைக் குடும்பத்திலும், வேலை ஸ்தலத்திலும் செய்தால் சோதனைக்காரன் தன் திட்டத்தை நம்மிடம் செயல்படுத்த இயலாது. எந்த இக்கட்டும் நம்மை அணுகாது.

3. இச்சைகளினால் சோதனை வருகிறது

"அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்." யாக்கோபு 1:14

சோதனையில் சிக்குவதற்கு மற்றொரு காரணம் இச்சையாகும். மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினா லுண்டானவைகளல்ல, அவைகள் உலத்தினாலுண்டானவைகள்' (1 யோவான் 2:16). இப்படியிருக்க ஒருவன் உலகத்தின் ஐசுவரியத்துக்கும், மாம்சத்தின் இச்சைகளுக்கும் அடிமையானால், அவனுக்கு சோதனையும் வேதனையும் பெருகும்.

தேவ மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி என்பவன், தன் எஜமான், நாகமான் என்ற சுகம் பெற்ற சிரிய நாட்டுப் படைத்தலைவனிடம் பணமும், பொருளும் வெகுமதியாக வாங்காததைக் கண்டான். கேயாசிக்கு ஆசை ஏற்பட்டது. பணமும், பொருளும் அவனது கண்களையும், உள்ளத்தையும் துருவ ஆரம்பித்தது. உடனே அவன் தன் எஜமானாகிய எலிசாவுக்குத் தெரியாமல் நாகமானைப் பின்தொடர்ந்து சென்றடைந்தான். அங்கு பொய் சொல்லி தன் எஜமானின் பேரில் பணத்தையும், பொருளையும் பெற்றுத் திரும்பினான். ஜீவனுள்ள தேவனின் ஊழியருக்கு அவன் செய்த தவறான காரியங்கள் தெரிவிக்கப்பட்டது. கேயாசி திரும்பி வந்த பின்னர் அவனைப் பார்த்து எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான். மீண்டும் ஒரு பொய்யைச் சொன்னான். அதன் விளைவு தேவ சாபம் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் சொல்லப்பட்டது. நாகமானின் வியாதியாகிய குஷ்டரோகம் அவனை மேற்கொண்டது.

அற்ப காரியங்களிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் அரசாங்க வேலையாட்களையும் நாம் அறிவோம். ஒருவேளை இன்று விரும்பியதிலும் அதிகம் நான் அடைந்தேன்' என்று உள்ளத்தில் சொல்லிக் கொண்டு இருக்கலாம். ஆனால் அதன் விளைவு சந்ததியிலும், தன்னிலும் தோன்றுவதை உணராது இருக்கிறார்கள்.

சிறிய காரியத்திற்காக தங்கள் ஜீவனை இழந்தவர்களும் உண்டு. ஒருமுறை எனது தகப்பனார் ஒரு ஆசிரியரின் முடிவைக் குறித்துக் கூறினார்கள். அந்த ஆசிரியர் ஆற்றங்கரைக்குச் சென்று அந்த நாளை செலவிட்டாராம். திரும்பும் முன்னர் அந்த ஆசிரியர் ஆற்றின் கரையில் நின்று தண்ணீரைக் கையில் எடுத்து கழுவ முற்பட்ட சமயம், சட்டைப் பையில் இருந்த ஒரு காகித பென்சில் ஆற்றில் விழுந்து விட்டதாம். தண்ணீரில் அடித்து செல்லுகிற அந்தக் காகிதப் பென்சிலை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியின் போது தண்ணீரில் விழுந்தாராம். அதனால் வேதனையான முடிவையும் அடைந்தார்.

4. தேவ திட்டத்திற்கு ஆயத்தப்படுத்தும்படி சோதனை அனுமதிக்கப் படுகிறது.

"அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்." மத்தேயு 4:1

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை, தமது ஊழியத்தில் நிலையாக நிற்கவும், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை உறுதியாகப் பற்றிக்கொண்டு, போராட்டத்தில் ஜெயம் கொள்ளவும், கர்த்தர் நடத்தும் வழியாக சோதனை அமைகிறது.

பேதுரு கடலில் நடந்து வர இயேசு கிறிஸ்துவை நோக்கி கட்டளையிட வேண்டினான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அனுமதி கொடுத்து கடலில் நடந்து வர கட்டளையிட்டார். உற்சாகமாக கடலில் இரங்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் எதிர்பாராத ஒரு சோதனை எழும்பிற்று. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு கலங்கினான். ஆனாலும் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டதினால் அற்புதத்தைச் செய்தார். ஒத்தாசை வரும் பர்வதத்திலிருந்து அவனுக்கு உதவி வந்தது. பேதுருவுக்கு ஒரு சிறந்த அனுபவமாக மாறியது. சபையைக் கட்ட, ஆடுகளை மேய்க்க உதவியாக அமைந்த அனுபவமாயிற்று.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஏன் இந்த கஷ்டம், பாடுகள் என்று ஒரு வேளை கலங்கலாம். பேதுரு நன்றாக நீந்தத் தெரிந்தவனாக இருந்திருக்க வேண்டும். அவன் பிறவியில் இருந்தே மீன் பிடிக்கும் தொழிலைச் செய்தவன். தன் பெலத்தைச் சாரவில்லை. தன் சகோதரர்கள், நண்பர்கள் படகில் இருந்தார்கள். அவர்கள் உதவியை நாடவில்லை. மனுஷனுடைய உதவி விருதா என்ற வாசகத்தை முழுமையாகக் கடைப்பிடித்து தன் கண்களை இயேசுவை நோக்கும் அனுபவம் அடைந்தான். அச்சமயம் கர்த்தரின் கரம் நீட்டப்பட்டது. ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு என்ற அன்பின் ஆண்டவரின் வார்த்தையைச் செயல்படுத்தி, போராட்டத்தில் வெற்றி பெற்று, அவரை நோக்கும் அனுபவம் அடைந்தான். இவைகள் அனைத்தும் அவனது ஊழியத்தின் பாதையில் அவன் செல்ல அவனை முழுமையாக்கியது.

இன்று எனது கஷ்டம் இப்படி என்னை வாட்டுகிறது. வேதனை பெருகுகிறதே, யார் எனக்கு உதவி செய்வார், யாரிடம் சென்று என் கஷ்டத்தைச் சொல்லுவேன், எவ்வளவு காலம் இதை நான் அனுபவிப்பது, எனக்கு சாவு வராதா? ஏன் ஆண்டவர் இச்சோதனையை எனக்கு மட்டும் அனுமதிக்கிறார் என்று வெளிச்சொல்ல முடியாத துக்கத்துடனும், துயரத்துடனும் வாழும் சகோதரனே, சகோதரியே, சோதனைகள் நாம் கர்த்தருக்குள் வளருவதற்கு, பெலனடைவதற்கு ஏற்றதாக அமைகிறது.

யோபு 23:10ல் 'கர்த்தர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' என்று சொன்னபடி நாம் பொன்னாய்த் திகழ சோதனைகள் அனுமதிக்கப்படுகிறது.

II. சோதனைகளை ஜெயிக்க, சகிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

1. ஜெபம் பண்ண வேண்டும்

"...நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்..." லூக்கா 22:40

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சோதனைகளை ஜெயிக்க நாம் ஜெப வீரர்களாய், வீராங்கனைகளாய் மாற வேண்டும். இயேசு கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். அதில் 'எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்' என்ற வாசகத்தை நாம் மறவாது. சோதனையிலிருந்து காக்கப்பட பெலனடையும்படி ஜெபிக்க வேண்டும்.

ஒருமுறை ஒரு உயர் அதிகாரியாகப் பணியாற்றும் கர்த்தரின் பிள்ளை, சகோதரரே, நான் தினமும் எனது பணிக்காக ஜெபிக்கிறேன். தவறு நடைபெறாது இருக்கவும், பலவிதமான மனிதர்கள் எனக்குத் தரவிரும்பும் பணத்தைப் பெறாமல் தைரியமாய் என் கடமையை நேர்மையாய்ச் செய்ய வேண்டும் என்று எந்த நாளில் ஜெபிக்க தவறுகிறேனோ அன்று என் வேலை ஸ்தலத்தில் பல போராட்டங்களைச் சந்திக்கிறேன் என்றார்.

ஆம், அனுதினமும், சகல சோதனையினின்று நாம் காக்கப்பட ஜெபம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாய் இருக்கிறது. நோய் வந்தபின் குணமாக்குவதைக் காட்டிலும், நோய் வராமல் தடுப்பது சாலச் சிறந்தது என்ற பழமொழியின்படி நாம் ஜெபித்து சோதனைகளிலிருந்து தப்ப வேண்டும்.

ஒருமுறை தேவ ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல என்னை வழிநடத்தினார். அந்த ஊருக்குச் செல்ல குறைந்த கட்டணமாக ரூபாய் 10/- தேவை. என்னிடம் இருந்தது 2 ரூபாய். இந்த நிலையில் நான் கர்த்தரின் வழிநடத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுத்து பஸ் நிலையத்திற்குச் சென்றேன். குறிப்பிட்ட பேருந்தில் ஏறி முன்புறத்தில் ஒரு சீட்டில் அமர்ந்தேன். அச்சமயம் என் உள்ளத்தில் பல கேள்விகள் எழும்பிற்று. காசு இல்லை என்றவுடன் படித்த முட்டாள் என்று நடத்துனர் திட்டுவாரே என்ற போராட்டம் சோதனையாக என் உள்ளத்தில் மாறியது. அச்சமயம் கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தேன். என் உள்ளத்தைத் தேற்றும் உணர்வுகள் வந்தது. சகல அதிகாரமும் உடைய இயேசு கிறிஸ்து என்னிமித்தம் முகத்தில் துப்பப்பட்டார் என்றால், நான் எம்மாத்திரம் என்ற உணர்வு என்னைத் தேற்றியது. சூழ்நிலையைச் சந்திக்க என்னைத் தகுதிப்படுத்தியது. நடத்துனர் ஒவ்வொரு வருக்காக டிக்கெட் கொடுத்து எனக்குப் பின்சீட்டில் உள்ளவரிடம் கேட்பது என் காதில் விழுந்தது. நான் கண்களை மூடி ஜெபித்துக் கொண்டேயிருந்தேன்.

அச்சமயம் யாரோ என் அருகில் வந்து உட்காருவதை உணர்ந்தேன். அவர் என்னைத் தட்டி, 'என்ன எபி, எங்கே போகிறீர்கள்" என்று கேட்டார். நான் இந்த ஊருக்குப் போகிறேன் என்று கூறினேன். என்னுடன் பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய ஒரு ஆசிரிய நண்பர், நன்றாக ஊழியம் செய்கிறார் என்று கேள்விப் பட்டேன். ரொம்ப சந்தோஷம் என்றார்கள். அச்சமயம் நடத்துனர் எங்களைப் பார்த்து டிக்கெட் கொடுப்பதற்காக எந்த ஊர் போகிறீர்கள் என்றார். என் அருகில் இருந்த ஆசிரிய நண்பர் தனது ஊரின் பெயரைச் சொல்லி டிக்கெட் வாங்கிய பின்னர், 'எபி, உனக்கும் நான் டிக்கெட் வாங்கி விடுகிறேன், சரியா?' என்று கேட்டார்கள். என் உள்ளத்தில் கர்த்தரின் அன்பை உணர்ந்து துதிக்க வைத்தது...தேவன் உண்மையுள்ளவரா யிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப் படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.' என்ற 1 கொரி. 10:13ன் படி நமக்கு ஒரு வழியை உண்டாக்கியுள்ளார். அந்த வழியாகிய இயேசுவின் நாமத்தினால் நாம் ஜெபிக்கும் சமயம், சோதனை மறைந்து கர்த்தரின் அன்பும் அவர் மகிமையும் அடைவோம்.

2. சோதனையை ஜெயிக்க வசனத்தை உள்ளத்தில் வைத்து காக்க வேண்டும்.

"என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படி யாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." வெளிப்படுத்தல் 3:10

கர்த்தரின் வார்த்தைகளை நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். அதனைக் காக்க வேண்டும். என்று அந்த வார்த்தையினால் நிரப்பப்படுகிறோமோ அன்று முதல் கர்த்தர் நம்மை வெட்கப் படாதபடி காப்பார். சிலர் சிற்சில நேரத்தில் தமாஷாகப் பேசுவது போல், எதற்கு இரண்டு காதுகள், ஒன்று கேட்க, ஒன்று அவைகளை வெளியே விட்டுவிட என்பார்கள். ஆலயத்தில் கர்த்தரின் வார்த்தை சொல்லப்படும் போது துாங்குவார்கள். சிலர் தங்கள் சொந்தக் காரியங்களைத் தங்கள் உள்ளத்தில் சிந்தித்து, வசனம் உட்செல்லாது. அதன் ஆசீர்வாதத்தை அடையாது செல்கிறார்கள். அதிக நேர ஜெபத்தை “ஜெபப்பிரசங்கம்" என்றும், அதிக நேரம் வசனத்தைப் போதிக்கிறவர்களை பெரிய ரம்பம், அறுவை என்றும் சொல்லுகிறார்கள். வேத வார்த்தைகளைக் குறித்து இயேசு கிறிஸ்து சொன்னார் வழியருகே விழுந்த விதைகளைக் காகங்கள், பறவைகள் பொறுக்கிச் சென்றன என்று. இன்று அந்நிலை அடையாது வசனத்தைக் காத்துக் கொள்ள இடம் கொடுப்போம். ஆவியும் ஜீவனுமான வார்த்தைகளை உன் உள்ளத்தில் காத்துக் கொள்ளும் போது உனக்கு ஜீவனும், உடலுக்கு ஆரோக்கியமும் உண்டாகும். வசனத்தை உள்ளத்தில் வைத்து காப்போம். சோதனைகளை ஜெயிப்போம்.

இயேசு கிறிஸ்துவிடம் சோதனைக்காரன் வந்தான். ஆரம்ப காலத்திலேயே தேவ திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றும்படி தன் தந்திரமான காரியத்தைச் செய்தான். அவர் உபவாசித்து முடித்து பசியாய் இருந்த சமயம் தன் காரியங்களைச் செயல்படுத்த முற்பட்டான். மாம்சத்திற்கு அடுத்த சோதனை, பின்பு மேட்டிமை யினால் தரும் சோதனை, பின்பு தேவ ராஜ்யத்திற்கு மாறான யோசனை. ஆனால் இவை எல்லாவற்றிலேயும் 'எழுதியிருக்கிறதே' என்று வேத வார்த்தைகளைக் கொண்டு சோதனையை ஜெயித்தார். இன்று நாமும் கர்த்தரின் வார்த்தையை அறிந்து, இருதயத்தில் வைத்துக் காப்போம் என்றால் தேவன் சோதனையை ஜெயிக்க பெலன் தந்து வழி நடத்துவார்.

3.சோதனையை ஜெயிக்க தேவ பக்தியுள்ளவர்களாய் வாழ வேண்டும்.

"கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக

நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். 2 பேதுரு 2:9

இன்று சோதனைகளை ஜெயிக்க வேண்டுமானால் நாம் தேவபக்தி நிறைந்த வாழ்வு வாழ வேண்டும். தேவபக்தி என்றால் என்ன? என்று நாம் தெரிந்தால்தான் நாம் அதில் வளரமுடியும்.

“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." யாக்கோபு 1:27.ஆம், நாம் உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிச் செய்ய வேண்டும். நம்மையும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று பலவிதமான பாவ காரியங்களுக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

இந்த பக்தி நமக்குள் வளர, நம்மை பரிசுத்தமாக்குகிற கர்த்தரின் கரத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை சகல பாவத்தினின்றும் விடுவிக்கிறதாய் இருக்கிறது. நம்மைச் சுத்திகரிக்கிறது. இவ்விதமாய் நாம் அடைந்த, அடைகிற பரிசுத்த நிலையை அனுதினமும் காத்து நடந்தால் நாம் தேவபக்தியுள்ளவர்களாய் காணப்படுவோம். பரிசுத்தமான நாம் தேவசித்தத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாம் காணப்பட கர்த்தர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்த வாழ்வுக்கு நடத்துகிறார். அதிலும் தீர்க்கதரிசனம் ஆனது நாம் அனுதினமும் பரிசுத்தமாய் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. "தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற வனோ மனுஷருக்குப் பக்தி விருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாக்கத்தக்கதாகப் பேசுகிறான். " (1கொரி 14:3) ஆகவே பரிசத்த ஆவியின் அபிஷேகமும், வரங்களும் நம்மை மாசில்லாதவர்களாய் மாற்றுகிறது.

 

பக்தி நமக்குள் வளர தேவ அன்பினால் நிறைய வேண்டும். “..அன்போ பக்தி விருத்தியை உண்டாக்கும்" 1 கொரிந்தியார் 8:1 ல் கூறப்பட்டுள்ளது. அன்பு என்றால் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்படிதல், சகோதரரை நேசிப்பது, உதவிச் செய்வதாகும். இந்த அன்பு நமக்குள் பூரணமாகும் போது, மற்றவர்களை நேசிக்க, அவர்களின் பாடுகள், கண்ணீர் இவைகளினால் நம் உள்ளம் துடிக்க ஆரம்பித்து விடும். இது அவர்களுக்கு குறை தீர்க்கும் இயேசு கிறிஸ்துவை அறிவிக்க அவர் நாமத்தால் உதவிச் செய்ய நம்மை உந்துகிறது.

4. தேவனிடத்தில் அன்புகூற வேண்டும்

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூரு கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.' யாக்கோபு 1:12

நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரிடத்தில் அன்பு கூறுகிற உள்ளம், உணர்வு தேவை. நமக்காக அடிக்கப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அதிகமாக நேசிப்பதற்கு நம்முடைய உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும். பாவமறியாத அவருடைய சரீரமானது அடிக்கப்படுவதற்கும், நொறுக்கப்படுவதற்கும் காரணம் நம்முடைய பாவங்கள். நம்முடைய பெலவீனங்களை, துக்கங்களை, பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக, அவர் கல்வாரியிலே நமக்காக இவ்விதமான பாடுகளை அனுபவித்தார்.

முகத்திலே துப்பப்பட்டபோது, வாரினால் அடிக்கப்பட்ட போது, முள் முடியினால் சூட்டப்பட்டு நெருக்கப்பட்ட போதும், நம்மை நேசித்தபடியினால் ஏற்றுக்கொண்டார். ஆகவே அவ்விதமான பாடுகளுக்கு. வேதனைகளுக்கு தன்னையே ஒப்புக்கொடுத்த அந்த அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவை நேசிக்க இடம் கொடுக்கும் போது, எல்லா சோதனைகள், வேதனைகள் நம்மை விட்டு ஓடிப் போகும். சாத்தானின் தந்திரங்கள் மீது ஜெயம் கொள்ளுகிற வர்களாய் மாறுவோம். ஆகவே அன்புகூறுகிறவர்களாய் காணப்பட வேண்டும். ஒருவேளை ஆதி அன்பை விட்டு விட்டவர்களாய், குறைவு பட்டிருப்போமானால், அந்த ஆதி அன்பிலே நிலை கொண்டிருப்பதற்கு, என்னை மீட்பதற்காக, என்னை இரட்சிப்பதற்காக உம்முடைய சரீரத்தையே கொடுத்த அன்பின் தேவனே, உம்முடைய கரத்திலே என்னை ஒப்புக்கொடுக்கிறேன். உம்மை நேசிப்பதற்கு முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன் என்று தீர்மானம் செய்யலாமா?

இன்று நாம் தேவ பக்தியோடு ஜெபித்து, வேத வசனத்தைக் கைக்கொண்டு, தேவனிடத்தில் அன்புகூர்ந்தால், சோதனைகளை ஜெயிக்கிற மக்களாக மாறி விடுவோம். இவ்விதமான காரியங்களை நாம் கற்று அறிய இயேசு கிறிஸ்து ஒரு மாதிரியாக அமைந்துள்ளார். கல்வாரியின் பாடுகள் அவரில் வேரூன்றி, வளரச் செய்கிறது. இன்று அந்த கல்வாரியைக் காண நம் உள்ளத்தில் உணர்வடைவோம். சோதனைகளை வென்று ஜெய வீரராய் மாறுவோம். எந்த சோதனை வந்தாலும் அதிலே வெற்றி பெறத்தக்கதாக கர்த்தர் நமக்கு அருள்புரிவார். சோதனையை வென்று நமக்குரிய ஆசீர்வாதங்களையும், மேன்மையையும் அடைவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ.C எபனேசர் பால்