வேலை, தொழில் இவைகளில் உயர்வு, முன்னேற்றம் இல்லாது சமாதானம் இழந்த மக்களுக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப வேளைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். எனது உள்ளம் சோர்ந்தும். கலங்கியும், கவலை நிறைந்தும் இருப்பதை நீர் அறிவீர் என் உள்ளத்தில் எழும்பும் கவலைகளையும், சந்தேகங்களையும் நீக்கி, என்னை ஆசீர்வதியும். என் வாழ்வில் நான் உண்மையாக இத்தனை ஆண்டுகள் பணியையும், தொழிலையும் செய்து வந்தும் எந்த உயர்வும், முன்னேற்றமும் காணவில்லை. நான் மிகுதியாக பாடுபட்டு செய்த காரியத்தின் மேன்மையை, வஞ்சகமாய் மற்றவர்கள் பறித்துக்கொண்டார்கள். எனக்கு எந்த மேன்மையும் முன்னேற்றமும் இல்லாதபடியால் எனக்கு மிகுந்த துயரத்தைத் தருகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். என்னைப் பார்ப்பவர்கள் நான் உண்மையற்றவன். ஞானமற்றவன் என்று கேள்வி கேட்பது போல் உள்ளது. என் உள்ளம் வெளிச் சொல்லமுடியாத துக்கத்தினாலும், கவலையினாலும் நிறைந்துள்ளது. நான் என்ன செய்தேன்? ஏன் இந்தத் தடைகள் என்று என் உள்ளம் அங்கலாய்க்கிறது. கர்த்தாவே, இனித் தாமதியாதேயும். நான் என்ன செய்தால் என் வாழ்வில் முன்னேற முடியும். என் தேவைகள் சந்திக்கப்பட முடியும். சமாதானத்துடன் வாழ முடியும் என்று பலநேரம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் என்ற வார்த்தைப்படி என் கவலைகளை உம்மேல் வைத்து சமாதானத்தோடிருக்க உதவி செய்யும். நீர் சொல்ல ஆகும் என்று இருக்கிறதே. எனக்கு எதிரான சாபங்களையும் எல்லாத் தந்திரங்களையும் நீர் கல்வாரியில் எனக்காக சுமந்து தீர்த்தீரே. அப்படியிருக்க ஏன் இந்த நிலமை கர்த்தாவே. என்னுடன் இருந்தவர்களும். ஜூனியர்களும் உயர்வை அடைந்துள்ளார்களே. கர்த்தாவே. நான் உம்மை மட்டும் தானே நம்பி காத்திருக்கிறேன். ஒரு விசை எனக்கு இரங்கி என் உயர்வையும், என் முன்னேற்றத்தையும் கட்டளையிடும். நீரே என் தலையை உயர்த்துகிறவர் என்பதை அறிவேன். இந்நிலையின் நிமித்தம் நான் சமாதானம் இழந்து இருப்பதை அறிவீர் உம்முடைய நல்வார்த்தைகள் நிறைவேற காத்திருக்கிறேன். கர்த்தாவே, கிருபை புரியும், எனக்கு இரங்கும். நீர் எனக்கு ஒத்தாசை புரிந்து, என்னை உயர்த்தி, விருத்தியடையச் செய்கிறபடியால் உமக்கு நன்றி கூறுகிறேன். தொடர்ந்து வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.