"பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்படியுங்கள், இது நியாயம்."                                                                                                                                                                                                                                                                          எபேசியர் 6:1

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

என்னுடைய மகன் தன் பள்ளிப் பருவத்தில் தனது தேர்வு நேரத்தில், தான் வளர்த்து வந்த மீன்களை பார்த்துக்கொண்டு இருந்தான். சுமார் 400-க்கும் மேற்பட்ட கலர் மீன்களைப் பல தொட்டிகளிலும், கண்ணாடி தொட்டியிலும் வளர்த்துக் கொண்டு இருந்தான். அந்தத் தொட்டிகளைக் கழுவுவது, மீன்களுக்கு ஆகாரம் போடுவதுமாக தன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டு இருந்தான். எனது மனைவி அவனைப் பார்த்து படி, தேர்வு முடிந்தபின் இவைகளைச் செய் என்றாள். தன் தாயிடம் மிகுந்த கோபத்தைக் காட்டிய பின்னர், தொடர்ந்து தன் மீன்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஊரில் இருந்து வந்த நான் 'ஆண்டு இறுதித் தேர்வு வருகிறதே, விடுமுறையில் செய்ய வேண்டிய காரியத்தை இப்பொழுது செய்கிறாயே?' என்றேன். காது கேளாதவன் போல் தன் காரியங்களைச் செய்தான். அந்த மீன்கள் அவன் காசுகளைச் சேமித்து வைத்து வாங்கிய மீன்கள். நானும் அவனிடம், சரி உன் இஷ்டம்போல் செய்துகொள் என்று கூறிவிட்டு, எனது மற்றக் காரியங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இரவு கழிந்து அடுத்த நாள் காலை என் மகன் என்னிடம் வந்து கவலையுடன் நின்றான். என்ன? என்றேன். 'நீங்கள் மீன்களுக்காக ஜெபம் செய்தீர்களா?' என்றான். 'இல்லை' என்றேன். அப்பொழுது அவன் கூறினான். "எனது எல்லா மீன்களும் ஒரே இராத்திரியில் இறந்து விட்டன; அவைகள் தொட்டிகளில் மிதக்கின்றன” என்றான். 'கர்த்தர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர் அதே சமயத்தில் நீதியை சரிகட்டுகிறவர். உனது வாழ்வில் இனி கர்த்தர் என்னைக் காண்கிறார் என்று பயந்து வாழ உன்னை ஒப்புக் கொடு. கர்த்தர் உன்னை எல்லா தீங்குக்கும் விலக்கிக் காப்பார். சேதங்கள் இனி வராது என்றேன்.

அருமை வாலிபனே, வாலிப சகோதரியே உனது வாழ்வில் ஏன் தோல்வி, சேதம் வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க இடம் கொடு. அநேக முறை அன்பாகச் சொல்லக் கேட்டும் கவனியாது நம் மனவிருப்பத்தின் படி காரியங்களைச் செய்யும் போது சேதமும், துக்கமும், கவலையும், கண்ணீரும் பெருகுகிறது. அது நம்மில் மாத்திரம் அல்ல நமது குடும்பங்களிலும் வந்து விடுகிறது.

இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே! கர்த்தர் கிருபையாய்த் தந்த இந்தக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள். உன் மனவிருப்பத்தின்படி செல்போன், வீடியோ கேம் மற்றும் பல பாவ காரியங்களில் உன் நேரத்தை செலவிடாது, கர்த்தருக்குப் பயந்து காரியங்களைச் செய்யுங்கள். நம் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கிற கர்த்தர் ஜீவிக்கிறார். நாம் ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கும் போது தீங்கு நம்மை அணுகாது, சேதம் நமது எல்லைகளில் தோன்றாது நம்மைக் காத்து, நம் போக்கையும், வரத்தையும் இது முதல் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.