கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.
இன்று மனிதன் தனது வாழ்வில் உள்ள பிரச்சனை, நெருக்கங் களினிமித்தம் பலவிதமான போராட்டத்தோடு துக்கமும் அடைகிறான். சூழ்நிலைகளினால் ஏற்பட்ட துக்கம், அவனது வாழ்க்கையைக் கசப்பும், சஞ்சலமும் அடையச் செய்கிறது. மிகுந்த வேதனையுடன் தன் நாட்களை நடைப் பிணம்போல் கழித்துக் கொண்டு இருக்கிறான். சிலர் அநித்தியமான பாவ சந்தோஷத் தினால் தங்கள் துக்கத்தை நிவிர்த்தியாக்க முயற்சித்து, மேலும் வேதனையைப் பெருகச் செய்துகொள்கிறார்கள்.
அருமைச் சகோதரனே, சகோதரியே, உங்களது துக்கத்தைத் தீர்த்து புது வாழ்வு தரும் கர்த்தாதி கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார். பாடுகளினாலும், துக்கத்தினாலும் வாழும் நம்மைப் பார்த்து மனதுருக்கம் கொண்டு, அவர் 'உன் துக்க நாட்கள் முடிந்துபோம்' என்கிறார். அன்பு நிறைந்த கர்த்தர், துக்க நாட்களை முடியப் பண்ணுகிற தேவன். ஏன் இந்தத் துக்கத்தை எனக்குத் தரவேண்டும் ? பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்லவா இருக்கிறது என்று மனம் வேதனையினால் அங்கலாய்க்கலாம். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துக்கத்தைத் தருகிறவர் அல்ல. அவர் ஒரு போதும் தவறு செய்யவும் மாட்டார், தீங்கு செய்யவும் மாட்டார். துக்கம் வரும் காரணத்தை ஆராய்ந்து, துக்கம் நீங்க வழியையும் சற்று ஆராய்வோம்.
1.துக்கம் ஏன் வருகிறது?
1. சத்துருவின் செயலினால் வரும் துக்கம்
"...சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?" சங்கீதம் 43:2
இன்று நம்முடைய சத்துருவாகிய பிசாசின் செயலினால் பல குடும்பங்களில், பல தனி நபர்களில் துக்கம் பெருகியிருப்பதைக் காண்கிறோம். சத்துரு நம்முடைய ஆசீர்வாதங்களைத் தடை செய்கிறான். தாமதத்தினால் நம் உள்ளம் சோர்வு அடைகிறது. துக்கமும், துயரமும் பெருகுகிறது.
ஒருமுறை ஒரு வாலிபத் தம்பிக்காக ஜெபிக்கச் சென்றேன். இந்தத் தம்பி பரீட்சை எழுதச் செல்லும் நாளில்தான் பிசாசு தீவிரமாக அவனில் செயல்படுவான். தனது பள்ளியில் முதலாவது வந்த மாணவன். சரியாக பரீட்சை தினத்தன்று எங்கோ வீட்டை விட்டே ஓடிவிட்டான். பெற்றோர்களுக்குத் தாங்க முடியாத துக்கம். தனது மகன் முதன்மையாக வருவான், தானும் டாக்டர், தனது மகனையும் டாக்டராக படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணங்கொண்ட தகப்பன் கண்ணீர் சிந்தினார். அதன் காரணமாக அவருக்குப் பயங்கர வியாதி தோன்றியது. அதில் மரித்துப்போனார். அந்தத். தம்பியின் தாய்க்குச் சொல்ல முடியாத துக்கம். மகன் பிரச்சனை ஒரு புறம், கணவனின் மரணம் ஒரு புறம். பரீட்சை முடிந்து சில தினங்களில் அந்த மகன் வீடு திரும்பினான். எந்தக் காரியமும் அவனுக்குப் புரியவில்லை. அவனுக்காக ஜெபித்த சமயம் அவனை ஆட்கொண்டு இருந்த தீய ஆவி வெளியேறியது. தெளிந்த புத்தியுடன் பரீட்சை எழுதினான். வெற்றி பெற்று தன் கல்வியைத் தொடர்ந்தான்.
அன்பு சகோதரனே, சகோதரியே, இதைப்போலப் பலவிதங்களில் பிள்ளைகள், மனைவி, கணவன் பெற்றோர்களில் பிசாசானவன் கிரியைச் செய்து, நெருக்கி, துக்கத்தினால் நம்மை நிரப்புகிறான்.
2. உலகத்தின் செல்வத்தினால் வரும் துக்கம்
"...லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." 2 கொரிந்தியர் 7:10
இந்த உலகத்தின் ஆசை மனிதரின் வாழ்வில் துக்கம் உண்டாக்குகிறது. ஒருமுறை ஒரு தலைவன் இயேசு கிறிஸ்துவிடம், 'நித்திய ஜீவனை அடைய என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். இயேசு கிறிஸ்து கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அந்தத் தலைவன் இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டு வருகிறேன் என்றான். அப்பொழுது இயேசு கிறிஸ்து ஒரு காரியத்தைக் கூறினார். உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் அதிக ஐசுவரியமுள்ளவனா யிருந்தபடியால் இதைக் கேட்டபொழுது மிகுந்த துக்கமடைந்தான்.
ஆம், இன்று மண்ணாசையும், பொன்னாசையும் மனிதனை பலவிதங்களில் ஈர்க்கிறது. உண்டாக்கிய கர்த்தாதி கர்த்தரைத் தேடுவதை விட்டுவிட்டு இவைகளைப் பெற மனிதன் பலத் திட்டங்களை வகுக்கிறான். பல தொழில்களை ஓய்வின்றி செய்கிறான். ஐசுவரியத்தின் மயக்கம் சட்டங்களை மீற வைக்கிறது. குறுகிய காலத்தில் ஐசுவரியத்தை அடைய நாடுகிறபடியால் தீயச் செயலில் ஈடுபட வைக்கிறது. இந்த உலக ஆஸ்தியினால் சகோதர, சகோதரிகளுக்குள் பல வழக்குகளையும், அன்பு தணிந்து சண்டை, சச்சரவையும் பார்க்கிறோம். இந்த ஐசுவரியத்தை இழக்கும்போதும், பெறத் தடை ஏற்படும்போதும், விரயமாகும் போதும் மனிதனின் துக்கம் அதிகரிக்கிறதை நாம் அறிவோம்.
3.வியாதியினால் துக்கம்
"...அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்." யோபு 2:13
யோபு என்ற பக்தனின் வாழ்வில் திடீரென பல எதிர்பாராத இழப்புகள் தோன்றின. அத்தோடு முடியாமல், யோபுவின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக் கொண்டிருந்தான். அவனது சரீரத்தில் தோன்றிய கொடிய நோய் அவன் உள்ளத்தில் துக்கத்தைப் பெருகச் செய்தது. இன்று பலவிதமான நோய்களினால் மனிதன் தாக்கப்படுகிறான். வியாதியின் தன்மை என்ன என்று நாம் அறிந்திருக்கிறபடியால் மிகுந்த வியாகுலமும், துக்கமும் நமக்குள் பெருகிவிடுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு அருமைச் சகோதரருக்கு கொடிய நோயாகிய கேன்சர் உண்டானது. அவரது சரீரம் சில ஆண்டுகள் பலவிதமான பாதிப்பை அடைந்தது. அவரது எலும்புகள் உடைந்து விடும். தனது படுக்கையில் மிகுந்த துக்கத்துடன் நாட்களைச் செலவிட்டார். தேவ பிள்ளையே! வியாதிகள் நமக்குத் துக்கத்தைக் கொண்டு வந்தாலும், நமது நோய்களை இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்ற நம்பிக்கை வெட்கப்படுத்தாது, நம்மை ஆற்றித் தேற்றுகிறதாய் இருக்கிறது. வியாதியினால் வரும் துக்கம் நமது மனதை வேதனையினால் நிரப்புகிறது.
4. இழப்பினால் வரும் துக்கம்
"...சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கை யற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.” 1 தெசலோனிக்கேயர் 4:13
ஒரு சகோதரருடைய சற்று வயதான தகப்பனார் 'கேன்சர்' நோயினால் பாதிப்படைந்து மரித்துப்போனார். அந்தச் செய்தி அவர்கள் குடும்பத்தை அதிகமாக பாதித்தது. மரணமடைந்த சகோதரர் தான் மரிக்கப் போவதை உணர்ந்து, தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தார். மிகுந்த சமாதானத்துடன் மரணத்தைச் சந்தித்தார். நித்திய வாழ்வை அடைய இளைப்பாறுதலுக்குச் செல்கிறேன் என்று தன் குடும்பத்தாரை அழ வேண்டாம்; கர்த்தரைத் துதியுங்கள் என்று ஆலோசனைக் கூறி மரித்தார். ஆனாலும் அந்தக் குடும்பத்தினருக்குத் துக்கம் அதிகரித்தது. ஐயோ, என் தகப்பன் என்னை விட்டுச் சென்று விட்டாரே என்று அச்சகோதரர் கலங்கினார். அவர்களின் சரீரம் ஒரு பகுதி செயலிழந்து பாதிப்படைந்தது. மரணத்தின் துக்கம் நம்மை வெகுவாய் வாட்டும்.
நமது ஊழியத்தில் மிகவும் உற்சாகமாய் பங்கேற்று ஊழியம் செய்யும் சகோதரனின் மனைவி கர்த்தருக்குள் நித்திரையடைந் தார்கள். பிள்ளைப் பேற்றின் போது அந்தத் சகோதரியின் சரீரத்தில் நினையாத வேதனை பெருகி கடைசியில் மரித்தும் போனார். அவர்களின் மறைவு அன்புக் கணவருக்கும், அன்புத் தாய்க்கும், சகோதரிகளுக்கும், அவர்களுடன் பாசமாய் பழகின ஒவ்வொரு வருக்கும் சொல்ல முடியாத துக்கத்தைப் பெருகச் செய்து விட்டது. அவர்களின் பேச்சு, சிரிப்பு, செய்கைகள் போன்றவைகள், உள்ளத்தில் பசுமையாய் இருப்பதால் துக்கம் எங்களை விட்டு மறையாததாக இருக்கிறது, பிள்ளைகளும் தாயைத் தேடுவதினால் வேதனை உள்ளத்தில் கூடுகிறது என்றார்கள்.
எனது இளைய சகோதரன் மரித்தபின் என் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் உள்ளத்தைப் பிளப்பதைப் போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் மரித்து இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று எண்ணி துக்கம் நிறைந்தவனாய் இருந்தேன். ஒருநாள் 'நான் உனக்காக மரித்தேன்; எனது மரணத்தின் துக்கம் உனக்கு வரவில்லையே' என்று கர்த்தரின் ஆவியானவர் இடைபட்ட சமயம், ஆறுதல் அடைந்தேன். எனது சகோதரனின் இளைய மகனில் அந்தத் துக்கம் இருந்ததை நான் அறிந்தேன். ஏன் நம் அப்பாவைப் புதைக்க வேண்டும், நமது வீட்டின் ஒரு அறையில் வைத்திருக் கலாமே என்று தாயிடம் கேட்டான். தாய் உடல் கெட்டு, நாற்றம் எடுக்கும் என்றாள். எப்பொழுதெல்லாம் ஆசை வருகிறதோ, நம் மூக்கைப் பிடித்துக் கொண்டு அப்பாவைப் பார்த்து வரலாமே என்றான்.
ஆம், இன்று நமக்குப் பிரியமானவர்கள் நம்மை விட்டு நித்திய வாழ்விற்குச் செல்லும் சமயம் நமக்குச் சொல்ல முடியாத துக்கம் பெருகுகிறது.
5. தேவனுக்கடுத்த துக்கம்
"...என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப் பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்." நெகேமியா 2:3
தேவனுடைய நகரம் பாழாக்கப்பட்டு, வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதைக் குறித்து அறிந்த நெகேமியாவில் மிகுதியான துக்கம் உண்டானது. பலவிதமான காரியங்கள், பிரச்சனைகளால் துக்கம் தோன்றுகிறது. ஆனால் ஆலய வைராக்கியத்தினிமித்தம் துக்கம் நமக்கு அதிகமாய் வருகிறது. இவ்விதமான துக்கம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும்.
II. நம் வாழ்வில் வரும் துக்கம் மாறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
1. கர்த்தராகிய இயேசுவண்டை வரவேண்டும்.
"அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை. அப்பொழுது கன்னிகைகளும் வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்." எரேமியா 31:12, 13
நமது துக்கம் மாறுவதற்கு நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினிடத்தில் வரவேண்டும். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். நம் துக்கத்தை மாற்றி, நமக்குள் சந்தோஷத்தை அருளிச் செய்கிறவராயும், பெருகச் செய்கிறவராயும் இருக்கிறார். இந்த அன்பின் ஆண்டவர் நம்மீது கரிசனை கொண்டவர். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்ற அழைப்பைத் தந்திருக்கிறார். என் துக்கத்திற்குக் காரணமானவைகள் அகன்று போக நான் என் பெலத்தினால் பல பரிகாரங்களைத் தேடி நிற்கிறேன். ஆனாலும் என் துக்கம் மாறவில்லை என்று சொல்லுகிற சகோதரனே! ஒரு முறை உன் வாழ்க்கையைக் கர்த்தரிடம் ஒப்புவித்துப் பார். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொன்னவர் உன் துக்கத்தின் தன்மையை மாற்றி, மகிழ்ச்சியான வாழ்வை மலரச் செய்வார்.
ஒரு முறை ஒரு சகோதரி எனக்கு நல்லதொரு குழந்தை வேண்டும், இதற்காக ஜெபியுங்கள் என்றாள். ஒரு நாளிலே ஒரு செய்தியும் கொடுத்தாள். எனது கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்து விட்டது; குழந்தைப் பாக்கியம் எனக்கு இல்லை. அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டியதாயிருக்கிறது என்று வருத்தத் தோடு தன் நிலையைத் தெரிவித்தாள். நாங்கள் ஜெபிப்பதோடு நீங்கள் கர்த்தருடைய சமுகத்தில் தாழ்த்துங்கள். கர்த்தருடைய சமுகத்தில் வர ஒப்புக்கொடுங்கள் என்று ஆலோசனைக் கூறியிருந்தோம். ஆலோசனைப் பெற்ற சகோதரி அப்படியே செய்தார்கள். தம்மிடத்தில் வந்தவர்களுடைய தாகத்தைத் தீர்க்கும் இயேசு கிறிஸ்து, அந்த மகளுக்கு அற்புதம் செய்தார். அறுவைச் சிகிச்சைக்குக் குறிக்கப் பட்ட நாளில் ஆஸ்பத்திரி சென்ற சகோதரி ஆச்சரியமடைந்தாள். எக்ஸ்ரேயில் காணப்பட்ட கட்டி மறைந்தது. பதிலாக கர்ப்பத்தின் கனி கொடுக்கப்பட்டது. இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, அற்புதங்களைச் செய்யும் இயேசு ஜீவிக்கிறார். நீ துக்கத்தோடு வாழுவது அவருக்கு சற்றேனும் பிரியமில்லாத காரியம். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்று சொன்னவர், உன் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவேன் என்று சொன்னவர், தம்மிடத்தில் வருபவர்களுடைய சரீரத்தில், ஆவியில் உள்ள போராட்டங்களை நீக்கி, குறைகளை நீக்கி நிறைவைத் தந்து நம்மை சந்தோஷப் படுத்துகிறவராகவும் இருக்கிறார்.
எனது வாழ்வில் வியாதியினால் துக்கத்தோடு இருந்தபொழுது ஒருசில நிமிடங்கள் அவர் சமுகத்தைத் தேட ஆரம்பித்தேன். அற்புத சுகத்தை ஈந்து, துக்கத்தை சந்தோஷமாக மாற்றிய இயேசு கிறிஸ்து மாறாதவராய் இருக்கிறார்.
2. துக்கம் நீங்க ஜெபிக்க வேண்டும்.
"...அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை." 1 சாமுவேல் 1:18
வாழ்க்கையில் குறைவினிமித்தமாய் நிந்தைகளையும், கசப்பையும், வேதனைகளையும் அடைந்த சகோதரி, கணவனின் அன்பைப் பெற்றிருந்தாள். ஆலயத்திற்கு வருகிறவள், காணிக்கைக் கொடுக்கிறவள். ஆனாலும் அவள் உள்ளத்தில், வாழ்க்கையில் துக்கம் இருந்தது. ஒரு நாளிலே தன் உள்ளத்தின் வேதனை களையும், துக்கத்தையும் தேவ சமுகத்திலே ஊற்றினாள். அன்றைக்கு அந்த மகளுடைய உள்ளத்தில் ஒரு பெரிய சமாதானமும், துக்கம் நீங்கிய வாழ்வும் உண்டானது.நாம் அநேக நேரங்களிலே கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள் பெருகும்போது, நம்மிடத்தில் அன்பாய் இருக்கிறவர் களிடத்தில் நம் வேதனைகளைச் சொல்லி அதன் மூலம் கண்ணீர் துடைக்கப்பட்டு, ஆறுதல் கிடைக்காதா என்று கலங்குகிறோம். அருமை தேவப்பிள்ளையே, சொல்லும் செயலும் தவறுகிற மக்களிடம் கூறுவதால் உங்கள் துக்கம் நிவிர்த்தியாவதில்லை. நம்மீது அன்பு வைத்து ஆதரிக்கும் தேவன் சர்வ வல்லவராக இருக்கிறார். கொந்தளிப்பை அடங்கச் செய்தவர், நிந்தைகளை நீக்குகிறவர், குறைவை நிறைவாக்குகிறவர், காரியங்களை ஜெயமாக்குகிறவர், வேதனையை நீக்கி சுகமாக்குகிறவர், நமது ஜெபங்களைக் கேட்டு கண்ணீரைத் துடைப்பார்; துக்கங்களைச் சந்தோஷமாக மாற்றுவார்.
ஒரு குடும்பத்தார் தனது மகனின் கண்ணிலுள்ள குறைவி னிமித்தமாக கலங்கினார்கள். அக்குடும்பத்தினர் அப்பிரச்சனை தீர்ந்து மகன் பூரண பார்வையடைய தேவ சமுகத்தில் ஜெபித்தனர். அதிசயங்களைச் செய்கிற தேவன் அற்புதமான வழியைத் திறந்தார். துாரமான தேசத்திற்குச் சென்று அதற்குரிய ஆப்பரேசன் செய்ய வழி திறந்தார். அதனால் அவனுடைய பார்வை சரியானது. குடும்பத்தாரின் துக்கமும் நீங்கியது.
3.கர்த்தரின் வார்த்தைகள் நம் துக்கத்தை மாற்றுகிறது
"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்." சங்கீதம் 119:92
கர்த்தருடைய வார்த்தைகள் ஆவியும், ஜீவனும் நிறைந்தவை. கன்மலைகளை உடைக்கும் சம்மட்டியாயும், அக்கினியாயும் இருக்கிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டு தொய்ந்துபோன நம் ஆவியைத் தேற்றி, ஜீவனை ஸ்திரப்படுத்தி, நம்மை சந்தோஷப் படுத்துகிறார். கன்மலை போன்ற பிரச்சனைகளை நொறுக்கி நம்மை அனல் மூட்டுகிறார்.
எனது வாழ்க்கையில் ஒரு விபத்தின் வேளையில் எனது இடதுபுற 3 விலா எலும்புகள் உடைந்தன. மிகுந்த வேதனையும், துக்கமும் நிறைந்த நான் ஜீவன் அவ்வளவுதான் என்று எண்ணி, கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி, நன்றி கூறினேன். வசனத்தை அனுப்பி, குணமாக்கி, அழிவுக்குத் தப்புவிக்கிற தேவன் தமது மாறாத வார்த்தையை அனுப்பினார். யோவான் 10:10ல் உள்ள "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." என்ற வார்த்தை தொய்ந்து போன என் உள்ளத்தைத் தேற்றியது. என் துக்கம் மாறியது. ஒரு புதிய தெம்பும், உற்சாகமும் வந்தது. இதனால் நம்பிக்கை வந்தது. அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் செல்வதற்கு வழி திறந்தது. அற்புதங்களைச் செய்கிற தேவனுடைய வார்த்தைகள் இன்றும் நமக்கு நேராக அனுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவைகளை நாம் ஏற்று உணர்வடையும் போது, நம் துக்கம் தீர்ந்துவிடும்.
4. இயேசுவின் சிலுவைப் பாடுகள் நம் துக்கத்தை மாற்றும்
"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்..." ஏசாயா 53:4
இயேசு கிறிஸ்து சிலுவை மரத்திலே பல காரியங்களைச் சுமந்து தீர்த்தார். அதில் ஒன்று நமது துக்கங்களைச் சுமந்து தீர்த்தார். மனிதனின் வாழ்வு துக்கமும், சஞ்சலமும், வேதனையும், போராட்டமும் நிறைந்தது. இவைகளை இயேசு கிறிஸ்து நமக்காக சுமந்து தீர்த்து, நமக்குள் ஒரு விடுதலையின் வாழ்வை உருவாக்கி இருக்கிறார்.
ஒருமுறை எனது வீட்டு மாடியில் கட்டட வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது, ஒரு மரச்சட்டத்திலுள்ள சுமார் 4 அங்குல நீளமுள்ள ஆணி, என் காலிலுள்ள செறுப்பையும் துளைத்து பாதத்தில் ஆழமாக ஏறியது. வலியினால் துடித்து விட்டேன். மரச்சட்டத்தோடு இணைந்திருந்த ஆணியை என் முழு பெலத்தினால் பிடுங்க முயற்சித்தேன்; முடியவில்லை. எனவே எனது மூத்த மகனை அழைத்துப் பிடுங்கச் சொன்னேன். அவன் கஷ்டப்பட்டு பிடுங்கியதும், இரத்தம் பீரிட்டு வந்தது. அடுத்த நாள் மதுரையில் ஒரு கூட்டத்தில் செய்தி கொடுக்க வேண்டியதிருந்ததால், அந்தக் காயத்தை பேண்டேஜ் துணியினால் கட்டிவிட்டு, ஷூ அணிந்து கொண்டு சென்று விட்டேன். ஆனால் மிகுந்த வேதனை. இந்த ஆணி குத்தியதால் எனக்கு இவ்வளவு வேதனை இருக்கிறதே, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருடைய கால்களும், கைகளும் ஆணிகளால் கடாவப்பட்டனவே என்று அவருடைய சிலுவைப் பாடுகளைக் குறித்து தியானிக்க ஆரம்பித்தேன். என் வேதனைகள் மாறியது. என் வலியினால் வந்த துக்கம் முற்றிலும் நீங்கிற்று.
அருமை சகோதரனே, சகோதரியே, நமக்காக முகத்தில் துப்பப்பட்டு, அவமானங்களை ஏற்றுக்கொண்டு, நம் துக்கங்களைச் சுமந்த இயேசு சிலுவையில் அடைந்த பாடுகளைத் தியானிக்க உன்னை ஒப்புக்கொடு. உன் துக்கமெல்லாம் மறைந்து போகும்; சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் இருக்கிற படியால், உலகம் தரமுடியாத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அடைவாய்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில், மறைந்த சகோ. C. எபனேசர் பால்.
(இந்தச் செய்தி 1998 பிப்ரவரியில் வெளியிட்டது)