தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். இம்மட்டும் என்னை நடத்தி, இந்த ஆண்டின் இறுதித் தேர்வினை எழுத என்னைத் தகுதிப்படுத்தியதால் உமக்கு நன்றி கூறுகிறேன். இந்தத் தேர்வில் வெற்றி பெறவும், சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்றும் ஆயத்தமாகும் என்னை ஆசீர்வதியும். போதுமான பெலத்தைத் தாரும். எந்தவிதமான சம்பவங்களும் என் படிப்பினையும், தேர்வினையும் கெடுத்துவிடாதபடி தயவாய்க் காத்தருளும். எனக்குப் போதுமான ஞாபகசக்தியைத் தாரும். "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்." என்ற வாக்கின்படி ஞானத்தைக் கேட்கும் என்னை உமது ஞானத்தினாலும், ஞாபகசத்தியினாலும் நிரப்பும். உம்மிடம் நம்பிக்கைக் கொண்டு, தீட்டானவைகளை வெறுத்து, தன்னைக் காத்துக் கொண்ட தானியேலுக்கு ஈந்த ஞானத்தை எனக்குத் தாரும். கர்த்தாவே! உமது பிள்ளையாகிய நான் வெட்கமடையாது. ஒரு சிறந்த வெற்றியை எனது தேர்வில் பெற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். தேர்வு எழுதும் போது, எந்தவித சந்தேகமும், தயக்கமும் ஏற்படாமல் திட்டமும், தெளிவுமாக சரியான விடையை எழுத எனக்கு உதவி செய்யும். எந்த விதமான வியாதியும், பெலவீனமும் என்னை இக்காலத்தில் மேற்கொள்ளாத படி காத்துக் கொள்ளும். என்னை உமது பெலத்தால் இடைகட்டி வழிநடத்தி ஆசீர்வதியும். கர்த்தாவே! என் ஜெபத்தைக் கேட்டு நலமானதைச் செய்யப் போவதால் உமக்குக் கோடான கோடி நன்றியைத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுதல் செய்கிறேன் நல்ல பிதாவே! ஆமென்.