"...நான் உங்களைத் தாங்குவேன்..."

                                                                                                                                                                       ஏசாயா 46:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.

மனிதரின் வாழ்வில் நினையாத தெரியாத நிலையில் ஆபத்து தோன்றி அழிவைக் கொண்டு வந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் சோர்ந்து, மடிந்து, அழிந்து விடாது நம்மை எல்லா நேரமும் தாங்கி நடத்துவதற்கு ஒருவர் உண்டு. அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இந்த அன்பின் தேவன் நம்மை அனுதினமும் தாங்கி நடத்த உண்மையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார். இந்த இயேசு கிறிஸ்து எப்படி, யாரைத் தாங்குவார் என்று சிந்திப்போம்.

1.கர்த்தர் நம்மை எப்படித் தாங்குவார்?

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களைத் தாங்குவேன் என்றவர், தாயின் கர்ப்பத்திலிருந்து நமது முதிர் வயது வரை தாங்க வல்லவராய் இருக்கிறார். இவர் எப்படித் தாங்குகிறார் என்றால்

1. தம் வார்த்தையினால் நம்மைத் தாங்குவார்

"இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.''

எபிரெயர் 1:3

கர்த்தர் தம் வல்லமையின் வார்த்தைகளால் நம்மைத் தாங்குகிறார். கர்த்தரின் வார்த்தை ஆவியும் ஜீவனும் நிறைந்தது. இந்தத் தாகம் தீர்க்கும் ஆலோசனையின் வார்த்தைகள், ஆறுதலின் வார்த்தைகள், தேனிலும் மதுரமான வார்த்தைகள், நம் வாழ்வின் சூழ்நிலைக்கு ஏற்ற வண்ணம் நம்முடன் இடைப்பட்டு, பேசி நம் சோர்ந்து போன உள்ளத்தைத் தேற்றி, பெலப்படுத்தி, தொடர்ந்து நாம் ஓட்டத்தை ஓடச் செய்கிறதாய் இருக்கிறது. 
             எனது வாழ்வில் இருதய நோயினால் நான் மரணத்துடன்
போராடிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் எனது மனைவி சங்கீதம் 91ம் அதிகாரத்தை எனது காதுகள் கேட்க வாசித்துக் கொண்டிருந்தார்கள். மரணம் நேரிடும் என்றால் எனது மனைவி, பிள்ளைகள் திக்கற்றவர்களாய், அனாதைகளைப் போல அவதிப்படுவார்களே, எனக்குள்ள கடன் தொல்லை மிகுதியாயிற்றே. என் மனைவி ஆயுசு நாட்கள் முழுவதும் சம்பாதித்தாலும் இதனை அடைக்க முடியாதே என்று என் உள்ளத்தில் கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்தேன். உலகத்தில் இன்னும் கொஞ்சகாலம் வாழ வேண்டும். யார் எனக்கு உதவி செய்து இந்தப் போராட்ட நிலையிலிருந்து விடுவிப்பார் என்று கலங்கிக் கொண்டிருந்த வேளையில், "பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” என்ற வார்த்தைகள் என் செவிகளில் என்னைத் தேற்றும் வண்ணமாக, என் வாழ்வினை மாற்றும் வண்ணமாக விழுந்தது. இந்த வசனம் என் உள்ளத்தை, ஒருவிதமாக அசைக்க ஆரம்பித்தது. அச்சங்கீதத்தை மீண்டுமாக வாசிக்கச் சொன்னேன். அதில் 9ம் வசனத்திலுள்ள உன்னதமான தேவனைத் தாபரமாகக் கொண்டாய் என்ற நிபந்தனைக்கு என்னை உட்படுத்தி, இயேசுவே, உமக்காக வாழ்வேன் என்று என்னை அர்ப்பணித்தேன். நொறுங்கின உள்ளத்தோடு, வேதனை நிறைந்து, ஜீவனுக்குப் போராடின எனது வாழ்வில், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. எனக்குள் புதிய பெலன் வந்தது. என் இயேசு எனக்குள் அற்புதத்தைச் செய்வதை அன்று முதல் உணர முடிந்தது. பெலவீனம், பயம் நீங்கவும், புது வாழ்வைப் பெறவும் நன்றியுள்ள இதயத்தோடு கர்த்தரைத் தேடவும், உன்னதமான தேவ சமுகத்தை நோக்கி விண்ணப்பிக்கவும் தேவன் உணர்வையும், வாஞ்சையையும் தந்தார். தம்முடைய சிறிய வார்த்தைகளிலே ஒரு பெரிய வல்லமையான காரியத்தை எனக்குள் நடப்பித்தார். சோர்ந்த உள்ளத்துடன் இருந்த என்னை அவ்வசனங்கள் தாங்கி நிறுத்தின.

2.தம்முடைய கிருபையினால் நம்மைத் தாங்குகிறார்

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே,

உமது கிருபை என்னைத் தாங்குகிறது.'

சங்கீதம் 94:18

கர்த்தர் தம்முடைய கிருபையினால் தாங்குகிறார். கிருபை என்பது தகுதியற்ற நமக்குக் கர்த்தர் காண்பிக்கிற இரக்கம், தயவு, பாராட்டுகிற ஈவு. அநேகர் தங்களின் கஷ்டங்கள் தீர்ந்த நிலையில், நீங்கின நிலையில் அதிர்ஷ்ட வசமாக, நல்ல காலமாக தப்பிக் கொண்டோம். பாடுகள் நீங்கிற்று, வேதனைகள் நீங்கிற்று என்று சொல்கிறார்கள். நம்முடைய தேவன் நேரத்தையும் காலத்தையும்
உண்டாக்கினவர். நல்ல நேரம், கெட்ட நேரம் என்று அல்ல, சகலமும் அவர் பார்வைக்குச் செம்மையாக இருந்தபடியினால் அதை உண்டாக்கினார்.

1983ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனது சகோதரரின் வாகனத்தில் (ஸ்கூட்டர்) சென்று கொண்டிருந்தேன். நான் சென்ற சாலை அதிக போக்குவரத்து நிறைந்த இடம். அச்சமயத்தில் எனது வாகனத்தின் பிரேக் ஒயர் அறுந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. வாகனத்தின் வேகத்தைக் குறித்துக் கொண்டே வர ஆரம்பித்தேன். திடீர் என முன் சென்று கொண்டிருந்த லாரி நின்றது. எனக்கு ஒன்றும் ஒடவில்லை. என்னுடைய ஞானத்தில் வாகனம் சேதமின்றி தப்பிக்கொள்ள, வாகனத்தின் டயர் லாரியின் டயரில் மோதினால் அதிக சேதமின்றி வாகனம் தப்பிக்கொள்ளும். நானும் லாரிக்குள் செல்லாதபடி தப்பிவிடலாம் என்று என்னுடைய வாகன டயர் லாரி டயரில் மோதும்படியாக நிறுத்த முடியாத என் வாகனத்தை அப்படியே விட்டு விட்டேன். மோதினவுடன் என்னுடைய வாகனம் பின்னாக வந்து விட்டது. லாரியின் பின்பகுதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த என்னையும், கீழே விழ வைத்தது. நான் கீழே விழுந்த சமயத்தில் என் தலைமுடியின் மீது ஒரு காரின் சக்கரம் ஏறிச் சென்றது. நான் அன்று மயிரிழையில் தப்பினேன். எந்த விதத்திலும் தேவனுக்கு முன்பாக நான் நல்லவன் கிடையாது. ஆனால் என் மீது வைத்த அன்பின் நிமித்தமாக அந்த இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் என் ஜீவனை ஈடாக எனக்குக் கொடுத்தார். அன்று இரவு என் மனைவியிடம் தகுதியற்ற என்னை தேவன் ஒரு நோக்கத்தோடு, கிருபையாக  வைத்திருக்கிறார் என்று பகிர்ந்து கொண்டேன். அந்த ஆண்டின் இறுதியில் தேவன் மீண்டும் ஒரு வியாதியின் வழியாக என்னைச் சந்தித்து, அவரது பணியைச் செய்ய மாற்றினார். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே” என்ற வாக்குறுதி எவ்வளவு உண்மையானது.

3. தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம்மைத் தாங்குகிறார்.

"உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."

சங்கீதம் 51:12

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு, நாம் முறிந்துவிடும், விழுந்துவிடும் சூழ்நிலையிலே நம்மைத் தாங்கி நடத்துகிறார். இயேசு கிறிஸ்து பிதாவிடம் நமக்காக வேண்டிக் கொண்டதினிமித்தமாக என்றென்றைக்கும் நம்மோடு இருக்கக்
கூடிய தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணும்படி அருளப்பட்டிருக்கிறார்.

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று சொன்னவர் தம்முடைய ஆவியானவரின் மூலம் நம்மிடத்திலிருந்து நமக்குள் நற்கிரியைகளைச் செய்கிறவராக இருக்கிறார். உலகத்தினுடைய இறுதி நேரம் வரை நம்மோடு இருக்கக்கூடியவர் இவர்தான். நம்முடைய குறைவுகள், நம்முடைய தாழ்வுகள், நெருக்கங்கள், போராட்டங்கள், பிரச்சனைகள் எல்லா சூழ்நிலையிலும், எல்லா நேரத்திலும் நம்முடன் இருந்து தம்முடைய செய்கையினாலும், ஆறுதலின் நற்கிரியையினாலும் நம்மை மீண்டும் உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, தொடர்ந்து நம் பணியை, தொழிலைச் செய்ய, நம்முடைய வாழ்க்கையை வெற்றியாக நடத்த உதவுகிற உண்மையுள்ளவராயிருக்கிறார்.

ஒருமுறை ஒரு ஊழியத்தின் போது இரண்டு வாலிப சகோதரிகளுக்கு ஜெபித்த சமயம், தீய ஆவிகள் செயல்பட ஆரம்பித்தது. அவர்களுக்காக பல மணிநேரம் ஜெபித்தேன். திடீரென்று அங்கு ஊழியம் செய்யும் ஒரு சகோதரி வந்தார்கள். இரண்டு சகோதரிகளின் முடிகளையும் பிடித்தார்கள். போகிறாயா என்று கேள்வியைக் கேட்டு, அவர்கள் கன்னங்களிலும் சரீரங்களிலும் அடி கொடுத்தார்கள். சுய நினைவு இழந்த அந்த இரண்டு வாலிப சகோதரிகளும், சுயநினைவு திரும்பி தெளிவாகக் காரியங்களைச் செய்தனர். அன்று இரவு மிகுந்த சோர்வோடு படுக்கைக்குக் சென்றேன். கர்த்தாவே, நான் தகுதியற்றவன், குறை உடையவன், வேத ஞானம் அதிகம் கிடையாது. இப்படி அடித்துப் பிசாசுகளைத் துரத்துவதற்கு எனக்குத் தைரியமும், தெம்பும் இல்லை. இனி நான் இவ்விதமான மக்களுக்கு ஜெபிக்க மாட்டேன் என்று கண்ணீரோடு புலம்பினேன். தேவ ஆவியானவர் நான் உன்னைப் பயன்படுத்துவேன். அந்தப் பெண் பிள்ளைகளுக்குத் தீய ஆவிகள் விலகவில்லை. அவர்கள் படுகிற வேதனைகளைக் கண்டு அச்சத்துருக்கள் மறையும்படி கட்டளையிட்டேன். நாளையதினம் ஜெபி. நான் அவர்களை விடுவித்து, அபிஷேகம் செய்வேன் என்று சோர்ந்து போன என்னைத் தம் வார்த்தைகளினால் தேற்றி, அடுத்த நாள் ஊழியம் செய்ய என்னைப் பலப்படுத்தினார். அடுத்த நாள் ஜெபவேளையின் போது விலகினது போல இருந்த அந்த ஆவிகள் அந்த இரண்டு வாலிப சகோதரிகளிலும் செயல்பட ஆரம்பித்தன. கர்த்தருடைய ஆவியானவர் என்னைத் தம்முடைய உற்சாகத்தினால் தேற்றின வார்த்தையின்படியே நான் ஜெபித்தேன். கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் பலமாக இறங்கினபடியால் விடுதலையடைந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களாய் அந்த இரண்டு சகோதரிகளும் விடுவிக்கப்பட்டனர். அடித்து துரத்தி ஊழியம் செய்யும் சகோதரியும் இவ்விதமாக செய்வதே உண்மையான காரியம் என அறிந்து, தங்களின் காரியங்களை மாற்றிக் கொள்ள அந்த ஊழியம் (நிகழ்ச்சி) சிறப்பாக அமைந்தது.

II. கர்த்தர் தம்முடைய வார்த்தை, கிருபை, ஆவியானவரைக் கொண்டு யார், யாரைத் தாங்குவார்?

1. கர்த்தரைத் தங்களோடு வைத்துக் கொள்ளுகிறவர்களைத் தாங்குகிறார்

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."

ஏசாயா 41:10

இன்று இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வாசம்பண்ண நம்மோடு தங்கித் தாபரிக்க விரும்புகிறார். இந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு உள்ளத்தில் வாசம் பண்ணுவதற்கு அழைக்கிற அனைவரோடும் அவர் தங்கி, தாபரித்து அவர்களைத் தாங்கி நடத்துகிறார்.

"நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்று சொன்ன கர்த்தர் யார், யார் பரிசுத்தமாக இருக்கிறார்களோ, யார், யார் தம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு இடங்கொடுக்கிறார்களோ அவர்களோடு தங்கி, தாபரித்து, தாங்கி நடத்துகிறார். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." என்ற வார்த்தையின்படி இன்று கர்த்தர் உங்களோடு இருக்கும்போது, உங்கள் எல்லா சூழ்நிலையிலும் தாங்கி நடத்துவார்.

ஒரு அருமையான சகோதரன் தன்னுடைய கப்பற்படையின் தலைமையகத்திலிருந்து தனது ஊருக்குத் திரும்பினார். அவர் தனது வாகனத்தை அதிக வேகமாக ஓட்டிச்சென்று கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவர் பல அடி துாரம் தூக்கி எறியப்பட்டார். இப்படியாக எறியப்பட்ட போது, மயக்கமுற்றார். "கர்த்தருடைய தூதன் அவருக்குப்
பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி, அவர்களை விடுவிக்கிறார்.”(சங்கீதம் 34:7) என்றவர், அற்புதம் செய்தார். கர்த்தரைத் தம்முடைய வாழ்க்கையில் தாபரமாகக் கொண்ட, உள்ளத்தில் அழைத்த அவருக்கு “உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்." சங்கீதம் 91:12ன் படியே அன்பின் தேவனுடைய கரங்கள், கல்வாரியில் நமக்காக காயங்கள் ஏற்ற கரங்கள் அவரைத் தாங்கி, எந்தவித சேதமும் இல்லாதபடி தரையின்மீது உருளச் செய்தார். எல்லோரும் ஆச்சரியப்படும்படி அவர் ஜீவன் தப்பவும் அவரது வாழ்வில் தொடர்ந்து கர்த்தருக்காக ஜீவிக்கவும் கர்த்தர் உதவி செய்தார்.

கர்த்தரை நம்மோடு வைத்துக் கொள்ளும் போது நம்மைத் தாங்குவார். இன்று அருமை சகோதரரே/சகோதரியே, உன் உள்ளத்தின் கதவுகளைத் தட்டி மகனே, மகளே, உனக்குள் வாசம் பண்ண விரும்புகிறேன் என்று உன் இருதயத்தின் கதவுகளைத் தட்டுகிற அன்பின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இன்று உன் உள்ளத்தைத் திறந்து கொடுப்பாயானால் "உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று சொன்னவர், சகல அதிகாரமும் வல்லமையுமுடைய தேவன் உங்களோடிருந்து அழிந்து விடாதபடி, நொறுங்கி விடாதபடி தன் அன்பின் கரத்தினால் தாங்கி நடத்துவார்.

ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களின் உள்ளத்தில் வாசம் பண்ணி, தங்களோடு வைத்துக் கொள்ள தங்களைச் சீர்ப்படுத்தின, செம்மைப்படுத்தின மக்களில் வாசம் செய்து அவர்களைத் தாங்கி நடத்துவார்.

2. சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தையுள்ளவர்களைத் தாங்குகிறார்

"சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.''

சங்கீதம் 41:1,2,3
சிறுமைப்பட்ட மக்கள் மீது சிந்தையுடைய மக்களை அவர்களது தீங்கின், நெருக்கத்தின், வியாதியின், வேதனையின் காலங்களில் தாங்குகிறார். திருச்சியிலிருந்து 1993ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி இரவில் காரில் சென்னைக்குச் செல்லப் புறப்பட்ட போது, வழியில் ஒரு மனிதர் முகத்தில் காயங்களோடு குற்றுயிராக தரையில் விழுந்து கிடந்தார். என்னுடைய இரண்டாவது மகன் விபத்தில் சிக்கிய மனிதனைக் கண்டு காரை நிறுத்துங்கள், நாம் உதவி செய்ய வேண்டும் என்றான். என் மகனிடம், மகனே நாளை காலை 6 மணிக்குள் நாம் சென்னையிலிருக்க வேண்டும். ஏற்கெனவே நேரம் ஆகிவிட்டது. நாம் பிரயாணமாக 6 மணி நேரம் செல்ல வேண்டியுள்ளது. அதிக விரைவாக சென்றால் மட்டுமே ஏற்ற நேரத்தில் சேர முடியும். ஆகவே என்னால் இயன்ற ஒரு காரியத்தை அவருக்குச் செய்து விட்டேன். அது ஜெபம் என்று கூறினேன். அப்பா நீங்கள் என்னதான் சொன்னாலும், என் உள்ளம் ஏற்றுக்கொள்ளாது. நல்ல சமாரியனாக ஆகவேண்டும் என்று கூறினான். சில கிலோமீட்டர் அந்த விபத்து நடந்த இடத்தைக் கடந்து சென்று விட்டோம். ஆனால் திடீரென்று நாங்கள், உடன் எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு முக்கிய கடிதத்தை வீட்டில் வைத்து விட்டதை நினைத்து, வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. வீடு திரும்பும் போது அந்த விபத்து நடந்த இடத்தில் வாகனங்கள் நிற்பதையும், போலீசாரும் மற்றவர்களும் உதவிபுரிவதையும் கண்டோம்.

1993ஆம் ஆண்டு ஜூன் 5ம் தேதி நாங்கள் குடும்பமாக சென்று கொண்டிருந்த வாகனம் ஒரு விபத்துக்குள்ளானது. அதிகமாக சேதம் வந்த போதிலும், கர்த்தருடைய கரம் எங்கள் ஜீவனைக் காத்தது. இரண்டாவது மகனின் இடது கால் விபத்தில் முறிந்தது. காயம் அடைந்த அவனை ஜெபித்து விட்டு வாகனத்திலிருந்து தூக்கி சாலையிலே கிடத்தி வைத்தேன். அப்பா என்று கூப்பிட்ட அவனை 'இயேசுவே' என்று கூப்பிடு என்று கூறி மற்ற காரியங்களைச் செய்து கொண்டிருந்த வேளையில் சில நிமிடத்திலே ஒரு அருமை சகோதரன் தனது வாகனத்தோடு  எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தார். காயம் அடைந்த, வேதனை நிறைந்த, மயக்கமுற்றிருந்த என் மகனையும், கலங்கி தவித்த என் மனைவியையும், இளைய மகனையும் அவ்வாகனத்திலே ஏற்றி, எங்களுக்கு அதிகமாக உதவும் சகோதரரின் இல்லத்திற்குக் கொண்டு செல்ல முன் வந்தார்கள். அப்போது நினைத்தேன். சாலையில் உதவியற்ற நிலையில் விபத்துக்குள்ளான மனிதன் மீது இரக்க சிந்தை உடையவனாய்க் காணப்பட்ட இவன் மீது கர்த்தர் கரிசனையுடையவராயிருந்து, இவனது வேதனையின் வேளையில் தாங்கினதை உணர்ந்து கர்த்தரைத் துதித்தேன்.

அருமை சகோதரனே/சகோதரியே, இன்று உன் வாழ்வில் வகையறியாது, வழியறியாது, பலநிலைகளில் வேதனை அடைந்து, சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். கல்வாரியின் மீட்பின், விடுதலையின் வல்லமையை அறியாது, புலம்பி தவித்துக் கொண்டிருக்கிற, தடுமாறுகிற மக்கள் ஏராளம். இம்மையில் மாத்திரமல்ல நித்திய அழிவுக்கு, சிறுமைக்குச் செல்கிற மக்கள் ஏராளம். அவர்களைக் குறித்து உள்ளத்தில் ஒரு பாரம், கவலை, கரிசனை ஏற்படுமானால், அவர்களுடைய விடுதலைக்காக மன்றாடுவதற்கு முன் வந்து விடுவீர்கள். இப்படி முன் வந்தவர்களைக் கர்த்தர் தாங்குவார்.

3. நீதிமான்களைக் கர்த்தர் தாங்குகிறார்

"துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

சங்கீதம் 37:17

 அருமை சகோதரனே/சகோதரியே, கர்த்தர் நீதி செய்கிறவர்களைத் தாங்குகிற தேவனாயிருக்கிறார். இன்றைக்கு அநேகர் துர்க்கிரியைகளைச் செய்வதினால், நடப்பிப்பதினால் தங்களின் ஆசீர்வாதங்களை, சமாதானத்தை இழந்து போகிறார்கள். ஆனால் நீதி செய்கிற மக்களைக் கர்த்தர் தாங்குகிற தேவனாயிருக்கிறார். நீதி செய்கிற காரியம் தானாகவே நமக்குள் வர இயலாது. நாம் பாவத்தில் உருவாகி, பாவத்தில் பிறப்பிக்கப்பட்ட படியினால், நம்முடைய ஜென்ம சுபாவத்தின்படி, பாவம் செய்கிற உணர்வு உள்ளவர்களாயிருக்கிறோம். இன்று நாம் நீதிமான்களாக்கப் படும்போது கர்த்தர் நம்மைத் தாங்குகிறார். இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களை நீதிமான்களாக்குகிறார் என்று ரோமர் 5:9ல் பார்க்கிறோம்.

நான் இயேசு கிறிஸ்துவை எனது இரட்சகராக தேவனுடைய விடுவிக்கிற வல்லமையை ஏற்றுக்கொள்ளும் முன்பாக, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் எப்படி கழுவப்பட முடியும், சுத்திகரிக்கப் பட முடியும் என்ற கேள்வியோடு இருந்தேன். எனது வியாதியிலிருந்து கர்த்தர் அற்புதமாய் விடுவித்தபோது, அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்ட நான் அவரை முழுமையாகத் தேட ஆரம்பித்தேன். ஒரு நாள் காலை தனித்துவிடப்பட்ட வேளையில் கர்த்தரின் சமுகத்தை நோக்கி, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று விண்ணப்பம் செய்ய ஆரம்பித்த போது, என் உள்ளத்தில் ஒரு திரைப்படத்தைப் போன்ற காட்சி வந்தது. எனக்கு முன்பாக ஒரு புத்தகச் சுருள் இருந்தது. அதை ஒரு மனிதன் விரித்துக் காண்பித்த போது, என் பாவங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். கடின உள்ளம் உடைய நான் என்னை அறியாது என் பாவங்களை நினைத்து, "எனக்காக, என் பாவங்களுக்காக, நீர் நொறுக்கப்பட்டீரே, என்னுடைய மீறுதலுக்காக நீர் இரத்தம் சிந்தினீரே” என்று கதறினேன். அச்சமயம் ஒரு சிறுதுளி இரத்தம் அந்தச் சுருளில் விழுவது போலவும், அந்தப்பக்கம் முழுமையுமாக வெண்மையாக்கப் படுவதையும் கண்டேன். இவ்விதமாக சுருள்களில் எழுதப்பட்ட என் பாவங்கள் எனக்கு முன்பாக காட்டப்பட்டு, இயேசுவின் இரத்தத்தால் அந்தச் சுத்திகரிப்பைப் பெற கிருபை புரிந்தார். உலகம் தரமுடியாத ஒரு பெரிய சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் எழும்பி தேவனைத் துதித்தேன். என் தாய், என் சகோதரி, என் மனைவியிடமும் என் குறைகளை, தவறுகளைக் கூறி மன்னிப்பைப் பெற்று ஒப்புரவானேன். அன்றுதான் இயேசுவின் இரத்தம் நம் பாவங்களைச் சுத்திகரிக்க வல்லமையுடையதாய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

அருமையான சகோதரனே/சகோதரியே, இன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உங்கள் பாவம் கழுவப்பட்டால், சுத்திகரிக்கப்பட்ட, நீதியை நடப்பிக்கிற, கருவிகளாக மாறுவீர்கள். கல்வாரியில் நமக்காக அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மைச் சுத்திகரித்து, நீதியின் அவயவங்களாக மாறப்பண்ணி, எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி நடத்தும். உயர்ந்த கட்டிடங்களின் மேல் எப்படி இடிதாங்கி உயரத்திலிருந்து வரும் சேதங்களைத் தாங்குகிறதோ, அதுபோல உங்களது வாழ்க்கையில் கல்வாரி சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்து உயர்வாக வைக்கப்படுவார் என்றால் எல்லா சூழ்நிலையிலும், எல்லா நெருக்கங்களிலும், பிரச்சனைகளிலிருந்தும் தாங்கி நடத்துவார். "உங்களைத் தாங்குவேன்” என்று சொன்ன தேவன் இன்று முதல் உங்களைத் தாங்கி வழி நடத்தி ஆசீர்வதிப்பார். அவர் சமுகத்தில் உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

மறைந்த சகோ. C. எபனேசர் பால்.

(இந்தச் செய்தி 1993 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது)