விசுவாசத்திற்குள் வந்த தேவபிள்ளைகளும், ஊழியர்களும், குடும்பத்தாரும் சுகநலத்தோடு சாட்சியாக ஜீவிக்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, உம்முடைய சமுகத்திலே எங்களைத் தாழ்த்தி ஜெபிக்கத் தந்த இந்த நல்ல வேளைக்காக உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய பிள்ளையாக மாறுவதற்கு நீர் உதவி செய்தபடியால் உம்மைத் துதிக்கிறேன். இம்மட்டும் உம்முடைய பரிசுத்த ஆவியானவருடைய பெலத்தினால் பாவ நாசங்களுக்கும், நோய்களுக்கும் விலக்கிக் காத்தீரே, அதற்காகத் துதிக்கிறேன். இன்னும் பல காரியங்களை என் வாழ்க்கையில் எதிர்த்து போராடுகிறேன். வெளியில் சொன்னால் உம்முடைய நாமம் தூஷிக்கப்படும். எனது ஊழியமும் சாட்சியும் பாதிக்கப்படும் என்று கலங்குகிறேன். கல்வாரியில் எங்களுக்காக ஜீவனைக் கொடுத்த இயேசுவே, நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று சொன்னவரே, ஏழு, எழுபது தரம் மன்னிக்கச் சொன்ன தேவனே, ஒருமுறை மன்னியும் என்று உம்மிடத்தில் மன்றாடுகிற என்னைக் கழுவி சுத்திகரியும். தாவீது என்னுடைய பாவங்களைச் சுத்திகரியும் என்று கெஞ்சினது போல கெஞ்சுகிற எனக்கு உதவி செய்யும். நான் பாதகருக்கு உமது அன்பின் வழியை அறிவிக்க, உம்முடைய இரட்சணியத்தின் சந்தோஷத்தையும், தாலந்துகளையும் எனக்குத் தந்து வழிநடத்தும். என் பாவத்தின் நிமித்தமாக ஏற்பட்ட பலவீனங்களை இப்போதே அகற்றும். சுகப்படுத்தும். ஊழியர்களின் சுகநலன்களை விரும்புகிற தேவனே, ஒருமுறை உம்முடைய ஊழியனாகிய என்னையும், என் பிள்ளைகளையும் பெலப்படுத்தும்.

"உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்" என்று சொன்ன கர்த்தாவே, உம்முடைய நாமம் தூஷிக்கப்படாதபடி என்னை மீண்டுமாக சுகப்படுத்தி, பெலப்படுத்தி, ஊழியத்தை ஸ்திரப்படுத்துவீராக. இதற்குத் தடையாக தோன்றின பயம், அவிசுவாசம், பணக்குறைவுகளை அகற்றி என்னை நிறைவாக்கும். தொடர்ந்து உம்முடைய பாதையில் ஓடி "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று சொல்கிற மகனாக, இடறலற்ற ஆத்தும ஆதாயப்பணியைத் திறம்பட செய்ய உமது பெலத்தினால், ஞானத்தினால், வார்த்தையினால், வல்லமையினால் நிறைத்தருளும் உமது அன்பை உணர, உமது கிருபைகளைப் பெற்றுக் கொள்ள, உம்மைப்போல மாற என்னை உம்முடைய பொற்கரத்தில் அர்ப்பணிக்கிறேன். உம்முடைய அச்சடையாளங்களைத் தரித்து, எல்லா சூழ்நிலையிலும் உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த அருள்தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.