முன்பு வந்த பெலவீனம் மீண்டும் என்னில் / என் வீட்டாரில் வந்து விடுமோ என்று கலங்குவோருக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கடந்த நாட்களில் கண்ணின்மணிபோல் என்னைக் காத்து, சுகபத்திரமாய் இதுவரை நடத்தி வருகிறீர். அதற்காக ஸ்தோத்திரம், துதியை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, நீர் எனக்குத் துணையாக நின்று செய்த காரியங்களுக்காக உம்மைத் துதிக்கிறேன். என் பெலவீனத்தை/என் வீட்டாரின் பெலவீனத்தைச் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்துவே, என் வேதனையான/என் வீட்டாரின் வேதனையான நோயின் கொடூரத்திலிருந்து விடுதலைத் தந்தீர். அதற்காக நன்றி கூறுகிறேன். சிற்சில நேரத்தில் நான் நினையாத களைப்பு/என் வீட்டாரில் காணும் களைப்பு என்னைக் கலங்கடிக்கிறது. எங்கு பழைய நோயின் கோரத்தன்மை பாதித்து விடுமோ என்று கலங்குகிறேன். கர்த்தாவே, என் உள்ளத்தைத் திடப்படுத்தும். இந்த நோய் என்னில்/என் வீட்டாரிலிருந்து நீங்கியதால் நான் சாட்சியினைக் கூறி, ஸ்தோத்திர காணிக்கையும் படைத்தேன்.நான் வெட்கப்பட்டு போகாதபடியும், உமது நாமம் என்னால் மீண்டும் தூஷிக்கப்படாதபடியும் எனக்கு இரங்கும். ஜெபத்தைக் கேட்கிறவரே. என் ஜெபத்தைக் கேளும். நான் எதினிமித்தமும் கலங்காதபடி செய்யும். என் பெலவீனம்/என் வீட்டாரின் பெலவீனம் உமது நாமத்தை உயர்த்த தடையாக இருந்தது. ஆனாலும் நீர் இரங்கி, அற்புதமாய் சுகம் கொடுத்தீர். அதற்காக நன்றி. மீண்டும் தோன்றி விடுமோ என்ற பயம் என்னில் வராது தயவாய்க் காத்தருளும். உம் அன்பினால் நிறையவும், இன்னும் உம் பெலத்தால் இடைக்கட்டப்பட்டு, உமக்காக நானும் என் வீட்டாரும் வாழ உதவி செய்யும். கர்த்தாவே, நீர் அப்படிச் செய்வீர் என்று உமக்கு நன்றி கூறி என்னைத் தாழ்த்துகிறேன். ஜெபத்தைக் கேட்கிறவரே, என் ஜெபத்தைக் கேட்டு என்னைப் பெலப்படுத்தும்/என் வீட்டாரைப் பெலப்படுத்தும். என் சோர்வு, கலக்கம், பயம், அவிசுவாசம் யாவற்றையும் என்னை விட்டு முற்றிலும் நீக்கியருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.