"...என் கிருபை உனக்குப் போதும்..."

                                                                                                                                     2 கொரிந்தியர் 12:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

சத்திய வேதத்தில் கிருபை என்ற கர்த்தரின் மகத்துவமான தன்மையைக் குறித்து பல இடங்களில், பல பக்தர்களின் மூலம் உரைக்கப்பட்டு இருக்கிறது. தன்னுடைய கஷ்டங்கள் தீர்ந்து, வேதனை நீங்கி, முள்ளைப்போல் தாக்கும் சாத்தானின் செயல் நீங்க கர்த்தரை வேண்டின பக்தன் பவுலுக்குக் கர்த்தரின் பதில் வந்தது. அதில் "என் கிருபை உனக்குப் போதும்" என்ற மெய்வாக்கைக் கூறினார்.

கிருபை என்றவுடன் ஏதோ ஒரு புதுமை, ஒரு வல்லமை என்று நாம் நினைக்கக்கூடாது. கிருபை என்றால் தகுதியற்ற நமக்கு உன்னத தேவன் பாராட்டுகிற இரக்கம், தயவு, அன்பு என்பதாகும். எந்த நற்காரியங்களையும் பெற தகுதியற்ற நம்மை அவர் நேசித்தபடியினால், இந்த அன்பின் செயலை, இரக்கத்தின் கருணையை நமக்கு அளித்துள்ளார். தாவீது, வனாந்திரத்தில் இருந்த சமயம் “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது..." என்று சங்கீதம் 63:3ல் சொல்லியிருக்கிறார். “கர்த்தரின் கிருபை என்றுமுள்ளது” என்று சங்கீதம் 136ல் உரைக்கப்பட்டுள்ளது. "...நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்..” என்று ஏசாயா 54:8ல் கூறப்பட்டு, கிருபை நித்தியமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது. இந்தக் கிருபை அழிந்து, அகன்று செல்லாதபடி காக்கிற தேவன் என்று, நெகேமியா 9:32ல் பார்க்கிறோம். இவ்விதமாய் நம்மை நேசிக்கிற, நமது சிருஷ்டி கர்த்தர், இந்தக் கிருபையை நமக்கு அளவில்லாதபடி அருளி, அனுக்கிரகம் செய்துள்ளார். இந்தக் கிருபையின் மேன்மை என்ன என்றும் அதை அடைவதற்கு, பெற்றுக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் இந்தச் செய்தியின் மூலம் ஆராய நம்மை ஆயத்தப்படுத்துவோம்.

கிருபையின் மேன்மைகள்

1. நாம் நிர்மூலமாகாது காக்கப்பட்டு இருப்பது கர்த்தருடைய கிருபையே.

''நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." புலம்பல் 3:22


இன்று நாம் எதிர்பாராத பலவிதமான விபத்துக்கள், வியாதிகள், விக்கினங்கள் நமது வாழ்வில் நம்மைப் பாதிக்க தோன்றும் போது நோக்கி   வரும் போது, கர்த்தரின் கிருபை நம்மைக் காத்துக் கொள்கிறது. 

ஒருமுறை ஒரு உயர்ந்த பதவியில் இருந்த இராணுவ வீரனைச் சந்தித்தேன். அவர் ஜீவனுடன் நான் வாழ்ந்து கொண்டிருப்பது உன்னதமான கர்த்தரின் ஆச்சரியமான செயல் என்று தனது வாழ்வில்  நடைபெற்ற சம்பவத்தைத் தெரிவித்தார். யுத்த முனையில் உயர்பதவி   இருந்த இவ்வீரரும் அவருடன் இருந்த சகவீரர்களும் ஒரு பகுதியின் தாக்குதலை முறியடிக்கக் கடந்து சென்றனராம். இவ்விதமாக  23 வீரர்களாய் திடீரென எதிரியின் தாக்குதலும், அவர்களின் துப்பாக்கி குண்டுகளும் பாய்ந்து வரத் தொடங்கியது. உடன் வந்த வீரர்கள் தாக்குதலில் மரித்து விழுந்து கொண்டிருந்தனர். தான் குண்டுகளுக்குத் தப்பும்படி தரையில் படுத்தாராம். அந்த நேரத்தில் எதிரிகளின் தாக்குதல் மிகுதியாக மாறவே, அவர் சுடுவதை நிறுத்தி காத்திருந்தாராம். இதற்கிடையில் சில செத்த இவரது இராணுவ வீரர்கள் சிலர் செத்து இவர் மேல் சரியவும், குவியவும் ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் இவரது தரப்பில் இருந்த அத்தனை வீரரும் செத்து பிணமாக மாறி விட்டனராம். இந்தப் பிணக்குவியலின் அடியில் சிக்கிக் கொண்டார். எந்த அசைவும் இல்லாத காரணத்தால் எதிரியின் கால்கள் இவர் கண்களுக்கு அருகே தெரிய ஆரம்பித்ததாம். அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்ட எதிரிகள் எல்லா சடலத்தையும் ஒன்றாக்கி, தீயிட திட்டமிட்டனர். கடைசியில், இப்படியே கிடக்கட்டும் என்று விட்டுவிட்டு அகன்றனர். பயத்தினாலும், ஜீவன் தப்ப என்ன செய்வது என்று அறியாதபடியாலும் மூன்று தினங்கள் பிணக்குவியலின் அடியில் கிடந்தாராம். இரவும் பகலும் பிணக்குவியலின் பாரப் வேதனைப்படுத்தியது. மூன்று நாட்களுக்குப் பிறகு, எதிரியின் movement இல்லாத நேரத்தில் தப்பி தனது பகுதிக்கு வந்தடைந்தாராம். பாரம், நாற்றம்

ஆம் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சிலாக்கியம் இந்த வீரருக்குக் சொடுக்கப்பட்டது. இன்று ஜீவனுடன், குடும்பமாக கர்த்தரை ஆராதிக்கிறவராக இருக்கிறார். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது. கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." நமது முயற்சியோ, பரிசுத்தமோ, தகுதியோ அல்ல.

2. கிருபை நம்மைத் தாங்குகிறது.

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.' சங்கீதம் 94:18

 

நாம் நினையாத நேரத்தில் விழுகிற மக்களாக இருக்கிறோம். இவ்விதமாக விழும்போது, கர்த்தரின் கிருபை நம்மைத் தாங்குகிறது.

"....என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" என்று ஏசாயா 41:10ல் கூறிய கர்த்தர் நம்மை அனுதினமும் தாங்கி நடத்துகிறார்.

"...தாயின் வயிற்றில் தோன்றினது முதல் தல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்" 'என்று ஏசாயா 46:3ல் உரைத்த கர்த்தர், 'உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்து வந்தேன்"என்று தொடர்ந்து கூறியிருப்பதை அறிவோம்.

ஒரு முறை நாங்கள் Srilanka பகுதி ஊழியத்தில் Kotagala என்ற நமது தலைமை அலுவலக இடத்திலிருந்து Bagawatala என்ற இடத்திற்கு ஊழியத்திற்காக சென்றோம். சிறிது நேரத்தில் நாங்கள் Dickoya என்ற இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையில் நிறைய மக்கள் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். செல்வதற்கு வழி இல்லாமையால் சிறிது நேரம் நிறுத்தியபின், இடம் கிடைத்த போது மெதுவாக சென்று கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் ஏன் இந்தக் கூட்டம் என்று விசாரித்தபோது, சாலையின் ஒரு புரத்தில் பெரிய பள்ளத்தில் ஒரு கார் பாய்ந்து விட்டது. ஆகவே ஜனங்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்று அறிந்தோம். திடீரென நமது இலங்கை ஊழியத்தின் பிரதிநிதி, எனது சபையைச் சார்ந்த ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், ஏன் என்று தெரியவில்லை, விசாரித்து வருகிறேன் என்று வாகனத்தை விட்டு இறங்கிச் சென்றார். சில நிமிடம் கழித்து திரும்பினார். அவர் தான் விபத்துக்குள்ளாக சிக்கினார். அவரின் கார் சரியவே 30, 40 அடி தூரம் சென்று ஒரு மரத்தில் தாங்கி, கிடு கிடு பள்ளத்திற்குச் செல்லாதபடியால் உயிர் பிழைத்தேன், காரும் அப்படியே மரத்தால் தாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றச் செய்தியைச் சொன்னார். ஆம் நமது வாழ்வில் சரிவு, அது சரீரத்தில் இருக்கலாம் அல்லது கையின் பிரயாசத்தின் சரிவாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் திடீரென சரிவு தோன்றலாம். கலங்க வேண்டாம். கிருபையின் தேவன் நாம் சறுக்கும்போது, நம்மைத் தாங்க வல்லவராக இருக்கிறார்.

3. கிருபையினால் தயவு கிடைக்கும்.

"கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்."

ஆதியாகமம் 39:21

தேவனுடைய கிருபையானது நமது அன்றாட வாழ்வில் மேலான அதிகாரிகளிடம் தயவைப் பெறுவதற்கு வழியாக இருக்கிறது. இன்று நாம் பலவிதமான பிரச்சினைகளில் அதிகாரியின் இரக்கத்தைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறோம். தேவக் கிருபை நமக்கு அருளப்படும்போது.
உயர் அதிகாரிகள், தலைவர்களிடம் நமக்கு இரக்கம் கிடைக்கக் கர்த்தர் உதவி செய்கிறார்.

ஒருமுறை தாய் தகப்பன் இல்லாத ஒரு சகோதரி தான் படித்த ஆசிரியைத் தொழிலைப் பெறமுடியாது, மிகவும் குறைவான சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். ஆசிரிய வேலை கிடைப்பது, அதுவும் எந்த விதமான பணச்செலவும் இல்லாது கிடைப்பது, கூடாத காரியம் இந்த மகளுக்குக் கர்த்தர் கிருபை புரிந்தார். திடீரென அரசாங்கத்தில் இந்த ஆசிரிய பதவிக்கு ஒரு தேர்வு நடத்தினார்கள். எந்தத் தடையுமில்லாமல், ஒருவரையும் பார்த்து சிபாரிசுக்குச் செல்லாமல், கர்த்தரின் கிருபையால் அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைத்து வேலைக்குச் சென்றாள் ஆம் காத்தரின் கிருபை நமது வாழ்வில் உயர் அதிகாரிகள், தலைவர்களின் கண்களில் தயவு பெறுவதற்கு வழியாக அமைந்து விடுகிறது.

இன்று கர்த்தரின் கிருபை பெருகும் என்றால் நாம் நிர்மூலமாகாது கர்த்தர் நம்மைத் தாங்கி, இரக்கத்தைப் பெற்றவர்களாய் மாறிவிடுவோம். நிறைவான கிருபை நம்மை ஆசீர்வாதத்தின் பாதையிலும், தேவ தயவிலும் வளரச் செய்யும்.

4. தேவக்கிருபை நம்மை இரட்சிக்கும்.

"அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." எபேசியர் 2:5

இன்று கர்த்தர் நம்மை இரட்சிக்கிற உன்னத மகத்துவம் நிறைந்த தேவனாக இருக்கிறார். இரட்சிப்பு என்றவுடன் ஏதோ ஒரு புதுமையாக எண்ணுகிற மக்கள் உண்டு. இரட்சிப்பு என்றால் முழுமையான மீட்பு, விடுதலையாகும். நமது வாழ்வில் பல பாவங்களை நமது பருவம் தெரிந்த காலம் முதல் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பாவத்தின் சம்பளம் மரணம், பின்பு நித்திய ஆக்கினை அடையவேண்டிய நிலை. ஆனால் நாம் இரட்சிக்கப்படுவோமானால் நமது பாவம் மன்னிக்கப்பட்டு, ஒரு புதிய வாழ்வினை அடைகிறோம். அதில் மகிழ்ச்சி, சமாதானம், சந்தோஷம், பாவம் மன்னிக்கப்பட்டது என்ற நிச்சயத்துடன், விடுதலையுடன் வாழும் வாழ்வு உருவாகிவிடும். ஆகவே தான் இரட்சிக்கப்பட்டவுடன் ஒரு பெரிய  மாற்றத்தை ஒருவரின் வாழ்வில் காணமுடிகிறது. இந்த மாற்றமும், விடுதலையும், பாவ மன்னிப்பின் நிச்சயமும் கிருபையினால் நமக்குக் கிடைக்கிறது. கிருபையினால் வரும் இந்த இரட்சிப்பை நாம் அசட்டை செய்யாது அதன் மூலம் வரும் சகல ஆசீர்வாதமும் பெற நம்மை தேவசமுகத்தில் தாழ்த்த வேண்டும். மாறாத கிருபையுடைய தேவன், தமது கிருபையால் நமது பாவங்களை நீக்கி, நமக்குள் புது வாழ்வை உருவாக்கும் போது தான் மெய்யான சமாதானம், சந்தோஷம் பூரணமாய் கடந்து
வருகிறது. ஆகவே இந்தக் கிருபையினால் நாம் இரட்சிக்கப்படுவதை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள நாம் சாட்சியாக ஜீவிக்க நம்மை ஒப்புக் கொடுப்போம்.

5.கிருபையினால் அழைப்பு.

''...தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்." கலாத்தியர் 1:15

கர்த்தர் மனுமக்களை ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, தம்முடைய டய தீர்மானத்தின்படி ஒவ்வொருவரையும், பூமியில் வெவ்வேறு பகுதியில் ஏற்படுத்தி இருக்கிறார். இவர்களின் காலமும் குறிக்கப் பட்டிருக்கிறது என்று   அப். 17:26ன் மூலமாய் நாம் அறிந்து, உணர்ந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருந்த எல்லாக் குழந்தைகளும் அழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட காலத்தில் மோசேயோ கிருபையினாலே காக்கப்பட்டான். அவனது தாய் அவனை பராமரிப்பதற்கு அத்தேசத்தின் ராணியின் மூலம் கூலி பெற்றாள். இது தேவனின் கிருபை. இப்படியாக கிருபை பெற்ற மோசே ராஜாவின் அரண்மனையிலேயே இருந்துவிடாதபடி தக்க சமயத்தில் தேவனின் கிருபையால் அழைக்கப்படுகிறான். ஆம் நம்முடைய தேவன்தமது சிறந்த பணிக்கு நம்மைக் கிருபையாக அழைக்கிறார். அவரின் வல்ல கரம், பராக்கிரமம் செய்யும் கரம், அதிசயமாய் நம்மைத் தெரிந்து கொண்டு, அழைத்து அவர் நியமித்தப் பாதையில் நம்மை ஒடச் செய்கிறது.

ஒருமுறை ஒரு வாலிப சகோதரருக்கு நல்ல மேல்படிப்பு அல்லது வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்க அழைத்து வந்தார்கள். அந்த மகனைக் குறித்து கர்த்தரிடம் ஊக்கமாக ஜெபித்த சமயம்  கர்த்தருக்கென்று ஆலயத்தில் பணிபுரிவதைப் போல ஒரு காட்சி கிடைத்தது. ஆகவே அவரிடம் கர்த்தர் உங்களை ஒரு ஆலயப் போதகராகப் பணிபுரிய திட்டம் வைத்திருக்கிறார். உங்களை அந்த உடையில் தான் காணமுடிகிறது என்றேன். அந்த வாலிபன், அந்தப் பணிக்கு எனது சகோதரர் தான் சரி, நான் அல்ல என்றார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அந்த வாலிபன் ஒரு Theological College-ல் சேர்ந்து படிக்க ஒப்புக் கொடுத்தார். College முடிவிலே ஒரு போதகராக ஒரு ஆலயத்தின் பொறுப்பையும் ஏற்றார். கிருபையினால் கர்த்தரின் பணியைச் செய்ய அழைப்பைப் பெறுகிறோம். கிருபையினால் அவர் பிள்ளையாக அழைப்பைப் பெறுகிறோம்.

இவ்விதமாக தேவக் கிருபையினால் நிர்மூலமாகாது, தாங்கப்பட்டு, தயவுபெற்று, இரட்சிப்படைந்து, அழைப்பைப் பெறுகிறோம். இந்த கிருபையை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்.

கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
"அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்."என்று யோவான் 1:16 கூறுகிறது.மேலும் "தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்." என்று அப். 13:34 கூறுகிறது. இன்று இந்தக் கிருபையைப் பெறவும் அதிலே வளரவும் வேண்டும். "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்._” என்று 2பேதுரு 3:18 வலியுறுத்தியுள்ளது. ஆகவே நாம் கிருபை பெற்று வளர நம்மைக் கவனமாக அர்ப்பணிப்போம்.

கிருபையைப் பெற செய்ய வேண்டியவைகள்

1. கிருபையைப் பெற கர்த்தரை நம்ப வேண்டும்.

"கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்." சங்கீதம் 32:10

கிருபையைப் பெறவும், அடையவும் நாம் கர்த்தரை நம்ப வேண்டும். இன்று நாம் பல விதமான நம்பிக்கை கொண்டவர்களாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சத்திய வேதம் திட்டமாக, தெளிவாக கூறியுள்ளது: "கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று இன்று நமது நம்பிக்கை எதின் மீது இருக்கிறது? அல்லது யார் மீது இருக்கிறது. இன்று சிருஷ்டிக்கப்பட்டவைகளில் நம்பிக்கை பெருகிறது. சிருஷ்டிகரை மறந்து இவ்விதமாய் தவறாக நம்பிக்கை கொண்டிருக் கிறவர்கள் ஏராளம். எனது அனுபவம், எனது ஞானம் என்றும், எனது படிப்பு என்றும் சொல்லுகிற, எண்ணுகிற மக்கள் மிகுதி.

ஒருமுறை ஒரு விவசாயியுடன் சேர்ந்து பேசவும், ஜெபிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தனது உரையாடலில் எனது அனுபவத்தால் இவ்விதமாக காரியங்களைச் செய்து மிகுதியான மகசூல் அடைவேன், இம்முறை எனது வயலில் விளையும் பயிர் ஏராளமாய் இருக்கும் என்று கூறினார். கர்த்தரின் கிருபை அவரைத் தாங்கும்படி ஜெபித்தேன். ஆனால் சில நாட்களில் அந்தக் குடும்பத்தாரின் பயிரில் சற்றும் எதிர்பாராதபடி பூச்சி விழுந்து விட்டதைக் கண்டு கலங்கினார்கள். ஆம், நமது நம்பிக்கை தவறாக இருக்கும்போது பல குறைகள், கஷ்டங்கள் வருகிறது. ஆனால் கர்த்தரை நம்பி நாம் செய்யும்போது, ஆச்சரியமாய் காரியங்கள் வெற்றியடைகிறது. ஒரு விவசாயி தனது உள்ளத்தில் கர்த்தர் உணர்த்திய பயிரைப் பயிரிட்டார். அநேகர் அவரைப் பார்த்து பரிகாசம் செய்தார்கள். கர்த்தரின் கிருபை சூழ்ந்து கொண்டு இருந்ததால், அற்புதமான விளைச்சல் கிடைத்தது. இன்று நமது நம்பிக்கையைக் கர்த்தர்மேல் வைப்போம். கர்த்தரின் கிருபையைப் பெறுவோம். அது நித்தியமானது, நிறைவானது, பூரணமானது, நிலையானது. இந்தக் கிருபையைப் பெற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, நமது காரியங்களைச் செய்வோம்.

2.கிருபை பெற தாழ்மையின் பண்பு வேண்டும்.

"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.' யாக்கோபு 4:6

இன்று தேவக் கிருபை பெற நாம் தாழ்மை நிறைந்த பண்புடன் காணப்பட வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாழ்மையின் ரூபம் எடுத்து, நம்மை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார் என்று நாம் அறிவோம். சகல அதிகாரமும், வல்லமையும் உடையவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் தோன்றினார் நமது குடும்பப் பெருமை நமது வாழ்வில் பல தீய காரியங்களைக் கொண்டு வருகிறது. சிலருக்குத் தங்கள் படிப்பைக் குறித்து பெருமை. சிலருக்கு தங்கள் வேலை, பதவி இவை போன்ற பல அற்ப, அநித்திய காரியங்களினால் பெருமை கொண்டு வாழ்கிறார்கள். அதிகாரமும், அழகும், ஞானமும் நிறைந்த லூசிபர் தூதன் தனது உள்ளத்தில் பெருமை கொண்ட காரியத்தினால் ஆகாதவன் என்று தள்ளப்பட்டான். நான் கட்டின மகா பாபிலோன் என்ற நேபுகாத்நேச்சார். ராஜ்யபாரத்தை இழந்து, மனிதரில் இருந்து தள்ளப்பட்டான்.

ஒருமுறை நான் விளையாட்டு ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த சமயம் கர்த்தரின் கிருபையை ருசித்ததுண்டு. எனது பள்ளி மாணவர்களை கால் பந்தாட்டத்தில் பயிற்றுவித்தேன் அந்த ஆண்டிலே பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கு பெற கர்த்தர் வெற்றி தந்தார். இறுதிப் போட்டியிலே நாங்கள் எதிர்த்து போட்டியிட வேண்டிய பள்ளிக்கூடத்தில்தான், எங்கள் மாநிலத்தில் நன்றாக விளையாடக்கூடிய மாணவர்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொருநாளும் பயிற்சி கொடுத்து அவர்களை Sports Hostel-ல் வைத்து போஷித்து வந்தார்கள். இந்த மாணவர்கள் ஒரே பள்ளிக் கூடத்தில் 11ம், 12ம் வகுப்பு படித்தார்கள். இவர்களுடன் இறுதிப் போட்டி விளையாட வேண்டும். இந்தச் சூழ்நிலையில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற கணிப்பு எல்லார் உள்ளத்திலும் இருந்தது. அந்த நாளில் இறுதிப்போட்டி ஆரம்பமானது. அதற்கு முன்னர், எனது பள்ளி விளையாட்டு வீரர்களை ஜெபத்தில் நடத்தினேன். ஆலோசனையாக தைரியமாக விளையாடுங்கள் என்று உற்சாகப்படுத்தி, போட்டி நடைபெற உள்ள மைதானத்திற்கு அனுப்பி வைத்தேன். போகும் நேரத்தில் எதிர் தரப்பின் மாணவர்களை பயிற்றுவித்த coach பெருமையாக சில வார்த்தைகளைக் கூறினார். தான் சில ஆண்டுகளாக பயிற்றுவித்த மாணவர்களை அழைத்து, 10 goal-க்கு மேலாக அடிக்காதீர்கள் என்று சத்தமாகக் கூறி மைதானத்தில் அனுப்பினார். போட்டி நடைபெற ஆரம்பித்த சில நிமிடத்திலேயே, கர்த்தரின் கிருபையால் எனது பள்ளி விளையாட்டு வீரர்கள் அபாரமாக விளையாடி ஒரு கோல் அடித்தனர். இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் எனது விளையாட்டு வீரர் இன்னும் ஒரு கோல் அடித்தனர். அன்று அவ்விதமாக எனது பள்ளி விளையாட்டு வீரர்கள் கிருபையாக வெற்றி பெற்றார்கள். நாம் தாழ்மைப்படும் போதெல்லாம் கர்த்தரின் கிருபை பெருகும். அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர், நன்றாக பயிற்றுவிக்கும் இந்த ஆசிரியர் (என்னை) தற்சமயம் இயேசு கிறிஸ்துவையும் உடன் வைத்திருப்பதால் வெற்றி பெற்றார் என்று கூறி, எனக்கு வாழ்த்துக் கூறிச் சென்றார்.

அன்பு சகோதரனே, சகோதரியே! மனிதர்கள் முகத்தைப் பார்க்கிறார்கள் கர்த்தர் நமது இருதயத்தைப் பார்க்கிறார். நாம் தாழ்மையுள்ள இருதயத்துடன் அவரை நம்பும்போது, மாறாத தேவன், நமக்குக் கிருபையளிக்கிறார். உனது வேலை ஸ்தலத்தில் உன்னை அற்பமாக எண்ணி இவன் என்ன செய்வான் என்று குறை பேசுகிற மக்கள் மத்தியில், கிருபையின் தேவன் உன்னை உயர்த்துவார். அற்பமாக எண்ணப்பட்ட உனது வாழ்வில் கர்த்தரின் கிருபையால் மேன்மையும், வெற்றியும் அருளுவார்.

3. கர்த்தரின் கிருபை பெறவும்,தொடரவும்,இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்...' சங்கீதம் 23:6

இன்று கிருபை நம்மைத் தொடர நாம் கர்த்தரை நமது மேய்ப்பராக ஏற்றுக் கொண்டு வாழ நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். நானே நல்ல மேய்ப்பன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.மேய்ப்பராக வைத்துக் கொள்வது என்றால், கர்த்தரை முன் வைத்து, நமது வாழ்வை வாழ்வது, எப்பொழுதும் அவருக்குப் பின்னாக செல்லுவது ஆகும். அவருக்குப் பின்னாகச் செல்வதற்கு நாம் அவரின் பண்புகளினால் நிறைய வேண்டும். அவரின் தாழ்மை, அன்பு போன்ற அவரில் காணப்பட்ட சகல தன்மைகளும் நமக்குள் காணப்பட நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். இன்னும் கர்த்தரைப் பின்பற்ற வேண்டுமானால் அவருடைய வழியில் செல்வதுடன் கர்த்தரின் சத்தத்தை அறியவேண்டும். இவ்விதமாக நாம் அவரை முன் வைத்து, சத்தத்தை அறிந்து பின் செல்லும்போது, கர்த்தர் நமக்கு மேய்ப்பராக இருப்பதுடன், அவரின் கிருபையைத் தொடர்ந்து நாம் பெற்றுக் கொள்ள தகுதியடைகிறோம்.சில
நேரங்களில் நாம் கர்த்தரைப் பின்பற்றுவதும், சில காரியங்களில் விடுவதும் தவறு. தாவீது சங்கீதம் 16:8ல் சொன்னது போல் கர்த்தரையே நமது வாழ்வில் முன்னாக வைத்து நாம் ஜீவிக்கும்போது, அசைக்கப்படாத ஆசீர்வாதமான வாழ்வை கிருபையால் பெறுகிறோம்.

ஒருமுறை ஒரு சகோதானின் இரயில் பயணத்தில் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. இவருக்கு கண்களில் பார்வைகிடையாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்று வாழ்பவர். அந்த நாளின் பயணத்தில் கர்த்தரின் சத்தம் அவருக்குக் கேட்டது. நீ பயணம் செய்யும் இரயிலிலிருந்து இறங்கு என்று. கர்த்தரின் அறிந்த அவர் உடனே தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க கர்த்தரின் சத்தத்தை ஆயத்தமானார். என்ன நீங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும் வரவில்லை என்று அவரை அந்தப் பயணத்தைத் தொடா வலியுறுத்தி னார்கள். ஆனால் கர்த்தரைத் தன் மேய்ப்பராக வைத்துக் கொண்டிருந்த அவர் இறங்கி விட்டார். பின்னர் அந்த இடத்திற்கு வேறு விதமான வாகனத்தில் வந்தடைந்தார். அவர் அங்கு வந்த சமயம் அதிர்ச்சியின் செய்தி காதில் விழுந்தது. அவர் வந்த இரயில் விபத்துக்குள்ளாகியது. பல நூறு மக்கள் மரித்துப் போனார்கள். கிருபையினால் நிர்மூலமாகாது காக்கப்பட்டார். அவருடைய பெயர் அந்தப் பெட்டியில் பிரயாணம் செய்தவர்களின் பட்டியலில் இருந்தபடியால் அவரும் மரித்துப் போயிருப்பார் என எண்ணினார்கள். ஆனால் கர்த்தரின் கிருபை அவர் தப்பிக் கொள்ள கிரியைச் செய்தது. இந்தக் கிருபை தொடர நாம் இயேசுவையே நமது மேய்ப்பராக ஏற்று வாழ அர்ப்பணிப்போம்.

4. கிருபை ஸ்தோத்திரத்தினால் பெருகும்.

"தேவனுடைய மகிமை விளங்குவதற்குகேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள் நிமித்தம் உண்டாயிருக்கிறது." 2கொரிந்தியர் 4:15

நாம் தேவனைத் துதிக்க துதிக்க, ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகும் என்று அறிகிறோம். குடும்பமாக தேவனைத் துதிக்க வேண்டும். சபையாக துதிக்க வேண்டும். அநேகராய் நாம் துதிக்கும் போது கிருபை பெருகும். தேவன் செய்த நன்மைகளை நினைத்து துதிக்க வேண்டும். தேவன் பாராட்டின இரக்கத்தினால் கர்த்தரைத் துதித்து, ஸ்தோத்திரிக்க வேண்டும். துதிக்குப் பாத்திரமான தேவனை, இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தேவனை நாம் துதித்து, ஸ்தோத்திரிக்கும் போது கிருபை பெருகும்.

5. கிருபை உண்டாக சாட்சி கூற வேண்டும்.

"கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்: அவர்களெல்லார் மேனும் பூரண கிருமை உண்டாயிருந்தது-" அம்போதவர்4:33

இந்த நாட்களில் நாம் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சாட்சிபகர கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வுலகத்தில் நாம் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம். அநேக நேரங்களில் நாம் அவரைக் குறித்து சாட்சி பகர வெட்கப்படுகிறோம். மரித்தேன் ஆனாலும் சுதாகாலமும் ஜீவிக்கிறேன் என்று உரைத்த அன்பின் இயேசு கிறிஸ்துவை நமது செயலினாலும் வார்த்தையினாலும் சாட்சியாக சொல்லவேண்டும். நாம் சாட்சி பகரும்போது மற்றவர்களும் அந்தச் சாட்சியினால் ஆசிர்வாதத்தை அடைவார்கள். கர்த்தரின் கிருபைபூரணமாக உண்டாக நாம் சாட்சி கூறுவோம் ஆசிர்வதிக்கப்படுவோமாக கர்த்தர்நம்மை ஆர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

மறைந்த சகோ C எபனேசர் பால்

(இந்தச் செய்தி 2002 மேமாதத்தில் வெளியிட்டது)