அன்பின் தேவனே, இந்த வேளையில் என் உள்ளத்தை அதிகமாய் வேதனைப்படுத்தும் பிரச்சனைகளை உமக்கு முன்பாக வைக்கிறேன். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்பே அதை அறிந்திருக்கிற கர்த்தாவே, என் உள்ளத்தின் கவலை தீர எனக்கு இரங்கும். உம்முடைய நாமம் மகிமையானது, உண்மையானது. எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய அநேக குறைகளைத் தீர்த்து, இம்மட்டும் என்னைக் காத்து. தேற்றி. பராமரித்து வந்தபடியால் உம்மைத் துதிக்கிறேன்; நன்றி கூறுகிறேன். ஆனால் குறிப்பாக எனது- மகள் / மகன், எனது பெற்றோர்கள், எனது சகோதரி / சகோதரன், மருமகன் / மருமகள் மூலமாக இந்தப் பிரச்சனை வந்தபடியால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். என் கவலை நீங்க எனக்கு உதவி செய்யும். என் காலமெல்லாம் இப்படியே இருந்து விடுமோ என்று நான் துக்கமும், துயரமும் அடைகிறேன்; சோர்ந்து போகிறேன். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதைக் காணும் பொழுது,ஏன் எனக்கு மாத்திரம் இந்தப் பிரச்சனை என கவலைப்படுகிறேன். என்னைத் தண்டியாதேயும், கர்த்தாவே. என்னை மன்னியும், எனக்கு விமோசனம் தாரும், என் காரியங்கள் ஜெயமாய் மாறவும், என் உள்ளம் உம்மை அதிகமாய் துதிக்கவும் உதவி செய்யும். அதைத் தீவிரமாய்க் கட்டளையிடும். இந்தக் காரியத்தினால் கவலை கொண்டு தூங்க முடியவில்லை. நீதியைப் புரட்டும் மக்கள் என்னைச் சூழ இருக்கிறார்களே என்று கலங்கி கவலைப்படுகிறேன். எனக்கு ஒரு விசை தயவாய் இரங்கி, என் கண்ணீர், கவலைகளைத் தீரும். நான் உமக்காய் வாழுவேன். உம் அன்பை எனக்கு அருளிச் செய்யும். நீர் அப்படியே செய்வீர் என்று உம்மை மிகுதியாய்த் துதிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன். நல்ல பிதாவே. ஆமென்.