கிறிஸ்துவுக்குள் பிரியமாணவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.
2008 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை வெளிநாட்டில் ஊழியத்தை முடித்து இரவு சென்னை திரும்புகிற சமயம் அவரைக் கூப்பிடுவதற்காக நான் இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி சென்னை சென்று அவரை அழைத்துக் கொண்டு திருச்சி உடனடியாக திரும்பினோம். காலையில் அவர்களுக்கு ஒரு Mecting இருந்ததால் அதற்குச் செல்வதற்காக உடனடியாக திரும்பினோம். நாங்கள் உளுந்துார்பேட்டை வரும்பொழுது காலை 6 மணி. மிகுந்த களைப்பின் நிமித்தம் சிறிது நேரம் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி, சற்று துாங்கிவிட்டு, மீண்டும் பயணத்தைத் தொடரலாம் என்று தீர்மானித்தேன் .
நான் சற்று நேரம் தூங்கினவுடன் துாக்கத்தில் இருந்த எனக்கு ஒரு சொப்பனம். அதில் நாங்கள் இருக்கும் காரின் கதவை பின்புறமாக ஒருவர் திறந்து, அதில் உள்ள பெட்டி போன்றவற்றை எடுக்கிறார். இப்படியாக அந்தச் சொப்பனத்தில் கண்டேன். உடனே என் துாக்கம் கலைந்து, மிகுந்த பயத்துடன் காருக்குப் பின்னால் பார்த்தேன். ஒருவர் கண்ணாடி வழியாக என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார். உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் நோக்கத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்தார். என் தந்தையும்கூட நான் துாங்கிக் கொண்டு இருக்கும்பொழுது அவரைக் கவனித்து இருக்கிறார். நான் துாக்கத்திலிருந்து எழும்புவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த மனிதர் காரின் பின்புறத்தைத் திறக்க முயன்றார். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டோம். இந்தச் சம்பவத்தைக் குறித்து நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. அன்று சாஸ்திரிகள் சொப்பனத்தின் மூலமாக எச்சரிக்கப்பட்டு ஏரோதினிடத்தில் இயேசு பிறந்த இடத்தைச் சொல்லாமல் வேறு வழியாய்ச் சென்றனர். அதுபோல பல நேரங்களில் நம் தேவன் சொப்பனங்களினாலும், அவருடைய வார்த்தையினாலும் நம்மை எச்சரிக்கிறார். நாம் கர்த்தருடைய எச்சரிப்பைக் கேட்டு அதின்படி செயல்பட்டால் அழிவுக்குத் தப்புவிக்கப்படுவோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோதரர் நத்தானியல் பால்.