கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்தவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். நமது அனுதின வாழ்விலும், பணியிலும் நமக்கு ஞானம் மிகவும் அவசியமாய் இருக்கிறது. “பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்...” என்று நீதி 16:16ல் கூறப்பட்டுள்ளது. "சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்." என்று 2 நாளா. 9:23ல் பார்க் கிறோம். நமக்கு ஞானம் பெருகும்போது நாம் உயரவும், பலர் மத்தியில் புகழப்படவும் நாம் தகுதி அடைகிறோம். இந்த உன்னத ஞானத்தை நாம் பெறும்போது, சகல நிலைகளும் மாறி, நாம் தேவ தரிசனத்தைப் பெறவும், தேவ திட்டத்தை நிறைவேற்றவும் கருவிகளாக மாறுகிறோம். “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்." என்று நீதி. 3:13ல் பார்க்கிறோம்.
1. இந்த ஞானத்தின் அவசியம், நன்மைகள் என்ன?
1. காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானம் தேவை.
''...ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்."
பிரசங்கி 10:10
நாம் எந்தக் காரியத்தையும் சரியாகச் சிறப்பாக செய்து முடிக்க ஞானமானது மிகவும் அவசியமாய் இருக்கிறது. இன்று அநேகர் ஒரு காரியத்தில் ஏற்படும் குறை, கஷ்டங்களைக் கண்டபின் “ஓ” நான் இதை ஞானமின்றி செய்து விட்டேனே என்று கலங்குகிறார்கள்; கவலையும் அடைகிறார்கள்.
ஒருமுறை ஒரு சகோதரன் தனது தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர ஜெபிக்க வந்தார். அவர் தமது நண்பருடன் அந்த தொழிலை நடத்தி வந்தார். ஆனால் திடீரென அவரது நண்பர் அவர்மீது வழக்குத் தொடர்ந்து விட்டார். எனக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என்ற வழக்கு அவருக்கு எதிராக இருந்தது. அந்தச் சகோதரன் நான் ஞானமற்ற விதத்தில் ஒரு காரியத்தைச் செய்து விட்டேன், என் நண்பரை நம்பி அநேக வெறுமையான செக் லீப்பில் (blank cheque leaves) கையெழுத்து போட்டு வைத்து விட்டேன். இதன் பலனாகத் தான் இன்று இந்தப் பிரச்சனை என்று கூறினார். அநேக காரியங்களில் நாம் ஞானமற்ற முறையில் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் போராட்டம் வருகிறது. எந்தக் காரியத்தை நாம் சரியாகச் செய்ய வேண்டுமானாலும் ஞானமானது மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்த மெய்யான ஞானத்தை நம்முடைய கர்த்தர் நமக்குச் சம்பூரணமாய்த் தருகிறவராக இருக்கிறார்.
2. காரியங்களை உணர்ந்து கொள்ளும் உணர்வை ஞானம் தருகிறது.
"...ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்."
தானியேல் 12:10
ஞானம் நம்மை உணர்வுள்ளவர்களாக மாற்றுகிறது. இன்று காரியங்களை அறிந்து, உணர்ந்து கொள்ளாதபடியினால் பலவிதமான குறைகளும், கஷ்டங்களும் வருகிறது. உணர்வில்லாத படியால் தான் பாவம் செய்கிறோம். மற்றவர்களுக்கு இடையூறு உண்டாக்குகிறோம். உணர்வு இல்லாதபடியால் தேவனைத் துதியாமல் இருந்து, இருள் நிறைந்த வாழ்விற்கு அடிமையாகிறோம் என்று சத்திய வேதம் தெளிவாக உரைக்கிறது. கர்த்தர், அவரைத் தேடுகிற உணர்வு நமக்கு இருக்கிறதா என்று பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார் என்று சங்கீதம் 14:2ல் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். நாம் கர்த்தரின் சித்தம் இன்னதென்று உணராதபடியால் பல தவறுகளைச் செய்கிறோம்.
நான் சிறுவனாக இருந்த போது புறா வளர்ப்பதில் அதிக ஆர்வம் உடையவனாக இருந்தேன். அந்த நாட்களில் எனது வீட்டிலிருந்த புறாக்களைக் கொண்டு மற்றப் புறாக்களை என் வீட்டுக்கு வரவைப்பேன். அவ்விதமாய் வரும் புதிய புறாக்கள் இது வேறு இடம் என்று அறியவும், உணரவும் முடியாதபடியால், எனது புறாக்களுடன் உணவு அருந்தி, தண்ணீர் குடிக்கும் சமயத்தில் அப்புறாக்களைப் பிடித்து, அதின் இறக்கைகளைப் பறக்க முடியாதபடி வெட்டி விடுவோம். உணர்வில்லாத உன் காரியங்களினால் சிறைப் படுகிறது.
அன்பு சகோதானே, சகோதரியே! உணர்வில்லாதபடியால் சத்துருவின் தீயச் செயலுக்கும் பாவத்துக்கும் அடிமையாகி, நமது வாழ்வில் நினையாத வேதனையும், சேதமும் அடையாது தேவ ஞானம் பெற இன்று தேவ சமுகத்தை நாடு. உன் குறைகள் நீங்கும், உன் கண்ணீர் துடைக்கப்படும், உன் வாழ்வின் தாழ்வு நீங்கி உயர்வும் மேன்மையும் நீ அடைவாய். இன்றே அந்த ஞானத்தை அடைய உன்னதமான தேவனுடைய சமூகத்தில் உன்னைத் தாழ்த்து, யாவருக்கும் சம்பூரணமாய்த் தருகிற தேவன் அதிசயமாய் உன்னை ஞானத்தினால் நிரப்புவார். சகல காரியங்களையும் காரியங்களையும் அறியத்தக்க உணர்வும், அதின் மேன்மையும் அடைவாய்.
3.சந்தோஷத்தைக் கொண்டு வரும் கருவியாய் மாறுவோம்
"ஞானமுள்ள மகள் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்...." நீதிமொழிகள் 10:1
பிள்ளைகள் பெற்றோரை மிகவும் சஞ்சலப்படுத்து கிறார்கள். ஆனால் இன்று தேவன் தரும் ஞானத்தினால் நிறைந்து அவர்களின் செய்கைகள் செம்மையாகவும், சிறப்பாகவும் மாறும் போது மெய்யாகவே பெற்றோர்களுக்குச் சஞ்சலத்தை அல்ல, சந்தோஷத்தைக் கொண்டு வருகிறவர்களாக மாறுகிறார்கள். இன்று அநேக பிள்ளைகளின் தவறான வாழ்க்கையினாலும், தவறான பழக்க வழக்கத்தினாலும், தவறான செய்கையினாலும், தவறான தொடர்புகளினாலும் தோல்விகளும், துக்கமும், துயரமும் அடைகிறார்கள். இந்த உலகத்தில் நாம் என்ன கொண்டு வந்துள்ளோம், என்ன கொண்டு போகப் போகப் போகிறோம். இதைச் சிந்திப்பார் இல்லை. தங்களின் சுய இச்சையினாலும், பாவ பழக்கத்தினாலும் பெற்றோரை ஏமாற்றி தாங்களும் ஏமாற்றத்தை அடைகிற பிள்ளைகள் மிகுதி அநேக நேரங்களில் நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்ற கர்த்தரின் வார்த்தையை உணராதபடி நமது ஞானக்கண்கள் குருடாகி வேதனையும் அடைகிறோம்.'
ஒருமுறை ஒரு தகப்பனார் மிகுந்த துக்கத்துடன் ஜெபிக்க என் வீட்டுக்கு வந்தார். ஐயா, என் சம்பாத்தியத்தை எல்லாம் என் பிள்ளைகளுக்கே செலவழித்தேன். மீதி இருந்த பணத்தையும், அவர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிட்டேன். என் பிள்ளைகள் என் மரணபரியந்தம் என்னை வைத்து பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் எல்லாவற்றையும் செய்தேன். ஆனால் இன்று நான் தங்கவும், உண்ணவும், உடுக்கவும் எனக்கென்று ஒன்றும் இல்லாத வேதனை நிலை ஏற்பட்டு விட்டது. எனக்குத் தற்போது சிறிய ஓய்வூதிய தொகை வருகிறது. ஆகவே முதியோர் தங்கும் விடுதி ஏதாவது இருந்தால் என்னை அதில் சேர்த்து விடுங்கள் என்றார் அந்த நேரத்தில் அவரது நிலையை அறிந்து ஜெபித்த போது, இவர் தன் பெற்றோரை எப்படி நடத்தினார் என்று கேட்க கர்த்தரின் ஆவியானவர் உணர்த்தவே, அதையே கேட்டேன். அவர் தேம்பி அழ ஆரம்பித்தார். ஐயா, என் தாயை நான் சரியாக பராமரிக்கவில்லை. நான் ஞானமற்றவனாகி என் தாயைத் துக்கத்துடன் குழியில் இறங்கச் செய்தேன் என்று அதிக சத்தமிட்டு அழுதார். ஒரு மனிதன் ஞானத்துடன் இருப்பான் என்றால் அவன் தன் தகப்பனை சந்தோஷப் படுத்துகிறவனாக மாறி ஆசீர்வாதத்தையும் மேன்மையையும் அடைவான்.
எனக்குத் தெரிந்த ஆசிரியரின் மகன் தன் தகப்பனாரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, தன் கல்வியில் சிறந்து விளங்கி,ஒரு மேலான அதிகாரியாக மாறினான். அந்த மகன் தன் தகப்பனுக்கு வேண்டிய, பிரியமான எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்தான். அதினால் அந்த மகனைக் குறித்து அடிக்கடி அந்த ஆசிரியர் எல்லாருடனும் அதிகமாகப் பேசுவார். அவனின் பெயரைச் சொல்லும் போதே அவரின் முகம் மகிழ்ச்சியினால் நிறைந்து விடும்.
அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உனக்கு ஈவாகக் கொடுத்த பெற்றோருக்காக, கர்த்தருக்கு நன்றி கூறு. அத்துடன் இதுவரை தவறானப் பாதையில் சென்ற உன் வழியைச் சீர்ப்படுத்து. தேவ ஞானத்தினால் நிறைந்து, உன் தகப்பனையும், தாயையும் மெய்யான சந்தோஷத்தால் நிரப்பு. உன் சந்ததியிலும் ஆசீர்வாதத்தை நிறைவாய் பெறுவாய்.
4. ஞானமானது உன்னை அதிகாரியாக உயர்த்தும்
"தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்து தேசத்திற்கும், தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.'
அப்போஸ்தலர் 7:10
தேவன் அருளும் ஞானம் நம்மை அதிகாரியாக உயர்த்தும். யோசேப்பு என்ற மனிதனுக்குத் தேவன், சொப்பனங்களை விளக்கத்தக்க ஞானத்தைக் கொடுத்திருந்தார். அத்துடன் அந்தச் சொப்பனத்திற்கு எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைத் தரத்தக்க ஞானமும் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக தன்னுடன் சிறைச்சாலையில் இருந்த பானபாத்திரக்காரரின் தலைவனின் சொப்பனத்தையும், சுயம்பாகிகளின் தலைவனின் சொப்பனத்தையும் விளக்கி, அதின் அர்த்தத்தைச் சொல்ல கர்த்தர் கொடுத்த ஞானம் அவனில் செயல்பட்டது. அவர்கள் கண்ட சொப்பனத்தின்படியே நடைபெற்றது. மேலும் ராஜாவாகிய பார்வோனுக்குக் கொடுக்கப்பட்ட சொப்பனத்தை விளக்க கர்த்தர் அருளிய ஞானம் போதுமானதாக இருந்தபடியால் கர்த்தர் அவன் நிலைகளை மாற்றினார். சிறையில் இருந்தவன் அரண்மனைக்கு அதிகாரியாக மாறினான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் அவனை அதிகாரியாக உயர்த்தியது. அன்பு சகோதரனே, சகோதரியே! கர்த்தர் நமக்கு ஏற்ற ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த ஞானத்தை இன்னும் தருகிறவராக இருக்கிறார். இந்த ஞானம் உங்களை நிரப்பும் போது, சகல காரியங்களையும், சொப்பனங்களையும், சூழ்நிலை காரியங் களையும் விளக்கிக் கூற இயலும். ஆலோசனைக் கூறத்தக்க உயர்வும் அடையச் செய்வார். என்னைப் பகைக்கிற சகோதரருக் குள்ளே நான் வாழ்கிறேனே, செய்யாத காரியத்திற்காக குற்றஞ் சாட்டப்பட்டு, ஒன்றும் செய்ய இயலாதவனாக, இயலாதவளாக நான் இருக்கிறேனே என்று கலங்கும் தேவப்பிள்ளையே, இன்று கர்த்தரின் ஞானத்தைப் பெற உன்னைத் தாழ்த்து. உன்னை அதிசயங்களைக் காணச் செய்வேன் என்ற அன்பின் தேவன், அதிசயமாய் உன்னை சகல ஞானத்தினாலும் நிறைத்து உயர்த்துவார். ஒரு வேளை உங்கள் பணியில், உங்கள் தொழிலில் உயர்வு இல்லையே என்று ஏங்கும் உங்களை அதிசயமாய் உயர்த்துவார். இதுவரை வாழ்வில் இல்லாத மேன்மையையும், புகழையும் அடைவாய். இந்த உன்னத ஆசீர்வாதம் உங்களை வந்தடைய கர்த்தரின் ஞானத்தைப் பெற உங்களைத் தாழ்த்துங்கள்.
5. பிரகாசிக்கத்தக்க வாழ்வு உண்டாகும்
''ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்."
தானியேல் 12:3
நாம் பிரகாசமுள்ள வாழ்வு வாழ விரும்புகிறோம். இதற்காக தங்கள் உடை அலங்காரத்திலும் சிகை அலங்காரத்திலும் நேரத்தையும் செல்வத்தையும் செலவிடுகிறவர்கள் அநேகர். ஆனால் இவைகள் ஒருசில காலத்தில் மறைந்து விடும். கெடுதியை நம் சரீரத்தில் உருவாக்குகிறது. ஆனால் கர்த்தர் அருளும் ஞானம் மெய்யான, என்றும் பிரகாசிக்கிற வாழ்வை உண்டாக்குகிறது. இந்த உலக வாழ்வில் மனிதர் நல்லவர்கள்போல் வேஷம் போட கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பேச்சும் வெளித் தோற்றமும் அநேக மக்களை நம்பவைக்கிறது. ஆனால் அவர்களின் உள்ளான இருதயம் அருவருப்புகளும், சகலவித அசுத்தங்களும் நிறைந்திருக்கிறது. கர்த்தர் அருளும் ஞானத்தால் நிறைந்து காணப்படும்போது, என்றென்றும் பிரகாசிக்கிறதான உன்னத வாழ்வை நாம் அடைவோம். இந்த மேலான பாக்கியத்தை ஏழைக்கும், திக்கற்றவர்களுக்கும், தாழ்ந்தவர்களுக்கும், உயர்ந்தவர்களுக்கும், அனாதைகளுக்கும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூரணமாய்த் தருகிறவராக இருக்கிறார். இன்று வாழ்வில் இருளடைந்த நிலையில் வாழும் நமக்குத் தான் பிரகாசமான வாழ்வைத் தர இயேசு கிறிஸ்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிற மெய்யான ஒளியாக வந்தார். அவரை அறிகிற அறிவையும், அவர் அருளும் அந்த ஞானத்தையும் பெற நம்மைத் தாழ்த்துவோம். காரிருள் நீங்கி, பிரகாசம் நிறைந்த வாழ்வு நமக்கு அருளப்படும்.
II. இந்த உன்னத தேவ ஞானத்தை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
1. பாவத்தை வெறுக்க வேண்டும்
"...நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்."
ஆதியாகமம் 39:9
தேவப்பிள்ளையே, நாம் வாழும் இந்தப் பூமியில் பிசாசானவன் தந்திரமான முறையில் பலவிதமான பாவச் சோதனைகளைக் கொண்டு வருகிறான். தேவ ஞானம் நமக்குள் ஊற்றப்பட்டு, நாம் அதில் நிலைத்திருக்க இந்தப் பாவச் சோதனைகளுக்கு நாம் உடன்படாது நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். "கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்." என்று பவுல் தனது எபேசியருக்கு எழுதின நிருபத்தில் 5:11ல் கூறியிருப்பதை நாம் மறக்காமல் நமது வாழ்வைக் காக்க வேண்டும். கர்த்தர் இன்று அநேகருக்குப் பல விதங்களில் தமது ஞானத்தை அருளியிருக்கிறார். இந்த ஞானத்தைக் காத்து அதில் வளர்வதற்கு கர்த்தரைக் குறித்த பயமும், பாவத்தை விட்டு விலகும் வைராக்கியமும் நமக்குள் இருக்க வேண்டும். தங்களின் ஞானத்தை அசட்டைச் செய்யாது வீண் பெருமைக்கும், புகழுக்கும் இடம் கொடாமல் காப்பது மிகவும் அவசியமாய் இருக்கிறது."நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்." என்று லூசிபரைக் குறித்து எசேக்கியேல் 28:12ல் பார்க்கிறோம். "...நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளிட" என்று எசேக். 28:16ல் குறிப்பிட்டுள்ளது. ஆகவே நாம் பாவம் செய்யும்போது, நாம் தள்ளப்பட்டு, நமக்கு விரோதமாய் தேவ அக்கினி எழும்புகிறது. இந்த அக்கினியைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பிள்ளைகளுக்குள் போட வந்தார் என்று லூக்கா 12:49ல் பார்க்கிறோம். ஆகவே இன்று நாம் ஞானத்தைப் பெறவும், அதைக் காக்கவும் முதலாவது நமது பரிசுத்த வாழ்வை முழுமனதுடன் காக்க முயற்சிக்க வேண்டும். யோசேப்பு பல போராட்டங்கள், அநீதியான காரியங்கள், எல்லாச் சூழ்நிலைகளிலும் தன்னைப் பரிசுத்தமாய்க் காத்தபடியால், அவனது ஞானம் பூரணமாக செயல்பட்டது. சொப்பனத்தை விளக்கும் ஞானமும், அதற்கு ஏற்ற ஆலோசனை அருளும் ஞானமும் அவனுக்குள் பூரணமாய் செயல்பட்டது. அவன் சிறைச்சாலையிலிருந்து அரண்மனைக்கு உயர்த்தப்பட்டான், கனத்தையும் புகழையும் அடைந்தான்.
2. ஜெபிக்க வேண்டும்
"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.''
யாக்கோபு 1:5
ஜெபமானது நமது வாழ்வில் தேவ ஞானத்தை பூரணமாய்க் கொண்டு வருகிறது. யார் யார் ஜெப ஜீவியத்தில் சிறந்து காணப்பட்டார்களோ அவர்களின் வாழ்வில் இந்த உன்னத தேவ ஞானம் நிறைவாக ஊற்றப்பட்டது. இந்த ஞானம் யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கப்படும் என்று உன்னத தேவனின் வார்த்தை தெளிவாய், திட்டமாய் கூறுகிறது. ஜெபமானது நமது வாழ்வில் கர்த்தருடன் உறவு கொள்ளும் நேரம். ஒரு தகப்பனும் மகனும் பேசவில்லை என்றால் அவர்களின் உறவில் குறை உள்ளது. ஆனால் நன்றாக பேசினால் அவர்களின் உறவு நிச்சயமாய் நன்றாகவும், முழுமையாகவும் இருக்கும். நமக்கு அறிமுகமானவர் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் நம்மைப் பார்த்தும் பேசவில்லை என்றால், நமக்குள் ஒரு சஞ்சலம் உருவாகிறது. அதைப்போலத்தான் கர்த்தர் நமது சத்தத்தைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறார். ஒரு சிறு குழந்தை தன் தாயின் முகத்தைப் பார்த்து தன்னால் இயன்ற சத்தத்தை எழுப்பும்போது, தாயின் உள்ளம் அளவில்லா அன்பினால் நிறைந்து பிள்ளையை மார்பில் அணைத்து முத்தமிடுவாள். அவள் பிள்ளைப்பேற்றினால் ஏற்பட்ட வேதனை, பெலவீனம் நீங்கி. மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறாள். இவ்வாறே நாம் உன்னத தேவனுடன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பேசும் போது, நமக்காக சிலுவையில் பட்ட பாடுகளை மறந்து, நம்மை அரவணைத்து, ஆதரித்து ஆசீர்வதிப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் படும்..." என்று மத்தேயு 77ல் சொன்னதுபோல நாம் பிதாவின் சமுகத்தை நோக்கி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும். "ஜெபத்தைக் கேட்கிறவரே" என்ற தாவீதின் அனுபவத்துடன் நாம் இன்று முதல் நமது ஜெப வாழ்க்கையில் நம்மை ஸ்திரப்படுத்தி,தேவ ஞானத்தில் நிறைய ஒப்புக் கொடுப்போம். "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்." என்று நோயினால் பாதிப்படைந்து கலங்கின எசேக்கியாவிற்குப் பதில் கொடுத்த உன்னத கர்த்தாதி கர்த்தர் நேற்றும் இன்றும் மாறாதவர். என் நிந்தை நீங்க வேண்டும். எனக்கு ஒரு பிள்ளையைத் தாரும் என்று பொருத்தனையுடன் வேண்டிய அன்னாளை நினைத்து பிள்ளையைக் கொடுத்த கர்த்தாதி கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார். இந்த அன்பு நிறைந்த தேவனின் சமுகத்தில் நாம் அனுதினமும் ஜெபிக்க வேண்டும் என்ற பழக்கத்தை உருவாக்க தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்குக் கொடுத்து, மாதிரியாக ஏற்படுத்தினார். அவர் மூலமாய் இன்று முதல் நாம் ஜெபிப்போம். அற்புதத்தைக் காண்போமாக.
3. கர்த்தரின் சாட்சி நம்மை ஞானிகளாக மாற்றுகிறது
"...கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறது மாயிருக்கிறது." சங்கீதம் 19:7
இன்று கர்த்தரின் ஒவ்வொரு செயலையும் நாம் அறிந்து, தெரிந்து வாழும்போது கர்த்தரின் ஞானம் நமக்குள் ஊற்றப்படுகிறது. சீமோன் பேதுரு என்ற ஒரு மனிதன் எல்லாவற்றையும் விட்டு இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக மாறினான். காரணம் அவன் கர்த்தரின் வல்ல செயலையும் அவரின் மகத்துவமான அதிகாரங்க ளையும் தன் கண்களினால் கண்டவன். தோல்வியை ஜெயமாக மாற்றியதை தனது வாழ்வில் அனுபவித்தவன். மனிதனின் செயலுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட விதத்தில் கடலின்மேல் நடக்கச் செய்தவர் வியாதிகள் சுகம் அடையவும், பிசாசுகளின் செயல் அழிவதையும் கண்டவன் இவ்விதமாய்ப் பல சாட்சிகளைக் கண்டவன். அத்துடன் சிலுவையில் பாடுபட்டு மரித்து மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்த சகல சாட்சிகளை அறிந்தவன், கண்டவன். ஆகவே அவனிடம் ஞானம் காணப்பட்டது. "பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்க ளென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்." என்று அப். 4:13ல் நாம் காண முடிகிறது. ஆகவே கர்த்தரின் சாட்சி நம்மை ஞானியாக மாற்றுகிறது.
4. ஞானத்தை அடைய நமக்குள் இச்சையடக்கம் தேவை
"தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு தன்னைத் தீட்டுப்படுத்தாத படி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.'
தானியேல் 1:8
சிறையாகக் கொண்டு வரப்பட்ட சில வாலிபர்களில் தானியேலும் ஒருவன். இவன் தன்னுடைய போஜனத்துக்கடுத்த காரியங்களில் தீர்மானம் எடுத்தான். அவைகளை வெறுத்து சாதாரண ஆகாரத்தை உண்பதற்கு வாலிபப்பருவத்தில் தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானத்தைத் தன் இருதயத்தில் எடுத்து அதைச் செயல்படுத்தினான். இதின் காரணமாக அவனுக்கும், அவனுடன் தீர்மானம் செய்த மற்ற மூன்று வாலிபருக்கும் "தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங் களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்." என்று தானியேல் 1:17ல் காணமுடிகிறது. இவர்களுக்குள் மற்றவர்களைப் பார்க்கிலும் பத்து மடங்கு ஞானத்தைப் பெருகச் செய்து இருந்தார். காரணம் அவர்களுக்குள் இச்சையடக்கம் இருந்தது. இச்சையடக்கம் ஆவியின் கனியில் ஒன்று என்று கலாத்தியர் 5:22ல் அறிய முடிகிறது. இந்த உலகத்தில் உண்டான பலவித இச்சைகளை நாம் பார்க்கிறோம். மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை இதைப் போன்ற இச்சைகள் நமது வாழ்வைக் கறைப்படுத்தி தேவ ஞானம் நமக்குள் ஊற்றப்பட தடையாக இருக்கிறது. தானியேலுக்குள் கர்த்தரின் ஆவி இருந்தது. "உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்.” என தானியேல் 5.14ல் அந்த தேசத்தின் ராஜா அவனைக் குறித்து சாட்சியிட்டார். அன்பு சகோதரனே, சகோதரியே, நீ ஞானத்தினால் நிறைய இச்சையடக்கத்துடன் பரிசுத்தமாய், ஜெப வாழ்வில் வாழ உன்னை ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் தமது உன்னத ஆவியினால் உன்னை நிரப்புவார். கர்த்தரின் ஆவியில் பல நலமான, நமக்குப் பிரயோஜனமாக தன்மைகள் நமக்குள் அருளப்படுகிறது. ஏசாயா 11:2ல் உள்ளபடி அந்த ஆவியினால் நமக்கு ஞானம் ஊற்றப்படுகிறது. கர்த்தரின் ஆவியைப் பெறவும், அதின் மேன்மையாகிய தேவ ஞானம் நமக்குள் அருளப்படவும் இச்சையடக்கம் தேவை. இன்றே நாம் ஆவியின் கனியின் பண்பாகிய இச்சையடக்கத்தால் நிறைந்து வாழ நம்மைத் தாழ்த்துவோம், அர்ப்பணிப்போம்.
5. ஞானம் அடைய கர்த்தரிடத்தில் அன்புகூர வேண்டும்
"தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.''
1 இராஜாக்கள் 4:29
கர்த்தர் இந்த மேன்மையான ஞானத்தை அன்றுசாலொமோனுக்குக் கொடுத்தார். காரணம் "சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்." என்று 1 இராஜா. 3:3ல் பார்க்கிறோம். இன்று நாம் உலகத்தில் அன்பு செலுத்தாமல், நமக்காக தனது ஜீவனைக் கல்வாரிச் சிலுவையில் கொடுத்த இயேசு கிறிஸ்துவை நேசிக்க, அன்புகூர நம்மை ஒப்புக்கொடுத்தால், கர்த்தரின் ஞானம் நமக்கு அருளப்படும். "இயேசு கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்." (1கொரி.1:31) என்ற வார்த்தைப்படி நமக்கு உன்னத மீட்பை, தமது பாடுகளினாலும், இரத்தத்தினாலும் ஏற்படுத்தியுள்ள இயேசு கிறிஸ்துவை நேசிக்க இன்று நாம் நமது உள்ளத்தை, உணர்வை, செய்கைகளை, சீர்ப்படுத்தினால், உலகத்தாரால் புரியாத. அறிய முடியாத ஞானத்தினால் உன்னை இன்றே கர்த்தர் நிரப்புவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உன்னத அன்புச் செயலைக் கல்வாரிச் சிலுவையில் வெளிப்படுத்தினார். பாவிகளாக வாழ்ந்த நம்மை நேசித்து, அன்பு கூர்ந்த இயேசு கிறிஸ்துவை நேசிக்கவும், அன்பு கூரவும் இன்று முழுமனதுடன் முழுபெலத்துடன் ஒப்புக்கொடுப்போம். அவரின் ஞானமும், கிருபையும் நம்மில் நிறைவாய் பெருகுவதாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
மறைந்த சகோ. C எபனேசர் பால்,
(இந்தச் செய்தி 2003 மார்ச் மாதத்தில் வெளியிட்டது)