சிந்தி செயல்படு

                                            'கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை;
                                      ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்."

                                                                                                                                            சங்கீதம் 9:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

கர்த்தரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருக்காக அவருக்குள்ளாக வாழ என்னை ஒப்புக் கொடுத்த சமயத்தில் ஒரு சம்பவம் நேர்ந்தது. ஒரு நாளில் என் வீட்டிலுள்ள அனைத்து சாவிகளும் அடங்கிய சாவிக்கொத்து காணாமல் போய்விட்டது. என் முயற்சியினாலே வீடு முழுவதையும் தேடிப் பார்த்தேன். வீட்டிற்குள் கொண்டு வந்த ஞாபகம் இருந்தது.எனவே என்னால் முடிந்த அளவு எல்லா இடங்களையும் தேடிப் பார்த்தேன். என்னோடு பணி செய்கிற ஆசிரியரோடு இதைப் பகிர்ந்து கொண்டேன். அவர் உடனே எல்லாக் கதவுகளுக்கும் பூட்டை மாற்றி விடுங்கள் என்று கூறினார். அச்சமயத்தில் எனக்கு அறிமுகமான ஒரு போலீஸ் அதிகாரி கூட இருந்தபடியால், அவரும் அதே காரியத்தை ஆலோசனையாகக் கூறினார். அந்நாளிலே வீடு திரும்பிய பிறகு என்ன ஆயிற்று என்று மீண்டும் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் கர்த்தருடைய வார்த்தைகளின் படி யோசிக்க ஆரம்பித்தேன். இவ்வளவு நேரமும் என்னுடைய முயற்சியினாலே, பெலத்தினாலே, ஞானத்தினாலே இழந்த சாவிக் கொத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்று எண்ணினேன். மனுஷனால் கூடாத காரியம் தேவனால் கூடும் என்ற வார்த்தையை ஆராய்ந்து, இயேசு கிறிஸ்துவைத் தேடும்பொழுது தான் கண்டடையத் தக்க பாக்கியம் கிடைக்கும் என்று உணர்ந்து, அவர் சமுகத்தைத் தேடி நாடினேன். கர்த்தர் தம்மைத் தேடுகிறவர்களைக் கைவிடுவதில்லை என்ற வாக்கின்படி அதிசயமாய்க் காரியங்களைச் செய்தார். பலமுறை தேடின மேஜையின் டிராயரிலே எனது பேனாவை எடுக்கச் சென்ற போது, இந்தச் சாவிக் கொத்தும் அந்த இடத்தில் இருந்ததைக் காண முடிந்தது. பல முறை முன்பு அந்த இடத்தில் தேடினேன்.கண்ணில் படாத அந்தச் சாவிக் கொத்து ஆச்சரியமாய் கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

இன்று ஆசீர்வாதங்களைத் தேடி பல நிலைகளிலே தோல்விகளையும், தடைகளையும் சந்தித்து நீங்கள் கலங்கி இருக்கிறீர்களா? ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவைத் தேடுவதற்கு இடங்கொடுங்கள். 'கர்த்தரைத் தேடுகிற மக்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது' என்றவர் அதிசயமாய் ஆச்சரியமாய்க் காரியங்களைச் செய்வார். அவர் நம்முடைய சகாயம். நாம் நினைப்பதற்கும் மேலானவைகளை அருளிச் செய்கிற தேவன், இல்லாதவைகளிலிருந்து இருக்கிறவைகளைப் போல அழைக்கிற தேவன் எனக்குக் குழந்தை இல்லை, நல்ல வேலை இல்லை, நல்ல வீடு இல்லை, நல்ல சுகம் இல்லை, நல்ல கல்வி இல்லை, ஞானம் இல்லை என்று பற்பல குறைவுகளினாலும் ஆதரவற்ற வேதனையின் நிலையினாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற நீங்கள் “இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்" என்றவரைத் தேடுங்கள். அதிசயங்களைக் காண்பீர்கள்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                    மறைந்த சகோ. C. எபனேசர் பால்.

                                                                   (இது 2002 அக்டோபர் மாதம் வெளியிட்டது)


E- STORE