“...நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன்
                           உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்...”

                                                                                                                                      எரேமியா 39:18

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

 

ஒருமுறை ஒரு நண்பனின் மகனைச் சந்திக்கும்படி அருகில் இருந்த ஊருக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த நண்பனின் மகனோ மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். இறுதி ஆண்டின் தேர்விலே பலமுறை தோல்வி அடைந்தவன். கல்லுரியில் படிக்கிற அந்த வாலிபனைப்பார்த்தபோது, கிறிஸ்து உன்னை நேசிக்கிறார் என்று கூறினேன். அவர் எந்த விதத்தில் நேசிக்கிறார் என்று கேட்பதுபோல என்னையே நோக்கிப் பார்த்தார். உங்களைப் பகைத்த கல்லுாரி மாணவர்கள் உங்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற முயற்சியில் உங்கள் தலையைத் தாக்கும்படியாக நாற்காலி ஒன்றை எடுத்து தலையை நோக்கி அடித்தபோது, அதன் ஒரு அங்கிருந்தகட்டையில்பட்டு உடைந்தாலும், அன்று தப்பிக்கொண்டீர்கள் என்று கால் கூறினேன். அவன் மிகுந்த வியப்புடன் என்னைப் பார்த்தான். நீங்களும் ஒரு செயினை வைத்துக்கொண்டு யாரையாவது அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறீர்கள். இன்றைக்கு உங்களை நேசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்ப, நேசிக்க இடம் கொடுங்கள். அவர் உங்களை வெற்றியினால் அலங்கரித்து ஆசீர்வதிப்பார் என்றேன். இந்த வெளிப்பாடும் அன்பின் வார்த்தைகளும் அந்த மகனுடைய வாழ்க்கையை மாற்றியது. பலமுறை தோல்வி அடைந்த பாடத்தையும் வெற்றியாய் முடிக்கச் செய்து, மருத்துவ பணிக்குப் பயிற்சி பெற கர்த்தர் அவனை நடத்தினார்.

 

அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று உன் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை நம்பி அவர் வழி நடக்க உன்னை ஒப்புக் கொடுப்பாயானால் கர்த்தருடைய நன்மை உன்னைத் தொடரும். நீ அலங்காரமும், ஆசீர்வாதமுமாய் மாறுவாய்.

 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.