"...நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் ...

                                                                                                                                                                                மத்தேயு 11:28

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை ஒரு சந்தையின் ஒரு பகுதியிலே எல்லாரும் வாருங்கள். வாருங்கள் என்று ஒருவர் சத்தமிட்டுக் கூப்பிட்டார். போனபொழுது ஒரு திரைக்குப் பின்னாக இரண்டு பொம்மைகள் எழும்பின. அந்த பொம்மைகளுக்குள்ளே நடைபெற்ற சம்பாஷனை மிகுந்த வேடிக்கையாக இருந்தது. 10, 15 நிமிடம் அந்த பொம்மலாட்ட காட்சி முடிந்தது. அதை நடத்திய மனிதனோ அதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டு, காசு கொடுத்த மக்களுக்கு நன்றி சொல்லி சென்றான். இவ்வுலக வாழ்க்கையிலே மனிதன் மனதிற்கேற்ற சந்தோஷம், வாழ்வுக்கேற்ற ஆசீர்வாதங்களைத் தேடியும், நாடியும் சென்று கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவோ என்னிடத்தில் வாருங்கள் என்று எல்லாரையும் அழைக்கிறார்.

 

நம்மைச் செம்மையாக உண்டாக்கி, பராமரித்த, போஷித்த, பாதுகாத்த கர்த்தாதி கர்த்தர், தம்மிடம் வருகிற மக்களில் அநேக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவராக இருக்கிறார். நேற்றும் இன்றும் மாறாத, உண்மையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் வரும்போது, நாம் நினையாத மேலான ஆசீர்வாதங்களை அருளுகிறார். இந்தக் கர்த்தாதி கர்த்தரிடம் நமது ஆசீர்வாதங்களுக்காக, தேவைகளுக்காக வரும்போது, அவர் அதிசயமான விதத்தில் நம் வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் அங்கிகரித்து அருளுகிறார். தம்மிடத்தில் வருபவர்களைப் புறம்பே தள்ளாது, அவர்களில் இவ்வுலக ஆசீர்வாதத்தையும், உன்னதமான ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் தந்து மகிழ்விக்கும் தெய்வமாக இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் வரும் பொழுதெல்லாம் நம் சரீரத்திற்குரிய ஆசீர்வாதமும், ஆவிக்குரிய ஆசீர்வாதமும் தருவதால் நாம் என்றும் மகிழ்ந்து வாழக்கூடிய உயர்நிலை அடைகிறோம்.“...கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடி வருவார்கள்...” என்று எரேமியா 31:12ல் காண முடிகிறது. இப்படியாக நாம் கர்த்தரிடம் வரும்போது, இவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வழியும், வகையும் செய்து இருக்கிறார். கோதுமை, எண்ணெய், திராட்சரசம் என்பது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், கன்றுக்குட்டிகள், ஆட்டுக் குட்டிகள் உலகத்தின் செல்வத்தையும், ஆஸ்தியையும் குறிப்பிடுகிறது. இவ்வுலகில் தோன்றி,வாழ்ந்து, கல்வாரிச் சிலுவையில் நம் பாவங்கள், பாடுகள், நோய்கள்,துக்கங்களைச் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து, நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்தார் (அப். 10:38). 'கர்த்தர் நன்மையானதைத் தருவார்...’ என்று சங்கீதம் 85:12ல் பார்க்கிறோம். இந்த நன்மையினால் உன் உள்ளத்தை, உன் வாழ்வை, உன் எல்லைகளை நிரப்புவார்.

 

இவ்வுலக வாழ்க்கையிலே ஆதிமனிதன் தேவசாயலை இழந்து சாபத்திற்குட்பட்டான். நம்முடைய தேவனோ நம்மேல் அன்புவைத்து நித்திய நரக ஆக்கினைக்கு செல்ல வேண்டிய மனிதர்களை மீண்டும் மாற்றும்படியாக குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்து செய்த முதலாவது அற்புதமே தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியது தான். இவ்வாறு இயேசு கிறிஸ்து மனிதனின் வாழ்க்கையில் உள்ள வேதனைகளை, பாடுகளை, சாபங்களை, சகலவித சத்துருவின் தந்திரமான காரியங்களை மாற்றி நமக்குள் மாற்றத்தை உருவாக்கி நல்வாழ்வினைத் தந்து சமாதானத்தினால், சந்தோஷத்தினால் நிரப்புவார்.

 

நாம் கர்த்தரிடம் வரும்போது ஏற்படும் மாற்றங்கள்

1.உங்கள் துக்கத்தை மாற்றுவார்

“...நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி..." எரேமியா 31:13

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் வரும்போது மாற்றத்தை உண்டாக்குகிறார். மனிதனின் வாழ்வில் பல காரியங்களினால் மிகுந்த துக்கத்துடன் வாழ்கிறான். இந்தத் துக்கத்தினால் மனம் சலித்து, ஏன் இந்த வாழ்வு என்று கலங்கித் தவிக்கிறான். தனது துக்கத்தினால் தவறான முடிவுகளுக்கும், தாறுமாறான செய்கைக்கும் தள்ளப்படுகிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒருவன் வரும்போது அவனது துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுகிறார். ஒரு குடும்பத்தில் பல காரியங்களினால் துக்கம், எதிர்காலப்பிரச்சனை, கையின் பிரயாசத்தில் பல தடைகள், குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் அன்பின் ஐக்கியம் இல்லை, தகப்பனின் மனதில் வேறு விதமான சிந்தனை. இப்படிக் கலங்கி தவித்தனர். எப்படியாவது தேவ சமாதானம் பெற தவித்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆலோசனைக் கொடுக்கப்பட்டது. நீங்கள் குடும்பமாக தேவ சமுகத்தை நாடுங்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் குடும்பமாக கர்த்தரின் சமுகத்தைத் தேடி, நாடி காரியங்களைச் செய்தார்கள். கர்த்தரின் சமுகத்தை என்று நாடினார்களோ அன்று முதல் கர்த்தர் கிரியைச் செய்ய ஆரம்பித்தார். அவர்களின் துக்கம் சந்தோஷமாக மாறியது.

இன்று ஏன் என் வாழ்க்கை இவ்விதமாய் இருக்கிறது, நான் யாருக்காக வாழ்கிறேன், ஏன் இந்தக் குடும்பத்தில் பிறந்தேன், எனக்கு ஒரு விடிவு காலம் உண்டா ? என்று கேள்வியுடன் அனாதையைப் போல் ஆதரவற்று கலங்கும் தேவப்பிள்ளையே, உன் வாழ்வில் கர்த்தர் கிரியைச் செய்ய விரும்புகிறார். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்ற கர்த்தர் உங்களின் சகல துக்கத்தையும் மாற்றி அற்புதம் செய்வார். அதினால் சந்தோஷமும், சமாதானமும் உண்டாகும்.

2. இருண்ட வாழ்வை ஒளிமயமாக மாற்றுவார்

இருளிலிருந்து மாற்றத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் தமது ஊழியர்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். இதனை அப். 26:18ல் பார்க்க முடிகிறது. "...அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்” இன்று அநேகர் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது நமது வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி, இயேசு கிறிஸ்துவின் ஒளியை அடைகிறோம். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." என்ற ஏசாயா 9:2ன்படி இருள் மாறி ஒளி தோன்றுகிறது. பாவ இருளானாலும் சரி, மரண இருளானாலும் சரி, நாம் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது நமது சகல இருளையும் நீக்கி ஒரு ஒளிமயமான வாழ்வைப் பெறுகிறோம். என்னைப் பின்பற்றுகிறவன் ஜீவஒளியை அடைவான் என்ற வார்த்தைப்படி இருள் மாறி ஒளி பிரகாசிக்கும். மாற்றக்கூடிய அதிகாரமும் வல்லமையும் உடைய இயேசு கிறிஸ்து, இன்றே உன் வாழ்வில் தமது ஒளியைப் பிரகாசிக்கச் செய்வார். "உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" என்ற யோவான் 1:9ன் படி நம் இருண்ட வாழ்வினை ஒளிமயமாக மாற்றுகிறார் இயேசு கிறிஸ்து.

3.தோல்வியை ஜெயமாக மாற்றுகிறார்

நாம் இயேசு கிறிஸ்துவிடமோ, அவர் நம்மிடமோ வரும்போது, நமது வாழ்வில் உள்ள சகல தோல்விகளும் மாறிப்போம். வெற்றியும் மேன்மையும் கடந்து வரும். நம்முடைய வாழ்வில் தோல்வி நிறைந்து, நான் என்ன செய்வேன் என்று கலங்கும் நேரத்தில் சகல வல்லமையும், அதிகாரமும் உடைய இரட்சகர் இயேசு கிறிஸ்து நம்மிடம் வருகிறார். வந்து நமக்கு ஏற்ற ஆலோசனைத் தருகிறார். இந்த ஆலோசனைக்கு ஒருவர் இடம் கொடுக்கும்போது, அவர்களிலுள்ள எல்லாத் தோல்விகளும் ஜெயமாக மாறிவிடும். இயேசு கிறிஸ்து எப்பொழுதும் நம்மை வெற்றி சிறக்கப் பண்ணுகிறவர். உங்கள் வாழ்வில் எந்தக் காரியத்திலாவது தோல்வி தோன்றி, உள்ளம் உடைந்து, கலங்கி கண்ணீருடன் இருந்தால் கலங்காமல், மற்ற எதையும் சிந்தியாது கர்த்தரிடம் வாருங்கள். சகலவற்றையும் மாற்றக்கூடிய ஆற்றல் உடைய இயேசு கிறிஸ்து தமது மாறாத மகிமையின் செயலினால் உங்கள் தோல்வியை ஜெயமாக மாற்றுவார்.

ஒரு அருமையான குடும்பத்தில் திருமணம் முடித்து பிள்ளையுடன் இருந்தார்கள். பல ஆண்டுகள் அந்தச் சகோதரர் தனது மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டுத் தேர்வை எழுதி, பயிற்சிக்குச் செல்ல முடியாதிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குடும்பத்தினர் என்ன செய்வது என்று கலங்கினார்கள். ஒரு முறை அவரைச் சந்திக்கவும், இயேசுவைக் குறித்து விவரிக்கவும், ஆலோசனைக் கூறவும் முடிந்தது. அந்த ஆலோசனைக்கு ஒரு முறை இடம் கொடுத்தார். அற்புதமான வெற்றியைப் பெற்றார். இன்று தேவ சமுகத்திற்கு நாம் வரும்போது நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெயத்தைத் தருகிறார். திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசு கிறிஸ்து மாறாதவர். மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்ற வார்த்தைப்படி மரணத்தின் கூரை முறித்தவர் இன்று உங்களில் அற்புதம் செய்ய வல்லவராக இருக்கிறார். பிசாசின் துரைத்தனங்களையும் அதிகாரத்தையும் உரிந்து கொண்டு சிலுவையில் வெற்றி சிறந்த இயேசு கிறிஸ்து இன்று உங்கள் போராட்டமான வாழ்வில் அற்புதம் செய்வார். இன்று விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவிடம் நாம் வருவோம். அதிசயமாய் தோல்விகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.

4. கர்த்தரிடம் வரும்போது அவர் நம்மைத் தேற்றுவார்

 "...தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும்." சங்சீதம் 23:4

நாம் சந்திக்கும் எதிர்பாராத காரியங்களில் நம்மைத் தேற்றி, தொடர்ந்து நம்மை வாழச் செய்பவர் இயேசு கிறிஸ்து. இன்று மனிதரின் வாழ்வில் அநேக காரியங்களில் ஏமாற்றங்களும் நினையாத பாடுகளும் அடைகிறார்கள். நான் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது வேறு என்று, ஏன் என்று காரணம் தெரியாது கலங்கித் தவிக்கும் உள்ளங்கள் ஏராளம். இவ்விதமாக பாதிப்படைந்து கலங்கி, கண்ணீருடன் வாழும் சகோதரனே, சகோதரியே! கர்த்தர் உன்னை அறிவார். உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதில்லை என்ற வாக்கினாலும், செய்கையினாலும் உன் துயரம் நிறைந்த, உடைந்த உள்ளத்தைத் தேற்றி நடத்துவார். தவறாகக் காரியத்தைச் செய்து விட்டேனோ என்று சோர்ந்து போய் புலம்பும்போது, உள்ளத்தை ஆராய்கிறவர் உன்னைத் தேற்றுவார். சத்திய வேதத்திலே “ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்" என்று அழகாக வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘தாய்’ என்று சொன்னவுடன் இந்த உலகத்தில் நம்மை உண்மையாய் நேசிக்கும் ஒருவர். ஒரு பிள்ளையில் சுகவீனம், காயம் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் பார்க்கிலும் ஒரு விசேஷ கரிசனையுடன் காரியங்களைச் செய்வதைக் காண முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு குடும்பத்துடன் உணவு அருந்த சென்றோம். அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரே மகன் வெளி நாட்டில் பணியாற்றி வருகிறவர், அந்நாளில் வந்திருந்தார். தகப்பனார், தாய் நல்ல பக்தியும் அன்பும் நிறைந்தவர்கள். தகப்பனார் சில காலத்திற்கு முன்பு தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருந்தார். என் மகன் வந்தபடியினால் எனக்கும் நல்ல சாப்பாடு இந்நாட்களில் கிடைத்தது என்று தகப்பனார் தான் அனுபவித்த காரியத்தை உற்சாகமாகக் கூறினார். மற்ற நாட்களில் ஏதோ ஒரு விதமான ஆகாரத்தால் நாட்களைச் செலவிட்டனர். ஆனால் மகன் வந்தபொழுது ஒவ்வொரு நாளுக்குரிய உணவு அட்டவணைப் போடப்பட்டு ஆகாரம் செய்யப்பட்டது. ஏன் இவ்விதமாய் செய்தார்கள் ? தன் மகன் மீதான பாசமும், அன்புமாகும். இந்த அன்பு மாறினாலும், தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்ற உன்னத கர்த்தாதி கர்த்தர், நம்மீது வைத்துள்ள அன்பினால், தவறான செயல்களினாலும், தவறான முடிவுகளினாலும் வந்த வேதனை நிறைந்த நேரத்தில் நம்மைத் தேற்றுகிறவராக இருக்கிறார். கலங்காதே மகனே, மகளே என்ற மனதுருகும் தேவன் நம்மைத் தேற்றி, ஆற்றி நாம் தொடர்ந்து அவர் பாதையில் செல்ல நம்மை ஊக்குவிப்பார்.

இந்த அன்பின் செயலாகிய தேற்றுகிற காரியத்தைத் தமது வல்லமையானச் செயலினால் நிறைவேற்றுகிறார். இன்று பலவிதமான சூழ்நிலை போராட்டமாக, கவலையாக, என்ன நடக்குமோ? என்ன ஆகுமோ? என்று மனம் குழம்பி தவிக்கும்போது தேற்றுவார். எப்படி என்றால் தமது வார்த்தைகளினால் அதனைச் செய்வார். ஆகவே தான் இந்த வார்த்தைகளில் ஆவியும் ஜீவனும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் வல்லமை, உள்ளங்களின் காயங்களை ஆற்றி, நம்மை மீண்டும் ஆவியின் சுகத்துடன் பெலத்துடன் ஒட்டத்தைத் தொடரச் செய்கிறது.

கோல் என்பது ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும் வாக்குறுதி. மேய்ப்பனின் கரத்தில் உள்ள கோல் தனது மந்தைக்கு வேண்டிய மரங்களின் உச்சியிலுள்ள இளந்தளிர்களை ஆகாரமாக பெற்றுக் கொள்ள, பறித்துத் தரக்கூடியதாய் இருப்பதைப் பால் மாறாத வாக்குடைய கர்த்தாதி கர்த்தர் தமது ஆசீர்வாதத்தை அருளும் வாக்கை அருளி, வெறுமையான நமது வாழ்வைத் தேற்றி நடத்துவார். தடி என்பது பாதுகாவலின் வாக்குறுதியின் வார்த்தைகள். உனக்கெதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு எதிரே ஒருவழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓடிப்போவார்கள் என்றுள்ள வாக்கினாலே தேற்றுவார். கண்ணின் மணிபோல் காப்பவர், அநாதி சிநேகத்தால் ஈர்த்துக் கொள்வேன் என்றவர், உன்னை அதிசயங்களைக் காணச் செய்வேன் என்றவர், உனக்கு விரோதமாய் வரும் காரியங்களை, எப்படி மேய்ப்பன் மந்தையைத் தாக்கும் வனவிலங்குகளைத் தனது கையிலுள்ள கோலைத் தடியாக மாற்றி விரட்டுகிறானோ, மேற்கொள்ளுகிறானோ அப்படியே உன்னையும் தேற்றி மேற்கொள்ளச் செய்வார். ஏசாயா 66:13ல் "நீங்கள் எருசலேமில் தேற்றப்படுவீர்கள். : என்றுள்ளது. எருசலேம் என்றால் இருதயங்களை நேராக்கினவக கர்த்தருக்குப் பலியிடும் ஒரு ஸ்தலம். கர்த்தருக்குப் பயந்தவர்களின் வாழ்வில் இந்த எருசலேமின் வாழ்வு அமையும். '...எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே, தேவன்' என்று எஸ்றா 1:3ல் பார்க்கிறோம். இந்தப் பரிசுத்த இடத்தை விட்டு ஒருவர் சாபமான இடங்களை நோக்கிச் செல்லும் போது, பிசாசின் கையில் சிக்கிக் காயப்படவும், எல்லாவற்றையும் இழந்து போகும் நிலையும் உருவாகிறது. இந்த உன்னத எருசலேம் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் நம்மைத் தேற்றுவார்....எருசலேமின் நடுவில் வாசம் பண்ணுவேன்...' என்று சகரியா 8:2ல் கூறிய கர்த்தரின் பிரசன்னத்திற்கு நாம் வரும்போது, நம்மைத் தேற்றுவார். தாயினும் மிகுந்த அன்பு நிறைந்தவர், தமது மாறாத வார்த்தையாகிய கோல், தடியினால் தேற்றுபவர், நீங்கள் உள்ளத்தை நேர்மையாக்கி தேவ சமுகத்திற்கு வரும்போது தேற்றுவார்.

5. நாம் கர்த்தரிடம் வரும்போது போராட்டமான சகலவற்றையும் நீக்குவார்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்..." மத்தேயு 11:28

இன்று சஞ்சலம் நிறைந்த உள்ளத்துடன் துயரத்துடன் வாழ்பவர்கள் அநேகர். "ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான் என்று யோபு 14:1ல் பார்க்கிறோம்.  தாவீது தனது 13ம் சங்கீதத்தில் 'என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து' என்று தனது உள்ளத்தின் போராட்ட நிலையினை தெரிவித்திருக்கிறார். கர்த்தரை விட்டு விலகி வாழ்கிறவன் வாழ்வில் சஞ்சலமும், சாபமும் தோன்றும் என்று உபா. 28:20ல் பார்க்கிறோம். பிரியமானவர்களின் வாழ்வில் பிரச்சனைகள் தோன்றும் போது, சஞ்சலம் உள்ளத்தில் தோன்றுகிறது. இதைத் தானியேல் 6:14ல் பார்க்கிறோம். இப்படி சஞ்சலம் வரும்போது, அல்லது சஞ்சலத்தினால் கலங்கும்போது, நாம் சோர்ந்து போகாது கர்த்தரின் சமுகத்தை நாடி, தேடி வர வேண்டும். அவரின் மாறாத வார்த்தைப்படி சகல சஞ்சலங்களும் நீங்கச் செய்து மெய்யான சமாதானமான, சுபிட்சமான வாழ்வைக் கர்த்தர் தருவார். இதனை அறியாது உலகப் பிரகாரமான வழியில் பல காரியங்களைச் செய்து, கலங்கித் தவிக்கிற மக்கள் இன்று ஏராளம். தங்கள் சஞ்சலத்தையும், மற்றப் போராட்டங்களையும் தாங்களே கூட்டிக்கொள்ளுகிறார்கள். கர்த்தரிடம் நாம் வரும்போது, நம் சஞ்சலம் நீங்கச் செய்து மெய்யான ஆசீர்வாதமான வாழ்வினைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.

நம் வாழ்வில் கசந்த காரியங்களை நீக்குபவர் கர்த்தாதி கர்த்தர். மாற்கு 5:34ல் பெரும்பாடுகளினால் பன்னிரெண்டு ஆண்டுகள் கலங்கின ஒரு ஸ்திரீ சுகம் அடைந்து, தன் வேதனை நீங்கிய சம்பவத்தை சத்திய வேதம் தெளிவாய், திட்டமாய் விவரித்துள்ளது. வைத்தியராலும் சுகம் அடையாத ஸ்திரீ, என்ன செய்வது ? எப்படி சுகம் கிடைக்கும், தன் வேதனைகள் நீங்கும் என்று அங்கலாய்த்த மகள். இயேசுவிடம் வந்தாள். அற்புதமாய் வேதனை நீங்கி சுகம் அடைந்தாள். இன்று உனக்குள் உள்ள உ வியாதி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கலங்காதே. 'உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்' என்ற வாக்கின்படி உன் வேதனையை நீக்கிப் பூரண சுகவாழ்வைத் தருவார். உன் வேதனை பயத்தினால் இருந்தாலும் சரி, சாபத்தினால் வந்ததாய் இருந்தாலும் சரி, அறியாதபடி, தெறியாதபடி அந்நிய காரியங்களைத் தேடி பின்பற்றியதால் வந்ததாய் இருந்தாலும் சரி, இன்றே இயேசுவண்டை வர ஒப்புக்கொடு. அற்புதமாய் உன் வேதனை நீங்கி ஆசீர்வதிக்கப்படுவாய். பல வியாதிகளையும், வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார் என்று மத்தேயு 4:24ல் உள்ளபடி இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தால், உன் வேதனை நீங்கி சுகவாழ்வைச் சுதந்தரித்துக் கொள்ள அருள் புரிவார்.

அநேகர் பலவிதமான நிந்தைகளைச் சுமந்தும், சகித்தும்  வருகிறார்கள். இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து வந்ததின் ஒரு நோக்கம் நிந்தையை நீக்கி புதுவாழ்வை அருளுவது ஆகும். ஏசாயா தமது ஜனத்தின் 25:8ல் “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்” என்றுள்ளது. இன்று நிந்தைகள் எக்காரணமுமின்றி உன் வாழ்வில் வரலாம். கலங்காதே! 'என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்' என்று மத். 5:11ல் பார்க்கிறோம். நிந்தைகளை நீக்கி கண்ணீர் துடைப்பார். வேதனையான பழிச் சொற்களால் நிந்திக்கப்படுகிற உனக்காகத் தான் பாவமறியாத அவர் முகத்தில் துப்பப்பட்டார். முள்முடி சூட்டப்பட்டு பலவிதமான அவமானங்களைச் சகித்தார். சகல அதிகாரமும், சகல வல்லமையும் உடையவர், உனக்காகப் பட்ட பாடுகளையும், நிந்தைகளையும் நினைத்துப்பார். இன்று உன் சஞ்சலம் நீங்கச் செய்து உன் வேதனைகளை நீக்கி, உனது வாழ்வில் நிந்தைகளை நீக்கி, நல்வாழ்வைத் தரக்கூடிய இயேசு கிறிஸ்துவை நாடி நீ வா. அற்புதமான, புதிதான, ஆசீர்வாதமான வாழ்வைப் பெறுவாய்.

6. கர்த்தரிடம் வரும்போது உங்களை சந்தோஷப்படுத்துவார்

...அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்."                       

                                                                                                                                  எரேமியா 31:13

கர்த்தர் அருளும் வாழ்வில் மெய்யான சந்தோஷம் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்றால் கண்ணீர், போராட்டம் நிறைந்த அவர் மெய்யான சந்தோஷமான வாழ்வினைத் தருகிறார். வாழ்வு அல்ல. “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' என்று சத்திய வேதம் கூறுகிறது. உங்கள் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும்,, ஆவிக்குரிய வாழ்விலும், ஆலயப்பிரகாரமான வாழ்விலும், சமுதாய வாழ்விலும் ஒரு முழுமையான மெய்யான சந்தோஷத்தை இயேசு கிறிஸ்து சம்பூரணமாய்த் தருகிறார். இந்த சந்தோஷத்தை இன்றே நிறைவாய்த் தருவார். தாவீது என்ற பக்தன் சங்கீதம் 16:11ல் “பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” என தேவசமுகத்தில் உள்ள சந்தோஷத்தை  தெளிவாக கூறியுள்ளார். இந்த மெய்யான முழுமையான சந்தோஷத்தை நமக்குள் தரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் மாறாதவர். இந்த சந்தோஷத்தை நாம் பல காரியங்களினால், வல்லமையான செயலினால் பெற முடிகிறது.

ஒரு முறை ஒரு வயதான சகோதரர் தனது விமான டிக்கெட்டை வாங்குவதற்குப் பணம் கொடுத்தார். பணத்தை வாங்கி, விமான டிக்கெட்டுக்குரிய தொகையை எண்ணி சரிபார்த்து விட்டு, 'புதிய விமான டிக்கெட் விலை குறைந்து விட்டது. ஆகவே இந்தத் தொகை அதிகம்’ என்று கூறி மீதித் தொகையைத் திரும்பக் கொடுத்தார். அந்த வயதான சகோதரர் மீதிப்பணத்தைத் திரும்பப் பெற்று, சில நிமிடங்கள் இருக்கும் இடத்தை அறியாது மகிழ்ச்சியினால் ஆடினார். சாதாரண ஒரு சிறு தொகை பணத்தைத் திரும்ப பெற்றவுடன் சந்தோஷம் உண்டாகிறது. இதைக் காட்டிலும் சுதந்திரம், பாவ மன்னிப்பு, இழந்த சமாதானம், சுகம் இன்னும் பல காரியங்களை நமக்குத் திரும்ப இலவசமாய்த் தரும்போது அது பரிபூரண மகிழ்ச்சியை நமக்குள் உண்டாக்குகிறது. இந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அறியாது, உணராது, கலங்கும் உள்ளங்கள் சகலவற்றையும் ஏராளம். தேவனுடன் முறிந்த உறவு திரும்பவும் உருவாகி பெற்றுக் கொள்ளும் பாக்கியசாலிகளாக மாறும்போது மெய்யான சந்தோஷம் நமக்குள் பெருகுகிறது.

ஒரு சமயம் அமெரிக்காவில் ஒரு வாலிபனும் அவன் நண்பர்களும் பள்ளிக்கூட சுவரில் பல சித்திரங்களை வரைந்து, பள்ளிக்கூடத்தின் வாசல் கதவைத் திறக்கமுடியாதபடி புதுப்பூட்டு போட்டு, சிமெண்ட் காங்கீரிட் கலவையையும் இரவில் அதன் இடையே பூசிவிட்டனர். காலையில் பள்ளிக்கூட முதல்வர் கஷ்டத்துடன் கதவைத் திறந்து விட்டார். பள்ளிக்கூடத்தின் ஆண்டின் இறுதி நாளாக இருந்தது என்றாலும் போலீசுக்குப் புகார் கொடுக்க, போலீஸ் மாணவர்களை விசாரணை செய்து, செய்தவர்களில் சிலரைப் பிடித்து அவர்களின் கை விரல்களின் ரேகையும், அவர்களின் புகைப்படமும், criminal record-ல் பதிவு செய்ய ஒழுங்கு செய்தனர். ஆனால் அந்த வாலிபனுக்காக ஜெபித்த பெற்றோர்களின் ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் இரங்கினார். மன்னிப்பு அருளப்பட்டு எந்த விதமான ரெக்கார்டும் இன்றி அந்த வாலிபன் விடுதலை அடைந்தான். அந்தக் குடும்பத்தில் மெய்யான விடுதலையின் சந்தோஷம் வந்தது. அருமை சகோதரனே, சகோதரியே, உனக்கு விடுதலையைத் தர தன்னையே பலியாகக் கொடுத்து, சகல நரக ஆக்கினையிலிருந்தும் உன்னை மீட்டுள்ளார். இந்த மீட்பின் சந்தோஷத்தைப் பெற இன்று இயேசு கிறிஸ்துவிடம் வா. உன் வாழ்வில் மாற்றங்களைச் செய்து உன்னைத் தேற்றி, சகல சஞ்சலங்களையும் நீக்கி, உன் கண்ணீரைத் துடைத்து நித்திய கால சந்தோஷத்தைக் கர்த்தர் உனக்கு இன்றே தருவார்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                            கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                            சகோ. C. எபனேசர் பால்.