கண்ணின் பார்வை பூரணமாக குணமடைய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். இம்மட்டும் என்னைக் காத்து சுகத்தோடு பெலத்தோடு வழி நடத்தி வருகிறபடியினால் உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். கடந்த காலத்தில் கர்த்தாவே. என் கண்ணின் பார்வை குறைவுபட்டு வருகிறது. எதையும் தெளிவாக என்னால் பார்க்க முடியவில்லை. சிற்சில சமயங்களில் வேத வாக்கியங்களை எடுப்பதில் சிரமம் அடைவதோடு, தவறும் செய்கிறேன். காரணம் என் கண் பார்வை குறைவாய் இருக்கிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். சில சமயங்களில் நான் செல்லுகிற பாதையில் பள்ளத்தையும் மேடுகளையும் சரியாக காண முடியாதபடி தடுமாறி கீழே விழப்பார்க்கிறேன். சில சமயங்களிலே எங்கே என் கண்ணிலே கண்புரை வளர்ந்துள்ளதோ என்ற எண்ணங்கள் தோன்றி உள்ளத்தில் சோர்வைக் கொண்டு வருகிறது. நான் வாகனம் ஓட்டிச்செல்லும்போது. சரியான பார்வை இல்லாத படியினால் விபத்துக்குள்ளானேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். பிறவிக்குருடனுடைய கண்களைத் திறந்தவரே, எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். தாவீதின் குமாரனே. எனக்கு இரங்கும் என்று வழியருகே அமர்ந்து பிச்சைக் கேட்டவனின் கண்களைத் திறந்தவரே, எனக்கு இரங்கும். சில சமயங்களில் எங்கே ஈசாக்கைப் போல என் வயதினால் கண் பார்வை முற்றிலும் இழந்து விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயினால் பாதிப்படைந்து கண்களின் பார்வையிலே வேதனை அடைந்தவர்களைப் பார்க்கும்போது, என்னுடைய கண்ணும் அவ்வாறே ஆகி விடுமோ என்கிற மனக்கிலேசம் ஏற்படுகிறது. தாயின் கருவில் உருவாக்கினவரே, என்னுடைய மீறுதல்கள். பாவங்கள். அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்து அற்புதமான சுகத்தைக் கொடுத்து, நான் முன்போல பார்வையடைய எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கி என் ஜெபத்தைக் கேட்டு என் கண்ணின் பார்வையைக் குணமாக்குவீர் என்று உம்மைத் துதிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.