"அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து,

                                                                                         மகா பெரியவனானான்."

                                                                                                                                           ஆதியாகமம் 26:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். ஈசாக்கு என்ற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரைக் குறிக்கின்ற இந்த உன்னத நிலை நமது வாழ்வில் வர இவ்வேளையில் வேதத்தின் வாயிலாக சிந்திப்போம்.

இன்று மனிதன் தனது திறமை, படிப்பு, உத்தியோகம், அதிகாரம், புகழ், இனம், ஜாதி செல்வாக்கைக் கொண்டு சமுதாயத்தில் உன்னதநிலை அடைய முயற்சித்துக் கொண்டு இருக்கிறான். சிலர் தாங்கள் பயின்ற கல்வி கலாச்சார அடிப்படையில் விஞ்ஞான ரீதியில், இலக்கியத்தில், நாடகத் துறையில், விளையாட்டுத் துறையில், இசைத் துறையில் இன்னும் பலவித துறையில் மகா பெரியவன் ஆக வேண்டும் என்று குடும்பம், பிள்ளை, தனது பரிசுத்த வாழ்வு போன்ற காரியத்தை மறந்து, மறுதலித்து, இருதயத்தில் உள்ள ஞானக் கண்கள் குருடாக்கப்பட்டு அலைந்து திரிகிறார்கள். அடியான் கல்லூரியில் படிக்கும் சமயம் ஒரு நண்பன் கால்பந்தாட்டத்தில் தலை சிறந்த வீரராக மாற வேண்டும் என்று விளையாட வருவார். ஆனால் கல்லுாரிக்கு வர மாட்டார். விளையாட்டில் மகா பெரியவன் ஆக வேண்டும் என்ற எண்ணம் அவன் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாது இருக்க அவன் புத்தியை சிதறடித்தது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் சமயம் இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் சரிந்து விழுந்து, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஆதரவற்ற நிலை அடைகிறதைக் கண்டும், கேள்விப்பட்டும், உணர்ந்தும் இருக்கிறோம். ஆனால் இந்த ஈசாக்கு வரவர விருத்தியடைந்தான், பெரியவன் மட்டும் அல்ல, மகா பெரியவன் ஆனான் என்று பார்க்கிறோம். இந்த நிலை அடைவதற்கு காரணம் இவனில் இருந்த நல்ல குணாதிசயங்கள் ஆகும்.

பெரியவன் ஆவதற்கு ஈசாக்கிடம் இருந்த குணாதிசயங்கள் என்ன?

1.ஈசாக்கு கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான்

"கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு." ஆதியாகமம் 26:2

ஈசாக்கு கர்த்தருடைய வார்த்தையின்படி எகிப்துக்குச் செல்லாது கேராரிலே குடியிருந்தான் என்று வேதம் சொல்கிறது. இவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்தும், பாவ சிற்றின்பங்கள் உன்னை அடிமையாக்கின அந்த எகிப்துக்குப் போகாதே என்று பலவிதங்களில் கூவிக் கொண்டே இருக்கிறார். ஆனால் பொல்லாத கேடும், திருக்கும் நிறைந்த பாழ் நெஞ்சம் கர்த்தரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாது, அநித்தியமான பாவ இன்பத்தை நோக்கி நம்மை ஓட வைக்கின்றது. பெருமை, அதிகாரம், தற்புகழ், என்ற பாவஸ்தலங்கள் கட்சி என்ற தலைப்பில், ஜாதி என்ற தலைப்பில், அரசியல் என்ற தலைப்பில் மனிதனை நிலை குலையச் செய்து, அவனது பரிசுத்த வாழ்வை வெறுமையாக்கி, அவர்களையே உருவக்குத்தச் செய்கிறது. சிலர் தனது ஸ்தாபனத்தில் உயர்வான பதவி முக்கிய உயர் பொறுப்பு அடைய | வேண்டும் என்று விரும்பி ருசிமிக்க ஆகாரம் கொடுத்து அத்துடன் வெறிக் கொள்ளச் செய்யும் மது பானத்தையும் கொடுத்து, தான் கெட்டிக்காரன், தலைவன், பெரியவன், முக்கியமானவன் என்று தனது பெயரை இழிவான முறையில் பறை சாற்றுகின்றனர்.

எனது அன்பு சகோதரனே, உனக்குக் கர்த்தர் இதற்காகவா செல்வத்தைக் கொடுத்தார். இதற்காகவா நல்ல வீட்டைக் கொடுத்தார். இதற்காகவா நல்ல பெற்றோர், குடும்பம், உத்தியோகம், தொழில் கொடுத்தார். நீ அறியாத கர்த்தர், உன் மூதையருடன் செய்த உடன்படிக்கை, பரிசுத்த வாழ்வு, ஜெபம் இவைகளின் காரணமாய் உன்னை இந்நிலையில் வைத்துள்ளார். இதனை மறந்து உனது சுய பெலன், செல்வம், ஞானத்தில் நம்பிக்கை வைத்து, கர்த்தரின் கட்டளைகள், நியமனங்கள் வார்த்தைகளை அசட்டைச் செய்து மகா பெரியவன் ஆகிவிடலாம் என்று எண்ணினால் உன்னை வஞ்சித்துக் கொள்கிறாய் என்பதை மறந்து போகாதே. இவ்வாறு உனது முயற்சியில் உயர்வு அடைந்தால் அதில் வேதனைகளும், சோதனைகளும் பெருகும் போது, உன்னால் நிலை நிற்க கூடாதே. ஆனால் இன்று நீ கர்த்தடைய வார்த்தைகளைக் கேட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, புதிய தீர்மானத்துடன் கர்த்தர் சொன்ன பரிசுத்த வாழ்வில் நிலைத்திருந்தால் நிச்சயமாக ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் உன்னை ஆசீர்வதித்து மகா பெரியவனாக உயர்த்துவார்.

இவ்வாறு இல்லாது நான் பரிசுத்த நிலையில் தான் வாழ்ந்து வருகிறேன் என்று உன்னை நீயே தேற்றிக் கொண்டு எருசலேம் வாழ்வை விட்டு (எருசலேம் வாழ்வு என்பது பரிசுத்த வாழ்க்கை, தூய்மையான ஜீவியம், பரிசுத்த ஆலயம் நிறைந்த புனித இடத்தில் இருப்பது) எரிகோ யோசுவாவின் மூலம் சபிக்கப்பட்ட ஸ்தலம்). உனது வாழ்க்கை கள்ளர் (பிசாசு) கையில் அகப்பட்டு இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்து, சரீரம் வதைக்கப்பட்டு, வேதனை அடைந்து, சுதந்திரம், உடைமைகளை இழந்து, நீ ஆதரவற்றவனாக குற்றுயிராய், நாதியற்றவனாய் கைவிடப்படுவாய். இன்று அநேகரின் வாழ்க்கை இவ்வாறு உள்ளது.

நான் பயின்ற கல்லுரியில் எனக்கு சற்று முந்திய ஆண்டுகளில் பயின்ற ஒரு அருமையான சகோதரரை நான் அறிவேன். இவர் தனது அயராது முயற்சியால், சரீர திறமையால், ஒழுக்கமான செய்கையால், உயர்த்தப்பட வேண்டும், மகா பெரிய விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என்ற முழு எண்ணத்துடன் கால்பந்து விளையாட்டில் பயிற்சிப் பெற்று பல விதத்தில் உயர்வு அடைந்தார். இவரது தாயார் இந்த மகனின் படிப்பு, இரட்சிப்புக்காக அதிகமாய் ஜெபித்தும், பாவத்திற்கு விலகி வாழ கர்த்தரின் வார்த்தைகளைக் கடைபிடி என்றும் ஆலோசனை கூறி வந்தார்கள். இந்த சகோதரர் நமது இந்தியாவின் விளையாட்டு குழுவில் வெளிநாடு செல்ல தெரிந்தும் எடுக்கப்பட்டார். ஆனால் கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து அதற்குக் கீழ்ப்படியாதவராய் இருந்தபடியால் பாவம் மேற்கொண்டது. உயர்ந்த நிலையில் இருந்து தள்ளப்பட்டார். இவருக்கு இருந்த ஆதரவாளர்கள், ரசிகர்கள் வியந்தனர். சமுதாயத்தில் அநேகரின் பரிகாசத்திற்கும் நிந்தைக்கும் ஆளானார். அவர் குடும்பமே வேதனை அடைந்தது.

இதைப் போல ஒருவர் ஒருமுறை ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். பரிசுத் தொகை சுமார் ஒரு லட்சம் கிடைத்தது. தனது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தனது மனைவி, மக்களை விட்டு வேறு இடம் சென்றார். வேறு பெண்ணை துணைவியாகக் கொண்டார். புதுத் துணைவியின் ஆலோசனைப் படி சமாதானமான உயர்ந்த வாழ்வு வாழ தனது முந்தின மனைவி, மக்களை கொன்றார். ஆனால் கொலை செய்த அவரை சட்டம் சிறைப்படுத்தியது. புது துணைவி செல்வத்துடன் சென்று மறைந்தாள். உயர்வு அடைய மனிதனின் குறுக்கு முயற்சி, மாயையான முயற்சி தோல்வியும் சஞ்சலமும் கொண்டு வந்தது. ஆனால் கர்த்தரின் கரம் அவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியும் ஜனத்தை உயர்த்தும். இந்த உயர்வில் இந்த ஆசீர்வாத பெருக்கத்தில் கர்த்தர் ஒருபோதும் வேதனையைக் கூட்டார். இன்று முதல் நாமும் கர்த்தரின் சத்தமாகிய வேத வசனத்திற்குக் கீழ்ப்படிவோம். வேதனையின்றி சகல நிலைகளிலும் உயர்த்தப்பட்டு விருத்தியடைந்து மகா பெரியவன் ஆவோமாக.

2.பெற்றோரின் உன்னதமான உத்தமமான வாழ்வினிமித்தம் ஆசீர்வாதம் கட்டளையிடுகிறார்

"...கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்." ஆதியாகமம் 26:24

 

ஆம், கர்த்தர் பெற்றோரின் உன்னதமான உத்தமமான பரிசுத்த வாழ்வின் நிமித்தம் பிள்ளைகளில் உயர்வும், விருத்தியும், ஆசீர்வாதமும் கட்டளையிடுகிறார். நமது தேவன் நமது குற்றங்களை மூன்றாம் நான்காம் தலை முறைவரை விசாரிக்கிறவர். உரியாவின் மனைவியை வஞ்சகமாக யாருக்கும் தெரியாது என்று எண்ணி, தாவீது தனக்கு எடுத்துக் கொண்டான். இந்த மறைவான பாவத்தை சரீர இச்சைக்காக செய்ததினால் அவளுக்குப் பிறந்த பிள்ளை மரித்தது. "மேலும் பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் என்ற சாபத்தைச் சந்ததிக்குப் பெற்றான் என்று பார்க்கிறோம். இதைப்போல உன்னத தேவ மனிதரின் வேலைக்காரனாகிய கேயாசி தனது எஜமானுக்குத் தெரியாது என்று எண்ணி, தனது வாழ்வு ஆசீர்வதிக்கப்படுவதற்காக, தெய்வீக சுகம் பெற்ற நாகமானிடம் பணம், வஸ்திரம் வாங்கினான். ஆனால் அவன் சந்ததியை விட்டு என்றும் நீங்காத குஷ்டரோக வியாதிக்குக் காரணமானான் என்று பார்க்கிறோம்.

அன்பின் தகப்பனே, தாயே, உன் பொல்லாத பாவ வாழ்க்கையின் நிமித்தம் உனது பிள்ளைகள், சந்ததி அழிய வேண்டாம். வேதனைப்பட வேண்டாம். பெற்றோராகிய நாம், நானே வழி, சத்தியம், ஜீவன் என்று சொன்ன இயேசு கிறிஸ்தவின் பாதையில் பரிசுத்தமாய் முன் மாதிரியாய் நடப்போம். நிச்சயம் நமது பிள்ளைகளும் அந்தக் கிறிஸ்துவின் பாதையில் நடந்து ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

எனது வாழ்வில் நான் பாவியாக வாழ்ந்த காலத்தில் எனது தாயாரும், தகப்பனாரும் எக்காரணத்தைக் கொண்டும் ஞாயிறு அன்று ஆலயத்திற்குச் செல்லாது இருக்கக் கூடாது என்று கூறி அழைத்துச் சென்றார்கள். இதன் காரணமாகவும் எனது வாழ்வில் பல நன்மைகளை அடைந்தேன்.

ஒருமுறை எனது தகப்பனாரின் தந்தை காலஞ்சென்ற Rev. V. தேவவரம் அவர்கள் பெலவீனமாய் இருந்தார்கள். எனது தந்தை காலஞ்சென்ற Rev. V.D. கிறிஸ்டியன்பால் அவர்கள், அவர்கள் தந்தையை நோக்கி ஞாயிறு ஆராதனைக்கு இந்தப் பெலவீன நிலையிலும் ஏன் செல்ல வேண்டும் என்றார்கள். அதற்கு என் தாத்தா கூறினார்கள்: ரூ.100/ - இலவசமாக ஆலயத்தில் தருகிறார்கள் என்றால் ஓடாமல் இருப்போமா? அதைவிட மேலான ஆசீர்வாதமான காரியம். நமது கர்த்தர் நமக்குத் தரும் சமயம் சும்மா இருக்கலாமா ? என்று சொன்னது எனது வாழ்வில் மறக்க முடியாத காரியம். ஆகவே பெற்றோராகிய நாம், நமது பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருப்பதுடன், வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆராதனைகளில் பங்கு பெறுவது போன்ற காரியங்களிலும் கரிசனை கொண்டு வாழ வேண்டும். உலகப் படிப்பில் குறைவு காணப்பட்டால் எவ்வளவு பணம் செலவழித்தாவது டியூசன் ஏற்படுத்தி உயர்வுக்கு முயற்சிக்கிறோம். ஆனால் அதைவிட மேலான உண்மையான உயர்வு அடைய தாங்கள் செய்ய வேண்டியது பரிசுத்தமாய் ஜீவிப்பது ஆகும். நமது தேவன் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்கிறவர்.

ஒருஊழியர் தனக்கு அறிமுகமான ஒரு நண்பர் வீட்டுக்கு ஜெபிக்க அழைக்கப்பட்டார். அந்த வீட்டில் எல்லோரும் கண்ணீரோடு கவலையுடன் காணப்பட்டார்கள். எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அந்த ஊழியர் கேட்ட சமயம், தங்கள் அருமையான மகள் வீட்டை விட்டு எங்கோ ஓடிவிட்டாள் என்றும், அதற்காக ஜெபிக்க வேண்டும் என்றனர். அவர்களுக்காக அந்த ஊழியர் ஜெபித்தார். இரவில் மீண்டும் அந்த ஊழியர் பாரத்துடன் தன்னைத் தாழ்த்தி ஜெபித்தாராம். அப்பொழுது கர்த்தர் அவருக்குத் தரிசனத்தில், அந்தப் பிள்ளையின் தகப்பனார் அதைப் போலவே தனது இளமைப் பருவத்தில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்றார் என்றாராம். அந்த ஊழியர் திடுக்கிட்டு அவர்களுக்காக மன்றாடினார். கர்த்தர் மனதுருகி கிருபை செய்தார். நீ எந்தப்படியில் அளக்கின்றாயோ, அதே படியில் உனக்கும் அளக்கப்படும். எனவே வாலிபப் பருவத்தில் உன் மாமிச இச்சையினால் வாலிபப் பெண்களை பரிகாசம் செய்கிற அன்பு சகோதரனே, பாவ எண்ணத்திற்கும் பாவ செய்கைக்கும் அடிமை ஆகாதே. உன் சந்ததியில் ஒரு நாள் உன் கண்கள் காண, உன் குடும்ப வாலிபப் பெண்களும் இந்தப் பரிதாபகரமான நிலைக்கு ஆளாவார்கள்.

ஆகையால் நமது சந்ததி ஆசீர்வதிக்கப்பட, காக்கப்பட, அழிவில்லாத நித்திய உயர்வையும் சமாதானத்தையும் பெற, நாம் பரிசுத்தமான, உத்தமமான, கர்த்தருக்குப் பயந்த வாழ்வில் வாழ்ந்து நமது பிள்ளைகள் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட, நம்மை ஒப்புக்கொடுப்போமாக. நிச்சயமாக, நமது பரிசுத்த உத்தமமான வாழ்வின் காரணமாக நமது பிள்ளைகள் பலுகிப் பெருகி உயர்வடைவார்கள்.

3. மனைவியின் குறை நீங்குவதற்காக வேண்டுதல் செய்தான்

"மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்..." ஆதியாகமம் 25:21

ஆம், தனது மனைவியிடம் காணப்பட்ட குறைக்காக அவன் மனம் பதறவில்லை. யாரையும் குறை கூறவுமில்லை. எல்லாரிடமும் குறையை பறை சாற்றவுமில்லை. அதற்குப் பதில் குறைகளை நீக்க வல்லவராகிய கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். இன்று கூட அநேக குடும்பத்தில் தங்கள் பெற்றோர்கள் பார்த்து ஒழுங்குபடுத்துகிற திருமணங்களில் கூட குறைகள் உண்டு.

எனது வாழ்வில் இந்நிலைக்குக் காரணம், இந்தக் குறைகளை அறியாதபடிக்கு என் தலையில் உன்னைக் கட்டிவிட்டனர் என்று ஒருவரை ஒருவர் ஏசியும், கடினமாய் கடிந்து கொண்டும், சமாதானம் இழந்து வாழ்கிற குடும்பங்கள் உண்டு. அதற்காக மனைவியை விரட்டுவதும், பெற்றோரிடமும் பணம் வாங்கி வா என்று விரட்டுகிற, வேதனைப்படுத்துகிற மக்கள் உண்டு. அடித்து

அன்பு சகோதரனே, சகோதரியே, குறையில்லாத மனிதன் இவ்வுலகில் கிடையாது. நாம் பூரண சற்குணர் அல்ல. ஆகவே குறை யாரிடம் காணப்பட்டாலும் கலங்க வேண்டாம். குறை நீக்க சர்வ அதிகாரம் உடைய இயேசு கிறிஸ்து நமக்கு உண்டு. அவரிடம் அறிக்கை செய்வோம் விடுதலை அடைவோம்.'

வேதம் கூறுகிறது, மற்றவனைக் குற்றப்படுத்த உனக்கு அதிகாரம்பு இல்லை என்று. எந்த குற்றச்சாட்டை செய்கிறாயோ அதை நீயோ செய்வதினால் உன்னையே குற்றப்படுத்திக் கொள்ளுகிறாய் என்று பார்க்கிறோம். நமது வாழ்வில் வேலை ஸ்தலத்தில், மேல் அதிகாரிகளிடன்

கீழ் வேலை செய்வோர், ஊழியர், சபை மக்கள், பிள்ளைகள், மருமகன், மருமகள், சகோதரன், சகோதரி, உடன் ஊழியர், உனது அண்டை அயலகத்தார் யாரானாலும் சரி, அவர்களில் காணப்படும் குறைகள் நிமித்தம் மனம் பதறாது, அவர்கள் குறைகளை சம்மந்தம் அற்ற மக்களிடம் இழிவாக இனிப் பேசாது, குறைகளை நிவர்த்தி செய்யப்பட கண்ணீரோடு ஜெபிக்க ஒப்புக்கொடுப்போம். நமது கண்ணில் உள்ள உத்திரத்தை அகற்றுவோம். மற்றவர்கள் கண்ணில் உள்ள துரும்பை நீக்க கர்த்தரிடத்தில் மட்டும் கூறுவோம். “குறைகளைக் கூறினவன் தாழ தள்ளப்பட்டான்” (வெளி. 12:10) என்ற நிலை நமது வாழ்வில் வராது காத்துக் கொள்வோம்.

ஒருமுறை ஒரு வாலிப சகோதரனுக்காக ஒரு தேவ ஊழியர் ஜெபித்தார்கள். இந்த அருமையான சகோதரன் சிறந்த புத்திசாலி பள்ளியில் முதல் மாணவனாக வர சகல ஞானமும் பெற்றவன் ஆவிக்குரிய வாழ்வில் அதிக கிருபை வரங்களைப் பெற்றவன். இந்த வாலிப மகன் அந்த ஆண்டு நடைபெற்ற அரசாங்கத் தேர்வு எழுதாதபடி வேறு எங்கேயோ ஓடிவிட்டான். காரணம் இவனை அறியாது இவனை ஆட்கொண்ட ஒரு தீய சக்தி இந்த வேதனையைக் கொடுத்தது. அந்த ஊழியர் ஜெபித்த சமயம் அந்த வாலிபன் வீட்டுக்கு அருகில் வசித்த ஒரு பெண்ணின் தற்கொலை ஆவி ரூபத்தில் பிசாசு அவனை ஆட்கொண்டது என்று ஆவியில் அறிந்து, இது எப்படி இவனுக்குள் வந்தது என்று வினவினார். அந்த அசுத்த ஆவி, இவன் தேவ ஊழியர்கள் எல்லோரையும் குறைகூறிக் கொண்டு இருந்தான். அதனால் இவனுக்கு பெருமை ஏற்பட செய்து நாங்கள் வந்தோம் என்றதாம்.

நாம் ஒருவேளை ஆவிக்குரிய கிருபைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் மற்றவர்களைக் குறை கூறுகிறவர்களாய் காணப்பட்டால் தாழத் தள்ளப்பட்டு போவோம் என்பதை மறக்க வேண்டாம். தாவீது ராஜ கூறுவதைப் போல் நாம் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ண வேண்டும் என்றால், நமது அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமல் (சங்.15:3) இருப்போமாக.

உங்களை நிந்திக்கிற துன்பப்படுத்துகிற மக்களுக்காக ஜெபியுங்கள் என்ற இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைப்படி ஜெபிப்போம். மற்றவர் குறைகளை, தவறு செய்த காரியங்களை எத்தனை மணி நேரம் பரிசாசித்து கண்விழித்து துணிகரமாய்க் கூடி மகிழ்ந்து பேசுகிறோம். ஆனால் இவர்கள் குறைகள் நீங்க ஜெபித்ததுண்டா ? எவ்வளவு நேரம் நாம் ஜெபிக்கிறோம்.ஜெப வேளையில் யாருக்காக ஜெபிக்கிறீர்கள். யோபுவைப் போல் நாமும் மற்றவர்கள், நண்பர்கள், வேதனை குறைகள் நீக்கப்பட இன்றுமுதல் கண்ணீரோடு பாரத்தோடு, உபவாசத்துடன் ஜெபிப்போம். நம் தேவன் நமது ஜெபத்தைக் கேட்டு குறைகள் காணப்பட்ட மக்களின் குறைகளை நீக்கிவிடுவிப்பார். நம்மையும் யோபுவைப் போல ஈசாக்கைப் போல் இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார்.

4. ஈசாக்கிடம் சகிப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தது

"பின்பு வேறொரு துரவை வெட்டினான். அதைக் குறித்து, அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை. அப்பொழுது அவன் நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி ரெகொபோத் என்று பேரிட்டான். ஆதியாகமம் 26:22

இந்தச் சம்பவம் ஈசாக்கின் வாழ்வில் ஒரு வாக்குவாதத்திற்குப் பின்பு ஏற்பட்டது. தனது தகப்பனாகிய ஆபிரகாம் வெட்டி பெலிஸ்தரால் துார்த்துப் போட்ட துரவுகளை ஈசாக்கு மீண்டும் வெட்டினான். ஆனால் இத்துரவுகள் தங்களுக்கு என்று அத்தேசத்து மேய்ப்பர்கள் வாக்குவாதம் பண்ணினபடியால் அந்த ஸ்தலத்தை விட்டு சற்று தள்ளிச் சென்று, புதிய துரவை வெட்டினான்.

இச்சம்பவமும் வேத வசனமும் ஈசாக்கில் காணப்பட்ட சகிப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது. நியாயப்படி தனது தகப்பனாரின் துரவுகளைத் தோண்டிய ஈசாக்குடன் நியாயம் அற்ற முறையில் வாக்குவாதம் செய்த அவர்கள் அறியாமையை அறிந்து, ஆசை இச்சைகளை அறிந்து, துன்மார்க்கரின் பாதையில் நில்லாது, ஈசாக்கு விலகிச் சென்றான். நாமும் கூட இந்தச் சுபாவத்தை உடையவராய் மாறும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாம் சிறு சிறு காரியத்தில் எல்லாம் வாதாடக் கூடாது. சில குடும்பங்களில் சொத்துக்கள் மிகுதியாக இருக்கும் என்பதால் அதன் பொருட்டு பெரிய போராட்டம் உண்டாகிறது. சகோதர, சகோதரி அன்பு முறிவு, பொறாமை, இதனிமித்தம் குடும்பம் பாழாக்கப்பட நம்பிக்கை துரோக செய்கைகள், பேச்சுகள் காணப்படுகிறது. தீமையை நன்மையால் வெல்லு என்ற வேத வசனத்தை நாம் மறக்காமல் கிறிஸ்துவின் மன்னிக்கிற சுபாவத்தை வெளிப்படுத்துவோமாக. நன்மை செய்கிறவராய் சுற்றி வந்த இயேசு கிறிஸ்துவிடம் நன்மை பெற்ற மக்கள் உலகத்தில் அதிகார ஆசையால் அவரைச் சிலுவையில் அறைந்தனர். அந்த நேரமும் பிதாவே இவர்களை மன்னியும் என்று வேண்டினார். சர்வ அதிகாரமுடையவர் தனது பிதாவின் சித்தம் நிறைவேற்றப்பட தன்னை நமக்காக சிலுவை மரத்தில் ஒப்புக்கொடுத்து எல்லா துன்பத்தையும், பாடுகளையும் சகித்தார் அல்லவா ? இவர் வழியில் நாமும் செல்வோம் என்றால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஒரு முறை வீடு வாடகைக்கு வேண்டும் என்று ஒரு சக ஊழியரும்.உடன் பணிபுரிகிற வேறு ஒருவரும் கூறி இருந்தனர். அவற்றை அவர்கள் விரும்பியபடி குறைந்த வாடகை, வசதியுடன் ஒரு வீடு கிடைத்தது. உடன் பணி புரிகிற சகோதரர் அந்த ஊழியக்காரருக்கு வீட்டை விட்டுக்க கொடுத்தார். கர்த்தர் அவர் செயல் அறிந்து அவருக்கும் ஒரு வீட்டை சில நாள் கழித்து கொடுத்தார். கர்த்தரின் கரம் அந்த வீட்டை அந்தச் சகோதாருக்குச் சொந்தமாக குறைந்த விலையில் வாங்கவும் உதவி செய்தது. ஆம், நாமும் வேதனைகள் நிந்தனைகள் பெருகி, அநியாயமாய் வெறுக்கப்பட்டு, தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு நம்மோடு எதிர்த்து நிற்கும், போட்டி போடும் மக்களைக் குறித்து இனி கலங்காது, கர்த்தரின் அன்பை, சகிப்புத் தன்மையை, விட்டுக்கொடுக்கும் தன்மையை பிரதிபலிப்போம், வெளிப்படுத்துவோம். நமது தேவன் நம்மையும் ஈசாக்கைப் போல் ஆசீர்வதித்து என்றும் குறையாத, வற்றாத அன்பு சந்தோஷம் சமாதானமாகிய ஜீவத்துரவைக் கட்டளையிட்டு நம்மைப் பலுகி பெருகச் செய்ய 'ரெகொபோத்' இடத்தைத் தருவார்.

5. ஈசாக்கோடு கர்த்தர் இருந்தார்

...நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார்..." ஆதியாகமம் 26:28

ஆம் அன்பின் சகோதரனே, கர்த்தர் நம்மோடே இருப்பார் என்றால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தர் நம்முடன் இருக்க வேண்டும் என்றால் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக மாற வேண்டும். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்ற வார்த்தையின்படி நாம் பரிசுத்தம் அடைந்தவராய் இருக்கும்போது கர்த்தர் நம்மில் வாசம் செய்வார்.

நான் பாவி, எனது பாவம் எப்படி நீங்கும் என்று கலங்காதே. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நமது உள்ளத்தை தூய்மையாக்க, பரிசுத்தமாக்க போதுமானது. இந்த மீட்பை உண்டுபண்ணவே இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். உனது பாவத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய். அவர் எந்தவ பாவியையும் புறம்பே தள்ள மாட்டார். நாம் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிட்டு இனித் துாய்மையான பாதையில் நடப்பேன் என்று தீர்மானம் எடுக்கும் சமயம் நம்மோடு அவர் வாசம் செய்து, நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். ஆலோசனை சொல்லுவார். எந்தக் காரியத்தை எப்படி செய்வது என்று போதிப்பார், உயர்த்துவார். அதைப் போல் நமது பொல்லாத செய்கையின் நிமித்தம், நான் பாவி என்று பாவத்தின் நிமித்தம் இருதயம் நொறுக்கப்பட்டு, ஆவியில் கர்த்தருக்குப் பணிந்த மக்களாய் மாறும் வேளையில் நம்மோடு வாசம் பண்ணுவார்.

இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன் என்ற வார்த்தையின்படி உனது பாவ வாழ்க்கையை விட்டு, பொல்லாத வழியை, அக்கிரம செய்கையை விட்டுத் திரும்பு என்று உனது உள்ளத்தின் கதவுகளை ஆணி கடாவப்பட்ட கரத்தால் தட்டிக்கொண்டே இருக்கிற நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்குச் செவிகொடுப்பாய் - என்றால் அவர் உன்னோடு தங்கி உன்னை ஆசீர்வதிப்பார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாய் விடேன் என்ற வாக்குத்தத்த வார்த்தையின்படி அவர் நம்மில் வாசம் செய்ய தடையான பாவ காரியத்தை நீக்கி கர்த்தரை நம் உள்ளத்தில் வைத்து, நாம் அவரின் ஆலயமாக மாறுவோம். பரிசுத்த அலங்கரிப்பினால் அலங்கரிக்கப்படுவோம்.

நிச்சயம் கர்த்தர் நம்மை ஈசாக்கைக் போல சகல நன்மைகளினால் ஐசுவரியவானாக்குவார். வர வர விருத்தியடையச் செய்து மகா - பெரியவன் ஆக்குவார்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                               கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                  சகோ. C. எபனேசர் பால்.