கையின் பிரயாசங்களில் வரும் தடைகள், குறைகள் நீங்கி ஆசீர்வதிக்கப்பட ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். இம்மட்டும் என்னை நடத்தி வந்த அன்பின் செயலுக்காக உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, கடந்த சில காலங்களாக நான் கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தடைகளும், குறைகளும், நஷ்டங்களும், தோல்வியும் மிகுதியாக ஏற்பட்டு அதிக துக்கத்தையும், சமாதானக் கேட்டையும் ஏற்படுத்தி. என் உள்ளத்தில் கவலைகளைப் பெருகச் செய்து விட்டது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். நான் இரவிலும் துாங்க முடியவில்லை. இந்தப் போராட்டமான நிலையில், நான் நடத்தி வந்த இடத்தையும் அதன் சொந்தக்காரர் கேட்பதினால் என்ன செய்வது என்ற கேள்வி உள்ளத்தில் எழும்புகிறது. இந்த இடத்தைப் போல எந்த இடம் வசதியாக கிடைக்கும். கர்த்தாவே, இந்த நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும். கர்த்தாவே, உம்மை நம்புகிறவர்கள் செழிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. நான் செழிக்க ஆசீர்வாதமடைய எனக்கு உதவிசெய்யும். நான் செய்து கொண்டிருந்த காரியங்களிலே குறைவு ஏற்பட்டபடியால் எனக்கு உதவிசெய்த தொழிலாளிகளும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தத் தொழிலைச் செய்வதா வேண்டாமா என்ற எண்ணங்களும் தோன்றி கசப்படையச் செய்கிறது. நான் கடன்வாங்கிய தொகைகளைத் திருப்பித் தர முடியாதபடி தடுமாறுகிறேன். அதற்குரிய வட்டியையும் செலுத்த முடியா திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே. நான் உம்மை நேசிக்கிறவன் என்று அறிவீர். ஒருவிசை எனக்கு இரங்கும். உம்முடைய வேதத்தை நேசித்து தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் என்று சொன்னீரே. வேதத்தைத் நேசித்து தியானிக்கிற நானும் ஆசீர்வதிக்கப்பட எனக்கு உதவி செய்யும். பேதுருவானவன் இராமுழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனையும் பிடிக்காத நேரத்தில் நீர் அவனுக்கு ஆலோசனையின் வார்த்தைகளைச் சொன்னீர். அவன் அதன்படி செய்து மிகுதியான வரலாறு காணாத வெற்றியை அடைந்தானே, எனக்கும் நல்ல ஆலோசனையைத் தாரும். ஈசாக்கு விதை விதைத்த இடத்திலே நூறு மடங்காக விளையச் செய்தவரே. எனக்கு இரங்கும். என்னை ஆசீர்வதியும், என்னை வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.