"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்"

                                                                                                                                                                                                                    சங்கீதம் 65:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன். ஒரு முறை நானும் என் குடும்பத்தாரும் வேறொரு நாட்டில் நடைபெற்ற ஒரு திருமண வைபவத்தில் பங்கு பெறச் சென்றோம். அழைத்துச் சென்ற எனது மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் மிகுதியான மகிழ்ச்சி. திருமண ஆராதனையிலே பங்கு பெற்றோம். எங்களுக்கு என்று சாப்பிடுவதற்கு டேபுள் ஒன்று செய்யப்பட்டிருந்தது. முன்னதாகவே இவ்விதமான நேரத்தில் பரிமாறப்பட்டது. நாங்கள் மகிழ்ச்சியோடு அதை ஒழுங்கு ஆகாரம் உண்ண ஆரம்பித்தோம். என் குடும்பத்தில் என்னோடு வந்திருந்த மருமகள் கொஞ்சம் சாப்பிட்ட நேரத்திலேயே ஒரு எலும்புத் துண்டு தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. பல முயற்சிகளைச் செய்தாள். தண்ணீரும் குடித்துப் பார்த்தாள். வெளியே சென்று வாழைப்பழமும் சாப்பிட்டுப் பார்த்தாள். பிரயோஜனமற்ற நிலைமை. மாப்பிள்ளையினுடைய தம்பியும் அவர் மனைவியும் மருத்துவர்கள். மணமகளும் ஒரு மருத்துவர், இவர்களின் பெரிய தகப்பனார். அனுபவமிக்க ஒரு மருத்துவர். இந்த நிலையில் அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுத்துவிடாதபடி நாங்களே முயற்சித்தோம். தோல்வியும் அடைந்தோம். இவ்விதமான சூழ்நிலையில் என்னுடைய பேரப்பிள்ளைகள் மூவரும் இணைந்து தன் தாயாரின் வேதனை நீங்க ஜெபித்தார்கள். ஜெபித்த சில நிமிடங்களிலே அந்த எலும்புத் துண்டு தொண்டையை விட்டு வெளியே வந்து விட்டது. கர்த்தரை மகிமைப்படுத்தி, துதித்து அந்த இரவிலே மிகுந்த சமாதானமாய், சந்தோஷமாய் இளைப்பாரச் செய்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் சுய முயற்சியினால் உன் பிரச்சனை, உன் பாடுகள், போராட்டங்கள் நீங்காத காரணத்தினால் கலங்காதே. நம்முடைய அங்கலாய்ப்பை அறிந்திருக்கிற அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவர். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஏறெடுக்கிற நம் ஜெபத்தைக் கேட்டு, இன்றே இப்பொழுதே சகலவிதமான பாடுகளையும், பிரச்சனையையும் தீர்த்து சுகமும், சந்தோஷமும் பெருகச் செய்வார். நம் ஜெபத்தைக் கேட்கிற தேவனுடைய சமூகத்தை இனி நாடுவோம். ஆசீர்வதிக்கப்படுவோமாக.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                            சகோ.C. எபனேசர் பால்.