"கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்;

                                    அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;

                                            அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்...”

                                                                                                                                 சங்கீதம் 37:28

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு தலைமை ஆசிரியர் உண்மையாய் ஊழியத்தைச் செய்து வந்தார்கள். அவர்கள் மிகுந்த இரக்கம் நிறைந்தவர்கள். ஒரு பெரிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்கள். அவ்விதமாய் பணியாற்றி வந்த அவர்மேல் ஒரு குற்றச்சாட்டு வந்தது. மரித்துப்போன ஒரு ஆசிரியரின் P.F.பணத்தை இவர் எடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டை, மரித்தவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார்கள். இதினிமித்தம் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டிருந்தபடியால் அவரைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். இவ்வாறு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை ஜாமினில் எடுக்க யாரும் முன் வரவில்லை. அடிக்கடி அவருடன் இணைந்து ஊழியங்களைச் செய்திருந்தபடியால் என்னிடத்தில் இருந்த பணத்தைக் கொண்டு அவரை ஜாமினில் எடுக்க ஒரு லாயரோடு சென்றேன். அன்று மாலையில் அவரை ஜாமினில் எடுக்க கர்த்தர் உதவி செய்தார். தற்காலிகமாக அவரை வேலை நிறுத்தம் செய்தபடியால், அவருக்கு ஊதியம் வராதிருந்தது. இந்தச் சூழ்நிலையில் பணத்த எடுத்த கிளார்க் எழுத்தின்மூலமாய் தான் செய்த தவறைப் போலீசுக்குத் தெரிவித்தார்கள். ஆனாலும் போலீசார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தலைமை ஆசிரியருக்கோ இன்ஜினியரிங் முடித்த ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தார்கள். தாங்க முடியாத துக்கமும் வேதனையும் நிறைந்த அவர், தன் மகளின் திருமணத்தை முடித்துவிட எண்ணினார். அதற்கேற்ற வண்ணமாக மகளோடு படித்த ஒருவர் மகளைத் திருமணம் செய்ய முன் வந்தபடியால் என்ன செய்வது என்ற கேள்வியோடு என்னிடம் ஜெபிக்க வந்தார். திருமணத்தைத் தடை பண்ணாதிருங்கள், துரிதமாய் நடத்தி விடுங்கள் என ஆலோசனை கூறினேன். திருமணத்தை நடத்த கர்த்தர் பண உதவியும் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களிலே அவர் மரித்தும் போனார். அவர் மீதான குற்றச்சாட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் குற்றப்படுத்தின மரித்த ஆசிரியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டபடியால், அந்த வழக்கு தள்ளப்பட்டு போயிற்று. தலைமை ஆசிரியராக இருந்த அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி, மற்ற எல்லா பணமும் ஒரு குறைவுமின்றி பெற்றுக் கொள்ள கர்த்தர் உதவி செய்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, நம்முடைய வாழ்க்கையிலே உண்மையும் உத்தமமுமாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் போது, வேலை செய்யும் போது, எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து சந்ததியின் நன்மையான காரியங்களை அருளிச் செய்து ஆசீர்வதிப்பார். உண்மையும் உத்தமமுமாய் இருக்க இன்றே கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                        சகோ.C. எபனேசர் பால்.