"இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."

                                                                                                                                                                                                                                                லூாக்கா 2:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

அண்டசராசரத்தையும், அதில் உள்ள யாவற்றையும் படைத்த தேவன், தான் தன் சாயலாக உண்டாக்கிய மனிதனை அதற்கு மேலாக ஆளுகை செய்ய நியமித்தார். ஆனால் மனிதன் தேவனின் வார்த்தையை அசட்டை செய்து, மீறி தன் சுய ஆசைக்கு இடம் கொடுத்து, கீழ்ப்படியாமல் பாவம் செய்து, தேவ மகிமையை இழந்து போனான். இவ்விதமாய் தன் சீரை, சிறப்பை இழந்த மனிதனுக்கு ஒரு புதுவாழ்வை தரவே, இழந்துபோன நம்மை இரட்சிக்கவே இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவை சீர்ப்படுத்துகிற தம்முடைய குமாரனாக அனுப்பினார்."... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்த என்னை அனுப்பினார்...” என்று ஏசாயா 61:3ல் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக நம் சீர்கெட்ட வாழ்வை சீர்ப்படுத்த இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்த இந்த செய்தி எல்லாருக்கும் மிகுந்த நற்செய்தியாக அமைந்துள்ளது. இதைத்தான் உலகம் அனைத்தும் உள்ள மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்மஸ் என்று சொல்லும்போது, சத்திரத்தில் இடமில்லாது தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து என் உள்ளத்தில், வீட்டில் பிறந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக நட்சத்திரங்களைக் கட்டுகிறார்கள். இது இயேசு கிறிஸ்து பிறந்தார் என்ற மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது. அன்று புதிய ஆடைகளையும், பலவிதமான சுவையான திண்பண்டங்களையும், ஆகாரத்தையும் செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, இந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவைகளில் இருந்து நம்மை இரட்சிக்கிறார்?

1. பாவத்திலிருந்து இரட்சிக்கிறார்

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்..."

                                                                                                                             1 தீமோத்தேயு 1:15

இன்று மனிதன் தான் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை, கருமங்களை விட்டு மீட்கப்பட்ட வாழ்வை அடைய விரும்புகிறான்.இதற்காக பலவிதமான யாகங்கள், புண்ணியங்களைச் செய்கிறான். பலவிதமான பலிகளைச் செலுத்தி பாவம் நீங்கிய வாழ்வினை அடைய விரும்புகிறான்; முயற்சிக்கிறான். பாவநாசகராக இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தோன்றி சர்வலோகத்தின் பாவங்களை சிலுவையிலே சுமந்து நமக்கு பாவத்திலிருந்து இரட்சிப்பை உண்டுபண்ணியுள்ளார்.

பாவமானது மனிதனின் உறவினை கர்த்தரிடமிருந்து பிரித்து விடுகிறது. பாவமானது தேவனிடமிருந்து வரும் நன்மைகளை, ஆசீர்வாதங்களைத் தடை செய்கிறது. 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்று சத்திய வேதம் கூறுகிறது. இன்று பாவத்தினால் பாதிப்படைந்து, கலங்கி கண்ணீர் சிந்தும் சகோதரனே/சகோதரியே, உன் பாவங்களை அகற்றி மெய்யான சமாதானத்தையும், சுக வாழ்வினையும் இயேசு கிறிஸ்து தர வல்லவராக இன்றும் ஜீவிக்கிறார். எந்தப் பாவியையும் புறம்மே தள்ளாத இயேசு கிறிஸ்து இன்றே பூரண இரட்சிப்பை உனக்குத் தருவார். இந்த இரட்சிப்பைத் தம்முடைய சொந்த இரத்தத்தினை நமக்காக அவர் சிலுவையில் சிந்தி உண்டாக்கியுள்ளார். 'இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு கிடையாது' என்ற வார்த்தையின்படி இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தில் இருந்து இரட்சிக்க தமது இரத்தத்தை சிலுவையிலே நமக்காக சிந்தினார். அந்த தேவனுடைய செய்கை நம்மை முற்றும் முடிய பாவத்தில் இருந்து மீட்க வல்லமையுடையதாய் இருக்கிறது.

 

ஒருமுறை ஒரு சகோதரர் ஜெபிக்க வந்தார். அவருக்காக ஜெபித்த ஜெப நேரத்தில் அவன் விடமுடியாத பாவத்தைச் சுட்டிக் காட்டினார். நீ இரவிலே துாங்காதபடி போனில் உள்ள எல்லா அருவருப்பான தீய காரியங்களையும், தவறான காரியங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறாய். இது உன் மனதைக் கெடுப்பதோடு உன் வாழ்வினை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. நீ நன்றாய் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய முடியாது தடுமாறுகிறாய், தவறும் செய்கிறாய். உன் கண்களின் இச்சைகள், உன் மாம்சத்தின் இச்சைகளாய் மாறி தவறான உறவுகளுக்கு இடம் கொடுத்து கொண்டிருக்கிறாய். இயேசு கிறிஸ்து உன்னை நேசித்து நீ செய்து கொண்டிருக்கிற உன் தவறுகளை விட்டு மனந்திரும்ப வேண்டும், பாவத்தின் அடிமைத்தனத்தை விட்டு நீ விடுதலை ஆக வேண்டும். உன் வாழ்க்கையிலே அந்த இரட்சிப்பின் சந்தோஷம் பெருக வேண்டும் என்று விரும்புகிறார் என்றேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த வாலிபன், இயேசு கிறிஸ்துவே, என்னை மன்னியும் என்று தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தான். அவன் நினையாத வெற்றியை தன் பணியிலும் வாழ்விலும் பெற்றுக்கொண்டான்.

பாவத்திலிருந்து இரட்சிக்க இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தார். 'இயேசு' என்பதற்கு அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பது பொருளாகும்.

இருண்ட உலக வாழ்வில் எங்கு செல்லுகிறோம் என்று அறியாத நிலையில் இருந்த நம்மை இயேசு கிறிஸ்து தம் ஒளியினாலும், தன் வழியினாலும், வார்த்தையினாலும் நல்வழி நடத்துகிறவராக இருக்கிறார். வனாந்திர வாழ்வானாலும், இருண்ட வாழ்வானாலும், போராட்டமான வாழ்வானாலும் நம்மை நல்வழி நடத்தும் நாயகராக இயேசு கிறிஸ்து இன்று நமக்கு இருப்பதால் நாம் தேவனை, அவர் நிமித்தம் எக்காலமும் துதிக்கவும், ஸ்தோத்தரிக்கவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

2. பெலவீனத்திலிருந்து இரட்சிப்பு தருகிறார்

"அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்..." மத்தேயு 8:17

 

நம்முடைய எல்லா பெலவீனத்திலிருந்தும் நம்மை இரட்சிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் வந்தார். இன்று நமக்குள் பலவிதமான பெலவீனங்கள் உண்டு. சில சரீரத்தில் உள்ளது. சில ஆவியில் உள்ளது. ஆகவேதான் நாம் சரீரத்தில் நன்றாக இருந்தாலும் ஆவியின் பெலவீனத்தால் நம் வாழ்வு துக்கம், துயரம், கண்ணீர் நிறைந்ததாக மாறிவிடுகிறது. '..உன் ஆத்துமா வாழ்கிறது போல் நீ எல்லாவற்றிலும், வாழ்ந்து சுகமாய் இருக்கும்படி வேண்டுகிறேன்' என்ற வார்த்தையின்படி நாம் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் பெலவீனங்களை சிலுவையில் சுமந்தார். மெய்யான இரட்சிப்பை ஏற்படுத்தினார்.

 

இன்று என் வியாதி என்னைத் துக்கப்படுத்துகிறது. இதிலிருந்து நான் விடுவிக்கப்பட முடியாது என்று ஆவியிலும், சிந்தையிலும் கலங்கும் தேவப்பிள்ளையே, உன் பெலவீனங்களைச் சுமந்த இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். நமக்காக இவ்வுலகத்தில் அவதரித்தவர், பாடுகளைச் சுமந்து நமது எல்லா பெலவீனங்களையும் சிலுவையில் தீர்த்துவிட்ட படியால்,இன்று கல்வாரி அன்புக்கு உன்னை அர்ப்பணித்து அவர் சமுகத்தை நோக்கு. தழும்புகளினால் குணமானீர்கள் என்ற வாக்கின்படி சுகமாவீர்கள். உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதில்லை என்ற கர்த்தர் பெரிதான காரியங்களைச் செய்வதை நீ காண்பாய். என்னுடைய பெலவீனத்தினின்று என்னை இரட்சித்த இயேசு கிறிஸ்து கட்டாயம் உங்களையும் இரட்சிப்பார்.

3. பிசாசின் பிடியிலிருந்து இரட்சிப்பு

"...அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப் பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்." லூக்கா 8:29

இன்று மனிதனை தேவ வழியிலிருந்து விலக்கி தன் வழியிலே நடத்தி, நித்திய ஆக்கினைக்குள்ளாக கொண்டு செல்ல வேண்டும்| என்பது பிசாசின் திட்டமும், செயலுமாயிருக்கிறது.

கெட்டுப்போனதை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து இவ்விதமான பிசாசின் பிடியிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தார். பிசாசானது மனிதனின் நலமான உள்ளத்தை கெட்டுப்போகச் செய்கிறது. இதனால் கோபம், பொய், வஞ்சகம், பகை, தீயவைராக்கியங்கள், தவறான முறையில் ஆதாயம் தேடுதல் போன்ற தீய பண்புகளை களையாக விதைக்கிறது. செம்மையாக உண்டாக்கப்பட்ட மனிதன், சீரை, சிறப்பை இழந்து வேதனையையும், தனிமையையும், சொல்லமுடியாத துயரத்தையும் அடைகிறான். பிசாசின் கிரியைகளை அழிக்க வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து, பிசாசின் கிரியைகளை அழித்து, அவனால் ஏற்பட்ட நோய்களையும் குணமாக்குகிறவராக இருக்கிறார். ஒருவன் பிசாசினால் பிடிக்கப்படும் போது, இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, வீட்டில் தங்காதவனாயும், கல்லறைகளில் தங்குகிறவனாயும், வனாந்தர வாழ்க்கை வாழுகிறவனாயும், தன்னையே சேதப்படுத்துகிறவனாயும் இருக்கிறான்.

பிசாசு பிடித்த மக்கள் அனுபவிக்கிற வேதனைகளையும், போராட்டங்களையும் அவர்கள் கூற கேட்டிருக்கிறேன். ஒரு சிலர் வாழ்க்கையில், கசப்படைந்து இவ்வாறு வாழ்வதைவிட தங்களை மாய்த்துக் கொள்வது நலம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இன்னும் சிலருக்கு தீயஆவிகள் நீ செத்து விடு, மாடியிலிருந்து குதித்துவிடு, இப்படிப்பட்ட தவறான ஆலோசனைகளைக் கொடுக்கின்றன. எவ்வாறு சாக வேண்டும் என்ற வழி முறைகளையும் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். பிசாசின் இத்தாக்குதலைத் தாங்க முடியாத பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்துவோ நமக்கு ஜீவனையும், பரிபூரணத்தையும் கொடுக்க வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டு சகோதரிகள் தங்கள் சகோதரனுக்காக ஜெபிக்கும்படி என்னிடம் அவனை அழைத்து வந்தனர். அழகான வாலிபன் அவன். அவன் கைகளில் காயங்களும், புண்களும் இருந்தன. அவனுக்காக ஜெபித்தபோது, கர்த்தருடைய ஆவியானவர் சில காரியங்களை வெளிப்படுத்தினார். வீடு எவ்வளவு தான் நல்ல பூட்டைக் கொண்டு பூட்டப்பட்டிருந்தாலும், சரியாக இரவு 12 மணி அளவில் பூட்டை உடைத்து. வீட்டைத் திறந்து கொண்டு வெளியேறி விடுவான். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அங்குள்ள ஆயுதத்தைக் கொண்டு தன் கைகளைக் குத்திக் கிழித்து, காயம் ஏற்படுத்தி, அக்காயத்திலுள்ள இரத்தத்தை உறிஞ்சுவான். இவ்விதமான காயங்களும், புண்களும் அவன் இரண்டு கைகளிலும் மிகுதியாய் இருந்தன. அவனுக்காக ஜெபித்தபோது, மூன்றாவது நாளில் கர்த்தர் அவனுக்கு விடுதலைத் தந்தார். நல்ல தெளிந்த புத்தியுடையவனாய் மாறினான். அவனுடைய காயங்களும், புண்களும் பரிபூரணமாய் ஆறின. ஒரு வேலையும் செய்ய இயலாதவனாயிருந்த அந்த வாலிபன், தற்போது அயல் நாட்டில் நல்லதொரு வேலையில் இருக்கிறான். சரீரத்தில் மட்டுமல்ல குடும்ப உறவுகளில், வியாபாரத்தில், சூழ்நிலைகளிலும் பிசாசு அநேக வேதனைகளையும், போராட்டங்களையும் உண்டு பண்ணுகிறான்.

இவ்விதமான பிசாசின் செய்கைகளை அழித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு விடுதலையைக் கொடுத்து நம்மை இரட்சிக்கிறார்.

4.பயத்தில் இருந்து இரட்சிப்பு

"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளான வர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்."             எபிரெயர் 2:15

இன்று மனிதனுக்குப் பலவிதமான பயங்கள் உள்ளது. இந்தப் பயத்தின் காரணமாக துக்கமும் துயரமும் அடைகிறான். இந்தப் பயத்தினால் சரீரத்திலும், ஆவியிலும் வேதனையும் சேதமும் அடைகிறான். '...பயமானது வேதனையுள்ளது' என்று 1யோவான் 4:18ல் பார்க்கிறோம். பயமானது மனிதரின் வாழ்வில் ஆவிகள் செயல்பட வழியாக இருக்கிறது என்று யோபு 4:14,15ல் பார்க்கிறோம். யோபு தனது வாழ்வில், 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' என்று யோபு 3:25ல் கூறியுள்ளதைப் பார்க்கிறோம். பயப்படுகிறவர்கள் இரண்டாம் மரணத்திலே பங்கடைவார்கள் என்று வெளி. 21:8 திட்டமாக கூறுகிறது. இன்று பலவிதமான பயத்தின் காரணமாக தன்னையே அழித்து, மாய்த்து கொள்ளுகிறவர்கள் ஏராளம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, உனது வாழ்வின் பயம் உன்னை அதிகமாய் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறதா? பயத்தினால் உள்ளம் கலங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாயா? பயத்தினால் சோர்வும் துக்கமும் நிறைந்து கண்ணீருடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாயா? உங்களது பயத்தில் இருந்து உங்களை விடுவிக்கத் தான் இரட்சகர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தோன்றினார்.

பேதுரு என்ற மனிதன், கடலில் மிகுந்த எதிர்காற்றில் சென்று கொண்டு இருந்த படகில் இருந்து இறங்கி கடலின்மேல் கர்த்தரின் கட்டளையால் நடந்து வந்தான். இவ்விதமாய் அற்புத செயலைச் செய்த பேதுரு திடீரென என எழுந்த அலையினால் பயந்தான். அதன் விளைவு அவ்வளவு நேரமும் கடல்மேல் நடந்த பேதுரு, கடலில் அமிழ்ந்து போகத் தொடங்கினான். பயமானது அவனின் அற்புதச் செயலை நிறுத்தியது. தேவனுடைய வல்லமையான வார்த்தையை உள்ளத்தில் இருந்து, ஒன்றுமில்லை என்ற வண்ணமாக மாற்றியது. அவனது வாழ்க்கை அமிழ்ந்து போவதைப் போல மாறியது. காரணம் பயம். இன்று அநேகர் இந்தப் பேதுருவைப் போல் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பயப்படுகிறவர்கள் சோர்வும், துக்கமும் அடைந்து வேதனை அடைகிறார்கள். பயந்து கடலில் அமிழ்ந்து கொண்டிருந்த பேதுரு, இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிட்ட உடனே கரம் நீட்டி உதவி செய்தார். அவனது வேதனை நிலையிலிருந்து இரட்சித்தார். ஆகவே இயேசு கிறிஸ்து பயத்தில் இருந்தும், பயத்தினால் வரும் வேதனையில் இருந்தும் இரட்சிக்கிறார். அது மரண பயமானாலும், எதிர்கால பயமானாலும், பொருளாதாரத்தைக் குறித்த பயமானாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவைகளி லிருந்து முற்றும் முடிய இரட்சிக்கிறவராக இருக்கிறார்.

5. சோதனையிலிருந்து நம்மை இரட்சிக்கிறார்

"கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்."2 பேதுரு 2:9  

இன்று மனிதன் பலவிதமான சோதனையில் சிக்கி வேதனை அடைகிறான். ஐயோ, நான் அநியாயமாய் இதைச் செய்து விட்டேனே என்றும் பலர் கலங்குகிறார்கள். 'அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.' யாக். 1:14. சோதனையானது எல்லாருக்கும் எந்த வயதுடைய வருக்கும் உண்டாகிறதை நாம் அறிவோம்.

ஒருமுறை ஆலயத்தின் ஆராதனை நேரத்தில், ஒருவர் புது சைக்கிளை ஒட்டிச் சென்றதைப் பார்த்தேன். அந்த மனிதன் யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஆராதனை முடிந்து வந்து பார்த்தபொழுது, அது என் சைக்கிள் தான் என அறிந்தபடியால், அவனது வீட்டிற்குச் சென்று அவன் தாயாரைப் பார்த்து, அடுத்தத் தெருவில் வசித்து வந்த என் வீட்டில் சைக்கிளை வைக்கச் சொல்லுங்கள் என்றேன், நம் தம்பி அப்படியெல்லாம் செய்யாது என்று சொன்னார்கள். ஆகவே என் வேலைக்குச் செல்ல டவுண் பஸ்சில் செல்ல வேண்டியதாயிற்று. அவன் எப்பொழுது என் கண்ணில் கிடைப்பான் என்று காத்திருந்தேன். இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுமுன் இருந்த எண்ணம் அது. ஒரு நாள் காலை நேரத்தில்  ஒரு பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தான். உடனே பஸ்சிலிருந்து இறங்கி அவனிடம் சென்று, ஒரு அறை அறைந்து, சட்டையைப் பிடித்து, சைக்கிளைக் கொண்டு வந்து வைக்கச் சொன்னேனே ஏன் வைக்கவில்லை என்று அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் இழுத்துச் சென்றேன். இன்ஸ்பெக்டர் இவனை ரொம்ப நாளாய்த் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று, அவனைத் தரையில் உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பித்தார். அவன் தன் உள்ளத்தில் உள்ளதை கூற ஆரம்பித்தான். எந்தப் புதிய வாகனத்தையும் கண்டவுடன் அதை ஒட்ட வேண்டும் என்ற ஆசை. நான் புதிய சைக்கிளையும், புதிய மோட்டார் சைக்கிளையும் எடுத்து விடுவேன் என்றான். நான் இது வரை 6 மோட்டார் சைக்கிள்களையும் 250 சைக்கிள்களையும் திருடினேன் என்று கூறினான். அவைகளை விற்கவில்லை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறேன் என்றான்.

இன்று பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் மற்றவனிடம் உள்ள பென்சில், ரப்பரைத் திருடுவதை நாம் பார்க்க கேட்க முடிகிறது. இது தவறான செயல் என்று மனச்சாட்சி உறுத்தினாலும் சோதனையை ஜெயிக்க முடியாது பாவத்தைச் செய்கிறோம். பின்பு இச்சையானது கர்ப்பந்தரிந்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்.

இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடன் பரிசுத்த ஆவியானவர் வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். அங்கு அவர் 40 நாட்கள் உபவாசித்தார். உபவாசம் முடிந்தபின் பசியுண்டான போது சாத்தான் தந்திரமான ஆலோசனையினால் சோதித்தான். ஆனால் சோதனையை வசனத்தினால் ஜெயித்தார். நாம் என்று கர்த்தருடன் நெருங்கி ஜீவிக்க முயற்சிக்கிறோமோ அன்று தான் சோதனை அதிகரிக்கும். கையில் பணம் இல்லாதிருந்தும் இந்தப் பொருளை வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டாகும். கடைக்காரர் பொருளை இன்ஸ்டால்மென்ட்டில் தருகிறேன் என்று சொன்னவுடன், பொருளை வாங்கி வீடு வந்து விடுகிறோம். நீயோ கடன் வாங்குவதில்லை என்ற கர்த்தரின் வார்த்தையை மீறி விடுகிறோம். ஆகவே 'சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்' என்றார். இயேசு கற்பித்த ஜெபத்தில், "எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்" என்றார். 'உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்...' என்று 1 கொரி. 10:13ல் பார்க்கிறோம். (1 தீமோ.6:9)ல் 'ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்  சோதனையிலும் கண்ணியிலும், மனுசரைக்  கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமாமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்' எனப் பார்க்கிறோம். இன்று அநேகர் செல்வந்தராக மாறவேண்டும் என்ற ஆசை நிறைந்து தவறான காரியங்களைத் துணிகரமாக செய்ய ஆரம்பித்துளார்கள்.

ஒருமுறை ஒரு சகோதரி வஞ்சகமான சொல்லுக்குத் தன்  செவியைச் சாய்த்தார்கள், ஈர்க்கப்பட்டார்கள். ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு மாத காலத்தில் 10ரூபாய் கிடைக்கும் என்ற வஞ்சக விளம்பரத்தைக் கேட்டு முதலாவது ஆயிரம் ரூபாயை அந்த ஸ்தாபனத்திற்குக் கொடுத்தார்களாம். ஒரு மாத காலத்தின் முடிவில் 10,000/- கிடைத்ததாம். அந்தச் சகோதரி அந்த ஸ்தாபனத்தை அநேகருக்கு அறிமுகம் செய்தார்களாம். இந்தச் சகோதரியும் தன்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் முதலீடு செய்தார்களாம். ஒரு நாளில் அந்த ஸ்தாபனத்தார் அந்த இடத்தைக் காலி செய்து எங்கோ போய் விட்டார்களாம். பணத்தை முதலீடு செய்தவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டுத்தான் நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம் என்று சண்டைக்கு வருகிறார்கள், அத்துடன் என் பணம் முழுவதையும் இழந்து விட்டேன் என்று கண்ணீரோடு கூறினார்கள். சத்துருவின் வார்த்தை சோதனையைப் பெருகச்செய்து ஏமாற்றத்தை உண்டாகச் செய்கிறது.

யோபு தன் பாடுகள் மத்தியில், தன் நம்பிக்கையில் குறைவு படாது கர்த்தரையே பற்றிக்கொண்டு இருந்தான். 'ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமா யிருக்கிறான்' யோபு 14:1ல் கூறினவன், 'ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' என்று யோபு 23:10ல் பார்க்க முடிகிறது. இந்த யோபுவை சோதனைக்குப்பின் இரட்டிப்பாக ஆசீர்வதித்தார்.

இன்று நம் வாழ்வில் சோதனையினால் சோர்ந்துபோகாமல் சோதனையில் இருந்து நம்மை இரட்சித்து எல்லாவித நன்மைகளினாலும், நீதியினாலும் நம்மை நிறைத்து கர்த்தர் ஆசீர்வதிப்பார். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; உருகுறவர்கனன்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு பெருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்' யாக். 1:12ன்படி நித்திய ஆசீர்வாதம் பெறுவோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                       கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                           சகோ. C. எபனேசர் பால்.