"...நான் உங்கள் பட்சத்திலிருந்து,

                                                                                           உங்களைக் கண்ணோக்குவேன்...'

                                                                                                                                                         எசேக்கியேல் 36:9

 

பிரிந்து வாழ்கிற குடும்பங்கள் இணைந்து வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த ஜெப நேரத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். பிரிந்து வாழ்கிற குடும்பங்களில் உள்ள குறைகள். குற்றங்களை மன்னித்து ஒப்புரவான வாழ்க்கை வாழ உதவி செய்யும். பிள்ளைகள் நலமாய் வாழுவார்கள் என்று தெரிந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்தோம். இணைந்து வாழ வேண்டும் என்று சகல காரியங்களையும் செவ்வையாய்ச் செய்தோம். ஆனால் இப்பொழுது பிரிந்து வாழ்வது வேதனையாயிருக்கிறது. எப்பொழுது திருமணமான இவர்களுக்குள்ளாய் உள்ள கசப்பு மாறும் என்று காத்திருக்கிறோம். ஒருவர் குற்றங்களை ஒருவர் மன்னித்து, எப்பொழுது மீண்டும் இணைவார்கள் என்று ஆவலோடு ஜெபத்துடன் காத்திருக்கிறோம். இயேசு கிறிஸ்துவே, இவர்களுக்கு இரங்கும் தேவனுடைய ஆலயத்தில், தேவ ஊழியர்கள் மூலம் இணைக்கப் பட்டார்களே, ஒருவருக்கொருவர் மரணம் நம்மை பிரிக்கும் மட்டும் உன்னை எனக்கு மனைவியாக/கணவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்தார்களே. இரங்கும் கர்த்தாவே. மீண்டும் சமாதானமாய், சுகமாய் இவர்கள் இணைந்து வாழ உதவி செய்யும். என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்று குறைவுபடாது. குற்றப்படுத்தாது சேர்ந்து வாழ உதவி செய்யும். பிரிந்தபடியால் உண்டான கவலை, அவமானத்தால் தூங்க முடியாது கஷ்டப்படுகிறவர்களை நீர் சந்தித்துப் பேசி சீர்ப்படுத்தும். கர்த்தாவே, விரும்பி திருமணம் முடித்தார்களே, ஆனால் இப்பொழுது இவர்கள் பிரிந்து வாழ்வதுடன் இணைவதற்குரிய பேச்சை எடுத்தால், அந்தப் பேச்சை பேசாதிருங்கள் என்று கோபப்படுகிறானே/கோபப்படுகிறாளே. கர்த்தாவே, இரங்கும். மனிதன் தனித்து இருப்பது நல்லதல்ல என்று தானே அன்று ஆதாமுக்கு ஏற்றத் துணையாக ஏவாளை உருவாக்கினீர். ஏதேன் தோட்டத்தில் இணைத்தீர். பிரிந்தவர்கள் நான் இப்படியே இருந்து விடுகிறேன் என்று கூறுகிறார்களே, என்னை இனி தொந்தரவு படுத்தாதீர்கள் என்று தன் அறையின் உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்கிறார்களே. கர்த்தாவே, என்று இந்த நிலைமை மாறும். கர்த்தாவே நீர் ஒருவரே இந்தப் பிரிவினையின் காரியத்தைச் சீர்ப்படுத்த முடியும். மனிதரின் இருதயங்களை நீர்க் கால்களைப் போல் திருப்ப வல்லவர் நீரே. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, தாமதியாதேயும். வீணான வழக்குகள் போடாதபடி ஒவ்வொருவர் உள்ளங்களிலும் பேசும். பிறந்த குழந்தைகள் என் அப்பா/ அம்மா எங்கே என்று கேட்கும்போது எங்கள் உள்ளம் உடைகிறதே. என்னுடன் படிக்கும் பிள்ளைகளின் தாய்/தகப்பனார் அவர்களை பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்து விடும்போது, ஏன் எனக்கு யாரும் இல்லை என்று கலங்குகிறார்களே. கர்த்தாவே, மீண்டும் இணைந்து வாழ இன்றே உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.