"மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்"

                                                                                                                                                                                                             மத்தேயு 18:11

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

தேவ சாயலால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் தேவனோடு சஞ்சரித்து வந்தார்கள். தேவ பிரசன்னம் இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கையிலே எந்தவிதமான குறைவுகள், பாடுகள், தேவைகள் இல்லாதிருந்தது. ஆனால் அவர்கள் தேவனுடைய சத்தத்துக்குச் செவிகொடாது, தந்திரமான சாத்தானின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம். என்ற பழத்தைப் பறித்து புசித்தார்கள். அதனால் தேவ மகிமையை இழந்து, தேவ பிரசன்னத்தில் இல்லாதபடி துரத்தி விடப்பட்டார்கள்

அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வேதனையும் சாபமும் பாடுகளும் பெருகிற்று. அவர்கள் தேவ சமுகத்திலிருந்து துரத்தப்பட்டு, மண்ணைச் சீர்ப்படுத்த அனுப்பப்பட்டு விட்டார்கள். ஜீவ விருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். தேவனின் உறவை இழந்து, கெட்டுப்போன வாழ்க்கையில் தாங்களே வியர்வை சிந்தி, தங்களுக்கு வேண்டிய ஆகாரத்துக்கு வேண்டியவைகளைப் பயிரிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தங்களின் நலமான நல்வாழ்வை இழந்து கேடும் பாடும் நிறைந்த வாழ்வை வாழவேண்டிய நிலை அடைந்தார்கள்.

இன்று கெட்டுப்போன காரியங்கள் அநேகம் உண்டு. விடுதலை அடைந்த இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் வழியாய் வந்தபோது கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.

ஒரு இடத்தில் தண்ணீர் இல்லை என்றால் அது எந்தவிதமான காரியத்திற்கும் பிரயோஜனமற்றதாய் மாறுகிறது. இஸ்ரவேலின் தேவன் கன்மலையைப் பிளந்து தங்களுக்குத் தண்ணீர் தர வல்லவர் என விசுவாசிக்கவில்லை. தண்ணீர் இல்லாத அந்த இடத்திலே தேவன் அவர்களுக்கு கன்மலையைப் பிளந்து தண்ணீர் கொடுத்தார். மன்னாவோடு தண்ணீரைப்  பெற்றவர்கள் கர்த்தாதி கர்த்தரை விசுவாசியாதபடி முறுமுறுத்துக் கொண்டே வந்தார்கள். இந்தப் பூமியிலே சில இடங்கள் சபிக்கப்பட்டதாய் இருக்கிறது. எரிகோவானது நுானின் குமாரனாகிய யோசுவாவின் மூலமாய் சபிக்கப்பட்டது  என்று நாம் அறிவோம். இதைப் போல சில இடங்கள் தீட்டானவைகளாய் இருக்கிறது. 'இது இளைப்பாறும் இடம் அல்ல. இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்' மீகா 2:10ன் படி தீட்டான இடத்திலே தங்கி இளைப்பாற முடியாது. அந்த இடத்தினால் நாம் நாசமடைவோம். ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வாறான இடங்களை எல்லாம் நல்ல கனி தருகின்ற ஆசீர்வாதமான இடமாக மாற்றுகிறவராய் இருக்கிறார்.

இன்னும் சில இடங்களில் தண்ணீர் கெட்டதாய் இருப்பதினால் அங்கு சுகமாய்த் தங்கி தாபரிக்க முடியாது போய்விடுகிறது. 2 இராஜா. 2:19ல் சபிக்கப்பட்டிருந்த இடமாகிய எரிகோவின் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி, இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது, தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். இதைக் கேட்ட எலிசா ஒரு புதுத்தோண்டியை எடுத்து அதிலே உப்புப்போட்டு கொண்டு வாருங்கள் என்றான். அதை அவ்விடத்தில் கொண்டு வந்தபோது நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கிய மாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறினதைப் பார்க்கிறோம். அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

இன்று மனிதர் கெட்ட வார்த்தைகளை நிறைவாய்ப் பேசுகிற பழக்கவழக்கம் உடையவர்களாய் இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கோபத்தினால் தங்கள் இல்லத்தில் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி தவறாய் பேசுகிறார்கள். எபேசி. 4:29ல் 'கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர் களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்' எனப் பார்க்கிறோம். கெட்ட வார்த்தைகளைப் பேசுவதினால் தேவனுடைய பிரசன்னம் நம்மைவிட்டு, நம் எல்லையை விட்டு விலகிவிடும்.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்க வந்தபோது, பிள்ளைகள் மற்றும் எல்லாருக்கும் ஜெபித்து விட்டு, உங்கள் மனைவிக்குத் தலையை ஸ்கேன் பண்ணுங்கள் என்று கூறினேன். நீங்கள் உங்கள் கோபத்தில் உங்கள் மனைவியைப் பார்த்து உனக்கு மூளை இருக்கிறதா? என்று அடிக்கடி வேதனையான வார்த்தைகளைச் சொல்லுகிறீர்கள். ஸ்கேன் பண்ணிவிட்டால் மூளை இருக்கிறது. என்று திட்டமாய் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினேன். நம்முடைய காதை உண்டாக்கின தேவன், நாம் பேசுகிற எல்லாக் காரியங்களையும் கேட்கிறவராய் இருக்கிறார். சங். 94:9ல் காதை  உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? என்று அழகாக சொல்லி இருக்கிறபடியால் நாம் நம்முடைய வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருப்போமாக.

 

இன்னும் மனிதனுடைய வாழ்க்கையிலே கெட்ட சிந்தை இருக்கிறது. 1 தீமோ. 6:3ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும் தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல் வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிற வனானால் அவன் ஆவிக்குரிய வாழ்க்கையில் கேடுண்டாக்கிக் கொள்கிறவனாய் இருக்கிறான். அவன் கெட்ட சிந்தையுள்ளவனாயும், யோசனையில் கெட்டவனாயும் மாறிவிடுகிறான். அவனுடைய செய்கைகள் எல்லாம் தேவனுக்குப் பிரியமில்லாததாய் மாறிவிடுகிறது. கிறிஸ்து இயேசுவின் சிந்தைக்கு மாறாக செயல்படுவதால் தேவ சமாதானத்தை இழந்து, வீணான சிந்தைகள், தவறான சிந்தைகளுக்கு ஆளாகி விடுகிறான். இந்த கெட்ட சிந்தையின் ஒரு பகுதி தான் தனித்து அமர்ந்து பகற்கனவாய் மாறிவிடுகிறது. இந்தப் பகற்கனவில் தவறான காரியங்களை எண்ணி, தங்கள் வாழ்க்கையை வேதனைப்படுத்திக் கொள்கிறார்கள். அண்மையில் ஒரு வாலிப சகோதரனுக்காக ஜெபித்த போது, தம்பி, நீ தனியாக அமர்ந்து பகற்கனவு காண்கிறாய். இது ஒன்றுக்கும் உதவாது. உன் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்துடன் நீ ஒரு விமானம் ஓட்டுகிற பைலட்டாக எண்ணிக் கொண்டு இருக்கிறாய். இதனால் உன் வாழ்க்கையில் நிலைவரமான ஆவி இல்லை. இன்று நீ இவ்வாறு அமர்ந்து பகற்கனவு காணாது உன்னைக் காத்துக் கொள். நீ ஆசீர்வதிக்கப்படுவாய என்று கூறினேன். ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் கெட்ட சிந்தைகளுக்கு இடம் கொடாதபடி கிறிஸ்து இயேசுவின் சிந்தையினால் நிறைந்து வாழ நாம் இடம் கொடுக்க வேண்டும்.

கெட்டுப் போவதற்குக் காரணம் என்ன?

1. கர்த்தரின் வழியை விட்டு விலகுவதினால்

"எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை." ரோமர் 3:12

            இன்றைக்கு நானே வழி என்று சொன்ன இயேசு கிறிஸ்து இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசியுங்கள் என்றார். கேட்டுக்குப் போகிற வழியானது விசாலமானது. சிலருடைய வழி மாறுபாடான வழியாய் இருக்கிறது. பிலேயாமின் வழியானது மாறுபாடாய் இருந்ததினால் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவன் ஏறிவந்த கழுதை முன் செல்லாதபடி தடை செய்தார். கழுதையின் வாயைத் திறந்து தீர்க்கதரிசியின் மதிகேட்டைச் சீர்ப்படுத்தினார். இன்றைக்கு அநேக தேவப்பிள்ளைகள் கர்த்தருடைய வார்த்தையை மீறி, தாங்கள் விரும்பினபடி தங்கள் காரியங்களைச் செய்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தையை மீறுவது பாவம் என்பதை உணராது, அறியாது உலகத்தாரைப் போல தங்கள் காரியங்களைச் செய்கிறார்கள். உபா. 15:6ல் "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை...” என்கிற வார்த்தையை மீறி எளிதாய் கடன் வாங்கி உலகத்தாரைப் போல விசாலமான வழியில் செல்வதற்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். கடன் வாங்கும் போது கடன் கொடுத்தவனுக்கு அடிமை என்று நீதி. 22:7 சொல்கிறது. இதைப் போல உலகத்தாருடைய வழிகளைப் பின்பற்றி புதுமனை திறப்பு விழா மற்றும் சில சடங்காச்சாரங்களைப் பின்பற்றி, கர்த்தரின் ஆசீர்வாதமான வழியை விட்டு விலகி, நன்மையைக் கெடுத்துக் கொள்கிற மக்களாய் இருக்கிறோம். இன்னும் சிலர் தங்கள் வீட்டைக் கட்டும்போது, அதின் அஸ்திபாரங்களிலே தவறானவைகளைப் புதைக்க இடம் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் பாரம்பரிய வழிகளிலே நடக்க இடம் கொடுக்கிறார்கள். இவ்விதமாய் செய்வதினால் கர்த்தரின் வழியை விட்டு விலகி கெட்டுப் போகிற மக்களாய் இருக்கிறோம்.

2. பொய்யான சாட்சியினால் கெட்டுப்போகிறோம்

''பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்..." நீதிமொழிகள் 21:28

இன்று பொய்யான சாட்சிகளைச் சொல்லுகிற செயலால் ஆதாயம் அடைகிறார்கள். ஒருமுறை ஒரு போதகர் ஒருவர் ஒரு மகளைக் குறித்து, நல்ல கிறிஸ்துவை விசுவாசிக்கிற தன் சபையின் அங்கத்தினர் என்று கூறினதால் மாப்பிள்ளை வீட்டார், அந்தப் பெண்ணை மகனுக்குத் திருமணம் முடிப்பதற்கு ஒழுங்கு செய்து திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த மகளுக்கோ வேத புத்தகத்தின் எந்தப் பகுதியும் தெரியாத நிலமை. தன் பழைய பாரம்பரிய பழக்கத்திற்கு இடம் கொடுத்து வாழ்ந்தபடியால், அந்தக் குடும்பத்தில் சமாதானமும், சந்தோஷமும் இல்லாது போயிற்று. கெட்ட சாட்சியின் நிமித்தமாய் கர்த்தருடைய நாமம் துாஷிக்கப் படுகிறது. சிலர் இவர்களினால் இடறல் அடைகிறார்கள். 1இராஜா.21ம் அதிகாரத்தில் நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் துாஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று ஒரு நிருபத்தை எழுதி யேசபேல் அனுப்பினாள். அந்தப்படியே பொய் சாட்சி சொல்ல வைத்து நாபோத்தை பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அவன் செத்தான் என்று யேசபேலுக்குச் சொல்லி அனுப்பினான். நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஆகாபுக்கு எலியா கூறினான். அதைப்போலவே நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கியது போல ஆகாபுடைய இரத்தத்தையும் அதே இடத்தில் நாய்கள் நக்கினது. பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்.

3. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கண்கள் கெட்டுப்போகும்.

"எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்து போகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்..." சகரியா 14:12

எருசலேம் என்பது கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. எருசலேம் என்னுடைய ஆலயம் என்று சொன்னவருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பும் போது கர்த்தருடைய கரம் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணும். கர்த்தர் யுத்தம் பண்ணும்போது கண்கள் கெட்டுப் போம். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். இந்த உலகத்தில் பாவத்தில் வாழ்கிற மக்கள் கண்களின் இச்சையினால் பாவங்களைச் செய்து, தங்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இன்று யார் யார் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலே கண் கெட்டுப் போம். ஒருவனுடைய கண்ணானது கெட்டுப்போய் குருடாய் இருக்குமானால் அவர்களுக்கு யாராவது ஒருவர் உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலமை உருவாகும்.

4. செத்த ஈக்கள் கெட்டுப்போகப் பண்ணும்

"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்..." பிரசங்கி 10:1

கர்த்தருடைய பிள்ளைகள் நற்கந்தம் வீசும் மக்களாய் இருக்கிறார்கள். 'இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும் கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும் நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்' என்று 2 கொரி. 2:15ல் பவுல் எழுதி யிருப்பதைப் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாசனையானது கர்த்தருடைய நாமத்திற்குச் சாட்சியாக மேன்மையாக இருக்க வேண்டும். நமக்குள் தேவனால் கொடுக்கப்பட்ட நற்கந்தம், மதியீனச் செயலினால் கெட்டுப் போய்விடுகிறது. யாத். 16:20ல் மோசேயினுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதபடி அன்றன்று சேகரிக்கப்பட்ட மன்னாவை மீத்து வைத்தார்கள். ஆனால் அது அடுத்த நாளிலே நாற்றமெடுத்தது என்று    பார்க்கிறோம். கீழ்ப்படியாமையின் பாவம் நம்முடைய நல்வாழ்வில் உள்ள மேலான காரியம் கெட்டுப்போகவும், நாற்றமெடுக்கவும் செய்துவிடுகிறது. இன்னும் மனிதனுடைய வாழ்க்கையில் சங். 38:5ல் மதிகேட்டினால் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது என்றும், சங். 14:1ல் தேவன் இல்லை என்று மதிகேடன் சொல்லுகிறான் என்றும் பார்க்கிறோம்.

என்னோடு பணி செய்த ஒருவர் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய கட்சியைச் சார்ந்தவர். கிறிஸ்தவர்களைக் குறுக்குக் குச்சிக்காரர் என்று  சொல்லுவார். அவருக்காக குடும்பத்திற்காக, இரட்சிப்பிற்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் வெளிப்படுத்தின காரியத்தை மனதில் வைத்து அவருக்காக சனிக்கிழமை இரவிலே ஜெபித்தேன். திங்கட்கிழமை காலையிலே அவரைச் சந்தித்த போது, அந்தக் காரியங்களைச் சொல்லி அவருடன் பேச ஆரம்பித்தபோது, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று மாற்றம் அடைந்தார். என் கூட்டம் நடைபெறும் இடத்திலெல்லாம் பங்கு பெற்று ஜெபிக்க வருவார். நீதி. 6:32ல் 'ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்' எனப் பார்க்கிறோம். இவ்விதமாய் நாம் செய்கின்ற பாவத்தினால் நறுமணம் வீசவேண்டிய மேன்மையை இழந்து, சாட்சியற்ற நாற்றமெடுத்த வாழ்வை வாழ்கிற மக்களாய் மாறி விடுகிறோம்.

கெட்டுப்போகாமல் வாழ என்ன செய்ய வேண்டும்?

  1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும்

''தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்."                              

                                                                                                             யோவான்3:15

எபி.11:1ல் விசுவாசம் என்றால் நம்பப்படுகிறவைகளின். உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. இந்த விசுவாசம் நிறைவாய் இருக்கும்போது நாம் விரும்புவதற்கும் வேண்டுவதற்கும் மேலான விதங்களில் கர்த்தரின் வல்லமையான மகத்துவமான செய்கைகளைக் காணமுடியும். கானானிய ஸ்திரீ இயேசு கிறிஸ்துவிடம் வந்த போது, தன்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்றாள். இயேசு கிறிஸ்துவோ எந்த பதிலும் தரவில்லை. அவளை அனுப்பிவிடும் என்று சீஷர்கள் பரிந்து பேசினார்கள். ஆனால் இயேசுவோ காணாமல் போன இஸ்ரவேல் ‘ வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த ஸ்திரீ அவரிடம் வந்து, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். இயேசு கிறிஸ்து அந்த மகளைப் பார்த்து, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல என்றார். உடனே அந்த ஸ்திரீ, மெய் தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்று தன்னைத் தாழ்த்தினாள். இயேசு கிறிஸ்து அந்த மகளைப் பார்த்து உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

நம்முடைய தேவன் நமக்குள் உள்ள விசுவாசத்தைக் காண்கிறவர். உன் விசுவாசம் பெரியவைகளாயிருக்கும் போது விசுவாசத்தினால் பெரிய அற்புதம் நடைபெறும். உன் விசுவாசத்தை இழக்கும் போது, கர்த்தர் உனக்கு அருளிய வார்த்தையின் மேன்மையை, நன்மையை இழந்து போவாய். இயேசு கிறிஸ்து கொந்தளிக்கிற கடலின் மத்தியில் பேதுருவை அவனது விருப்பப்படி தம்மிடத்தில் வா என்று அழைத்தார். படகில் இருந்து இறங்கி கடல்மீது அற்புதமாக நடந்து இயேசுவிடம் சென்றான். அவனுக்குள் பயம் தோன்றின போது, கர்த்தரின் வார்த்தையின் மேன்மையான கடலில் நடக்கும் வல்லமையை இழந்து, கடலில் மூழ்கத் தொடங்கினான். ஆனால் பேதுருவோ நண்பரையோ, சகோதரரையோ நோக்காமல் மீன் பிடிக்கும் தொழிலை உடைய பேதுரு தன் பெலத்தின்மீது நம்பிக்கை வையாது, இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிட்டபடியால், குறைந்து போன அவனது விசுவாசத்தைச் சுட்டிக்காட்டும்படியாக அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்று கூறி, கடலில் முழ்கிக்கொண்டிருந்த அவனைத் துாக்கியெடுத்தார். நாம் பயப்படும்போதும், சந்தேகப்படும் போதும் நமது விசுவாசம் அற்ப விசுவாசமாக மாறிவிடும். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்ற வார்த்தையின்படி (யோவான் 1:12) பிள்ளைகளாகும்படி அதிகாரத்தைப் பெறுகிறோம்.

2. மனந்திரும்ப வேண்டும்

“...நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்." லூக்கா  13:5

 

கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் ஒரு திருப்பம் பெற்ற மறுஜென்மம் அடைந்த துாய வாழ்க்கை ஆகும். இன்று ஒருவேளை என் பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள், நான் ஆலயம் செல்கிறேன். ஆராதனையில் பங்கு பெறுகிறேன், காணிக்கைச் செலுத்துகிறேன், பல ஊழியங்களிலே பங்கெடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம். மனந்திரும்பின வாழ்க்கை என்றால் மாயையான ஒரு வாழ்க்கை அல்ல. தேவ இரக்கம் பெற்ற புதிய வாழ்க்கையாகும். நான் செய்த சகல பாவங்களையும் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு மன்னித்து விட்டார் என்கிற நிச்சயத்தைப்  பெற்ற புது வாழ்வாகும். இதோ, என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று தன் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்ட தாவீது, தேவ சமுகத்திலே கெஞ்சின காரியத்தை அறிவோம். நம்மை அறியாது பலவிதமான பாவங்களை நம்முடைய இளம் பிராயத்திலிருந்து செய்து கொண்டே இருக்கிறோம். இந்தப் பாவங்கள் தேவனுக்கும் நமக்கும் உள்ள நல்ல உறவை தடை செய்கிறது. பாவங்கள் மன்னிக்கப்படும் போது நமக்குள் உள்ள பிரச்சனைகள் தீரும், பெலவீனங்கள் நீங்கும், காயங்கள் ஆறும், கண்ணீர் துடைக்கப்படும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் செய்த முதலாவது பிரசங்கம் 'மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்பதே. தாவீது தான் செய்த பாவம் தனக்கு முன்பாக எப்பொழுதும் நிற்கிறது. என்று கதறி அறிக்கை செய்தான். எத்தனை முறை உன் வாழ்க்கையிலே துணிகரமான பாவங்களை நீ செய்திருக்கிறாய்? எத்தனை முறை உன் பெற்றோருக்கு, கணவருக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்? தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்ற வார்த்தையின்படி அவரது இரக்கத்தினால், இரத்தத்தினாலே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மனதிலே திருப்பம் அடைந்த ஒரு நல்ல வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, நாம் கெட்டுப்போகாமல் தேவ கிருபையைப் பெற்றுக்கொள்வோம். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் பழையவைகள் ஒழிந்தன. எல்லாம் புதிதாயின என்ற புதிய வாழ்க்கையை அடைவோம்.

3. இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படியும்போது

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை... " யோவான் 10:27,28

 

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது. அந்த சத்தம் பலவிதமான மகத்துவங்களைச் செய்யக்கூடியது. ஏசாயா 6:6ல் பலிபீடத்தின் அக்கினி அவன் உதடுகளைத் தொட்டபோது, அவன் சுத்தமானான். உடனே அவன் கர்த்தரின் சத்தத்தைக் கேட்கிறவனானான். யாரை நான் அனுப்புவேன். யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டபின், இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்றான். யோவான் 10:27 ல் என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். அமர்ந்த மெல்லிய சத்தமானது நம்முடைய வாழ்க்கையை முழுமையாய் மாற்றக்கூடியது. சவுல் கர்த்தரை ஏற்றுக் கொண்ட மக்களை, சீஷரை பயமுறுத்தி கொலை செய்யும்படி எருசலேமுக்கு அழைத்து வர தமஸ்குவுக்கு வந்தான். வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவனைச் சுற்றி பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற சத்தத்தைக் கேட்டபின் அந்தச் சத்தமானது அவனை மாற்றியது. ஆண்டவரே நீர் யார் என்று கேட்டான். நீ துன்பப்டுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கர்த்தருக்குத் தன்னை அர்ப்பணித்தான். சத்தத்தைக் கேட்கும்போது நமது வாழ்க்கையிலே மாற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகத்தக்கதாக கர்த்தரின் கிரியைகள் நடைபெறும்.

4. புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ள வேண்டும்

 "அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." எபேசியர் 4:22, 23, 24

இன்று நம்முடைய வாழ்க்கையை மோசம் போக்கும் இச்சையினாலே கெட்டுப்போகிற மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்தில் புதிதான ஆவியுள்ளவர்களாக வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிற வாழ்க்கைக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நாம் எவ்விதமாய் இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ள முடியும் என்கிற கேள்வி எல்லாருக்கும் ஏற்படுகிறது.

ஞானஸ்நானம் தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிற ஒரு செயல்.  அதோடு ஞானஸ்நானமானது பாவத்திற்குச் செத்து நீதிக்குப் பிழைக்கின்ற மக்களாய் இருப்பதோடு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுகிறோம். இவ்விதமாய் நாம் ஞானஸ்நானம் பெற்று மோசம் போக்கும் பழைய சுபாவங்கள். பழைய இச்சைகள் நம்மை விட்டு நீங்குவதற்கு முழுமனதோடு இன்றே இப்பொழுதே இயேசுவின் பாதத்தில் நம்மைத் தாழ்த்தி, அவருடைய இரக்கத்தைப் பெற காத்திருப்பதோடு அவருடைய நல் ஆவியினால் இன்றே நிரப்பப்பட நம்மை ஒப்புக்கொடுப்போமாக. கர்த்தரே ஆவியானவர். கர்த்ருடைய ஆவி எங்கேயோ அங்கு விடுதலையுண்டு என்ற வார்த்தையின்படி விடுதலை பெற்றவர்களாய் பரிசுத்த ஆவியினால் நிறைந்து கெட்டுப்போகாத, நல்ல வாசனை வீசுகிற வாழ்க்கையை இன்றே பெற்றுக் கொள்வோமாக.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                         கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                       சகோ. C. எபனேசர் பால்.