''...நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

                                                                                                                                                                                        1 யோவான் 5:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன். இந்தப் புதிய ஆண்டில் கர்த்தர் தாமே நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக.

ஒரு குடும்பத்தார் தங்களின் மூத்த மகனின் படிப்புக்காக மிகவும் கவலையுடன் ஜெபிக்க வந்தார்கள். இப்பொழுது 12ம் வகுப்பு படிக்கிறான், மிகுந்த போராட்டமாக இருக்கிறது என்றும், தேர்வு எழுத செல்லாதிருக்கிறான் என்றும் கலங்கினார்கள். கலங்கின பெற்றோர்கள் விசுவாசத்துடன் கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அந்த மகன் 12ம் வகுப்பு பொதுத்தேர்விலே நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்தான். அத்துடன் அவன் பொறியியல் கல்லூரியில் தன் மேல்படிப்பைப் படித்து ஒரு என்ஜினியராக மாறினான். அவனது வாழ்வில் நினையாத ஜெயத்தைப் பெற்றான்.

என்னுடைய மகன்/மகள் சரியாகப் படிக்க மாட்டேன் என்று கலங்குகிற தேவப்பிள்ளையே, உன் எல்லையில் உள் பிள்ளைகளுக்கு ஜெயம் தருகிற தேவன் இன்று ஜீவிக்கிறார். அந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஜெயம் தருகிறவர். ஐயோ, என் பிள்ளை என்ன ஆவாள்/ஆவான் என்று கலங்க வேண்டாம்.படிக்கிற படிப்பை வெற்றியாக முடிப்பானா, முடிப்பாளா என்று பயப்படவும், கலங்கவும் வேண்டாம். "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்." என்ற சங். 33:9ன் படி ஆலோசனை தந்து, ஜெயம் கொடுத்து, உங்களை ஆசீர்வதிப்பார். அத்துடன் தடை செய்கிற எல்லா காரியங்களும் நீங்க கட்டளையிடுவார். ஒரு வேளை இந்தத் தடை நன்றாய் படிப்பதற்கு அவர்களின் சிந்தையைக் கெடுத்துக் கொண்டிருக்கலாம். எல்லா நேரமும் விளையாட்டு, போன், லேப்டாப், டி.வி. என்று அதற்கு அடிமையாக இருக்கலாம். ஆனால் பாவியை நீதிமானாக மாற்றுகிறவர், துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுகிறவர், இருளடைந்த வாழ்வைப் பிரகாசிக்கச் செய்ய வல்லவர், உங்கள் பிள்ளையை வெற்றியினால் அலங்கரிப்பார். அதிசயம் செய்வார். 'ராஜாவின் இருதயம்  கர்த்தரின் கையில் நீர்க்கால் களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.' என்ற நீதி. 21:1ன் படி உங்கள் பிள்ளையின் இருதயத்தைத் திருத்தி, திருப்பி ஜெயம் தருவார். விசுவாசத்தில் குறைவுபடாமல், ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                              சகோ. C. எபனேசர் பால்.