"இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்,

                                                                      சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்;

                                                                                                   ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது."

                                                                                                                                                                                      லூக்கா 10:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். புதிய ஆண்டுக்குள் பிரவேசித்த நம்மை இம்மட்டும் கண்மணியைப் போல் கர்த்தர் காத்து வருவதினால் நாம் கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக.

இன்று பலவிதமான சேதங்களை உலகில் காண்கிறோம். இயற்கையினால் உண்டாகும் சேதங்கள், விரோதங்களின் செயல்களினால் உண்டாகும் சேதங்கள், வியாதிகள், பாவங்கள், பகையினால் உண்டாகும் சேதங்கள், விபத்துகளினாலும், கொலைகளினாலும் உண்டாகும் சேதங்கள் ஒவ்வொருநாளும் நாம் சேதங்களைக் காண்கிறோம். செய்தித்தாளின் மூலம், T.V. மூலம் கேட்கிறோம், காண்கிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்திருக்கிறார். அதில் ஒருபகுதிதான் 'ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது' என்பதாகும்.

சேதம் என்று சொல்லும்போது அதில் பலவிதமான காரியங்கள் அடங்கியிருக்கிறது. உயிர்ச்சேதம், வியாபாரத்தில் சேதம், விவசாயத்தில் சேதம், சமாதானத்தில் சேதம், கருச்சேதம் என்று நம் வாழ்வில் உள்ள சேதங்களை நாம் காண்கிறோம். பொருட்களில் சேதம், உடைகளில் சேதம் என்று பல சேதங்கள் இன்று மனிதரின் வாழ்வில் தோன்றுவதுடன், மிகுதியான துக்கத்தை, துயரத்தை, கண்ணீரைப் பெருகச் செய்கிறது. சிலர் சேதமடைந்த வாழ்வில் அநாதையாகி என்ன செய்வது என்று கலங்குகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட வாகன விபத்து அவ்வீட்டில் இருந்த 5 வயது மகளையும், 7 வயது மகனையும் அநாதைகளாக்கி விட்டது. இன்று பலவிதமான வேதனையின் நிலை உண்டாவதினால் கலங்குகிறோம்.

ஒருமுறை இலங்கை தேச ஊழியத்தின்போது ஒரு சிறுமியைச் சந்தித்தோம். பல காயங்கள் சரீரத்தில் இருந்தன. அவளைக் கேட்டபோது யுத்தத்தில் குண்டு வெடித்ததால் உண்டான காயங்கள் என்றாள். ஒரு பாடலைப் பாடி அதற்கு ஏற்ற நடனத்தை ஆடிக்கொண்டு இருந்தாள். தான் ஒரு அநாதை என்பதை மறந்து தன் காரியங்களைச் செய்து கொண்டிருந்தாள். யுத்தத்தினால் உண்டான சேதத்தை உணர முடிந்தது.

சேதங்கள் சில அலங்காரக் காரியங்களைச் செய்யும் போதும், சில கட்டிடங்களைக் கட்டும்போதும், சில தங்க நகைகளில் ஆபரணங்களைச் செய்யும் போதும் ஏற்படுகிறது. தங்கள் ஆதாயத்திற்காக செய்வோரும் உண்டு. அச்சிடும்போது சரியாக அச்சு விழாதபடியால் தாள்கள் சேதம் அடைகிறது. மனுஷன் தன் சரீரத்தில் உள்ள அவயவங்களின் சேதத்தினால் ஜீவனையே இழந்து போகிறான்.

சிலர் விசுவாசமும், நல்மனச்சாட்சியும் உடையவர்களாய் இருப்பதற்குப் பதிலாக, தங்கள் நல் மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்துகிறார்கள். விசுவாசம் குறைவுப்பட்டு வாழும்போது சந்தேகமும், பாடுகளும் பெருகி விடுகிறது.

இவ்விதமாக பலர் வாழ்வில் பலவிதமான சேதங்களை அடைந்து கவலையும் கண்ணீரும் அடைகிறார்கள். சிலர் கசந்த வாழ்வில் தவறான தீர்மானங்களைச் செய்து, தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். சிலர் வாழ்வில் உண்டான சேதத்தால் மன அமைதியை இழந்து ஏன் இந்த வாழ்க்கை, சாவு வராதா என்ற எண்ணத்துடன் வாழ்கிறார்கள். சிலர் மனம் உடைந்து,புத்தித் தெளிவை இழந்து பதறியும், பைத்தியமாயும் வாழ்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எந்த சேதமுமடையாத வாழ்வைத் தருகிறவராக இருக்கிறார். அப்படிச் சேதங்கள் வந்தாலும் அதை மேற்கொள்ளும் பெலத்தை, திடமனதை, தைரியத்தைத் தந்து நடத்துவார்.

ஏன் மனிதரின் வாழ்வில் சேதம் உண்டாகிறது?

1. கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்வதால் சேதம் உண்டாகும்

''எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்..."நீதிமொழிகள் 8:36

மனிதன் பலவிதங்களில் பாவம் செய்கிறான். பலவிதமான பாவங்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது. சிலவற்றை மீறுதல் என்றும், சில பாவக்காரியங்களை அக்கிரமங்கள் என்றும், சிலவற்றை ஆவியில் உண்டாகும் பாவம் என்றும், கபடம் என்றும் நாம் சங்கீதம் 32:1,2ல் மூலம் தெரிந்து கொள்ளுகிறோம். கர்த்தர் அக்கிரமத்தை எண்ணாதிருக்கிறார் என்றும், சில பாவங்கள் மூடப்படுகிறதாயும் இருக்கிறது. சில பாவங்களை இருதயத்திலே செய்துவிடுகிறோம். மத்தேயு 5:28ல் 'ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. என்று பார்க்கிறோம். அவனது நினைவிலும், எண்ணங்களிலும் பாவம் இருக்கிறதை தாவீது உணர்ந்து, தன் பாவம் மன்னிக்கப்பட கெஞ்சினான். அதே சங்கீதத்தில் 4ம்வசனத்தில் தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ் செய்தேன் என்று கர்த்தரிடம் அறிக்கை செய்வதைப் பார்க்கிறோம்.

யோசேப்பு ஆதி 39:9ல் பாவசோதனை உண்டான போது, அந்த பாவத்திற்கு உட்படாது, தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்வது எப்படி என்று பாவத்திற்கு விலகினான். உபா.9:16ல் 'நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப் பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்." என்று தன் கையில் இருந்த கர்த்தர் கொடுத்த கற்பனைகள் எழுதப்பட்ட பலகையை ஓங்கி எறிந்து அவைகளை உடைத்துப் போட்டதைப் பார்க்கிறோம்.

ஏலி தன் பிள்ளைகளின் பாவமான வாழ்க்கையைக் கேட்டபோது அவன் மிகவும் கலங்கினான். 'மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதை விசாரிப்பார்கள், ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பம் செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல் கேளாமற் போனார்கள், அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.' ஏலியின் பிள்ளைகள் கர்த்தருக்குக் கொண்டுவரும் காணிக்கை களைத் தங்கள் விருப்பப்படி வாங்கினார்கள். பலவந்தமாய் இறைச்சியை எடுத்துக் கொண்டார்கள். வந்த பெண் மக்களுடன் விபசாரம் செய்து, பொல்லாப்பை நடத்தினார்கள். இதின் விளைவு கர்த்தர் தமக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை அழிக்க சித்தம் கொண்டார். அங்கு உண்டான யுத்தத்தில், கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்த ஏலியின் குடும்பத்தார் மரணமும், துயரமும் அடைந்தார்கள். தேவனுக்கு விரோதமாகப் பாவஞ் செய்தால் துக்கமும், துயரமும் அடைவார்கள், சேதம் அடைவார்கள். சங்காரமும் வேதனையும் உண்டாகும்.

கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்கள் தங்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களைச் சேதப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

2.எச்சரிப்பை அசட்டை செய்வதால் சேதம் உண்டாகும்.

"மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்." அப்போஸ்தலர் 27:10

இவ்விதமான எச்சரிப்பை அசட்டை செய்த நூற்றுக்கதிபதி, மாலுமியையும், கப்பல் எஜமானின் வார்த்தையையும் நம்பி அந்தக் கப்பல் யாத்திரையைத் தொடங்கினார்கள். காரியங்கள் கைகூடிவந்தால் நல்லது என்று பயணத்தைச் செய்தார்கள். 'பொய் சொல்ல நம்முடைய தேவன் மனுஷனல்ல' என்ற வாக்கின்படி கப்பல் யாத்திரையைத் துவங்கிய சற்று நேரத்தில் காற்று பயங்கரமாக வீச ஆரம்பித்தது. இதினால் செல்ல வேண்டிய திசையை நோக்கிச் செல்ல முடியாது போயிற்று. அத்துடன் என்ன ஆகுமோ என்ற கவலையுடன் போராட்டத்துடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இனித் தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்த அவர்களைப் பவுல் போஜனம் பண்ணவும், நம்பிக்கையுள்ளவர்களாய் மாறவும் வழிநடத்தினான். கடைசியில் இருபுறமும் கடல் மோதிய இடத்தில் கப்பலைத் தட்டவைத்தார்கள். முன்னணியம் அசையா திருந்தது. பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்து போயிற்று. கப்பலுக்குச் சேதம் உண்டானது.

ஒருமுறை ஒரு சகோதரர் நான் வெளிநாடு சென்று வேலை செய்ய இருக்கிறேன். அதற்காக ஜெபியுங்கள் என்று மிகுந்த அன்பாகக் கேட்டுக் கொண்டார். அவருக்காக ஜெபித்த நேரத்தில் அவர் மீண்டும் திரும்பி விடுவார் என்றும், அவரின் பயணம் அந்தநாட்டில் லாரியிலும், செல்லவேண்டிய நிலை உண்டாகும் என்றும் கூறினேன். நான் செல்வதற்கு எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு தன் பயணத்தை மேற்கொண்டார். ஆனால் போராட்டமாக அவருக்கு முடிந்தது. மிகுதியான பணத்தை அதில்இழந்தார். உள்ளமும் சோர்வினால் கலங்கியது.

நம் வாழ்வில் கர்த்தரின் வார்த்தைக்கும் ஆலோசனைக்கும் இடம் கொடுக்க வேண்டும். அவர் நம்மை அனுதினமும் நடத்தி வற்றாத நீரூற்றைப் போல் நம் வாழ்வில் அதிசயம் செய்வார்.

ஆலோசனையைக் கேட்டு அதன்படி செய்யாதிருப்பதைக் காட்டிலும், ஆலோசனையைக் கேட்காமல் இருந்தால் நலம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஒரு நாமம் ஆலோசனைக் கர்த்தராகும். நம் வாழ்வில் ஒவ்வொரு சிறிய பெரிய காரியங்களிலும் ஆலோசனைத் தருவார். அதினால் மகிழ்ச்சியும் மேன்மையும் அடைவோம்.

அநேகர் தங்கள் வாழ்வில் ஆலோசனையின்படி நடவாதபடியால் உயிர்ச் சேதமே அடைந்திருப்பதைப் பார்க்கிறேன். ஒருமுறை ஒரு சகோதரர் தன் வாகனத்திற்காக ஜெபிக்க அழைத்தார். அந்தச் சகோதரரைப் பார்த்து இந்த வாகனம் வேண்டாம் என்று ஆலோசனைக் கூறினேன். கொஞ்சநாள் கழித்து விற்று விடுகிறேன் என்று சொன்னார். ஆனால் சிலவாரங்களிலேயே அவர் விபத்துக்குள்ளாகி மரித்துப்போனார். முழுச்சேதம் அடைந்தார். தங்களுக்கு கேடுண்டாக ஆலோசனையைத் தள்ளினார்கள் என்றப்படி, தங்கள் வாழ்வில் கேடுகளையும் சேதங்களையும் அடைகிறார்கள்.

இன்று ஏராளமானவர்கள் கர்த்தரால் அருளப்படும் எச்சரிக்கையை அசட்டைச் செய்து பலவிதங்களில் நஷ்டமும் சேதங்களும் அடைகிறார்கள்.

3. பிசாசின் செயலினால் சேதம் உண்டாகிறது.

"திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." யோவான் 10:10

பிசாசானவன் பலவிதமான செயலை நமக்கு விரோதமாகச் செய்து, மிகுதியான சேதங்களை உண்டாக்குகிறவனாக இருக்கிறான். நம்முடைய கையின் பிரயாசங்களைச் சேதப்படுத்துவது அவனது திட்டம் ஆகும்.

ஒருமுறை ஒரு Engineer தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனக்கு அறிமுகமான ஒரு தொழிற்சாலையில் உள்ள canteenல் மதிய ஆகாரம் செய்யும் காரியத்தைச் செய்தார்கள். கொஞ்சகாலத்தில் மிகப்பெரிய அளவில் எல்லாவற்றையும் செய்ய சூழ்நிலை உருவானது. எல்லாரும் புகழத்தக்கதான அளவில் காரியங்கள் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் வேலைசெய்த ஒருவர் பிரிந்து பொறாமையினால் இதேத் தொழில் செய்ய ஆரம்பித்தார். இந்த நிலையில் முதலில் ஆரம்பித்து பல தொழிலகங்களுக்கு மதிய ஆகார பொட்டலத்தைக் கொடுத்தவர் எல்லையில் புரியாத பிரச்சனைகள் உண்டாயிற்று. அவர் அனுப்பும் பொட்டலங்களில் சிலவற்றில் பல்லி, கரப்பான்பூச்சி இருக்க ஆரம்பித்தது. அவருக்குப் புரியவில்லை. துாய்மை நிறைந்த இடத்தில் மிக சுத்தமான விதத்தில் செய்த பொட்டலங்களில் எவ்விதமாக இந்தநிலை ஏன் ஏற்பட்டது என்று புரியவில்லை. சத்துருவின் தந்திர செயல் என்று மாத்திரம் அறிய முடிந்தது.

போட்டி, பொறாமைகளினால், பிசாசுகளின் தந்திர செயலினால் சேதங்கள் உண்டாக்குகிறவர்கள் இன்று அதிகமாக பெருகி இருக்கிறார்கள். காலம் சரியில்லை, நேரம் சரியில்லை, என் தலையெழுத்து என்றும் திருமணமாகி வந்த மக்களின் தோஷம், சாபம் என்றும் கருதி சமாதானத்தைத் தேடுகிறவர்களும் உண்டு. இவர்தான் இவைகளைச் செய்திருக்க வேண்டும் என்று ஊகித்து அவருக்கு விரோதமாக சூனியங்களைச் செய்கிறவர்களும் உண்டு.

இவ்விதமாக தீய ஆவிகளைக் கொண்டு பிறருக்குச் சேதங்களைச் செய்கிறதை நாம் காண முடிகிறது.

4. இயற்கையின் மூலம் உண்டாகும் சேதங்கள்

"வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; ..."யோபு 1:19

இயற்கையின் சீற்றத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் மரித்துப் போவதால் உயிர்ச்சேதங்கள் மிகுதியாகிறது. பூமியதிர்ச்சி, சூறாவளிக்காற்று, புயல், வெள்ளம் போன்ற காரியங்களை நாம் பார்க்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. நன்றாக நீந்த தெரிந்த ஒரு மகனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் சொருகுமணல் இருப்பதை அறியாமல் ஆற்றில் இறங்கி, வேதனையான முடிவடைந்தார்கள். அந்த இடத்தில் இருந்த ஆற்றின் மண்ணின் தன்மையை அறியாதபடியால் இந்த போராட்டமான மரணத்தைச் சந்தித்தார்கள்.

எனக்கு உறவினர் ஒருவர் குளிக்கச் சென்றார். நன்றாக நீந்தத் தெரிந்தவர். ஆனால் கடலில் இருந்த நீரோட்டம் அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர் மரித்துப் போனார். இயற்கையின் தன்மை நம்மை சேதமடையச் செய்கிறது.சில பயிர்வகைகள், நெல் போன்றவைகள் அறுவடைக்கு ஆயத்தமான காலத்தில், அடிக்கும் புயலினால், வெள்ளத்தினால் சேதமடைகின்றன.

இன்று மனிதரின் வாழ்வில் பல உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் இயற்கை சீற்றத்தினால் உண்டாகிறது.

ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது என்ற வாக்கு நிறைவேற நாம் என்ன செய்யவேண்டும்?

1. விசுவாசமுள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் வாழ்வில் சேதம் அணுகாது

"சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது ..." மாற்கு 16:18

இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்றும், நமக்காக ஜீவனை சிலுவையில் கொடுத்தாரென்றும், அவரின் இரத்தத்தால் என் பாவம் கழுவப்பபட்டது என்றும், மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார் என்றும், மீண்டும் பூமிக்கு வருவார் என்றும் நம்புகிறவர் வாழ்வில் சாவுக்கேதுவான ஒன்றும் அவர்களைச் சேதப்படுத்தாது.

கர்த்தரின் மீதுள்ள விசுவாசம் நமக்குள் எப்படி இருக்கிறது? உங்கள் விசுவாசம் நிறைவாயிருக்கும்போது அதிசயமான கர்த்தரின் அதிசயத்தைக் காணமுடியும். நம்முடைய நம்பிக்கையின் உறுதி நிறைய நிறைய, சேதங்கள் ஒன்றும் நம்மை மேற்கொள்ளாது. சாத்ராக்,மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று யூத வாலிபர்கள் பாபிலோன் மாகாணத்தில் காரியங்களை விசாரிக்கும்படி நியமிக்கப்பட்டிருந்தார்கள். நேபுகாத்நேச்சார் ஒரு சிலையை துாரா என்னும் சமபூமியில் நிறுத்தி, அதை வணங்கும்படி எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேசத்தில் இருந்த கல்தேயர், ராஜா சமுகத்தில் வந்து, இந்த யூதர் பேரில் குற்றஞ்சாட்டினார்கள். அதாவது இன்றைய வழக்கத்தின்படி போட்டுக் கொடுத்தார்கள். ராஜாவே, நீர் நிறுத்தின இந்த 60 முழ உயரமும், 6 முழ அகலமும் உள்ள சிலையை இந்த வாலிபர்கள் வணங்கவில்லை என்றார்கள். ராஜாவிற்கு கோபம் மூண்டது. அவர்களை அழைத்து வரச் சொன்னான். இப்பொழுதும் எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது தாழவிழுந்து, நான் நிறுத்திய இந்த பொற்சிலையை பணிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் போடப்படுவீர்கள் என்று கூறினான். அப்பொழுது மூன்று யூத வாலிபரும் நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் எங்களை நீங்கலாக்கி விடுவிப்பார் என்றார்கள். ராஜா கடுங்கோபம் கொண்டு அக்கினிச்சூளையை ஏழு மடங்கு அதிகரித்து, அதின் நடுவில் இந்த மூன்று யூதவாலிபர்களைப் போட்டான். கர்த்தரின் பிரசன்னம் அவர்கள் மத்தியில் கடந்துவந்து அவர்களுடன் அந்த எரிகிற சூளையில் உலாவினது. இந்த நேபுகாத்நேச்சார் பிரமித்து தீவிரமாய் எழுந்து சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை அக்கினிச் சூளையிலிருந்து வெளிவரும்படி அழைத்தான். தேசாதிபதிகளும், அதிகாரிகளும் அவர்களின் சரீரங்களின் மேல் அக்கினிபெலஞ்செய்ய வில்லை, அவர்களுடைய தலைமயிர் கருகவில்லை, சால்வைகள் சேதப்படவில்லை. அக்கினியின் மணம் அவர்களிடம் வீசவில்லை என்றும் கண்டார்கள்.

ஆம், பூரண நம்பிக்கையை கர்த்தர்மேல் நாம் வைக்கும்போது சேதம் ஒன்றும் நம் வாழ்வில் வராது.

2. சேதமடையாதிருக்க கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும்

"பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச்  சேதப்படுத்துவதில்லை." சங்கீதம் 121:6

நம் வாழ்வில் உலகத்தையும் அதிலுள்ள உல்லாசத்தையும், உலகக்காரியங்களையும், மேன்மைகளையும் தேடுகிறோம், நாடுகிறோம். எந்த மனிதன் என்றும், எப்பொழுதும் மாறாத வல்லமையினால் உதவிச் செய்கிறவர் என்று கர்த்தாதி கர்த்தரை நோக்குகிறானோ அவனுக்குக் கர்த்தர் உதவிச் செய்வார். எந்தக் காலத்திலும் சேதமின்றிக் காக்கப்படுவான்.

தாவீது தன் இக்கட்டுக் காலங்களில் தனக்கு உதவிச் செய்ய வல்லவர் கர்த்தர் ஒருவர்தான் என்று நன்கு அறிந்து அவரையே நோக்கினான். சங்கீதம் 34:5ல் "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” என்றான். இன்று தமது வல்லமையான கரத்தினால் தாங்குகிறவர் எல்லா இக்கட்டிலும் இருந்து நம்மை துாக்கி விடுவார். சேதமின்றி காக்கப்படுவோம்.

ஒத்தாசை வரும் கன்மலையாகிய கிறிஸ்துவை பார்ப்பதற்குப் பதில், உலகத்தாரை, பிரச்சனைகளைப் பார்க்கும் போது இன்னும் மிகுந்த சேதம் உண்டாகும். ஆனால் அந்தச் சூழ்நிலையில் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது சேதமின்றி காக்கப்படுவோம்.

ஒருமுறை ஒரு செக் போஸ்ட்டில் மிகுதியான தொகையை அபராதமாக செலுத்தும் சூழ்நிலை உண்டானது. என்ன செய்வது என்றெண்ணி ஒத்தாசை வரும் பர்வதமாகிய இயேசுகிறிஸ்துவை நோக்கினேன். யார் என்று என்னை அறிந்தவர் உற்சாகமாக சமாதானத்துடன் அனுப்பிவைத்தார். உங்கள் வாழ்வில் சேதமின்றி வாழ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

3.சாட்சியின் வாழ்வு

சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தாதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." தானியேல் 6:22

அன்பின் தேவஜனமே! நம்மீது ஏதாவது விதத்தில் குற்றஞ்சாட்டி நம் வாழ்வினை கெடுத்து, அழித்து, அகற்றிவிட்டு, நாம் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் ஒழிந்து விடவேண்டும் என்று நம்முடன் இருப்பவர்கள் இன்று செயல்பட்டு வருகிறார்கள். தானியேலைப் போல் நாம் சாட்சி உள்ள வாழ்வு வாழ வேண்டுமானால் கர்த்தரின் நாமம் மகிமைப்படும். அத்துடன் நாம் சேதமின்றி வாழ இயலும். கர்த்தருக்கு முன்பாகவும், உலகப்பிரகாரமாகவும் உள்ள சாட்சியின் வாழ்வை அநேகர் கெடுத்துவிட்டு மிகவும் கலங்குகிறார்கள்.

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சீஷர்களை எருசலேமில் காத்திருக்கச் சொன்னார். கர்த்தரின் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, பெலனடைந்து உலகமெங்கும் தமக்கு சாட்சிகளாக வாழ வழிநடத்தினார். யோவான் 15:27ல் 'நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.' என்று இயேசுகிறிஸ்து கூறினதைப் பார்க்கிறோம்.

இந்த உலக வாழ்வில் நாம் இயேசுகிறிஸ்துவைப் பிரதிபலிக்கிற பண்புகள், செய்கைகள் இருக்கிறதா? ‘...நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.'என்று ஏசாயா 43:12ல் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். தானியேல் வேலைஸ்தலத்திலும், தேவனுக்கு முன்பாகவும் சாட்சியுள்ளவனாக இருந்தபடியால் அவனை உயர்த்தினார், மேன்மையாக்கினார். நம்முடைய சாட்சியின் ஜீவியம் அநேகரை மாற்றக் கூடியதாக இருக்கிறதா ? ஒரு மனைவியின் சாட்சியால் அவளுடைய குடிகாரக் கணவன் கர்த்தருக்காக பாடல்களைப் பாடுகிறவனாக மாறினான். சகோதரியின் நீடியபொறுமையும், அன்பும் அவர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளச் செய்தது.

4. தீயஜந்துக்களின் விஷத்தினால் சேதமடையாது காப்பார்.

"அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக் கொண்டார்கள்." அப்போஸ்தலர் 28:5,6

தீங்கு மனிதனைத் துக்கப்படுத்தும் காரியமாகும். பவுல் மெலித்தா தீவிலே கரை சேர்ந்தபோது மழைக்காகவும், குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டினார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், அந்த விஷப்பூச்சி அவன் கையிலே கவ்விக்கொண்டது. பவுல் தீயிலே உதறிவிட்டான். ஆனால் அவன் எந்த பாதிப்புமின்றி, சேதமின்றி இருந்தான். 'பொல்லாப்பு நேரிடாது'என்று வாக்கு கொடுத்த கர்த்தர் தம்முடைய மக்களை கண்மணிப்போல் காப்பாற்றுவார். 'பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.'

ஒருமுறை ஊழியர் ஒருவரின் சரீரத்தில் பாம்பின் பற்கள் பதிந்துவிட்டது. பல காலங்களாக அது ஆறாதிருந்தது. அதற்காக ஜெபித்தார்கள். அதன்நிலை மாறி சுகமடைந்தார்கள். இதைப்போல ஒரு சிறுவனுக்கு பாம்பு கடித்து விட்டது. அரசாங்க ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த அவனுக்காக ஊழியர்களாக ஜெபித்தார்கள். இரத்தவாந்தி எடுத்துக் கொண்டிருந்த அவன் உடனே பூரண சுகத்தைப் பெற்றுக்கொண்டான். எந்த சேதமும் அடையாதிருந்தான். உன் ஜீவனுக்கு விரோதமாக வரும் அத்தனை சத்துருக்களின் செயலையும் அழிக்க கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உனக்கு ஆதரவாக இருப்பார்.

5. கர்த்தரின் அதிகாரம் பெற்றவர் வாழ்வில் சேதம் வராது

“இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது." லூக்கா10:19

கர்த்தரின் அதிகாரத்தைப் பெற்றவர்களின் வாழ்வில் எந்த சேதமும் வராதபடி படி காக்கக்கூடிய சகல வல்லமை நிறைந்தவர் நம் இயேசுகிறிஸ்து. அவரின் வல்ல செயலினால் சகல விதத்திலும் நிறையும்போது எந்தவிதமான பிசாசின் செயல்களும் தந்திரங்களும் சேதப்படுத்த இயலாது. இன்று நாம் கர்த்தரின் நாமத்தை ஏற்று, அவர் வழி செல்ல இடம் கொடுப்போம். காயங்கள் ஆற்றும் சகல கிருபையையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                   கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                                                                                                                                                                  சகோ.C. எபனேசர் பால்