"...அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்."

                                                                                                                                                                                                      1 பேதுரு2:24

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்து, நம்மை மீட்பதற்காக, விடுவிப்பதற்காக, குணமாக்குவதற்காக, பலவிதமான நன்மையான காரியங்களை நமக்குச் செய்வதற்காக சிலுவை மரத்திலே பாடுகளை அனுபவித்தார். அப். 10:38 சொல்லுகிறது "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிற வராயும் சுற்றித்திரிந்தார்.'

இன்று நம் வாழ்க்கையிலே பூரணமான நன்மையான காரியங்கள் நடைபெற நமக்காக சிலுவை மரத்திலே பாடுபட்டு காயங்களை ஏற்றார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்' என்று ஏசாயா 53:5லே முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. குணமாக்குதலைக் குறித்து தாவீது சங்.6:2லே 'என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப் போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது' என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஓசியா 6:1ல் 'கர்த்தரிடத்திலே திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. எரேமியா 17:14ல் 'கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்...' என்று பார்க்கிறோம். இன்று நம்மைக் குணமாக்க வல்லவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக யாவையும் சிலுவை மரத்திலே செய்துமுடித்தார். அவர் ஒருவரே நம்மை மெய்யாக குணமாக்குகிறவர் என்று அறிந்து நாம் அவரைப் பற்றிக்கொள்வோமாக.

 

கர்த்தர் எவைகளைக் குணமாக்குகிறார்?

 

1. சீர்கேட்டைக் குணமாக்குகிறார்.

"நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்ட நீங்கிற்று." ஒசியா 14:4

பலருடைய வாழ்க்கை சீராயிருப்பதற்குப் பதிலாக கேடுபாடுகள் நிறைந்ததாக இருக்கிறது. அவர்கள் சீராய், சிறப்பாய் இருப்பதற்குப் பதிலாக கேட்டை விளைவிக்கக்கூடிய பலவிதமான சொற்களையும், செயல்களையும் உடையவர்களாயிருக்கிறார்கள். இதனால் தங்களைக் கெடுத்துக் கொள்வதோடு தங்களுடன் வாழும் மக்களுக்கு கேடு கேடு வி விளைவிக்கிறார்கள். சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக் கேதுவாக முயற்சிபண்ணு' என்று 1தீமோ.4:7லும், '...சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும்... விலகு' என்று 1தீமோ.6:20லும் பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக கூறியுள்ள தைப் பார்க்கிறோம். எபி. 12:16ல் 'ஒருவனும் வேசிக்கள்ள னாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்' என்ற எச்சரிப்பைப் பார்க்கிறோம். எரேமியா 31:22 சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித்திரிவாய்?...' என்று கர்த்தர் கேட்பதைப் பார்க்கிறோம். எரேமியா 3:14ல் 'சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்' என்று வாசிக் வாசிக்கிறோம். ஆதி.6:11,12ல் 'பூமியானது கொடு தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்' என்று அறிகிறோம். இதினால் தேவன் அவர்களைப் பூமியோடுகூட அழித்துப்போடுவேன் என்ற தீர்மானத்தை நோவாவிடம் அறிவித்தார்.

2.ஆத்துமாவைக் குணமாக்குகிறார்

"கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்." சங்கீதம் 41:4

நம்முடைய ஆத்துமாவைக் குறித்து கரிசனையுடைவர்களாய் நாம் இருக்க வேண்டும். உலகத்தின் ஆஸ்திகளை எண்ணி, ஆத்துமாவைக் குறித்து கரிசனையற்றவர்களாய் வாழுகிறவர்கள் ஏராளம். இயேசு கிறிஸ்து நம் ஆத்தும் நேசர், அவருடைய அன்பின் செயலினாலே பாவத்தினால் மரித்த நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்து உவமானமாய் சொன்னபோது ஒரு மனிதன் தன் ஆஸ்தியைப் பெருக்குவதற்கு, 'என் களஞ்சியங்களை இடித்து, அதைப் பெரிதாய்க் கட்டுவேன் என்று தன் மனதிலே சொல்லிக்கொண்டான். பின்பு ஆத்துமாவை நோக்கி, 'உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேக பொருட்கள் 'கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்தியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்து வைத்தவைகள் யாருடையதாகும் ?' என்றார். ஆத்துமாவைக் குறித்து கவலையின்றி இருக்கிறவர்கள் அநேகர். நம்முடைய கர்த்தரோ நம்முடைய ஆத்துமாவைத் திருப்தியாக்குகிற தேவன், நம்முடைய ஆத்துமாவிலே பெலன் தந்து, இந்த உலகத்திலே தைரியமாய் வாழச்செய்கிறவர்.

கர்த்தர் தம்முடைய வசனத்தினாலும், சாட்சியினாலும் பாவத்தில் மரித்த நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறார். கர்த்தரை முழுமனதோடு தேடுவதோடு முழு ஆத்துமாவோடும் தேடவேண்டும் என்று வேதம் நமக்குக் கூறுகிறது. மனிதரின் துக்கம், சந்தோஷம் ஆத்துமாவிலே நிறைகிறது. நம்முடைய ஆத்துமாவைத் தேற்றி, அழிவின் குழிகளுக்கு விலக்கிக் காக்கிற தேவன். எல்லாவற்றையும் சரியாகச் செய்ய நம்முடைய ஆத்துமாவைக் குணமாக்குகிற தேவனாயிருக்கிறார். நம்முடைய ஆத்துமாவைக் குணமாக்குகிற தேவனை எப்பொழுதும் துதிப்போமாக.

3. நோய்களைக் குணமாக்குகிறார்.

"அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களை யெல்லாம் குணமாக்கி" சங்கீதம் 103:3

நமக்குப் பலவிதமான நோய்களும், பெலவீனங்களும் உண்டாகிறது. சில நோய்கள் மரணத்துக்கு ஏதுவாயிருக்கிறது. சில நோய்கள் நம் உள்ளத்தை வேதனைப்படுத்துகிறது. இந்த நோய்களினாலே நாம் எதையும் செய்ய இயலாதவர்களாய் கலங்குகிறோம். அனுதின பணிகளைக் கூட செய்ய முடியாதவர் களாய் மாறுகிறோம். சிலருடைய நோய்கள் மனநோயாக இருக்கிறது. அவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாய் கலங்குகிறார்கள். கலங்கி, பதறி, ஆவியின் முறிவினாலே புலம்புகிறார்கள்(ஏசாயா 65:14) இவ்விதமான நோய்களையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குணமாக்குகிறவராயிருக்கிறார்.

சிலசமயம் இவ்விதமான நோயினால் பாதிப்படைந்தவர்கள் நெடுங்காலமாக வேதனையடைகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவர்களுக்காக பரிதபிக்கிறவராகவும், மனதுருகிற வராகவும் இருக்கிறார். 38 வருஷம் வியாதியினால் பாதிக்கப்பட்டு, தனக்கு உதவி செய்ய யாருமில்லையென்று கலங்கினவனுக்கு மனதிரங்கினார்; அற்புதம் செய்தார். படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று அவனிடம் இயேசு கிறிஸ்து சொன்னபோது, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்துபோனான். நோய்களை யெல்லாம் குணமாக்குகிற இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பெரும்பாடுள்ள ஸ்திரீ 12 வருஷமாய் வேதனையுடன். கலங்கினாள். தனக்கு உண்டானவைகளை யெல்லாம் செலவழித்தும் சற்றாகிலும் குணமடையாதபடியால் வருந்தினாள். அந்த ஸ்திரீயை இயேசு கிறிஸ்து வேதனையை நீக்கி குணமாக்கினார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! உன் நோயினிமித்தம் நீ கலங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாயா ? உன் நோய்களைக் குணமாக்குகிற இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். உன் நோய்களைக் குணமாக்கி உன்னை மகிழ்ச்சியினால் நிரப்புவார். அவரால் குணமாக்க முடியாத நோய் கிடையாது.

யார் யாரை குணமாக்குகிறார்?

1.மனந்திரும்பி, விண்ணப்பிக்கும்போது குணமாக்குவார்

"...அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்."

ஏசாயா 19:22

நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். நம்முடைய ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்டு, அற்புதங்களைச் செய்கிறார். பர்திமேயு என்ற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து, பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு கிறிஸ்து வருகிறார் என்று கேள்விப்பட்டு 'இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்' என்று கூப்பிடத் தொடங்கினான். எதிர்ப்புகள் வந்தபோது முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு அவனை அழைத்து, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். 'அவன், நான் பார்வையடைய வேண்டும்' என்றான். இயேசு கிறிஸ்து நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்றார். உடனே அவன் பார்வையடைந்து, இயேசுவுக்குப் பின்சென்றான்.

ஒருமுறை ஒரு சகோதரி தன்னிலுள்ள பிரச்சனையினாலும், குடும்பத்திலுள்ள சமாதானக்குறைவினாலும் ஜெபிக்க வந்தார்கள். கர்த்தர் அவளுடைய பாவங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டினார். அந்த சகோதரியோ கண்ணீரோடு தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். கர்த்தர் அந்த சகோதரியின் ஜெபத்தைக் கேட்டு, அவளுக்கும், அவளுடைய கணவனுக்கும் சுகத்தைக் கொடுத்தார். குடும்பத்தில் சமாதானத்தைக் கட்டளையிட்டார்.

உன்னுடைய நோய்களையும், பெலவீனங்களையும் குறித்து கலங்குகிற சகோதரனே, சகோதரியே! முற்றிலும் உன்னைத் தாழ்த்தி உன் பாவங்களை விட்டு மனந்திரும்பு. இரக்கமும் மன உருக்கமும் நிறைந்த கர்த்தர் உன்னை நிச்சயம் குணமாக்குவார். 'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்' என்ற நீதி.28:13ன்படி பாவங்களை அறிக்கை செய்து, அவைகளை விட்டு விட்டு, கர்த்தரிடத்தில் இரக்கம் பெறுவோமாக.

2. நம்முடைய வழிகளைப் பார்த்து குணமாக்குகிறார்

"அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.” ஏசாயா 57:19

மனிதனுடைய வழிகளைக் கர்த்தர் அறிந்திருக்கிறார். சங்.17:5ல் ...என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்' என்று வேண்டுகிறதைப் பார்க்கிறோம். சங். 27:11ல், 'கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்' என்று கேட்கிறார். சங்.128:1ல் 'கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்' என்று பார்க்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்'என்று யோவான் 14:6ல் கூறுகிறார். கர்த்தருடைய வழிகள் ஜீவனுக்குப் போகும் வழிகள். கேட்டுக்குப் போகும் வழி விசாலமாயிருக்கிறது. முடிவோ மரணம். 'ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது' மத்.7:14. 'ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாய் இருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாய் இருக்கும் படி செய்வார்' நீதி.16:7. இன்று உங்கள் வழிகள் எப்படி இருக்கிறது? நம்முடைய வழிகளைச் செவ்வையாக்குகிறவர் மாறாதவராக இருக்கிறார். அவருடைய வழிகளில் நாம் நடக்கும்போது, நம்முடைய வழியைப் பார்த்து, நம்மை குணமாக்குவார். இன்றே நம்முடைய வழியைச் செவ்வையாக்குவோம்.

3. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

 "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." சங்கீதம் 147:3

இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார் என்று சங். 34:18ல் பார்க்கிறோம். சங். 51:17லே 'தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்' என்று பார்க்கிறோம். 'இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடர்களுக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங் குண்டவர்களை விடுதலையாக்கவும்' என்னை அனுப்பினார் என்று லூக்கா 4:18ல் பார்க்கிறோம். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குறித்து கரிசனை கொண்ட இயேசு கிறிஸ்து நம்மை குணமாக்கு கிறவராக இருக்கிறார்.

வேதனையான நோயிலிருந்து யார் என்னை விடுவிப்பார்? யார் எனக்கு சுகம் தருவார் என்று ஏங்கி இந்த உலகத்தில் உயிர்வாழ வழி இல்லையோ என்று நொறுங்கிப்போன உள்ளத்தோடு இருந்த எனக்கு 'ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது' என்ற கர்த்தருடைய வார்த்தை எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையின் நிச்சயத்தையும் கொடுத்தது. 1983ல் ஏற்பட்ட இருதய நோயிலிருந்து என்னைக் குணமாக்கினார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! உன் இருதயத்தின் நொறுங்குதல் தோல்வியினாலோ, ஏமாற்றத்தினாலோ, கைவிடப்பட்ட நிலையினாலோ, இழப்பினாலோ அல்லது எந்தக் காரியத்தில் உன் இருதயம் நொறுங்கியிருந்தாலும் இருதயத்தைக் காண்கிற தேவன் உன் நொறுங்கிப்போன இருதயத்தைக் காண்கிறவராக இருக்கிறார். அவர் இன்றைக்கு உன் இருதயத்தை ஆற்றித் தேற்றுவதோடு, உன் பிரச்சனை எதுவாயிருந்தாலும் உன்னை விடுதலையாக்கி, உனக்குள் புது வாழ்வைத் தருகிறவராயிருக்கிறார். அவருடைய வார்த்தைகளும், அவரின் வல்லமையான செயல்களும், நல்லதொரு ஒளஷதமாய் இருக்கிறது. அன்று இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அடிமைத் தனத்திலே உபத்திரவங்களை அனுபவித்ததோடு பாடுகளினால் இருதயம் நொறுங்கிப் போனார்கள். இருதயம் நொறுங்குண்டதோடு, கர்த்தரைத் தேடினபடியாலும், அவர் சமுகத்தை நாடினபடியாலும் அவர்களின் நொறுங்கின இருதயங்களைக் குணமாக்குவதற்கு மோசேயை அனுப்பினார். அவனைக் கொண்டு அவர்களை எல்லா இன்னல்களுக்கும், இக்கட்டுகளுக்கும் விலக்கிக் காத்தார்.

இயேசு கிறிஸ்து எவ்வாறு குணமாக்குகிறார்?

  1. விடுவித்து குணமாக்குகிறார்

"அவன் சமீபித்து வருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டிய இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்."

லூக்கா 9:42

இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்தி, சகல நோய்களையும் வேதனைகளையும் குணமாக்குகிறார். சிலருடைய வியாதிகள், கேனுக்கேளுக்குக் காரணம் பிசாசின் செயலாகும். இந்த கழவிக்கோ பிசாசு அவனைக் கீழே தள்ளி அவனை அலைக் கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கினார். இன்று அநேகரின வாழ்க்கையில் வியாதியின் காரணத்தைக் கண்டு கொள்ள முடியாதபடி அசுத்த ஆவிகள் தந்திரமாய் செயல்படுகிறது. மருத்துவர்கள் பல சோதனைகள் செய்தாலும் அந்த வியாதியின் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாது.

ஒருமுறை வெளிநாட்டில் பணிசெய்த ஒரு நர்ஸ் மிகுதியாக வேதனை அடைந்தார்கள். மருத்துவர்கள் கடைசியாக அந்த மகளின் நுரையீரல் பகுதியை அறுவை சிகிச்சை மூலமாய் சிகிச்சை செய்ய திட்டமிட்டார்கள். அப்பொழுது நான் இந்தியா வாருங்கள் என்று அழைத்தேன். அவர்கள் இந்தியா வந்து ஒரு மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டார்கள். மருத்துவ மனைக்குச் சென்று அவர்களுக்காய் ஜெபித்தபோது அந்த மகளிலிருந்த அசுத்த ஆவி அவளைவிட்டு நீங்கிற்று. மறுநாள் மருத்துவ சோதனை செய்தபோது, பரிபூரண சுகம் அடைந்தபடியதால் அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

2. வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார்

"அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்." சங்கீதம் 107:20

கர்த்தருடைய வசனம் ஆவியும் ஜீவனும் உடையது. அந்த வசனத்தை அனுப்பும்போது அது வெறுமையாய் திரும்பாது. கர்த்தரின் வாயிலிருந்து புறப்படும் வசனம், வெறுமையாய்த் திரும்பாமல், அவர் விரும்புகிறதைச் செய்து, அவர் அனுப்பிய காரியமாகும்படி வாய்க்கும்(ஏசாயா 55:11). தேவனுடைய வார்த்தைகள் அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது (எரேமியா23:29) இவ்விதமான ஆற்றலுடைய அவருடைய வசனத்தை அவர் அனுப்பி நம்மைக் குணமாக்குகிறார். 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நான் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, 'நான் உனக்கு அக்கினி மதிலாய் இருப்பேன்' என்று வாக்குக் கொடுத்தார். என் பெலவீனம் அதிகரித்துக் கொண்டிருந்தபோது, என் உள்ளத்தின் ஆழத்தில் 'உம்முடைய அக்கினியை அனுப்பும்' என்று இரவில் ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். அவர் சொன்னபடியே எனக்கு அக்கினி மதிலாக இருந்து என் ஜீவனைக் காத்தார். யாவரும் அதிசயப்படும்படி என் நோய்களைக் குணமாக்கினார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! உன்னைக் குணமாக்குவதற்கு உன் பிரச்சனையிலிருந்து உன்னை விடுவிப்பதற்கு தமது ஜீவனுள்ள வார்த்தையை அனுப்பி, உன்னைக் குணமாக்கி, அதிசயம் செய்வார்.

3.தொட்டு, தம்மிடத்தில் அழைத்து, நம்மை குணமாக்குகிறார்

"இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து; ஸ்திரீயே, உன் பலவினத்தினின்று விடுதலையாக்கப்பட்டாட்ட னோன்றவன் சொந்த அவள்மேல் தமது கைகளை வைத்தார்: 13:12,னே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள்." லூக்கா 13:12,13

இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் 18 ஆண்டுகளாக கூனியாக இருந்த ஒரு சகோதரியை அழைத்தார். அவள் எவ்வளவேனும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். ஜெப ஆலயத்தில் அவளைக் கண்ட இயேசு கிறிஸ்து, அவள்மீது கைகளை வைத்தார். 'உன் பெலவீனத்தினின்று விடுதலையானாய்' என்று சொன்னார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள்.

இயேசு கிறிஸ்துவினிடம் ஒரு குஷ்டரோகி வந்தான். ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். அந்நாட்களில் குஷ்டரோகி என்றாலே ஒதுக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வரும்போதே 'தீட்டு, தீட்டு' என்று கத்தவேண்டும். அவன் ஜனங்களின் நடுவே வாழ இயலாது. தனியே ஊருக்கு வெளியே குடியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குஷ்டரோகி இயேசு கிறிஸ்துவிடம் வந்து, அவரைப் பணிந்து வேண்டினபோது, அவனைத் தொட்டு அவனைக் குணமாக்கினார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! கொடூரமான நோயினால் நீ பாதிப்படைந்திருந்தாலும் கலங்காதே, பயப்படாதே. ஆலயத்திற்குச் செல்ல தீர்மானம் செய். உன்னைக் காண்கிற தேவன். உன்னைத் தொட்டு சுகமாக்குவார். இன்றே தீர்மானம் செய்து, செயல்படு; நீ அதிசயம் காண்பாய்.

4.தமது வல்லமையினால் குணமாக்குகிறார்

''அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும் படிக்கு வகைதேடினார்கள்." லூக்கா 6:19

இயேசு கிறிஸ்து வல்லமை நிறைந்தவராக இந்த உலகத்திலே அநேக அற்புதங்களைச் செய்தார். வல்லமை தேவனுடையது. செப்பனியா 3:17லே 'கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுடைவர்; அவர் இரட்சிப்பார்...' என்று பார்க்கிறோம். மத்.6:13ல் 'இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும். உம்முடையவைகளே' என்று ஜெபத்தில் சொல்லிக் கொடுத்தார். வத்தாமயே தெம்முடைய ஊழியங்களைச் செய்தார். (லூக்கா 4:36 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பிசாசுகளைத் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரமும் வல்லமையும் கொடுத்தார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! கர்த்தருடைய வல்லமையானது அளவிடப்பட முடியாத ஒன்று. அந்த வல்லமையானது விஞ்ஞான ஞானத்திற்கு அப்பாற்பட்டது. சுவிசேஷமானது அப்போஸ்தலர் மூலமாக வல்லமையோடு பிரசங்கிக்கப்பட்டது. இவ்விதமான வல்லமையைப் பகிர்ந்து கொடுத்த இயேசு கிறிஸ்து தமது வல்லமையாலே குணமாக்கு கிறவராய் தேவ மகிமைக்காக ஊழியஞ்செய்தார்.

5. இயேசு கிறிஸ்துவின் தழும்புகளினால் குணமாகிறோம்

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ஏசாயா 53:5

இயேசு கிறிஸ்துவின் மூலம் அநேக அற்புதங்கள் நடைபெறுகிறது. அவரை மேசியா என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரை சிலுவை மரத்திலே அறைந்து கொலை செய்தார்கள். கொலை செய்வதற்கு முன்பாக அவரை வாரினால் அடித்தார்கள். சிரசில் கோலினால் அடித்து, அவர்மேல் துப்பினார்கள். இவ்வாறு பாடுபட்ட இயேசு கிறிஸ்து சிலுவை மரத்திலே நமக்காகத் தொங்கினார். துக்கங்களைச் சுமந்தார். சாபங்களைச் சுமந்தார். நோய்களைச் சுமந்தார். அவருடைய சரீரத்திலே உண்டான தழும்புகள் இன்றும் நம்மைக் குணமாக்கக்கூடிய ஆற்றல் உடையது.

அருமையான சகோதரனே, சகோதரியே! கர்த்தரிடம் திரும்பி நாம் விண்ணப்பிக்கும்போது, நமது ஜெபத்தைக் கேட்டு குணமாக்குகிறார். நம்முடைய வழிகளைப் பார்த்து நம்மைக் குணமாக்குகிறார். நொறுங்குண்டவர்களைக் குணமாக்கி, சிலுவையில் உண்டான தழும்புகளினாலே நம்மைக் குணமாக்கி, ஜீவனையும் பரிபூரணத்தையும் உண்டாக்குகிறார். இன்றே அவரை நோக்கிப் பார்ப்போம். அவர் அதிசயங்களைச் செய்து நம்மை குணமாக்கி ஆசீர்வதிப்பார்.

 

                                                         கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                               கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                                                                                                                                                          சகோ. C. எபனேசர் பால்.