"அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்."

                                                                                                           சங்கீதம் 33:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

ஒரு முறை இலங்கையைச் சார்ந்த சகோதரர் ஒருவரை சிங்கப்பூரிலே சந்தித்தேன். அவருக்காக என் உள்ளத்திலே ஜெபித்துக் கொண்டே இருந்தேன். அவரைக் குறித்து ஒரு காட்சியைக் காண்பித்தார். அவர் தனியாக ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்பதைப் போலவும், அங்கு வரும் பஸ்கள் ஆஸ்திரேலியாவை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தன.அந்தச் சகோதரரை நான் பார்த்து, Brother, கர்த்தர் உங்களை ஆஸ்திரேலியாவிற்குக் கொண்டு செல்ல இருக்கிறார் என்றேன். அதைக் கேட்டவுடன் அவர் சந்தோஷப்பட்டார்.

மீண்டுமாய் ஒரு நாள் குறுகிய காலத்தில் அவரைக் கண்டு அவர்களைக் குடும்பமாக கொண்டு செல்ல இருக்கிறார் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். அப்போது ஆஸ்திரேலியாவிலே அநேகர் வேலை இல்லாதிருக்கிறார்கள் என்று போக மனதில்லாது தன் காரியங்களைச் சொன்னார். ஒரு புறம் அவருக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அங்கு போய் வேலை இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அவரின் பயணத்திற்குத் தடையாய் இருந்தது. கர்த்தருடைய ஆவியானவர் அவர் காரியங்களை அறிந்து நீங்கள் இப்பொழுது வேலைப் பார்க்கிற உங்கள் கம்பெனியிலேயே அந்த மேனேஜர் போஸ்டை ஆஸ்திரேலியாவில் கர்த்தர் தர விரும்புகிறார் என்று தெரிவித்தார். அவர் மிகுந்த சமாதானத்தோடு ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல ஆயத்தமானார். ஆஸ்திரேலியா சென்று கர்த்தர் சொன்னபடியே, தான் வேலைபார்த்த அதே கம்பெனியிலே மேனேஜர் ஆக பணியாற்றினார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் ஒரு காரியத்தைச் சொல்லி நம்மை நடத்தும் போது தயங்காமல் பூரண விசுவாசத்தோடு அதைச் செய்யும்போது மகிழ்ச்சியும், மேன்மையும், ஆசீர்வாதமும் அடைவோம். இது எப்படி, அது எப்படி என்று சந்தேகப்படும்போது, காலதாமதமும் தடைகளும், குறைகளும் தோன்றிவிடும். சகரியாவுக்குக் கர்த்தர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து கேள்வி ஏற்பட்ட போது, இதை எதினால் அறிவேன் என்ற போது (லூக்கா 1:18] குழந்தை பிறக்கும் நாள் வரை பேசாதிருக்கத்தக்கதான அடையாளம் கொடுக்கப்பட்டது. இன்று கர்த்தர் நம்மை நடத்தும்போது, ஏற்றுக்கொள்வோம். அதின் மேன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இன்றும் என்றும் சுதந்தரித்துக் கொள்வோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                        சகோ . C. எபனேசர் பால்.