ஜெபம்

                                                                                                                                       

மேற்படிப்பு படிக்க ஆயத்தமாக இருக்கிற பிள்ளைகளின் விருப்பத்தை கர்த்தர் நிறைவேற்ற ஒரு ஜெபம்

 

                     எங்களை அதிகமாய் நேசிக்கிற அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவே, உம்முடைய சமூகத்திலே நான் ஜெபிக்கத்தக்கதாக இந்த நேரத்தைக் கொடுத்தப்படியால் உமக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தாவே, உம் அளவற்ற அன்பினாலும், கிருபையினால் நான் தேர்வில் வெற்றிப் பெறவும், என் உள்ளத்திலுள்ள வாஞ்சைப்படி நான் உயர்வான படிப்பைப் படிக்க வழியை எனக்குத் திறக்க வேண்டுமென்று உம்முடைய சமூகத்திலே கெஞ்சுகிறேன். நீர் என் வாழ்க்கையிலே என் ஜெபத்தைக் கேட்டு அநேகக் காரியங்களில் ஜெயம் பெறவும், மேன்மையான நிலையிலே நான் வெற்றிக் காணவும் எனக்கு உதவிச் செய்தீர். இப்பொழுதும் கர்த்தாவே, நான் என் படிப்பை முடித்துவிட்டு என்ன செய்வது என்று எண்ணங்கொண்டிருக்கிறேன். வேலைக்குச் செல்வதா? அல்லது மேலாக ஒரு படிப்பைப் படிக்கலாமா என்ற எண்ணங்கள் எனக்குள் உருவாகிறது. உம்முடைய அநாதி தீர்மானத்தின்படி நான் எந்த இடத்திலே,எந்தக் கல்லூரியிலே சேர்ந்து, கற்றறிந்து ஜெயங்கொள்ள வேண்டும், என் வாழ்க்கை ஆசீர்வாதமாக மாற வேண்டும் என்று நீர் நினைக்கிறீரோ அந்தக் காரியத்தை நான் செய்ய எனக்கு இன்று உதவிச்செய்யும், இயேசு கிறிஸ்துவே. என் சிறுவயது முதற்கொண்டு என்னுடைய எல்லா படிப்பிலும், எனக்கு உதவிச் செய்தீர். வெற்றியின்மேல் வெற்றி அடையத்தக்கதாக எங்களுடைய வாழ்க்கையை மாற்றினீர், உயர்த்தினீர், அதற்காக ஸ்தோத்திரம். இப்பொழுதும் கர்த்தாவே, என்னுடைய மனதின் வாஞ்சைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவீராக.

                                     நான் தோல்வி அடையாதபடி, துக்கமடையாதபடி என்னைக் கண்ணின் மணிபோல காத்தீர், என்னைக் கிருபையாய் வெற்றியினால் நிறைத்தீர், அதோடு என்னை ஆசீர்வதித்தீர். தேர்வு எழுதும் நேரங்களில் எல்லாம் பலவிதமான தடைகள், பெலவீனங்கள், போராட்டங்கள் வந்த போதும், நீர் என்னைக் கைவிடாதபடி என்னை வெற்றியினால் அலங்கரித்தீரே, அதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். எனக்குரிய எல்லாவற்றிலும் ஜெயங்கொடுக்கிற தேவனே, உம்முடைய அன்புக்கு ஈடாக நான் என்னச் செய்வேன் என்ற எண்ணத்தோடு, இப்பொழுதும் உமக்கு  முன்பாக பிரியமானத்தைச் செய்ய எனக்கு உதவிச் செய்யும். உம்மால் நான் என்றும் ஆசீர்வதிக்கப்படவும், உம்மால் என் வழிகள் சேவையாக்கப்படுவதையும் என்றும் காண உதவிச் செய்யும். அன்றைக்கு தாவீது உம்மிலே நான் அன்பு கூறுகிறேன் என்றுச் சொன்னபோது, வழியை செவ்வையாக்கி அவனைப் பெலத்தால் இடைக்கட்டி அவனை உயர் ஸ்தலங்களிலே நிறுத்தின தேவனே, என்னையும் அவ்விதமாய் உயர் ஸ்தலங்களிலே நிறுத்துவீராக. நான் சோர்ந்து விடாதபடி என் வாழ்க்கையிலே தடை வந்து, தாமதம் ஏற்பட்டு குறைவுபடாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.